Wednesday, December 4, 2024

இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். (மத்தேயு நற்செய்தி 9:27)

இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். 
(மத்தேயு நற்செய்தி 9:27)

பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த நாளிலிருந்து,

எருசலேம் கல்வாரி மலையில் சிலுவையில் மரித்த நாள் வரை 

இயேசு வாழ்ந்தது 33 ஆண்டுகள்.

பெத்லகேமில் பிறந்ததே கல்வாரி மலையில் மரிப்பதற்காகத்தான்.

உலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் நாசரேத் ஊரில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொது வாழ்வில் 3 ஆண்டுகள்.

மூன்று ஆண்டுகளும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்ததோடு சென்ற இடமெல்லாம் மக்களுக்கு நன்மை செய்து வந்தார்.

தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று போதித்த அவரை

அவர் நன்மை செய்ததைப் பொறுக்க முடியாத அவர் இன மக்களே அவருக்குத் தீமை செய்தார்கள், 

அவர் மீது பொய்க் குற்றம் சாட்டி அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்.

தீமை செய்தவர்களுக்கு நன்மையாக அவர்களை மன்னித்து விட்டு இறந்தார்.

மரிப்பதற்கென்றே மனித உரு எடுத்த அவர் எதற்காக மூன்று ஆண்டுகள் புதுமைகள் பல செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்?

உடல் நோயாளிகளைக் குணமாக்குவதற்காக அவர்
மனிதனாக பிறக்கவில்லை. 

பாவிகளை மன்னிப்பதற்காகத்தான் அவர் மனிதனாகப் பிறந்தார். 

அவர் வாழ்ந்தது, பாடுகள் பட்டது, மரித்தது எல்லாம் அதற்காகத்தான்.

ஆனால் பாடுகள் பட அவர் செலவழித்தது ஒரே ஒரு நாள் மட்டுமே, வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை. 

ஆனால் உடல் சார்ந்த நோய்களை குணமாக்கியது மூன்று ஆண்டுகள். 

பார்வையற்றோருக்கு பார்வை கொடுத்தார்,
 நடக்க முடியாதவர்களை நடக்க வைத்தார், 
தொழு நோயாளிகளைக் குணமாக்கினார்,
 இறந்தோருக்கு உயிர் கொடுத்தார். 

பாவம் மட்டுமே ஆன்மீக நோய். 

மற்ற நோய்கள் எல்லாம் உடல் சார்ந்தவை. 

உடல் சார்ந்த நோய்களை குணமாக்குவதில் இயேசு அதிக அக்கறை காட்டியது ஏன்? 

அதைப்பற்றி தியானிப்போம். 

இயேசு ஒரு ஆன்மீக மருத்துவர், உடல் மருத்துவர் அல்ல.

Jesus is a spiritual doctor, not a biological one.

மனித உடலையும் படைத்தவர் அவர்தான். 

ஆகவே அதன் மீது அவருக்கு முழு அதிகாரம் உண்டு.

ஆனாலும் அவர் உலகுக்கு வந்தது லௌகீக நோக்கத்திற்காக அல்ல. 

மனித ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்க.

ஆன்மீக வாதி எதைச் செய்தாலும் அது ஆன்மீகம் சார்ந்ததாகவே இருக்கும்.

அவர் சிலுவையில் பலியாக்கியது தன் உடலை.

எதற்காக?

நமது ஆன்மாவை மீட்க.

உடல் சார்ந்த நோயாளிகளைக் குணமாக்கியது ஒரு பிறர் சிநேக முயற்சி.

பிறர் சிநேகம் ஒரு ஆன்மீக நிலை.

இயேசு நோய்களைக் குணமாக்கும் முன் நோயாளிகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்.

அவர்களின் பாவங்களை மன்னித்தார்.

குணமடைந்தோர் அவரை ஆன்மீக ரீதியாக அவரைப் பின்பற்றினார்கள்.

ஏழு பேய்களிலிருந்து விடுதலை பெற்ற மரிய மதலேனாள் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

சிலர் குணமானவுடன் அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் சென்றார்கள்.

குணமான சிலர் தாங்கள் சென்ற இடமெல்லாம் அவரைப் பற்றி மக்களுக்கு அறிவித்தனர்.

இயேசுவால் உடல் ரீதியாக குணமானோர் ஆன்மீக ரீதியாகவும் குணமானார்கள்.

அவர் சென்ற இடமெல்லாம் குணமாக்கியது அவருக்கு எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்தது, சீடர்களையும் சம்பாதித்துக் கொடுத்தது.

எதிரிகள் அவரைக் கொன்று,
 தாங்கள் அறியாமலேயே, 
நாம் மீட்புப் பெற உதவியிருக்கின்றனர்.

தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்தார்கள்.

அந்த வகையில் சாத்தான்கூட நாம் மீட்பு பெற உதவியிருக்கிறது

சீடர்கள் இயேசுவின் நற்செய்தியை எங்கும் பரப்பினர்.

ஆக அவர் செய்த எல்லா செயல்களும் அவர் எதற்காக வந்தாரோ அது நிறைவேற உதவின.

இயேசுவின் உடலும் நம் உடலைப் போல் ஒரு சடப் பொருள் தான்.

நமது உடலைப்போல் தான் அதுவும் வளர்ந்தது,

பாடுகளின் போது தளர்ந்தது,

இறுதியில் சிலுவையில் மரித்தது.

ஆனாலும் இவையெல்லாம் ஆன்மீக நோக்கோடு நடந்த ஆன்மீகச் செயல்கள்.

இயேசு முழுமையாகக் கடவுளாகவும் இருப்பதால் அவரது உடல் நமது ஆராதனைக்கு உரியது.

நாம் இதை முழுமையாக உணர வேண்டும்.

நாம் நம்மைப் போன்ற மனிதர்களுக்கு வணக்கம் செலுத்த கை குவித்து தலை குனிவது வணக்கம்.

ஆனால் கடவுளை ஆராதிக்க இது போதாது.

முழங்கால்படியிட்டு நமது ஆராதனையைத் தெரிவிக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை முன் தலையை மட்டும் முன்னோக்கி சாய்த்தால் இயேசுவின் உடலின் தெய்வீகத் தன்மையை நாம் உணரவில்லை என்று அர்த்தம்.

நமது திருச்சபையில் ஆதி முதல் திவ்ய நற்கருணை முன் முழங்கால்படியிடும் வழக்கம்தான் இருந்தது.

அஞ்சலி ஹஸ்தா (தலை வணங்குதல்) முறை இடையில் வந்தது.

இப்போது அநேகர் திவ்ய நற்கருணை முன் தலை குனிவதோடு நிறுத்திக் கொள்கிறார்.

மனிதர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைத் திவ்ய நற்கருணைக்கும் கொடுத்தால்

 இயேசுதான் திவ்ய நற்கருணை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

ஆகவே புகுந்த மாற்றங்களை மாற்றி விட்டு பழமைக்குத் திரும்புவோம்.

திவ்ய நற்கருணைப் பேழை முன் முழங்கால்படியிடுவோம்.

முழங்கால்படியிட்டு நாவில் திவ்ய நற்கருணையை வாங்குவோம்.

சுகமில்லாதவர்களுக்கு விதி விலக்கு கொடுக்கலாம்.

Sugar பிரச்சினை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதற்காக எல்லோருமா சாப்பிடாமல் இருக்கிறோம்!

இயேசு மனிதனாகப் பிறந்தது உலக மீட்பு என்ற ஆன்மீக நோக்கத்திற்காக.

நாமும் நமது உடல் சார்ந்த செயல்களை ஆன்மீக நோக்கோடு செய்வோம்.

விண்ணுலகம் செல்வதற்காகவே மண்ணுலகில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment