நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
(அரு.10:11)
மனிதர்களை அவர்களின் குணத்தின் அடிப்படையில் உருவகப்படுத்துவது வழக்கம்.
வீரத்தில் சிறந்தவனைச் சிங்கம் என்றும்,
சாதுவான பெண்ணைப் பசு என்றும் அழைப்பது வழக்கம்.
இயேசு கடவுள்.
அவர் தன்னை ஒரு ஆயனாக உருவகப்படுத்துகிறார்.
"நல்ல ஆயன் நானே." என்கிறார்
பழைய ஏற்பாட்டில் கூட கடவுளை ஆயராக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.
பைபிளில் ஏறத்தாழ 200 இடங்களில் கடவுளை ஆயன் என்று வர்ணித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
நல்ல ஆயன் தனது ஆடுகளை நன்கு கவனித்து, அவற்றுக்கு உணவூட்டுவது போல கடவுளும் தன் மக்களாகிய நம்மைக் கவனித்து வருவதால் அவருக்கு இந்த உருவகம்.
''ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். "
(எசாயா 40:11)
''ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்!
(மீக்கா 7:14)
" நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.
கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.
அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
(அரு.10:11-17)
"என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே."
(எபிரேயர் 13:20)
"நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்."
(1 பேதுரு 2:25)
"தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்."
(1 பேதுரு 5:4)
"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை."
(திருப்பாடல்கள் 23)
திருப்பாடல்களைப் பாடிய தாவீது அரசர் பையனாக இருந்தபோது ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அவர் பெற்ற அனுபவம் தான் கோலியாத்தைக் கொல்ல உதவியது.
ஆடுகளைச் சாப்பிட வந்த சிங்கத்தை வீழ்த்திய கல்தான் கோலியாத்தை வீழ்த்தியது.
அவர் ஆயனாக இருந்த போது பெற்ற அனுபவம் தான் தன்னை ஆடாகவும் இறைவனை ஆயனாகவும் உருவகப் படுத்தத் தூண்டியது.
"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்."
ஆயர்கள் ஆடுகளை இரவில் பசும்புல் வெளிகளில் தான் இளைப்பாறச் செய்வார்கள்.
இளைப்பாறும் போதே புல்லையும் மேய்ந்து கொள்ளும்.
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரைக் குடிப்பதை விட அமைதியான ஊற்று நீரைப் பருகுவது ஆடுகளுக்கு எளிது.
நம்மாலும் மன அமைதியில் தான் ஆண்டவரைத் தியானிப்பது எளிது.
ஆடுகளின் மேய்ச்சல் அனுபவம் ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.
இயேசு குழந்தையாகப் பிறந்த செய்தி முதலில் சாமக்காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு (ஆயர்களுக்கு) தான் அறிவிக்கப்பட்டது.
மரியாளுக்கும், சூசையப்பருக்கும் அடுத்தபடி குழந்தை இயேசுவை முதலில் பார்க்க பாக்கியம் பெற்றவர்கள் அவர்கள் தான்.
ஆயர்களின் பணி எவ்வளவு மகத்தானது என்று இயேசுவுக்குத் தெரியும்.
ஆகவே தான் அவர் தன்னை நல்ல ஆயனாகவும் நம்மை ஆடுகளாகவும் உருவகப் படுத்துகிறார்.
ஆடுகளுக்காக வாழ்பவன் ஆயன். நல்ல ஆயன் ஆடுகளைப் பாதுகாப்பதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருப்பான்.
"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்." இவை இயேசுவின் வார்த்தைகள்.
ஆடுகளாகிய நம்மை மீட்பதற்காக சிலுவையில் தன்னையே பலியாக்கியவர் இயேசு.
காணாமல் போன பாவிகளாகிய நம்மைத் தேடி விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர் இயேசு.
நம்மை மையமாக வைத்தே அவர் சிந்திப்பதால் தன்னை ஆட்டுக்குட்டியாகவும் உருவகப்டடுத்துகிறார்.
மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக பலியிடப்படும் ஆட்டுக் குட்டி.
"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்."
(அரு. 1:29)
இவை திருமுழுக்கு அருளப்பரின் வார்த்தைகள்.
நமது ஆன்மீக மீட்பைப் பொறுத்த மட்டில் ஆயனும் அவரே, ஆட்டுக் குட்டியும் அவரே.
நமக்கு எல்லாம் அவரே.
நம்மைப் படைத்த கடவுள் அவரே.
நமக்காக நாமாக ஆனவர் அவரே. (மனிதனாகப் பிறந்தவர்)
ஆயனும் அவரே,
ஆட்டுக்குட்டியும் அவரே.
உணவு தருபவர் அவரே,
உணவும் அவரே.
நாம் நிலை வாழ்வு பெற தனது வாழ்வையே பலி கொடுத்தவர் அவர்.
நல்ல ஆயனுக்கேற்ற
நல்ல ஆடுகளாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment