Sunday, December 29, 2024

ஆதியில் வார்த்தை இருந்தார்; அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.(அருளப்பர் நற்செய்தி 1:1)

 ஆதியில் வார்த்தை இருந்தார்;
 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.
(அருளப்பர் நற்செய்தி 1:1)

உள்ளத்தில் பிறப்பது வார்த்தை.

இறைவன் உள்ளத்தில் பிறக்கும் வார்த்தை இறைமகன்.

இறைவன் நித்தியர்.

இறைமகனும் நித்தியர்.

பிறப்பவர் மகன்.

பெறுகிறவர் தந்தை.

இருவருக்குமிடையே நித்தியமாக அன்பு புறப்படுகிறது.

அன்பும் இறைவன்.

அன்பு தூய ஆவி எனப்படுகிறார்.

அருளப்பர் தனது நற்செய்தியின் முதல் அதிகாரத்திலேயே பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விடுகிறார்.

தந்தையையும் மகனையும் பற்றி முதல் வசனத்திலும்,  தூய ஆவியைப் பற்றி 32ஆம் வசனத்திலும் குறிப்பிடுகிறார்.

"தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது; "தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்."
(அரு. 1:32)


தந்தை இறைவன்.
மகன் இறைவன்.
தூய ஆவி இறைவன்.
மூவரும் ஒரே இறைவன்.

அருளப்பர் தனது நற்செய்தியை வார்த்தையில் ஆரம்பிக்கிறார்.

ஏனெனில் அவர் எழுத ஆரம்பிப்பது இறை வார்த்தையை,  

அதாவது வார்த்தையானவரின் நற்செய்தியை எழுதவிருப்பதால் முதலில் வார்த்தைக்கு உரிய வார்த்தையை நினைவுகூறுகிறார்.

எதைப்பற்றி சிந்தித்தாலும் சிந்தனையில் கேள்விகள் எழும்.

கேள்விகள் எழாவிட்டால் நாம் சிந்திக்கவில்லை என்று அர்த்தம்.

கடவுள் நித்தியர்.

இருக்கிறவர்.

இருக்கிறவரை ஏன் இருந்தார் ஏன் கடந்த கால வினைச் சொல்லால் குறிக்கிறார்?

கடவுள் காலங்களைக் கடந்தவர்.
எழுதுகிறவர் காலங்களுக்கு உட்பட்டவர்.

காலங்களுக்கு உட்பட்டவரால் காலத்தின் அடிப்படையில் தான் சிந்திக்க முடியும்.

ஆகையால் அருளப்பர் அவர் பிறக்கும் முன்பே "இருக்கிற" கடவுளை இருந்தார் என்கிறார்.

அளவுள்ள நமது மொழியில்  எழுதப்பட்டதை கடவுளின் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் ஆதியும் அந்தமும் அற்றவர்.

ஆகவே ஆதியில் என்ற வார்த்தையை துவக்கமில்லாத காலத்திலிருந்து என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இருந்தார் என்ற வார்த்தையை இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல் மனித மொழியில் எழுதப்பட்டு, கடவுள் பார்வையில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய வார்த்தைகள் பைபிளில் நிறைய உள்ளன.

''மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.''
(தொடக்கநூல் 2:2)

கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.
கடவுள் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புப் பணியும், பராமரிப்புப் பணியும் தொடர்ந்து ஒவ்வொரு வினாடியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடவுளை மகிமைப் படுத்த வாரத்தின் ஏழாம் நாளில் நாம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது நமக்குத் தரப்படும் செய்தி.



"ஆதியில் வார்த்தை இருந்தார்; அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

துவக்கம் இல்லாத காலத்திலிருந்தே வார்த்தையானவர் கடவுளோடு, கடவுளாக இருக்கிறார்.

வார்த்தையானவர் கடவுள்.
அவரைப் பெறுகிறவர் கடவுள்.
தூய ஆவியானவர் கடவுள்.

"கடவுளோடு இருந்தார்'' என்ற வார்த்தைகள் மூவரும் மூன்று வெவ்வேறு ஆட்கள் (Distinct persons) என்பதைக் குறிக்கின்றன.

"கடவுளாயும் இருந்தார்" என்ற வார்த்தைகள் மூவரும் ஒரே கடவுள் என்பதைக் குறிக்கின்றன.

உலகைப் படைத்தவர் யார்?
கடவுள்.

"அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. 
(யோவான் நற்செய்தி 1:3)

உலகத்தை உள்ளடக்கிய பிரபஞ்சம் வார்த்தையால் உண்டாயிற்று.

வார்த்தை கடவுள், ஆகவே பிரபஞ்சம் கடவுளால் உண்டாயிற்று.

எதற்காக பிரபஞ்சத்தைப் படைத்தார்?

நமக்காக.   நம்மை எதற்காகப் படைத்தார்?

அவரை அன்பு செய்ய. சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்ய.

அன்பு செய்து வாழ.

வார்த்தையானவர் தனது வார்த்தையின் மூலம் நம்மில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

அவரைப் போல் நாமும் அன்பு செய்து வாழ வழி காட்டிக் கொண்டிருக்கிறார்

அவர் தந்தையுள் வாழ்வது போல நாமும் அவருள் வாழ நம்மை அழைக்கிறார்.

நாம் அன்பு செய்து வாழ அவர் நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

உணர்ந்தால் மட்டும் போதாது, நமது உணர்வைச் சொல்லாலும், செயலாலும் வாழ வேண்டும்.

அன்பு செய்து வாழ வேண்டும்.

அன்பு செய்வதுதான் வாழ்க்கை.

அன்பு செய்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment