Thursday, December 5, 2024

நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். (மத்தேயு நற்செய்தி 10:8)

நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். 
(மத்தேயு நற்செய்தி 10:8)

இவை யாருக்கு, யாரால் கொடுக்கப் பட்ட கட்டளைகள்?

நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்பட்ட சீடர்களுக்கு,

இயேசுவால் கொடுக்கப்பட்ட கட்டளைகள்.

சீடர்கள் வெறுமனே நற்செய்தியை அறிவிக்கும் பணியை மட்டும் செய்யக் கூடாது.

இயேசு செய்ததைப் போல அவர்களும் செய்ய வேண்டும்.

இயேசு முதலில் மக்களுக்கு நன்மைகள் செய்தார். அப்புறம் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

மக்களும் அவர் அறிவித்த செய்தியை ஏற்றுக் கொண்டார்கள்.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அருளப்பர் தான் எழுதிய நற்செய்தி நூலில் 

முதல் அதிகாரத்தில் சீமோன், அந்திரேயா, பிலிப்பு, நத்தனியேல் ஆகியோரை‌ச் சீடர்களாக தேர்வு செய்ததைக் கூறிவிட்டு,

இரண்டாம் அதிகாரத்தில் இயேசு கானாவூர்த் திருமணத்தில் செய்த பிறரன்புப் பணியை‌ விளக்கி விட்டு,

அடுத்து எருசலேம் சென்று 

பாஸ்கா விழாவின்போது    அரும் அடையாளங்களைச் செய்து தன் மேல் மக்களுக்கு  பெயரில் நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு. 
(யோவான் நற்செய்தி 2:23)

அடுத்து மூன்றாம் அதிகாரத்தில் நற்செய்தியை அறிவிப்பதை ஆரம்பிக்கிறார்.

முதலில் சீடர்கள் தேர்வு.
அடுத்து பிறரன்புப் பணி.
அடுத்து நற்செய்தியை அறிவித்தல்.

முதலில் பிறருக்கு உதவிகள் செய்வதன் மூலம் அவர்களின் மனதில் விசுவாசத்தை விதைக்க வேண்டும்.

விசுவாசம் உள்ளவர்களிடம் நற்செய்தியை அறிவித்தால்தான் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

சீடர்களும் அதேபோல் முதலில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.


"நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்."

"இவையெல்லாம் கடவுளிடமிருந்து இலவசமாகப் பெற்ற வரங்கள் தானே, அவற்றை இலவசமாகவே கொடுங்கள்."

அடுத்து இலவசமாகத் தாங்கள் பெற்ற நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

உதவிகளை வியாபார ரீதியாகச் செய்யக்கூடாது.

இலவசமாகச் செய்ய வேண்டும்.

உதவிகள் மட்டுமல்ல, நற்செய்தி அறிவித்தலும் இலவசப் பணிதான்.

அன்று பன்னிரு சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை நமக்கும் பொருந்தும்.

ஆகவே தான் இந்தியாவில் நற்செய்தியை அறிவிக்க வந்த அயல் நாட்டு வேத போதகர்கள் முதலில் மருத்துவ மனைகளையும், பள்ளிக்கூடங்களையும் ஆரம்பித்தார்கள்.

இந்தியாவில் கல்விப் பணிக்கும், மருத்துவப் பணிக்கும் அடித்தளம் இட்டவர்கள் நமது வேத போதகர்கள் தான்.

புனித கல்கத்தா தெரசா தொழு நோயாளிகளுக்கு ஆற்றிய பணியின் மூலம் தான் ஆன்மீக நோயை நீக்கும் அன்பு என்னும் நற்செய்தியை அறிவித்தாள்.

பிறரன்புப் பணியே நற்செய்திப் பணி‌தான்.

சாதாரண மக்களாகிய நம்மால் பெரிய அளவில் மருத்துவ மனைகள் நடத்த முடியாவிட்டாலும் 

நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதன் மூலம் நமது அன்பை அவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

நமது அன்பைப் பகிர்ந்து கொண்டபின் இறையன்பை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது எளிது.

ஒரு முறை ஒரு சினிமா நடிகை அன்னைத் தெரசாவிடம்,

"நான் எப்படி உங்களைப் போல சேவை செய்யலாம்?" என்று கேட்டபோது,

உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும் பெரிய இறைப்பணிதான் என்றார்கள்.

ஒரு முதல் வகுப்பு மாணவன் தன் அருகில் உள்ளவனுக்கு சிலேட்டுக் குச்சி கொடுத்து உதவுவதே ஒரு பிறர் அன்புப் பணிதான்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

ஆறடி நீள கரும்பு மட்டுமா இனிக்கும்?

புளியங்கொட்டை அளவுள்ள ஆரஞ்சு மிட்டாய் கூட இனிக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவிகள் செய்வோம்.

நமது அன்பால் அவர்களை நம் பக்கம் ஈர்த்து, 

 நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயேசுவை அவர்களுக்கும் அளிப்போம்.

முதலில் இயேசுவை நேசிப்போம்.

அடுத்து பிறரைச் சிந்தனையாலும், சொல்லாலும், 
செயலாலும் 
நேசிப்பதன் மூலம் ‌
நாம் நேசிப்பவரை அவர்களுக்கும் கொடுப்போம்.

கொடுப்பதில் தான் அன்பு இருக்கிறது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment