Monday, December 16, 2024

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். (மத்தேயு நற்செய்தி 1:24)

 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 
(மத்தேயு நற்செய்தி 1:24)

மரியாள் மூன்று வயதிலிருந்தே ஆலயத்தில் வளர்ந்த பெண்.

சிறுவயதிலேயே,
 "நான் வாழ்நாள் முழுவதும் கன்னியாக இருப்பேன்" 
என்று கடவுளுக்கு வாக்குக் கொடுத்து விட்டாள்.

இது ஆலயத்தில் அவளை வளர்த்த குருவுக்குத் தெரியும்.

ஆகவே அவளுக்குத் திருமண வயது வந்த போது அவளுடைய கன்னிமைக்கு பாதுகாப்பாய் இருக்கக்கூடிய ஒருவரை அவளுடைய கணவராகத் தேர்வு செய்யத் தீர்மானித்தார்.

தூய ஆவியின் உதவியோடு சூசையப்பர் தேர்வு செய்யப் பட்டார்.

அவளுடைய கன்னிமைக்கு பாதுகாப்பாய்   இருப்பது என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் திருமண ஒப்பந்தம் நடந்தது.

அவர் வேலை விடயமாக வெளியூர் சென்றிருந்த போது கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி அவள் கடவுளின் தாயாகப் போகும் விடயத்தைப் சொன்னார்.

அவளது கன்னிமைக்குப் பழுது ஏற்படாது என்றும்,

தூய ஆவியின் வல்லமையால் அது நிகழும் என்றும் அறிவித்தார்.

மரியாள் அதற்குச் சம்மதித்தாள்.

சம்மதித்த வினாடியே தூய ஆவியின் வல்லமையால் இயேசு அவள் வயிற்றில் உற்பவித்தார்.

இந்த விடயம் சூசையப்பருக்குத் தெரியாது.

மரியாள் கருவுற்றிருந்தது தெரிந்தபோது மரியாளுக்கு இகழ்ச்சி ஏற்படுவதை விரும்பாத சூசையப்பர் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக விலக்கி வைப்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்த போது தூங்கி விட்டார்.

கனவில் கபிரியேல் தூதர் அவருக்குத் தோன்றி,

"யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார். 
(மத்தேயு நற்செய்தி 1:21,22)

சூசையப்பரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் மரியாளை ஏற்றுக் கொண்டார்.

முதலில்  வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்று கேட்ட மரியாள்,
(லூக்கா நற்செய்தி 1:34)

"ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" 
என்ற கபிரியேல் தூதரின் வார்த்தைகளை மறு கேள்வி கேட்காமல் விசுவசித்தாள்.

ஏனெனில் அவை கடவுளிடமிருந்து வந்த வார்த்தைகள்.

அதேபோல் சூசையப்பர் கனவில் தோன்றி பேசிய கபிரியேல் தூதரின் வார்த்தைகளை மறு கேள்வி கேட்காமல் விசுவசித்தார்.

மரியாளுக்கு தூதர் நேரில் தோன்றினார்.

சூசையப்பருக்குக் கனவில்தான் தோன்றினார். ஆனாலும் அவர்  தூதருடைய வார்த்தைகளை விசுவசித்தார்.

இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும்.

சக்கரியாவுக்கும் தூதர் தோன்றினார்.

ஆனால் அவரைப் பொறுத்த மட்டில் அவர் விசுவசிக்கு முன் தூதர்,

 "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். 
(லூக்கா நற்செய்தி 1:19)
என்று சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் மரியாளும், சூசையப்பரும் அவர் சொல்லாமலே அவரை இறைத் தூதராக ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கு ஏற்கனவே கடவுளோடு அவர்களுக்கு இருந்த நெருக்கம் தான் காரணம்.

இந்நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

மரியாள் விசுவசித்ததினால்தான் இயேசு அவள் வயிற்றில் உற்பவித்தார்.

அதே இயேசு நாம் விசுவசித்தால்தான் நமது உள்ளத்தில் குடியிருப்பார்.

விசுவாசம் ஒரு சத்தியத்தை உண்மை என்று ஏற்றுக் கொள்வதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை, அன்னை மரியாள் தான் விசுவசித்ததை வாழ்ந்தாள்.

நாம் "விசுவசிக்கிறேன்" என்று சொன்னால் மட்டும் போதாது, விசுவசித்ததை வாழ வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

"பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சரவேசுரனை விசுவசிக்கிறேன்."

"என்னைப் பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்ப்பவள் தாய்" என்று ஏற்றுக் கொள்ளும் பிள்ளை அம்மா பக்கத்தில் இருக்கும் போது எதற்கும் பயப்படுமா?

"என்னைப் படைத்துப் பராமரிக்கும் தந்தை சர்வ வல்லவர், அவரால் முடியாதது எதுவும் இல்லை." என்பதை ஏற்றுக் கொண்டு விட்டு நான் எதற்கும் பயப்படலாமா?

மரணப் படுக்கையில் இருந்தாலும் பயப்படலாமா?

சர்வ வல்லவர் கையில் இருக்கிறேன், 

இருந்தாலும் அவர் கையில், இறந்தாலும் அவர் கையில்.

 உண்மையான விசுவாசி எதற்கும் பயப்பட மாட்டான்.

வாழ்வையும் ஏற்றுக் கொள்வான், சாவையும் ஏற்றுக் கொள்வான்,
முழுமையான மகிழ்ச்சியுடன்.

மரியாள் வியாகுலங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

தன் மகன் பாடுகள்பட்டு சிலுவையில் தொங்கியபோதும் நமது மீட்பை நினைத்து ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாள்.

சிலுவையில் அறையப்பட்டு தொங்கியவர் எல்லாம் வல்ல கடவுள் என்று அவளுக்குத் தெரியும்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்பதும் அவளுக்குத் தெரியும்.

"விண்ணகத் தந்தையே என் தந்தை" என்று ஏற்றுக் கொண்ட அசிசி நகர் பிரான்சிஸ் இயேசுவைப் போல் ஏழ்மையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

இயேசு தன் ஐந்து காயங்களையும் அவருக்கு பரிசாக அளித்தார்.

 ஆண்டவர் நமக்குப் பணித்தவாறே அவரை விசுவசிப்போம், நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment