என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
(மத்தேயு நற்செய்தி 7:21)
''அப்பா, இன்றைக்கு பள்ளிக்கூடம் வரவேண்டாம் என்று எங்கள் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். நானும் உங்களுடன் வயலுக்கு வரட்டுமா?"
"'இன்று பள்ளி விடுமுறையா?"
''பள்ளிக்கூடம்தான். நான் மட்டும் பள்ளிக்கூடம் போக வேண்டாம்."
"ஏன்?"
"இது எங்களுடைய ஆசிரியரின் உத்தரவு."
"உனக்கு மட்டுமா?"
"வீட்டுப்பாடம் படிக்காதவர்கள் பள்ளி கூடத்துக்கு வர வேண்டாம் என்று எங்கள் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
நான் வீட்டுப்பாடம் படிக்கவில்லை.
ஆகவே ஆசிரியரின் உத்தரவுப்படி நான் பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை."
"எனது பேச்சைக் கேட்காவிட்டால் நீ எனது பிள்ளை இல்லை என்று நான் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?''
"நான் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அர்த்தம்."
"அப்படியானால் உனது ஆசிரியர் கூறியதற்கு என்ன அர்த்தம்?"
"வீட்டுப்பாடம் படிக்க வேண்டும் என்று அர்த்தம்."
"பள்ளிக்கு வரவேண்டாம் என்று அர்த்தம் இல்லை."
''படிக்காமல் போனால் அடிப்பார்களே!''
"அடியை வாங்கிக்கொள். பட்டால் தான் புத்தி வரும்."
"சரிப்பா பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன்."
இப்போ எதற்காக இந்தக் கதை?
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
"இயேசுவை ஆண்டவரே என்று அழைக்கக்கூடாது என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.
ஆனால் கிறிஸ்தவர்கள் அவரது கட்டளைக்கு மாறாக ஒவ்வொரு நாளும் அவரைப் பார்த்துதான் செபிக்கிறார்கள்."
"உண்மையிலேயே இயேசு அப்படி சொல்லியிருக்கிறாரா?"
''ஆமா.
"ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை". என்று அவர் சொன்னது பைபிளில் இருக்கிறதே."
"உண்மையாகவா?"
பைபிளை அரைகுறையாக வாசிப்பவர்களுடைய பேச்சு இது.
"கடவுள் இல்லை" என்று கூட பைபிளில் இருக்கிறது.
"கடவுள் இல்லை" என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்.
(திருப்பாடல்கள்14:1)
சாத்தான்கூட தனது கூற்றுக்கு பைபிளிலிருந்து மேற்கோள் காட்டுவான்.
அவன் இயேசுவை மூன்று முறை சோதித்தது பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டித்தானே!
"ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்."
(1திமொத்தேயு 2:5)
பைபிள் மட்டும் போதும் என்று வாதிடும் நண்பர்கள்
இந்த வசனத்தை மாதா பக்திக்கு எதிராகப் பயன் படுத்துகிறார்கள்.
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர் இயேசு மட்டுமே.
ஆகவே நாம் நேரடியாக இயேசுவை வேண்டினால் போதும், புனிதர்கள் மூலம் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களது வாதம்.
நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததற்கு முன் அவர்களுக்கும் கடவுளுக்கும் நேரடி உறவு இருந்தது.
ஆனால் அவர்கள் செய்த பாவம் இந்த உறவை முறித்து விட்டது.
பாவத்திலிருந்து மனுக் குலத்தைமீட்டு மீண்டும் இறை மனித உறவை ஏற்படுத்துவதற்காக
கடவுளே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.
மனிதனை கடவுளிடமிருந்து பிரித்த பாவத்தை வென்று
மனிதனைக் கடவுளோடு இணைத்ததால் அவர் மட்டுமே இணைப்பாளர்.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இறைவனை நோக்கிய நமது வேண்டுதல்களை வானதூதர்கள் இறைவனிடம் எடுத்துச் செல்கிறார்கள் என்று பைபிள் கூறுகிறது.
(திருவெளிப்பாடு5:8, 8:3,4)
நமது காவல் சம்மனசுக்களின் முக்கிய பணிகளில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் சேர்ப்பதும் அடங்கும்.
"நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.
(தோபித்து 12:12)
கடவுளே தான் மனித உரு எடுக்கவிருந்த செய்தியைக் கபிரியேல் என்ற வானதூதர் மூலமாகத்தான் மரியாவுக்கு அறிவித்தார்.
உலக மீட்பர் பிறந்த செய்தியை இடையர்களுக்கு அறிவித்தது வான தூதர்கள் மூலமாகத்தான்.
சூசையப்பரின் கையிலிருந்த குழந்தை கடவுள்.
அவர் நினைத்திருந்தால் தானே சூசையப்பரோடு
பேசியிருக்கலாம்.
ஆனால் வான தூதர் மூலமாகத்தான் சூசையப்பர் தாயையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் செல்ல வேண்டும் என்ற செய்தியை அறிவித்தார்.
வான தூதர்கள் செய்கின்ற வேலையை அன்னை மரியாளும் புனிதர்களும் செய்யக்கூடாதா?
நாம் அன்னை மரியாளிடமோ, புனிதர்களிடமோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில்லை.
அவர்கள் மூலமாக இறைவனிடம் தான் சமர்ப்பிக்கிறோம்.
அவர்களிடம் "எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று தான் சொல்கிறோம்.
புனிதர்கள் மூலமாக நமது மன்றாட்டுக்களை இறைவனுக்கு அனுப்ப வேண்டாம் என்று பைபிளில் சொல்லப்படவில்லை.
பைபிளிலிருந்து உண்மையை அறிவதற்குப் பதில் சிலர் சொந்தக் கருத்துகளை வலியுறுத்தப் பைபிள் வசனங்களுக்கு தவறான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள்.
விக்கிரக ஆராதனை கூடாது என்பது திருச்சபையின் போதனை.
கடவுளுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஆராதனையைச் சிலைகளுக்குச் செய்வதுதான் விக்கிரக ஆராதனை.
ஆராதிப்பதற்காகச் செய்யப் படும் சிலைதான் விக்கிரகம்.
பெரிய மனிதர்களின் நினைவுச் சின்னங்கள் விக்கிரகங்கள் ஆகாது.
நாம் புனிதர்களை நினைவுபடுத்துவதற்காகச் செய்யும் சுரூபம் விக்கிரகம் ஆகாது.
தேர்வுக்காகப் படிப்பது பாடப் புத்தகம்.
பொழுதுபோக்குக்காகப் படிப்பது கதைப் புத்தகம்.
கதைப் புத்தகத்தைத் தேர்வுக்காகப் படித்தால் அதுவும் பாடப் புத்தகம்தான்.
புத்தகம் என்றால் பாடப்புத்தகம் என்று அர்த்தம் அல்ல.
நாம் விக்கிரக ஆராதனை செய்கிறோம் என்று குற்றம் சாட்ட நமது பிரிவினைச் சகோதரர்கள் மேற்கோள் காட்டும் பைபிள் வசனம்,
''மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்."
(விடுதலைப் பயணம் 20:4)
இது இயேசுவை வணங்கக்கூடாது என்று கூற
"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை."
என்ற வசனத்தைச் சொல்வது போன்றது.
பைபிள் கூறுவது,
3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.
(விடுதலைப் பயணம் 20:3-5)
இம்மூன்று வசனங்களையும் சேர்த்து வாசித்துப் பொருள் காண வேண்டும், பிரித்து வாசித்து அல்ல.
இம்மூன்று வசனங்களுக்குமான பொருள் என்ன?
''நான் மட்டுமே உனது கடவுள்.
நீ வழிபட வேண்டியது என்னை மட்டுமே,
எனக்குச் செய்கின்ற வழிபாட்டை சிலைகளுக்குச் செய்யக்கூடாது."
சிலைகளைச் செய்ய வேண்டாம் என்று கடவுள் சொல்லவில்லை.
எனக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டைச் செய்வதற்காக சிலைகளைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்.
சிலைகள் அல்ல, அவற்றைச் செய்வதன் நோக்கம் தான் அவற்றைச் செய்வது பாவமா, பாவமில்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
உடன் படிக்கையின் பேழை மேல்
வைக்க இரு பொன் கெருபுகளைச் செய்ய வேண்டும் என்று சொன்னவர் கடவுள்தானே.
(விடுதலைப் பயணம் 25:18)
அடுத்த இரு வசனங்களில் அவற்றை எப்படி வைப்பது என்றும் கூறியுள்ளார்.
ஆக சிலைகளைச் செய்ய வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை. இறைவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையைச் செய்வதற்காகச் சிலைகளைச் செய்ய வேண்டாம் என்றுதான் சொல்கிறார்.
இப்போது ஆரம்ப வசனத்துக்கு வருவோம்.
"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
என்ன பொருளில் ஆண்டவர் இந்த வசனத்தைச் சொல்கிறார்?
"விண்ணகம் செல்ல வேண்டும் என்றால் என்னை ஆண்டவரே என்று அழைத்தால் மட்டும் போதாது, விண்ணகத் தந்தையின் விருப்பப்படி நடக்கவும் வேண்டும்.''
பைபிள் செய்திகள் எல்லாம் விண்ணகத் தந்தையின் செய்திகள் தான். பைபிளை வாசித்தால் மட்டும் போதாது, அதை வாழ வேண்டும்.
பைபிள் செய்திகளை வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும், விசுவசிக்க வேண்டும்.
சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் விசிவசிக்க வேண்டும்.
விசுவாசம் என்பது வாழ்வு.
அன்னை மரியாள் இயேசு உயிர்ப்பார் என்று விசுவசித்ததால் தான் அவரைப் பார்க்கக் கல்லறைக்குப் போகவில்லை.
விசுவாசம் குறைவாக இருந்தவர்கள் தான் அவரைப் பார்க்கக் கல்லறைக்குப் போனார்கள்.
நாமும் இயேசுவை விசுவசிப்போம்,
அவர் சொற்படி விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வோம்.
விண்ணகத்தில் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment