Wednesday, December 11, 2024

"இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. 17 நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீ;ங்கள் மாரடித்துப் புலம்பவில்லை" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். (மத்தேயு நற்செய்தி 11:16,17)

 "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. 

17 நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீ;ங்கள் மாரடித்துப் புலம்பவில்லை" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். 
(மத்தேயு நற்செய்தி 11:16,17)

திருமுழுக்கு அருளப்பரின் போதனையையும், இயேசுவின் போதனையையும் பரிசேயர்களும் மற்ற யூத மதத் தலைவர்களும் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை இயேசு ஒரு ஒப்புமை மூலம் விளக்குகிறார்.

 சந்தை வெளியில் சிறுவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு அணியினர்‌ அடுத்த அணியினரைப்பார்த்து,

''நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. 
நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீ;ங்கள் மாரடித்துப் புலம்பவில்லை"

என்று கூறி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

"நாங்கள் குழல் ஊதும் போது நீங்கள் ஆடவேண்டும்.

நாங்கள் ஒப்பாரி வைக்கும் போது நீங்கள் மாரடிக்க வேண்டும்.

நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை.

நாங்கள் ஒப்பாரி வைத்தோம், நீங்கள் மாரடிக்கவில்லை."

இது சிறுவர்களின் விளையாட்டு.

சிறுவர்கள் ஒருவரையொருவர் குறை‌  சொல்லி விளையாடுவதைப் போல

பரிசேயர்களும், மதத் தலைவர்களும் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டதை இயேசு சுட்டிக் காண்பித்தார்.


அருளப்பர் வாயையும் வயிற்றையும் ஒறுத்து நோன்பு இருந்து மக்களை மனம் திரும்பவும், பரிகாரம் செய்யவும் அழைத்தார்.

பரிசேயர்கள் போதனையை ஏற்றுக் கொள்ளாமல்
 அவரைப் பேய்பிடித்தவன்" என்றார்கள். 


இயேசு சாதாரண மக்களைப் போல் சாப்பிட்டார், குடித்தார். சாதாரண மக்களோடு  வாழ்ந்து அன்பைப் பற்றியும், இரக்கத்தைப் பற்றியும், மன்னிப்பைப் பற்றியும் போதித்தார் .

அவரை "பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்றார்கள். 

சிறுவர்கள்‌ குறை சொல்லிக் கொண்டே விளையாடுவதைப் போல இவர்கள் சிறுபிள்ளைத் தனமாக அருளப்பரையும் இயேசுவையும் குறை சொல்வதிலேயே குறியாகக் கொண்டிருக்கிறார்கள்.

போதகர்களுடைய போதனைப் படி மக்கள் மனம் திரும்பி வாழ வேண்டும்.

ஆனால் பரிசேயர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் எதிர்பார்ப்புப் படி அருளப்பரும், இயேசுவும் போதிக்கவில்லை.

இவர்கள் குழல் ஊதுவதற்கு ஏற்றபடி போதகர்கள் ஆட முடியுமா?

சாதாரண மக்கள் அருளப்பருடைய போதனைப்படி தபசு ஞானஸ்நானம் பெற்றார்கள், இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பரிசேயர்கள் அவர்களைக் குறை சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவின் மரணத்துக்கு அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள்.

இது இயேசு வாழ்ந்த காலத்தில்.

இப்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

இயேசுவின் காலத்திய பாவிகள் போல நடந்து கொள்கிறோமா?

பரிசேயர்கள் போல நடந்து கொள்கிறோமா?

சினிமா பார்க்கச் செல்லும் மக்கள் படத்தை விமர்சித்துக் கொண்டு வருவதைப் போல சிலர் திருப்பலிக்குச் செல்லும் போது நடந்து கொள்கிறார்கள்.

ஞாயிறு திருப்பலியின் போது குருவானவர் இயேசுவைப் போலவே போதிக்கிறார்.

தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக் கொள்ளும் மக்கள் குருவானவரில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

திருப்பலிக்கு முன் பாவ சங்கீர்த்தனம் மூலம் பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்வார்கள்.

பிரசங்கத்தின் போது தரப்படுகின்ற நற்செய்தியை ஏற்று அதன்படி வாழ முயல்வார்கள்.

கிறிஸ்தவர்களிலும் பரிசேயர்களின் வாரிசுகள் சிலர்  இருக்கிறார்கள்.

இவர்களது ஒரே கிறிஸ்தவப் பணி பங்குக் குருவானவரைக் குறை சொல்வதுதான்.

இவர்களது விமர்சனத்துக்கு எந்த பிரசங்கமும் தப்பிக்க முடியாது.

இவர்கள் பிரசங்கம் கேட்பதே அதில் குறை காண்பதற்காகத்தான்.

இயேசு சொன்ன ஒப்புமை இவர்களுக்கும் பொருந்தும்.

நாம் பரிசேயர்களைப் போல் நடக்கக் கூடாது.

நாம் திருப்பலியில் பங்கேற்பது மனம் திரும்புவதற்காகவும், இயேசுவுக்குப் பிரியம் உள்ளவர்களாக வாழ்வதற்கு மட்டுமே.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்போம்.

அதன்படி நடப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment