Saturday, December 14, 2024

இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். (மத்தேயு நற்செய்தி 21:23)

இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். 
(மத்தேயு நற்செய்தி 21:23)

இயேசு எருசலேம் ஆலயத்தில் வியாபாரப் பொருட்களை எல்லாம் கவிழ்த்துப் போட்டு விட்டு, வியாபாரிகளை சாட்டையால் அடித்து விரட்டுகிறார்.

நோயாளிகளைக் குணமாக்குகிறார்.

மக்களுக்கு நற்செய்தியை முழு அதிகாரத்தோடு போதிக்கிறார்.

இது தலைமைக் குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

அவர்கள் அவரைப் பார்த்து,

"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?"

என்று கேட்கிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, 

"அருளப்பருக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?" என்று  கேட்கிறார்.  . 

 அவர்கள், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைக்கிறார்கள். 

அவரும் அவர்களிடம் "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 21:27)

அவர்கள் ஏன் தெரியாது என்றார்கள், இயேசு ஏன் நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்?

அவர்களுக்கு அருளப்பர் மேல் நம்பிக்கை இல்லை.

 "விண்ணகத்திலிருந்து வந்தது" என்று சொன்னால், 

"பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை" எனக் கேட்பார். 

 "மனிதரிடமிருந்து" என்று சொன்னால், அது அருளப்பரை நம்பிய மக்களுக்கு எதிரானதாக இருக்கும். 

ஆகவே தெரியாது என்றார்கள்.

ஆகவே இயேசுவும் "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்"
என்றார்.

இரண்டு நண்பர்கள் ஒருவரோடொருவர் பேசும் போது மனம் திறந்து பேச வேண்டும்.

இயேசு நற்செய்தியை அறிவிக்கும்போது மனம் திறந்து அறிவித்தார்.

சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கதைகள் மூலமாக உண்மையைச் சொன்னார்.

சாதாரண மக்கள் அவரோடு மனம் திறந்துதான் பேசினார்கள்.

ஆனால் பரிசேயர்களும், மதகுருக்களும் உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசினார்கள்.

 அவரைச் சோதிப்பதற்கென்றே கேள்விகள் கேட்டார்கள்.

அவரிடம் குறை கண்டு பிடிப்பதற்காகவே அவர் பின் சென்று அவர் பேசியதைக் கேட்டார்கள்.

அவர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகத்தான் இயேசு அவர்கள் பாணியிலே பதில் சொன்னார்.

"நீங்கள் சொல்லாவிட்டால் நானும் சொல்ல மாட்டேன்."

ஆனால் கடைசி வரை அவர்கள் திருந்தவில்லை.

மனம் திரும்புவதற்குப் பதில் அவரைக் கொல்ல வழி தேடினர்.

அவர் மீது இல்லாத பழியைப் போட்டு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நமக்கும் நமது அயலானுக்கும்,
நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு,

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்குள் இருக்கும் உறவின் சாயலில் இருக்க வேண்டும்.

தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவரையொருவர் அளவில்லாத விதமாய் நேசித்தார்கள்.

நமது இறை உறவும், பிறர் உறவும் அன்பினால் பிணைக்கப்பட வேண்டும்.

நாம் கடவுளோடு மனம் திறந்து பேச வேண்டும்.

பேச வேண்டும் என்று சொல்லும் போது வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை.

இறைவனின் உட் தூண்டுதல்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு எதிரான எண்ணங்களுக்கு நமது மனதில் இடம் கொடாமலிருந்தாலே நமது மனதில் உதிக்கும் அனைத்து எண்ணங்களும் இறைவனுக்கு ஏற்றவையாகவே இருக்கும்.

நாம் செபிக்கும்போது நமது எண்ணங்களுக்கும் கடவுளின் தூண்டுதல்களேக்கும் இடையில் சம்பந்தம் இல்லாத எண்ணங்கள் புகக்கூடாது.

பரிசேயர்கள் இயேசுவோடு பேசும்போது இயேசுவில் குறை காண வேண்டும் என்ற எண்ணம் புகுந்ததால் தான் அவர்களால் இயேசுவோடு உரையாட முடியவில்லை.

"திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்."
(லூக்கா நற்செய்தி 10:25)

திருச்சட்ட அறிஞர் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அவரைச் சோதிக்கும் நோக்குடன் கேட்டான்.

நாம் இயேசுவிடம் ஏதாவது கேட்கும் போது உண்மையான விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

விசுவாசத்துக்கு எதிரான எண்ணத்தோடு கேட்டால் நமது விண்ணப்பம் கேட்கப்பட மாட்டாது.

இதை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான் நோயாளிகளை அவர் குணமாக்கினாலும் ,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

முழுமையான விசுவாசத்தோடு இறைவனிடம் செபிப்போம்.

உள்ளத்தில் இறைவன் பேசுவதைக் கூர்ந்து கவனிப்போம்.

திறந்த மனதுடன் இறைவனோடு பேசுவோம்.

இறை அருளைப் பெற எப்போதும் ஆன்மாவைத் திறந்தே வைத்திருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment