புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"தாத்தா, புத்தாண்டு வாழ்த்துக்கள்."
"புத்தாண்டு வாழ்த்துக்கள், பேரப்புள்ள.''
"தாத்தா, ஒரு சந்தேகம்."
"ஏண்டா, வருடப்பிறப்பு அன்றே சந்தேகமா? முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்வாங்க.''
"தாத்தா, சந்தேகம் இண்ணைக்கு வரல. அதுக்கு ஒரு வயசு ஆகுது.''
"அப்போ போன வருடப் பிறப்பன்று வந்தது. உடனே காலி பண்ணு, அது தாத்தா ஆகும் வரைக் காத்திருக்காதே. என்ன சந்தேகம்?"
''முக்கியமான விழா நாட்களில் ஏன் மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்?"
'"வாழ்த்தும்போது மற்றவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற நமது ஆசையை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"தாத்தா, எனக்கு அப்படித் தோன்றவில்லை. தினமும் காலையில் பார்த்தவுடன் "காலை வணக்கம்" என்று சொல்வது போல "வாழ்த்துக்கள்" என்று சொல்கிறேன்.
மற்றவர்களும் யாரைப் பற்றியும் ஆசை எதுவும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை."
"நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
நாம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அப்படியானால் மற்றவர்களும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.
அந்த ஆசையை நாம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தெரிவித்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.
அதற்காகவே வாழ்த்துகிறோம்.(வாழும்படி சொல்கிறோம்.)"
" ஆனால், தாத்தா, மற்றவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லதா, அல்லது, சீக்கிரம் விண்ணகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லதா?"
"'இதென்னடா கேள்வி? ஒரு தாய் குழந்தையைப் பெற்றவுடன் அது எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுவாள்?"
"நீண்ட நாள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவாள். நான் அதைக் கேட்கவில்லை. எப்படி ஆசைப்பட வேண்டும்?"
"'நீயே சொல்லு"
"அமெரிக்காவுக்குப் போக flight ஏறி விட்டோம். சீக்கிரம் போக வேண்டும் என்று ஆசைப்படுவோமா அல்லது மெதுவாக போக வேண்டும் என்று ஆசைப்படுவோமா?"
"'சீக்கிரம் போக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம்."
"பிறந்த குழந்தை விண்ணக பயணத்தை ஆரம்பித்துவிட்டது. விண்ணகத்துக்கு போவதற்காகத் தான் அது பிறந்திருக்கிறது. விண்ணகத்துக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று ஆசைப்படுவது தப்பா?"
"'நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது.
இந்த உலகத்தில் நீண்ட நாள் வாழ்ந்து கஷ்டப்பட்டு விண்ணகத்துக்கு செல்வதை விட சீக்கிரமாக சென்று விட்டால் கஷ்டங்கள் குறையுமே என்கிறாய்.
மாசில்லா குழந்தைகளின் மரணத்தை உதாரணமாகக் காண்பிப்பாய்.
ஆனால் நீ எண்ணுவது போல எண்ணக் கூடாது.
இவ்வுலக வாழ்வின் காலத்தை கடவுளின் திட்டத்துக்கு விட்டு விட வேண்டும்.
மாசில்லா குழந்தைகளின் மரணம் கடவுளின் நித்திய காலத்திட்டம்.
இயேசுவின் வளர்ப்பு தந்தை புனித சூசையப்பரின் மரணமும் அவருடைய நித்திய கால திட்டம்.
இயேசு 33 வது வயதில் மரணம் அடைய வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.
மனிதன் உலகில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது அவனுடைய இயல்பு.
அவனது ஆசை நிறைவேற வேண்டும் என்று நாம் வாழ்த்துவதில் தவறு இல்லை.
நாம் என்ன நினைத்து வாழ்த்தினாலும் இறைவனின் திட்டமே நிறைவேறும்.
மனிதர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவனது சித்தப்படி வாழ்வதுதான்.
எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்."
"நாம் எப்படி வாழ்த்தினாலும் நடப்பது தான் நடக்கும்.
நாம் நமது அன்பை வெளிப்படுத்த வாழ்த்துகிறோம்.
வாழ்த்தப்படுபவர்கள் நமது வாழ்த்தை ஏற்றுக் கொண்டு,
வாழும் காலத்தில் இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.
நான் சொல்வது சரியா?"
"' முற்றிலும் சரி. வாழ்த்தும் போது வெறுமனே வாழ்த்துக்கள் என்று கூறாமல் ஒவ்வொரு வாழ்த்திலும் ஒரு நற்செய்தியை அறிவிக்கலாம்.
காலையில் வணக்கம் சொல்லும்போது,
"நாள் முழுவதும் சமாதான உணர்வோடு வாழ்வீர்களாக."
"சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பாராக"
என்று வாழ்த்தலாம்.
இரவில் வணக்கம் சொல்லும்போது,
"பகலைப் போல இரவிலும் இயேசுவின் ஒளி உங்களோடு தங்குவதாக "
என்று வாழ்த்தலாம்.
பிறந்தநாளில் வாழ்த்தும் போது,
"வாழ்நாள் எல்லாம் இறை அருளோடு வாழ்க. இவ்வுலக வாழ்வில் விண்ணகப் பாதையில் வெற்றி நடை போடுவீர்களாக. விண்ணகத் தந்தை உங்களைச் சகல வளங்களாலும் நிறப்புவாராக." என்ற பொருள் பட வாழ்த்தலாம்.
திருமண நாளில் வாழ்த்தும் போது,
"திருக்குடும்பம் போல் வாழ்க. உங்களிடமும் ஒரு இயேசு பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பரிசுத்த தமதிரித்துவத்தின் சாயலில் வாழ்க." என்ற பொருள் பட வாழ்த்தலாம்.
எந்த சூழ்நிலையில் வாழ்த்தினாலும் ஒரு நற்செய்தியை அறிவித்தால்
நாம் வாழ்வதோடு மற்றவர்களும் வாழ உதவுகிறோம்."
"2025 எப்படி இருக்கும்?"
"'2024 ஐ விட ஒரு நாள் குறைவாக இருக்கும்.
2024----366 நாட்கள்.
2025-----365 நாட்கள்.
இது உறுதி.
மற்றப்படி அது எப்படி இருக்கும் என்பதை மக்களின் வாழ்க்கைதான் தீமானிக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் மதவாத அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.
மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
பெயரளவில் அல்ல, நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
நமது வாழ்க்கையால் மற்றவர்களை இயேசுவிடம் அழைப்போம்.
விண்ணகத் தந்தையின் அரசு மண்ணகத்திலும் ஏற்பட பாடுபடுவோம்.
ஆண்டு முழுவதும் இறை அன்பிலும், சமாதானத்திலும் வாழ்வோம்."
"அதற்காக நம்மை நாமே வாழ்த்திக் கொள்வோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment