ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்று உன்னிடம் சொல்பவரும் நானே.
(எசாயா 41:13)
முன்பின் தெரியாத ஊருக்கு முன்பின் தெரியாத ஊர் வழியாக பயணம் செய்தாலும் வழித்துணை இன்றி பயணம் செய்ய முடியாதே,
முன்பின் தெரியாத ஊர் மட்டுமல்ல இந்த உலகத்திலேயே இல்லாத ஊருக்கு எப்படிப் பயணிப்பது என்று திரு திரு என்று விழித்துக் கொண்டு நிற்கிற ஆன்மா என்ன செய்யும்?
நிற்பது கல்லாலும் மண்ணாலும் ஆன இவ்வுலகில்.
போக வேண்டிய ஊரோ இவ்வுலகிலே இல்லாத மோட்சம்.
உடல் ரீதியாக இவ்வுலகில் எங்கு நோக்கிப் பயணித்தாலும் புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவோம்.
தொலைந்துவிட மாட்டோம்.
ஆனால் செய்ய வேண்டியதோ ஆன்மீகப் பயணம்.
போக வேண்டியதோ இடமும் நேரமும் இல்லாத,
நமது ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட,
கண்களால் பார்க்க முடியாத விண்ணுலகம்.
திரு திரு என்று விழித்துக் கொண்டு நிற்கிற ஆன்மாவைப் பார்த்து கடவுள் சொல்கிறார்,
''ஒன்றுமில்லாமையில் இருந்து உன்னைப் படைத்தவன் நான்.
விண்ணுலகமே என் வீடு.
என் வீட்டுக்கு உன்னை அழைத்துச் செல்லவே விண்ணுலகிலிருந்து இறங்கி வந்திருக்கிறேன்.
நீ என் கரத்தைப் பற்றிக் கொண்டாலே போதும்.
நீ என் வீட்டில் இருப்பாய்.
வா, என் கையை இறுகப் பற்றிக் கொள்."
சர்வத்தையும் படைத்த சர்வ வல்லபரின் துணை இருக்கும் போது ஆன்மாவாகிய நான் எதற்கு அஞ்ச வேண்டும்?
நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
முழுப் பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு நம்பிக்கையுடன் அவர் கையைப் பற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
கண்ணை இறுக மூடிக்கொண்டு அவர் பாதங்கள் எவ்வழியில் போகின்றனவோ அவ்வழியே போக வேண்டியதுதான்.
அவரோடு மோட்ச வீட்டுக்குள் நுழைந்து விடலாம்.
அங்கே போய்க் கண்ணைத் திறந்தால் போதும்.
எதற்காக இவ்வுலகில் நடக்கும் போது கண்ணை மூடிக் கொள்ள வேண்டும்?
ஒரு சிறு வயது அனுபவம்.
எனது வீடு இருக்கும் ஊருக்கும் நான் படித்த பள்ளிக்கூடம் இருக்கும் ஊருக்கும் இடையில் ஆறு மைல் தூரம்.
பள்ளிக்கூடம் போய்வர தினமும் 12மைல் தூரம் நடக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் இப்போது உள்ளது போல தார் ரோடு கிடையாது.
கரடுமுரடான வண்டிப் பாதை.
செருப்பு என்றால் என்னவென்றே தெரியாது.
கையில் பாடப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டே நடப்பது வழக்கம்.
ஒரு நாள் புத்தகத்தைக் கையில் எடுக்காமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே நடந்தேன்.
ஒரு இடத்தில் பாதை ஓரத்தில் இருந்த மணல் வெளியில் நான்கு மாணவர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களும் எங்கள் பள்ளி மாணவர்கள் தான்.
அவர்கள் விளையாடுவதைப் பார்த்தவுடன் நானும் விளையாட்டில் இறங்கி விட்டேன்.
விளைவு?
அன்று assembly முடிந்தபின் பள்ளிக்கூடம் போனேன்.
தலைமை ஆசிரியரிடம் பிரம்படி வாங்கினேன்.
காரணம்?
அன்று பாடப்புத்தகத்தைக் திறக்காமல் கண்ணை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்து நடந்ததுதான்.
நமது ஆன்மீகப் பயணத்தில் இறைவன் கையைப் பற்றிக் கொண்டு நடக்கும் போது இவ்வுலகைப் பொறுத்த மட்டில் நமது கண்கள் மூடியிருக்க வேண்டும்.
உலகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தால் ஆங்காங்கே காணப்படும் உலகக் கவர்ச்சிகள் நம்மை ஈர்க்க,
இறைவன் கையை விட்டு விட்டு அங்கே போய் விடுவோம்.
பாதை மாறிப் பயணித்தால் விளைவு என்னாகும்?
காலை எட்டு மணிக்கு ஞாயிறு திருப்பலி.
அன்று நண்பர் ஒருவர் அதிகாலையிலேயே பூசைக்குப் புறப்பட்டு விட்டார்.
புறப்படும் போது T.V கண்ணில் பட்டது.
கடிகாரத்தைப் பார்த்தார். மணி 7.
இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.
ஒரு கால்மணி நேரம் T V பார்த்து விட்டுப் போனாலும் பூசைக்குப் போய்விடலாம்.
T Vமுன் அமர்ந்தார்.
விளைவு?
பூசைக்குப் போன அவர் கோவில் காம்பவுண்டுக்குள் நுழையும் போது,
"சென்று வாருங்கள், திருப்பலி முடிந்து விட்டது."
சுவாமியாரின் குரல் Speaker ல் கணீர் என்று ஒலித்தது.
அப்படியே திரும்பி விட்டார்.
மறுநாள் சுவாமியார் கேட்டார்,
"நேற்று ஏன் பூசைக்கு வரவில்லை?"
"வந்தேன், சுவாமி. "சென்று வாருங்கள், திருப்பலி முடிந்து விட்டது." என்று சொன்னீர்கள்.
உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு திரும்பி விட்டேன்."
ஆன்மீக காரியங்களில் ஈடுபடும்போது உலக காரியங்களுக்கு Good bye சொல்லிவிட வேண்டும்.
திருப்பலி நடந்து கொண்டிருக்கும் போது Phone பேசுவதற்காக வெளியே சென்றால் அது ஆண்டவரை அவமானப் படுத்துவதற்குச் சமம்.
ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசைகளில் பயணிக்க முடியாது.
T.Vயைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம்.
T.Vயைப் பார்த்துக் கொண்டே செபமாலை சொல்லலாமா?
ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.
ஒரே நேரத்தில் உலகத்துக்கும், இறைவனுக்கும் ஊழியம் செய்ய முடியாது.
நாம் இறைவனின் கையைப் பிடித்து நடப்பது ஆன்மீகப் பயணம்.
இவ்வுலகில் நாம் ஆன்மீகப் பயணம் செய்ய வேண்டும், ஆனால், ஆன்மீகத்தில் லௌகீகத்தைக் கலந்து விடக்கூடாது.
இறைவனின் அதி மிக மகிமைக்காக உலகப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
சுய விளம்பரத்துக்காக ஆன்மீக காரியங்களைச் செய்யக் கூடாது.
இறை மகிமைக்காக பிறர் அன்புச் செயல்களைச் செய்வது ஆன்மீகம்.
அதே செயல்களை சுய விளம்பரத்துக்காகச் செய்தால் அது லௌகீகம்.
உலகில் அநேகர் பைபிளையும், இறைவனையும் தங்கள் வசதியான வாழ்க்கைக்கான வியாபாரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மைப் படைத்த இறைவன் என்பதற்காக அவரை அன்பு செய்ய வேண்டும்.
இறைவனின் மக்கள் என்பதற்காக நமது பிறரையும் அன்பு செய்ய வேண்டும்.
நமது வாழ்வின் மையம் இறைவன் மட்டுமே.
இறைவனை மட்டுமே மையமாகக் கொண்டு வாழ்ந்தாலே போதும், நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.
"நானே உன் கடவுளாகிய ஆண்டவர்,
உன் வலக்கை என் பிடியில் உள்ளது,
அஞ்சாதே, நானே உனக்குத் துணையாய் இருப்பேன்.
உன் கையை என்னை விட்டு எடுக்காமல் இருந்தாலே போதும்.
என்னோடு விண்ணக வீட்டில் இருப்பாய்."
என்கிறார் ஆண்டவர்.
இவ்வுலகிற்கு நம் கண்களை மூடிக்கொண்டு இறைவனோடு கை கோர்த்து நடப்போம்.
விண்ணக வாழ்வு நமக்கு உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment