Sunday, December 8, 2024

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம். (மத்தேயு நற்செய்தி 18:14)

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம். 
(மத்தேயு நற்செய்தி 18:14)

எந்தத் தாயாவது தான் பெற்ற பிள்ளை தொலைந்து போக வேண்டும் என்று ஆசைப் படுவாளா?

தனக்கு உரியது எதுவும் தொலைந்து போகக்கூடாது என்று விரும்புவது மனித இயல்பு.

இந்த இயல்பை நாம் நம்மைப் படைத்தவரியிலிருந்து தான் பெற்றோம்.

கடவுள் தனது சாயலில் படைத்த மனிதனோடு தன் பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதுவும் அவருடைய பண்புகளில் ஒன்று.

மனிதனைப் படைத்த கடவுள் அவனைத் தனக்காகவே படைத்தார்.

அதனால்தான் தனது பாவத்தினால் மனிதன் கடவுளை விட்டுப் பிரிந்தபோது, பிரிவுக்குக் காரணமான பாவத்தை வென்று அவனைத் தன்பால் ஈர்க்க மனிதனாகப் பிறந்தார்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனுக்கு ஒப்பிடுவதின் மூலம் தனது பிறப்பின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்.


" ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? 


அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." 
(மத்தேயு நற்செய்தி 18:12,13)

அவரிடம் இருக்கும் பண்பு தான் நல்ல ஆயனிடம் இருக்கிறது.

இந்த பண்பின் காரணமாகத்தான் நித்திய காலமாக விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இறை மகன் 

தன்னை விட்டு பிரிந்து சென்ற பாவியைத் தேடி உலகிற்கு வந்தார். 

மற்ற அனைத்து மனிதர்களும் புண்ணியர்களாக இருந்து நான் மட்டும் பாவியாக இருந்திருந்தால் என்னை மட்டும் தேடி உலகுக்கு வந்திருப்பார். 

ஒவ்வொரு பாவியும் அவரது சொத்து. 

சொத்துக்கு உரிமையாளர் அதை இழக்க விரும்புவாரா?

மாட்டார்.

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்."
(லூக்கா நற்செய்தி 5:32)

நம்மைத் தேடி வந்தவரை நாம் தேட வேண்டாமா? 

நமது வாழ்க்கையின் நோக்கமே இறைவனைத் தேடி அவரது பாதங்களில் சரண் அடைவதற்காக தான்.

" தேடுங்கள் கண்டடைவீர்கள்."
என்று இயேசுவே வாக்குக் கொடுத்திருக்கிறார்.

தேடுவோம், அவரை அடைவோம்.

அடைந்தபின் அவரை விட்டு பிரிய மாட்டோம், நித்திய காலமாக.

மரணம் அடைவதும், இறைவனை அடைவதும் ஒரே நிகழ்வு தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment