ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
(லூக்கா நற்செய்தி 1:37)
விஞ்ஞானப்படி ஆணின் உதவியின்றி பெண்ணால் கருத்தரிக்க முடியாது.
இந்த நியதியை ஏற்படுத்தியவர் கடவுள் தான்.
அவர் ஏற்படுத்திய எதையும் மாற்றும் உரிமை அவருக்கு உண்டு.
அவரால் மாறத்தான் முடியாது,
மாற்ற முடியும்.
இறந்தவனை உயிரோடு எழுப்ப விஞ்ஞானியால் முடியாது, ஆனால் கடவுளால் முடியும்.
தான் கடவுள் என்பதை நிரூபிக்க இயேசு இறந்தவருக்கு உயிர் கொடுக்கும் புதுமையைச் செய்தார்.
இலாசருக்குச் சுகமில்லை என்பது தெரிந்தும் அவனைக் குணமாக்க உடனே போகாமல் பிந்தி சென்றார்.
அவனைச் சாக விட்டு விட்டு மெதுவாகச் சென்று அவனை உயிரோடு எழுப்பினார்.
"அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
"நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார்.
மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்."
(யோவான் நற்செய்தி 11:14,15,45)
இயேசு மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுக்கவிருந்த நற்செய்தியை வானதூதர் மரியாளிடம் அறிவித்தபோது
அவள் வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
(லூக்கா நற்செய்தி 1:34)
தூதர் மறுமொழியாக, "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
(லூக்கா நற்செய்தி 1:37)
இது விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த நற்செய்தி.
மரியாள் அதை நம்பி,
"இதோ ஆண்டவரின் அடிமை.
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்."
என்று தன்னையே இறைப்பணிக்கு அர்ப்பணித்தாள்.
"கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை"
"கடவுளால் எல்லாம் இயலும்."
இறைத்தூதரின் இந்த செய்தியை நாம் ஒரு வல்லமை உள்ள செபமாகப் பயன்படுத்தலாம்.
நம்மால் முடியாதவற்றைச் செய்ய உதவுவதற்காகத்தான் நாம் இறைவனிடம் விண்ணப்பிக்கிக்றோம்.
நமது செபத்தோடு இறைத்தூதரின் வார்த்தைகளையும் சேர்த்துச் சொன்னால் நமது நம்பிக்கையும் அதிகமாவதை உணரலாம்.
நமது விண்ணப்பத்தைக் கூறிவிட்டு,
"இறைவா, உம்மால் எல்லாம் இயலும். ஒன்றும் இல்லாமையிலிருந்து என்னைப் படைத்தவர் நீர். உம்மால் இயலாதது எதுவுமில்லை.
உமது வல்லமையைப் பயன்படுத்தி எனக்கு இந்த உதவியைச் செய்தருளும்." என்ற வார்த்தைகளோடு நமது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் இயேசு அவரது வழக்கமான வார்த்தைகளோடு நாம் கேட்டதைத் தருவார்.
"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."
என்று சொன்ன அதே ஆண்டவர்,
"உனது நம்பிக்கை நீ கேட்டதைத் தந்து விட்டது."
என்று சொல்வார்.
குளம் நிறைய தண்ணீர். மடையைத் திறந்தால்தான் வயலுக்குத் தண்ணீர் வரும்.
கிணற்றில் தண்ணீர். வாளியைப் போட்டு இறைத்தால்தான் குடம் நிறையும்.
இறைவனால் எல்லாம் இயலும். நம்பிக்கையோடு கேட்டால்தான் கிடைக்கும்.
நாம் இருப்பது கடவுளின் கையில்.
அவரால் எல்லாம் இயலும்.
கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் வேண்டாம்.
கீழே பார்க்காமல் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.
அவருடன் விண்ணக வாழ்வில் இருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment