Tuesday, December 17, 2024

ஐயோ! திருடன்!



ஐயோ! திருடன்!

யார் திருட்டுக்குப் பயப்படுவார்கள்?

யாரிடம் திருடப்படக்கூடிய பொருள் இருக்கிறதோ அவர்கள்தான் திருட்டுக்குப் பயப்படுவார்கள்.


கட்டிய வேட்டியோடு மட்டும் பயணிப்பவன் பயப்படாமல் பயணிக்கலாம்.

எங்கு வேண்டுமானாலும் நிம்மதியாக தூங்கி எழலாம்.

கையில் பெருந்தொகை  உள்ள பையுடனும், கழுத்தில் தங்க நகைகளுடனும் பயணிப்பவன்  இரயிலில்
முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்புப் பெட்டியில் கூட நிம்மதியாகத் தூங்க முடியாது.

சட்டைப் பையில் பணம் இருக்கும் பையில் கையை வைத்துக் கொண்டே தூங்க முயல்வார்கள்.
எப்படித் தூக்கம் வரும்?

அது மட்டுமல்ல. அது பணம் இருக்கும் இடத்தைத் திருடனுக்குக் காட்டுவது போலவும் இருக்கும்.

 மன அமைதியைத் திருட்டுக் கொடுத்து விட்டு வாழ்க்கைப் பயணத்தைப் பயணிப்போர் அநேகர்.

அதற்குச் சிலர் காட்டும் காரணங்கள்.

வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றே தெரியவில்லை.

கடன் வாங்கக் காரணங்கள்:

ஆடம்பர வசதிகளோடு வீடு கட்ட.
பிள்ளைகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த.
கிறிஸ்துமசுக்கு புதுத்துணி வாங்க. 
வருமானத்தை மீறிய செலவுகளை எப்படிச் சமாளிக்க முடியும்?

உலகைச் சார்ந்த ஆசைகள் அதிகம் வரும்போது மன அமைதியின்மையும் கூடவே வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக செலவழிக்க ஆசை வந்தால் கடனும் சேர்ந்து வரும்,

கடன் உள்ளே வர, அமைதி வெளியேறி விடும்.

சமாதானத்தின் தேவன் மனுவுரு எடுத்த அன்று 

"பூவுலகில் நல்மனதோர்க்கு சமாதானம்" என்று விண்ணக தூதர்கள் பாடினார்கள்.

சமாதானம் இருக்கும் மனதில் உறுதியாக மன அமைதி இருக்கும்.

எங்கே அன்பு இருக்கிறதோ அங்கு சமாதானம் இருக்கும்.

எங்கே அன்பு இல்லையோ அங்கு அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கும்.

அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கும் இடத்தில் சமாதானம் இருக்காது.

சமாதானம் இருக்காத இடத்தில் மன அமைதி இருக்க முடியாது.

அதாவது அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது.

அப்படியானால்,

மனதில் அமைதி இல்லையா?

அங்கு அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கின்றன என்று அர்த்தம்.

அன்புக்கு எதிரான சக்திகள் எவை?

வெறுப்பு, கோபம், காய்மாகாரம், பொறாமை, வன்மம், பழிக்குப் பழி வாங்கும் எண்ணம், நல்லதை விட்டு விட்டு குறையை மட்டும் பார்க்கும் குணம்  et.c, et.c, et.c, et.c, சொல்லிக்கொண்டே போகலாம், பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்தக் குணங்களும், அன்பும் சேர்ந்து குடியிருக்க முடியாது.

ஒருவனை அன்பு செய்து, இன்னொருவனை வெறுக்க முடியாதோ?

இது சாப்பாட்டையும், சாணத்தையும் ஒரே தட்டில் வைக்க முடியாதோ என்று கேட்பது மாதிரி இருக்கு.

நாற்றம் பிடித்தவன்தான் அப்படி வைத்திருப்பான்.

உண்மையான அன்பு உள்ளவனிடம் அதன் எதிர்க்குணம் ஒன்றும் இருக்காது.

அவன் நல்லவர்,  கெட்டவர் என்று பார்க்காமல் எல்லோரையும் அன்பு செய்வான்.

அவனை வெறுப்பவனையும் அன்பு செய்வான்.

அவனுடைய அன்பு கடவுளின் அன்பைப் போன்றது.

அவர் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.

சாத்தானையும், அவனுடைய தோழர்களையும், கடவுள் வேண்டாம் எனக் கூறி அவனோடு வாழும் மனிதர்களையும் கூட அன்பு செய்கிறார்.

ஆனால் அவர்களால் அவரது அன்பை உணர முடியாது.

நாம் திருடப்படமுடியாத மன அமைதியை அனுபவிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

1. நம்மை முழுவதையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, அவரைப் போல நாமும் அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.

2.நாம் கடவுளுக்குள் வாழ வேண்டும்.

3. ஒவ்வொரு வினாடியும் அவர்தான் வழிநடத்துகிறார் என்பதை உறுதியாக விசுவிசிக்க வேண்டும். அப்படி விசுவசித்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும், மரணமே நேர்ந்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

4. கடவுள் எங்கும் இருக்கிறார். நமக்கு உள்ளும் இருக்கிறார், புறமும் இருக்கிறார். ஆகவே எப்போதும் அவருடைய பிரசன்னத்தில் வாழ வேண்டும்.
தாயின் மடியில் இருக்கும் பிள்ளை எதற்கும் அஞ்சுமா? நமக்குத் தந்தையும் கடவுள்தான், தாயும் கடவுள்தான். அவரது மடியில் வாழ்வோம்.

5.புனித பிரான்சிஸ் அசிசியைப் போல் இயற்கையையும் நமது உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காற்றும், மழையும் , வெயிலும் இன்னும் மற்ற இயற்கைச் சக்திகளும் நம்முடைய சகோதரர்களே.

இந்த நம்பிக்கை இருந்தால் வெயிலுக்கும் பயப்பட மாட்டோம், புயலுக்கும் பயப்பட மாட்டோம், மழை வெள்ளத்துக்கும் பயப்பட மாட்டோம்.

மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டாலும் பயப்பட மாட்டோம்.

அதிக பட்சம் அது நம்மைக் கடவுளிடம் சேர்க்கும்.

பாவம் இல்லாமலிருந்தால் வெள்ளத்தால் ஏற்படும் மரணத்திற்கு ஏன் அஞ்ச வேண்டும்?

எப்போதும் கடவுளின் பிள்ளைகளாக வாழ்வோம்.

எந்த திருடனாலும் நமது மன அமைதியைத் திருட முடியாது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment