Friday, December 13, 2024

அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார். (லூக்கா நற்செய்தி 3:11)

 அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 3:11)

திருமுழுக்கு அருளப்பரிடம் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட மக்களுக்கு அவர் அளித்த பதில்,

"இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்."

வசனத்தில் பகிர்ந்து கொடுக்க வேண்டிய உடையும், உணவும் தான் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் அருளப்பபர் வலியுறுத்துவது பகிரும் மனப்பான்மையை.

ஆகவே மக்கள் இந்த இரண்டை மட்டுமல்ல, எதையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன் மாதிரிகை நம்மைப் படைத்த கடவுள்.

நித்திய காலமாய் இருப்பவர் கடவுள்.

இல்லாதிருந்த நமக்கு இருப்பைப் பகிர்ந்து 
(Existence) கொடுத்தார்.

"இருக்கிறவர் நாமே" என்று தன்னையே அடையாளப்படுத்திய அவரால்தான் நாம் இருக்கிறோம்.

நம்மைப் படைக்கும் போதே தனது சாயலை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தனது எல்லா பண்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றுள் பகிர்ந்து கொள்ளும் பண்பும் அடங்கும்.

பகிர்ந்து கொள்ள முடிவதால்தான் நம்மால் வாழ முடிகிறது.

கடவுளைப் பின்பற்றி நமது அன்னைத் தனது சதையையும், இரத்தத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கா விட்டால் நம்மால் பிறந்திருக்கவே முடியாது.

நாம் பிறக்கும் போது நம்மோடு நமக்கு வேண்டிய உணவையும், உடையையும், இருப்பிடத்தையும் நம்மோடு கொண்டுவரவில்லை.

நாம் பிறந்தவுடன்,

"உயிருள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்"  என்று சொல்லி அனைவரும் நம்மைக் கவனிக்காது விட்டிருந்தால் ஒரு நாள் கூட நம்மால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

இயற்கை நம்முடன் தனது பிராணவாயுவை பகிர்ந்திராவிட்டால் சில வினாடிகளில் மரித்துப் போயிருப்போம்.

நாம் உயிர் வாழத் தேவையான காற்று, தண்ணீர், வெப்பம் ஆகியவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளவே கடவுள் மனிதனைப் படைக்கும் முன் இயற்கையைப் படைத்தார்.

நம்மை ஏன் சமூகப் பிராணிகளாகப் படைத்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று கட்டளையும் கொடுத்தார்?

ஒருவரையொருவர் நேசித்தால் தான் நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வோம்.

அவர் நமக்குத் தருவதைப் போல நாமும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பகிரும் மனப்பக்குவம் இருந்தால் தான் மற்றவர்களுக்குக் கொடுப்போம்.

நமக்குத் தந்த இறைவனுக்கு அவர் தந்ததிலிருந்து கொடுக்க வேண்டும்.

கண்ணால் காண முடியாத அவருக்கு எப்படிக் கொடுக்க முடியும்?

அவருடைய பெயரால் மற்றவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதை அவருக்கே கொடுக்கிறோம்.

இறையன்பு உள்ளவனிடம்தான் பிறரன்பு இருக்கும்.

கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களும் பிறரை நேசிக்கிறார்களே. அது எப்படி?

கடவுளை அன்பு செய்யாதவர்களின் அன்பு அன்பு அல்ல.

இறையன்பு இல்லாதவன் கடவுளை வேண்டாம் என்று சொல்லி விடுகிறான்.

கடவுள் பகிர்ந்து கொண்ட அன்பை கடவுளுக்காகப் பயன்படுத்தாவிட்டால் அது தன் பெயரையே இழந்து விடுகிறது,

தனக்குத் தந்தை இல்லை என்று சொல்பவனை‌ மகன் என்று கூறுவோமா?

சாப்பாடு பரிமாறப்படுகிறது.

ஒருவன் அதைச் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் போட்டால் அதற்குப் பெயர் குப்பை! Waste!

அன்பே உருவான கடவுள் அவரை நேசிப்பதற்காகத் தனது அன்பை மனிதனோடு பகிர்ந்து கொண்டார்.

அதை அவரை நேசிக்கப் பயன்படுத்தாவிட்டால் அதை எப்படி அன்பு என்று அழைக்க முடியும்.

ஒருவர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து விட்டு கடையில் வியாபாரம் பார்த்தால் அவரை ஆசிரியர் என்று அழைக்க முடியுமா?

எது எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறதோ அது அதைச் செய்தால் தான் அது அது.

அன்பு கடவுளை அன்பு செய்தால் மட்டுமே அது அன்பு.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை அவரையும், அவரால் படைக்கப்பட்ட நமது பிறனையும் நேசிக்கப் பயன்படுத்த வேண்டும்.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளும்போதுதான் பிறரன்பு உயிர் வாழ்கிறது.

செயல் படாத பிறரன்பு?

உயிர் இல்லாத அன்பு.

கடவுள் நம்மோடு எதையெல்லாம் பகிர்ந்து கொண்டாரோ அதையெல்லாம் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அன்பு, இரக்கம், நீதி, நாம் பயன் படுத்தும் பொருட்கள் ஆகிய அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருசந்தி நாட்களில் ஒரு முறை மட்டும் சாப்பிடுகிறோம்.

மதிய உணவை மட்டும் நாம் சாப்பிட்டால் மற்ற இரு வேளை உணவுகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவன் தந்தார், கொடுப்பதற்கே.

கொடுப்பதில் தான் நிறைவு இருக்கிறது.

விண்ணகத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக வாழ வேண்டுமா,

அவர் கொடுப்பதைப் போல் நாமும் கொடுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment