Monday, December 23, 2024

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். 

குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 2:11,12)

திருக்குடும்பம் வாழ்வதற்கேற்ற சொந்த வீடு நசரேத்தில் இருந்தது. 

ஆனால் இயேசு அங்கு பிறக்கவில்லை.

தாவீதின் ஊராகிய பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறக்க வேண்டும் என்பது தான் இறைமகனின் நித்திய காலத் திட்டம்.

திட்டப்படி மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

இந்த மகிழ்ச்சிகரமான செய்தி முதன் முதலில் யாருக்கு அறிவிக்கப் பட்டது?

தங்கள் ஆடுகளைச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த ஏழை இடையர்களுக்கு.

அறிவிக்கப்பட்ட செய்தி என்ன?

 "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."

பிறந்திருப்பது மெசியா என்பதற்கான அடையாளம் என்ன?

"குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" 

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

என்ற இயேசுவின் போதனையை அவரே சாதனையாக்குவதற்காக ஒரு ஏழைக் குடும்பத்தில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து,  தீவனத் தொட்டியில் படுத்திருந்தார்.

எதற்காக இந்தச் சாதனயைப் புரிந்தார்?

நாம் அவரைப் பின் பற்றுவதற்காக.

தீவனத் தொட்டியில் எப்படிப் படுத்திருந்தார்?

"துணிகளில் சுற்றப்பட்டு."

நிச்சயமாக அன்னை மரியாள் முதல் கிறிஸ்துமசைக் கொண்டாட ஆயிரக் கணக்கில் செலவழித்து புதுத்துணி வாங்கவில்லை.

அவளிடம் இருந்த துணிகளில் அவரைச்‌ சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தாள்.

சுருக்கமாகச் சொல்வதானால் ஏழ்மை தான் அவர் மெசியா என்பதற்கான அடையாளம்.

முதல் கிறிஸ்துமசைக் கொண்டாடியவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல, ஏழைகள்.

குழந்தையைப் பெற்ற தாயும் ஏழை. வளர்ப்புத் தந்தையும் ஏழை. கொண்டாட வந்த இடையர்களும் ஏழைகள்.

இன்றும் நம்மோடு இருப்பது அன்று மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, தீவனத்தொட்டியில் படுத்திருந்த அதே இயேசுதான்.

அன்று அன்னை மரியாளும், சூசையப்பரும், ஏழை இடையர்களும் கொண்டாடிய அதே கிறிஸ்துமசைத்தான் இன்று நாமும் கொண்டாடுகிறோம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான அடையாளம் என்ன?

ஏழ்மை.

கிறிஸ்துவும் மாறவில்லை, அவருடைய போதனையும் மாறவில்லை.

நண்பர்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்குப் பிடித்தமான எதையாவது வாங்கிக் கொண்டு போவது வழக்கம்.

இனிப்பே பிடிக்காத ஒருவருக்கு மிட்டாய் மட்டும் வாங்கிக் கொண்டு போனால் என்ன அர்த்தம்?

கிறிஸ்துமஸ் விழா ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்த நமது ஆன்மீக மீட்பருக்கான விழா.

அதில் ஏழ்மை இருந்தால்தான் அது அவருக்குப் பிடிக்கும்.

கிறிஸ்துமஸ் விழாவுக்காக நாம் செய்யும் ஆயத்தச் செலவுகளையும், விழாச் செலவுகளையும் கணக்குப் பார்த்தால் 

கிறிஸ்துமஸ் விழாவுக்கான அடையாளமே இல்லை.

நிச்சயமாக நமது விழா ஆடம்பரம் இயேசுவுக்குப் பிடிக்காது.

கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கம் என்ன?

"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! 

 உலகில் நல்ல மனதோர்க்குச் சமாதானமும் உண்டாகுக!" 

கடவுளுடைய மகிமைக்காகவும், மனிதர்கள் நல்ல மனதும், சமாதானமும் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவும் கொண்டுடப் படுவதுதான் கிறிஸ்துமஸ் விழா.

ஆகவே சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் சமாதான வாழ்வு‌ வாழ்பவர்கள் மட்டுமே கிறிஸ்துமஸ் விழா கொண்டாடலாம்.

யாருடனாவது நமக்கு சமாதானக் குறைவு ஏற்பட்டிருந்தால் திருவருகைக் காலத்திலேயே அதைச் சரி செய்துவிட வேண்டும்.

திருவருகைக் காலம் தரப்பட்டிருப்பது ஜவுளி எடுப்பதற்கோ, வீட்டை அலங்கரிப்பதற்கோ, ஸ்டார் தொங்க விடுவதற்கோ, குடில் சோடிப்பதற்கோ அல்ல,

இயேசுவின் வருகைக்காக நம்மை ஆன்மீக ரீதியாகத் தயாரிப்பதற்கு,

நமது ஆன்மாவை பரிசுத்தப் படுத்துவதற்கு.

அந்த நோக்கோடு நடத்தப்படும் தியான முயற்சிகளில் கலந்து கொள்வதோடு,

யாரோடாவது மனத்தாங்கலோடு இருந்தால் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

சமாதானம் உள்ள உள்ளத்தில் தான் இயேசு மகிழ்ச்சியாகப் பிறப்பார்.

நமக்காகத்தான் வான தூதர்கள் சமாதான கீதத்தைப் பாடினார்கள்.

குழந்தை இயேசுவைப் பார்க்க இடையர்களோடு அவர்கள் வீட்டுப் பெண்களும் வந்திருப்பார்கள்.

அவர்கள் குழந்தையை அப்படியே மாட்டுத் தொழுவத்தில் விட்டு விட்டுப் போயிருப்பார்களா?

நிச்சயமாக மாட்டார்கள். தங்கள் இடையர் குடிக்குத் திருக்குடும்பத்தை அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்திருப்பார்கள்.

வீட்டில் தங்கியிருக்கும் போது தான் கீழ்த்திசை ஞானிகள் வந்திருக்க வேண்டும்.

அவர்கள் குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் சந்திக்கவில்லை.

விண்மின் அவர்களை வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

 "வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்;

 தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்."
(மத்தேயு நற்செய்தி 2:12)

"வீட்டிற்குள் போய்" என்றுதான் பைபிள் சொல்கிறது.

கிறிஸ்துமஸ் இரவில் நாம் கோவிலுக்குச் சென்று திருப்பலியில் பங்கேற்று,

குழந்தை இயேசுவை நமது இல்லத்துக்கு அழைத்து வர வேண்டும்.

நம்மோடு அழைத்து வருவதில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே அடங்கியிருக்கிறது.

நமது இல்லத்தில் நம்மோடு வாழ்வதைத்தான் இயேசு விரும்புகிறார்.

திருக்குடும்பத்தில் நாமும் சேர்ந்து வாழ்வோம்.

Wish you all a Happy Christmas!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment