பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
(லூக்கா நற்செய்தி 1:38)
தன் முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் இருவகை.
1. சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள்.
2. சம்பளம் இல்லாமல் அடிமைகளாக வேலை செய்பவர்கள்.
சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் முதலாளியின் சொத்து அல்ல.
விருப்பமிருந்தால் வேலை செய்யலாம் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று கொள்ளலாம்.
ஆனால் அடிமைகள் முதலாளியின் உடமைகள். விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் முதலாளி சொன்ன வேலைகளை செய்து தான் ஆக வேண்டும்.
விருப்பமில்லாமல் வேலை செய்யும் வேலை ஆட்களும் உண்டு.
முழு விருப்பத்தோடு வேலை செய்யும் அடிமைகளும் உண்டு.
அன்னை மரியாள் தன்னைத் தனது முழு விருப்பத்தோடு இறைவனின் அடிமையாக அர்ப்பணித்து விட்டாள்.
எதையும் எதிர்பார்த்து அல்ல, அவர் தனது இறைவன் என்பதற்காக மட்டும் தன்னை அவரது அடிமையாக அர்ப்பணித்து விட்டாள்.
தனது சுதந்திரத்தை சுதந்திர உணர்வோடு முற்றிலும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டாள்.
அவள் இறைப் பணி செய்தது தனது விருப்பத்திற்காக அல்ல, இறைவனின் விருப்பத்திற்காக மட்டுமே.
குழந்தை பேறு அவளுடைய விருப்பம் அல்ல, ஆனாலும் இறைவனது விருப்பப்படி இயேசுவை பெற்றெடுக்க சம்மதித்தாள்.
இறைவனது விருப்பப்படி செயல்படுவது மட்டுமே அவளது பணி.
நசரேத்தில் சொந்த வீடு இருந்தது. ஆயினும் அவள் பெத்லகேம் நகரில் தான் இயேசுவைப் பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்.
அதை நிறைவேற்ற நிறை மாத கர்ப்பிணியான அவள் 150 கி.மீ தூரம் பயணித்தாள்.
அவள் கழுதை மேல் பயணித்தாலும் சூசையப்பர் நடந்தே சென்றார்.
மாட்டுத் தொழுவில்தான் பிறக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
ஆகவே மாட்டுச் சாணத்தின் நாற்றத்திற்கு மத்தியில் இயேசுவை மாட்டுத் தொழுவில்தான் பெற்றாள்.
நமது உணவாகத் தன்னையே கையளிக்க இருப்பதற்கு முன் அடையாளமாகத் தீவனத் தொட்டியில் படுக்க வேண்டும் என்பது இயேசுவின் நித்திய காலத்திட்டம்.
அதை அவர் கூறாமலேயே அன்னை மரியாள் அவரைத் தீவனத் தொட்டியில் படுக்க வைத்தாள்.
திருக்குடும்பம் எகிப்தில் மூன்று ஆண்டுகள் தங்க வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.
அத்திட்டத்தை மரியாளும் சூசையப்பரும் நிறைவேற்றினார்கள்.
யூதேயாவிலுள்ள
பெத்லகேமில் பிறந்து, கலிலேயாவிலுள்ள நசரேத்தில் வளர வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
அதையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.
இயேசு உடல் ரீதியாக அனுபவித்த அத்தனை வேதனைகளையும் மரியாள் மனரீதியாக அனுபவிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
அவர் விருப்பப்படி வேதனைகளை அனுபவித்தாள்.
ஆகவேதான் நமது ஆன்மீக மகிழ்ச்சிக்குக் காரணமான அவளை வியாகுல மாதா என்று அழைக்கிறோம்.
சிலுவைப் பாதை முழுவதும் தன் மகனோடு மரியாள் நடந்தே சென்றாள்.
அவர் தோளில் சுமந்த சிலுவையை அவள் மனதில் சுமந்தாள்.
இயேசு சிலுவையில் அறையப்படும் போது அனுபவித்த அத்தனை வேதனைகளையும் மரியாள் கண்ணால் பார்த்து மனதால் அனுபவித்தாள்.
இயேசுவின் உடலிலிருந்து கடைசி துளி இரத்தம் சிந்தும் வரை கண்ணீரோடு மரியாள் சிலுவையின் அடியில் நின்றாள்.
குழந்தை இயேசு விளையாடிய அதே மடியில் அவருடைய இறந்த உடல் கிடத்தப் பட்டிருந்த போது,
அவளுடைய மனதில்
நற்கருணையை ஏற்படுத்திய அன்று இயேசு சொன்ன அதே வார்த்தைகள் ஓடிக்கொண்டிருந்திருக்கும்.
"இது என் உடல், இது என் இரத்தம்."
இயேசுவின் உடல் உருவானது அன்னையில் வயிற்றில்,
அவருடைய உடலில் ஓடிக்கொண்டிருந்தது அவளுடைய இரத்தம்.
அப்படியானால் சிலுவையில் ரத்தம் சிந்தத் தொங்கியது அன்னை மரியாளின் உடல்தான்.
இயேசுவின் பாடுகளை அன்னையும் சேர்ந்துதான் பட்டாள்.
ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக இறை இயேசுவின் அடிமையாக வாழ்ந்தாள்.
''தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது."
(லூக்கா நற்செய்தி 14:27)
மரியாள் தனது சிலுவையைச் சுமந்து கொண்டு தான் தன் மகன் பின் சென்றாள்.
அன்னை மரியாள் இயேசுவின் தாயாக மட்டுமல்ல, முழுக்க முழுக்க அவருடைய சீடத்தியாகவும், அடிமையாகவும் வாழ்ந்தாள்.
அவள் தன் மகனைப் போல வாழ்ந்தாள்.
அவளுடைய பிள்ளைகளாகிய நாம் எப்படி வாழ்கிறோம்?
ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகுமுன் இரண்டு நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்து அந்நாளைப் பின் நோக்கிப் பார்க்க வேண்டும்.
பகலில் நாம் சுமக்க நேர்ந்த சிலுவைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
சிலுவைகளை ஏதாவது ஆன்மீக நோக்கத்துக்காக ஒப்புக் கொடுத்து மகிழ்ச்சியாக சுமந்தோமா அல்லது வேறு வழியின்றி சுமந்தோமா?
நமது பாவங்களுக்குப் பரிகாரம்,
உலகப் பாவங்களுக்குப் பரிகாரம்,
உத்தரிக்கிற ஆன்மாக்களின் இளைப்பாற்றி,
பாவிகள் மனம் திரும்புதல் போன்றவை ஆன்மீக நோக்கங்கள்.
இயேசு நமது ஆன்மீக மீட்புக்காகத்தான் சிலுவையைச் சுமந்தார்.
நம்மில் ஏதாவது குறைகள் இருந்தால்
"இன்று நான் சுமந்த சிலுவைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."
என்று சொல்லி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
நோய் நொடிகளும், தாங்க முடியாத கட்டங்களும் தான் சிலுவை என்று நினைக்க வேண்டாம்.
நமது விருப்பத்திற்கு எதிராக நடப்பது எதுவாக இருந்தாலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது சிலுவை தான்.
காலையில் அலாரம் அடிக்கிறது.
ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போல் இருக்கிறது.
இது நாம் சந்திக்கும் முதல் சிலுவை.
மிகச் சிறிய சிலுவை தான்.
ஆனால் தூங்க வேண்டும் என்ற ஆசையை அடக்கி, அதை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக எழ வேண்டும்.
இது அன்று நமது முதல் வெற்றி.
சிலுவை சிறியதாக இருக்கலாம், வெற்றி பெரியது.
காலையில் சாப்பாடு ருசியாய் இல்லை.
இதுவும் சிறிய சிலுவை தான்.
இதையும் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும்.
இது போன்ற சிறு சிறு சிலுவைகள் நிறைய தொடரும்.
அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு ஆன்மீகத்தில் வெற்றி நடை போட வேண்டும்.
கட்டங்களை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, இன்பங்களைத் தியாகம் செய்வதும் சிலுவை தான்.
சாப்பிடுவதில் கிடைக்கும் இன்பத்தை ஒரு வேளை சாப்பிடாமல் தியாகம் செய்வதும் சிலுவை தான்.
"ஆண்டவரே, நான் உமது அடிமை.
எனது விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்து,
உமது விருப்பங்களை மட்டும் வாழ எனக்கு வரம் தாரும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment