இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள், "ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன" என்றார்கள்.
(மத்தேயு நற்செய்தி 15:34)
ஒரு முறை ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசு
இங்கு ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளிக்கிறார்.
இப்போது அவர் உணவு அளித்ததைப் பற்றியோ, அப்பங்களின் எண்ணிக்கைப் பலுகியது பற்றியோ, உண்டவர்களின் எண்ணிக்கை பற்றியோ தியானிக்கவில்லை.
உண்டாகுக என்ற ஒரே சொல்லால் கோடானுகோடி நட்சத்திரங்களைக் கொண்ட மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளுக்கு அப்பங்களைப் பலுகச் செய்வது ஒரு காரியமே அல்ல.
இயேசு சீடர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டதைப் பற்றி தான் தியானிக்கப் போகிறோம்.
இதில் தியானிக்க என்ன இருக்கிறது?
ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்கப் பயன்படுத்தும் போதனா முறைகளில்
திட்ட முறை கற்பித்தல்
(Project method of teaching)
என்ற போதனா முறை ஒன்று இருக்கிறது.
ஆசிரியர்கள் சொற்பொழிவு முறையைப் பின்பற்றுவது வழக்கம்.
ஆசிரியர் பேச வேண்டும், மாணவர்கள் கேட்க வேண்டும்,
அடுத்து ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
பாடம் முடிந்து விடும்.
இது மிகவும் எளிதான முறை.
ஆனால் திட்ட முறை கடினமானது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பயன்கள் என்பது பாடம் என்று வைத்துக் கொள்வோம்.
பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டவற்றை அப்படியே போதிப்பது சொற்பொழிவு முறை.
ஆனால் திட்ட முறைப்படி போதிக்க வேண்டுமென்றால் மாணவர்களை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கி சுற்றி பார்க்க வேண்டும்.
அதன் பயன்களை மாணவர்களே நேரடியாக காண வேண்டும்.
கண்டு அறிய வேண்டும்.
இந்த முறையை கையாளுவது சாத்தியமா?
சாத்தியம் தான், செய்பவர்களுக்கு.
நினைத்து மட்டும் பார்ப்பவர்களுக்கு சாத்தியம் இல்லை.
ஆன்மீகத்துக்கும் இந்த முறைக்கும் என்ன சம்பந்தம்?
இயேசு மக்களுக்கு உணவு கொடுத்த புதுமையை எடுத்துக்கொள்வோம்.
அவர் நினைத்திருந்தால் ஒரு சொல்லாலேயே அனைத்து மக்களின் கைகளிலும் அப்பங்களை
வரவழைத்திருக்கலாம்.
ஆனால் அவர் சீடர்களின் உதவியைத் தேடுகிறார்.
அவர்களிடம் அப்பங்கள் இல்லை என்பது அவருக்கு தெரியும்.
சீடர்கள் மக்களின் உதவியை நாடுகிறார்கள்.
அவருடைய சீடருள் ஒருவரான அந்திரேயா,
"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.
(யோவான் நற்செய்தி 6:9)
சிறுவனிடம் இருந்த அப்பங்களை சீடர்கள் வாங்கி வருகிறார்கள்.
இயேசு அவற்றை பலுகச் செய்கிறார்.
சீடர்கள் மக்களுக்குப் பரிமாறுகிறார்கள்.
போதனையைக் கேட்க வந்த ஒரு பையனையும்,
தனது சீடர்களையும் உணவு வழங்கும் திட்டத்தில் இயேசு பயன்படுத்திக் கொள்கிறார்.
மனிதர்களைப் படைக்கும் திட்டத்தில் திருமணத் தம்பதிகளை பயன்படுத்திக் கொள்வது போல
தனது எல்லா திட்டங்களிலும் தன்னால் படைக்கப்பட்டவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்.
உலகம் முடியும் வரை நம்மோடு இருக்க வேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.
அதற்காக அப்பம், திராட்சை இரசம், சீடர்கள் ஆகியோரின் உதவியைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்த ஜான் மாற்கின் வீட்டின் மேல் மாடியைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
இன்றும் அதற்காக குருக்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
நற்செய்தியை அறிவிப்பதற்காக உலகிற்கு வந்தவர் அன்று அவருடைய சீடர்களையும், இன்று அவருடைய குருக்களையும், அவரை பின்பற்றும் நம்மையும் பயன்படுத்திக் கொள்கிறார்.
இது விடயத்தில் இயேசுவின் கால்களாகவும், கைகளாகவும், கண்களாகவும் வாயாகவும், காதுகளாகவும் பயன்படுபவர்கள் நாம்தான்.
நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கவும்,
அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும்,
தவித்தவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கவும்,
பசிப்பவர்களுக்கு உணவு கொடுக்கவும்,
பணம் தேவைப்படுபவர்களுக்கு அதைக் கொடுத்து உதவவும் இயேசு நம்மைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்.
இது அவருடைய நித்திய காலத்திட்டம்.
அவர் அன்பு என்னும் பண்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதே
அவருடைய படைப்புகளுக்கு அவர் செய்ய வேண்டிய உதவியை நம் மூலம் செய்வதற்காகவே.
இதற்காகத்தான்,
"நீங்கள் உங்களை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசியுங்கள்.
மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்."
என்ற மகத்தான கட்டளையை இயேசு நமக்கு தந்திருக்கிறார்.
"எனக்கு ஏதாவது அன்பளிப்பு தர விரும்புகிறீர்களா?
அதை என் பெயரால் தேவையில் இருக்கின்ற என்னுடைய படைப்புகளுக்குச் செய்யுங்கள்.
அவர்களுக்கு செய்யும்போது நீங்கள் எனக்கே செய்கிறீர்கள்.
நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்தால் உங்களுக்கு நிலைவாழ்வு உறுதி."
என்று இயேசு நமக்கு சொல்கிறார்.
நாம் ஒருவரையொருவர் சார்ந்தவர்கள்.
We are interrelated.
நம்மால் இறைவன் உதவியின்றியும் வாழ முடியாது,
பிறர் உதவியின்றியும் வாழ முடியாது.
நாம் தனி மனிதர்கள் அல்ல, சமூக உறுப்பினர்கள்.
We are not individuals,
we are social beings.
இவ்வாறு கடவுள் நம்மைப் படைத்ததே
நமது மூலமாக மற்றவர்களுக்கு உதவி செய்யவும்,
மற்றவர்கள் மூலம் நமக்கு உதவி செய்யவும் தான்.
உதவி செய்வது கடவுள்தான், ஆனால் நமது மூலமாக.
யாரும் தற்சார்பு உடையவர்கள் அல்ல.
Nobody is independent.
நாம் ஒருவரையொருவர் சார்ந்தவர்கள்.
We are interdependent.
கடவுள் தனி மனிதனை மட்டுமல்ல, மனுக் குலத்தையே தன் சாயலில் படைத்தார் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும்.
ஒருவரே கடவுள்.
ஒன்றே குலம்.
ஆட்கள் மூன்று, கடவுள் ஒருவர்.
ஆட்கள் கோடிக்கணக்கில், குலம் ஒன்று.
மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்.
அனைத்து மக்களும் ஒருவர் உள்ளத்தில் ஒருவர் வாழ வேண்டும் .
அப்படி வாழ்ந்தால் தான் இறைவனின் சமாதானம் நம்முள் தங்கும்.
ஒருவர் உள்ளத்தில் ஒருவர் வாழ்ந்தால் ஒவ்வொருவரும் தங்களை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்பார்கள்.
அதாவது தங்களை நேசிக்கும் போது தங்களுள் இருக்கும் மற்றவர்களையும் நேசித்தாக வேண்டும்.
நமது வீட்டில் விருந்தனர் யாராவது இருந்தால் நாம் உண்ணும் போது அவர்களுக்கும் உணவு கொடுத்துதானே ஆக வேண்டும்.
"விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே."
என்று ஒவ்வொரு நாளும் இறைவனைப் பல முறை அழைக்கின்றோம்.
நமது வீட்டில் கிறிஸ்துமஸ் விருந்து நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
இயேசு கற்பித்த செபத்தை சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
வீட்டு வாயிலில் பிச்சைக்காரன் ஒருவன்,
''அம்மா தாயே உணவு கொடுங்கள்" என்கிறான்.
நாம் சொன்ன செபத்தின் படி அந்த பிச்சைக்காரனும் நமது தந்தையின் மகனே, அதாவது, நமது உடன் பிறந்த சகோதரனே.
நாம் பொருளை உணர்ந்து செபத்தைச் சொல்லியிருந்தால்
நமது சகோதரனை வீட்டுக்குள் அழைத்து வந்து நம்மோடு Dining tableல் உட்கார வைத்து
அவனுக்கு உணவு பரிமாற வேண்டும்.
"செய்கிறோமா?"
இந்த கேள்விக்கு "ஆம்" என்று பதில் சொல்பவர்கள் மட்டும் தான் இயேசு கற்பித்த செபத்தை பொருளுணர்ந்து சொல்பவர்கள்.
நம்மைத் தனது கையாக பயன்படுத்த விரும்பும் இறைவனுக்கு அவர் விருப்பப்படி பயன்படுவோம்.
ஒருவருள் ஒருவர் அமர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வோம்.
" தந்தையே, உமது சித்தம் விண்ணகத்தில் நிறைவேறுவது போல பூமியிலும் நிறைவேறுவதாக.
உமது விருப்பத்தை நிறைவேற்ற போதிய ஆன்மீக வலிமையைத் தாரும்.''
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment