Saturday, August 31, 2024

"அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" (லூக்கா.4:36)

''அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" 
(லூக்கா.4:36)

இயேசு யூதர்களின் தொழுகைக் கூடத்தில் போதித்துக் கொண்டிருக்கிறார். 

அங்கு தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். 

பேய் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டது.

தன்னை ஒழித்துக்கட்டவே இயேசு வந்திருக்கிறார் என்பதைப்  புரிந்து கொண்டது.

அவரைப் பார்த்து 
 " நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?"

என்று கேட்டது.

."வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார்."

 பேய் அவரைவிட்டு வெளியேறியது. 

இறைமகன் மனு மகனாகப் பிறப்பதற்குக் காரணமாக இருந்தது சாத்தான்.

அன்று அவன் ஏவாளை ஏமாற்றியிருக்கா விட்டால் பாவம் மனுக் குலத்திற்குள் நுழைந்திருக்காது,

கடவுள் பாடுகள் பட்டு மரிக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

அன்றுமுதல் இன்று வரை யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது சாத்தான்.

நாம் ஒவ்வொருவரும் அதன் குறிக்கோள்.

நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தானுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது.

அல்லது அன்று ஏவாளை விழுங்கியதுபோல் நம்மையும் விழுங்கிவிடும், பாவத்தினால்.

நமக்கு ஆண்டவருடைய அருள் வரமும் பாதுகாப்பும்  தேவை.

ஒரு வகையில் போர் நமக்கும், சாத்தானுக்கும் இடையில் என்று கூறுவதை விட, இயேசுவுக்கும், 
சாத்தானுக்கும் இடையில் என்று
கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில் நாம் தனிப்பொருள் அல்ல, இயேசுவின் உரிமைப் பொருள்.
 We are the property of Jesus.

அவரிடமிருந்து நம்மைப் பறிக்க
சாத்தான் முயல்கிறது.

சாத்தானிடம் அகப்படாமல் தப்பிக்க நமக்கு இருக்கும் ஆர்வத்தை விட

சாத்தானிடமிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசுவுக்கு இருக்கும் ஆர்வம் அதிகம்.

எவ்வளவு ஆர்வம் அதிகமாக இருந்திருந்தால் நம்மைக் காப்பாற்றும் ஓரே நோக்கோடு 

சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் பலகீனமான மனிதனாகப் பூவுலகில் பிறந்திருப்பார்!

எவ்வளவு ஆர்வம் அதிகமாக இருந்திருந்தால் துன்பப்பட முடியாத கடவுள் வேதனை மிகுந்த பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பூவுலகில் பிறந்திருப்பார்!

எவ்வளவு ஆர்வம் அதிகமாக இருந்திருந்தால் மரிக்க முடியாத கடவுள் சிலுவையில் மரிப்பதற்காகவே மனிதனாகப் பூவுலகில் பிறந்திருப்பார்!

உண்மையில் நாம் சாத்தானைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இயேசுவின் கைப்பிடிக்குள் இருந்தாலே போதும்.

சாத்தானால் ஒன்றுமே செய்ய முடியாது.‌

''உன்னதரின் பாதுகாப்பில் வாழ்கிறோம்,

 எல்லாம் வல்லவரின் நிழலில். தங்கியிருக்கிறோம். 

அவர் தம் சிறகுகளால் நம்மை அரவணைக்கிறார்; 

அவர்தம் இறக்கைகள் நமக்குப் புகலிடமும், கேடயமும்.

ஆகவே,  நமக்குத் தீங்கு எதுவும் நேரிடாது; 

வாதை நம்மை நெருங்காது. 

நாம் கடவுளை நோக்கி மன்றாடும்போது, நமக்குப் பதிலளிப்பார்; 

நமது துன்பத்தில் நம்மோடு இருப்பார், 

நம்மைத் தப்புவித்து  பெருமைப்படுத்துவார்."

தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளுக்குள் புகுந்து 

கடவுளின் பாதுகாப்பில் உள்ள நம்மை சாத்தானால்‌ என்ன செய்ய முடியும்?

எதுவும் செய்ய முடியாது.

ஆனால் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கும் நம்மைச் சாத்தான் பார்த்துக் கொண்டேயிருப்பான்.

எதற்கு?

பாதுகாப்பிலிருந்து தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தால் லபக்கென்று தலையைப் பிடித்து வெளியே இழுப்பதற்காக.

ஆகவே நாம் ஒவ்வொரு வினாடியும் நமது செபத்தினாலும், தியானத்தினாலும், 
தவ முயற்சிகளாலும்,
பிறரன்புப் பணிகளாலும் இயேசுவின் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டும்.

சாத்தானைப் பற்றி நினைக்கவும் வேண்டாம், அவனுக்குப் பயப்படவும் வேண்டாம்.

அன்று ஏவாள் விலக்கப்பட்ட மரத்துப் பக்கம் போகாமல் இருந்திருந்தால் சாத்தான் அவளைச் சோதித்திருக்காது.

நாமும் பாவச் சந்தர்ப்பங்களை விட்டு விலகியே இருந்தால் சோதனைகள் வராது.

பாவச் சந்தர்ப்பங்கள் அருகில் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் செல்லக்கூடாது. 

அவற்றைப் பற்றி சிந்திக்கக் கூடாது, பேசக்கூடாது, அவற்றின் அருகில் போகக்கூடாது.

சிந்தனையில் இயேசு இருக்க வேண்டும், மற்றவர்களோடு பேசும் போது இயேசுவைப் பற்றி பேச வேண்டும், அடிக்கடி திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

சாத்தானால் நம்மை எதுவும் செய்ய முடியாது.

காவல் சம்மனசு நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்.

லூர்து செல்வம்.

Friday, August 30, 2024

"அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல."(யாக்கோபு 1:17)

"அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல."
(யாக்கோபு 1:17)

கடவுள் நிறைவானவர். (Perfect)
ஆகவே அவரால் வளரவோ, குறையவோ முடியாது.

சர்வ ஞானமுள்ளவர்.
முக்காலமும் அறிந்தவர்.

சர்வ வல்லவர். அவரால் முடியாதது எதுவுமில்லை 


 கடவுளின் இயல்பு, தன்மை மற்றும் குணங்கள் மாறாதவை,  நித்தியமானவை.

துவக்கமோ, முடிவோ இல்லாதவர்.

காலங்களுக்கும், இடத்துக்கும் அப்பாற்பட்டவர்.
(Beyond time and space)

காலமும் இடமும் அவரால் படைக்கப்பட்டவை.

கடவுள் மாற முடியாதவர் என்றால் நாம் ஏன் நமது செபத்தின் மூலம் அவரிடம் உதவி கேட்கிறோம்?

நம் ஒவ்வொருவர் குறித்தும் அவரிடம் நித்திய காலத் திட்டம் ஒன்று இருக்கும்.

அவரது திட்டத்தை நம்மால் மாற்ற முடியாது.

எல்லாம் அவரது திட்டப்படி தான் நடக்கும்.

பிறகு எதற்கு செபம்?

நம்மைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டால் இந்த சந்தேகம் வராது.

நாம் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.

காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவர்கள்.

வளர வேண்டியவர்கள், ஆகவே மாறக்கூடியவர்கள்.

பரிபூரண சுதந்திரம் உள்ளவர்கள்.

நமது சுதந்திரத்தில் கடவுள் குறுக்கிட மாட்டார்.

ஆனாலும் நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமது சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துவோம் என்ற ஞானத்தின் அடிப்படையில்தான் நம்மைப் பற்றிய திட்டத்தைத் தீட்டுவார்.

நமது இன்றைய செபத்துக்கான பதில் நித்திய காலமாகத் தயாராகி விடும்.

அந்த திட்டத்தில் மாற்றம் இருக்காது.

நாம் சுதந்திரமாகச் செயல்படுவதால் நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பு.
(We are responsible for what we do.)

ஆதாம் ஏவாளைப் படைக்கத் திட்டமிட்டபோதே அவர்கள் பாவம் செய்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆகவே மனித குல மீட்பைப் பற்றியும் அவர் நித்திய காலமாகத் திட்டம் தீட்டி விட்டார்.

ஆகவே மனிதனைப் படைக்கும் திட்டமும், அவர் மனிதனாகப் பிறக்கும் திட்டமும் நித்தியமானவை.

நமது சுதந்திரச் செயல்பாட்டின் அடிப்படையில் நம்மைப் பற்றி திட்டமிடுவதால் அதை மாற்ற வேண்டிய அவசியமே ஏற்படாது.

யூதாசைப் படைக்கத் திட்டமிட்டபோதே அவன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்று அவருக்குத் தெரியும்.

காட்டிக் கொடுத்தது அவனது சுதந்திரமான செயல்.

அவனது சுதந்திரத்தில் அவர் குறுக்கிடவில்லை.

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறேன்.

நாளைக்கு நேர்காணல்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்."

இயேசுவிடம் கேட்கிறேன்.

வேலை கிடைத்தது.

நான் நேற்று செபித்ததால் வேலை கிடைத்ததா?

இயேசுவின் நித்திய காலத் திட்டத்தினால் கிடைத்ததா?

நான் நேற்று செபிக்கவிருந்தது நித்திய காலமாக இயேசுவுக்குத் தெரியும்.

 தெரிந்ததன் அடிப்படையில் அவர்  வேலை தருவதென்று நித்திய காலமாகத் திட்டமிட்டு விட்டார்.

எனது செபமும், கடவுளின் திட்டமும் தான் வேலை கிடைத்ததன் காரணம்.

கடவுள் காலத்திற்கு வெளியே இருந்து கொண்டு காலத்தைப் பார்க்கிறார்.

முக்காலமும் நடப்பது எல்லாம் அவருக்கு பார்க்கும் வினாடியில் தெரியும்.

அதன் அடிப்படையில் தான் உலகம் பற்றிய மாறாத திட்டம் இருக்கும்.

 "கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்."
(தொடக்கநூல் 2:8)

"எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்."
(தொடக்கநூல் 3:23)

ஏதேன் தோட்டத்தில் மனிதனை வாழ வைத்த கடவுள்,

அவன் பாவம் செய்தபின் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார். 

கடவுள் மாறவில்லையா?

கடவுள் மாறவில்லை.
மாறியது மனிதன்.

தோட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டது பாவத்தின் விளைவு.

வெளியேற்றப் பட்டது கடவுளின் திட்டம் தான்.
காரணம் மனிதன் செய்த பாவம்.

கடவுள் அளவில்லாதவர்.
மனிதன் அளவுள்ளவன்.

கடவுள் தன்னை மனிதகுலத்திற்கு காலப்போக்கில் படிப்படியாக வெளிப்படுத்தினார்.

 வெளிப்படுத்துதல் (revelation). பழைய ஏற்பாட்டில் தொடங்கி இயேசு கிறிஸ்துவின் வருகையில் நிறைவடைந்தது.
 
God revealed himself to mankind gradually over time, beginning in the Old Testament and culminating in the coming of Jesus Christ: 

"மூவொரு இறைவன்" உண்மை வெளிப்படுத்துதல் இயேசு வழியாக முழுமை அடைந்தது.

கடவுளும் மாறாதவர்.
அவரைப் பற்றிய விசுவாசச் சத்தியங்களும் மாறாதவை.

ஆனால் நாம் மாற வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Wednesday, August 28, 2024

" வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்."(மாற்கு.7:15)

"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. 
மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்."
(மாற்கு.7:15)

கடவுள் நம்மைத் தன் சாயலில் படைத்திருக்கிறார்.

இறைவனின் சாயலில் இருப்பது
நமது ஆன்மா, அவரைப் போல் ஆவி, அவரது பண்புகளைக் கொண்டது.

நமது உடல் புறம், புறக்கண்ணால் பார்க்கப்படக் கூடியது.

நமது ஆன்மா அகம், புறக்கண்ணால் பார்க்கப்பட முடியாதது.

உடல் அழியக் கூடியது,
ஆன்மா அழிய முடியாதது.

இப்போது சொல்லாமலே புரியும்
உடலைச் சார்ந்த வாழ்க்கையை விட நமது ஆன்மீக வாழ்வே முக்கியமானது.

நாம் சுத்தமாக வாழ ஆசைப்படுகிறோம், சுத்தமாக வாழ்ந்தால் நோய் நொடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நம்புகிறோம்.

சுத்தமாக வாழ்வதற்காக தினமும் குளிக்கிறோம், சுத்தமான உடை அணிகிறோம், சுத்தமான உணவை உட்கொள்ளுகிறோம், சமையல் பாத்திரங்களையும், சாப்பாட்டுப் பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்.

ஆனால் உடல் சுத்தத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மாவின் சுத்தத்துக்குக் கொடுக்கிறோமா?

நோய் நொடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசைப்படும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசைப்படுகிறோமா?

ஆசைப்பட்டாலும் முயற்சி செய்கிறோமா?

கை கழுவி விட்டு சாப்பிடும் நாம் ஆன்மாவைப் பாவத்திலிருந்து கழிவி விட்டு ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையை உட்கொள்கிறோமா?

சிந்திக்க அழைக்கப் படுகிறோம்.

கை கழுவாமல் உண்டு கொண்டிருந்த சீடர்களைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டிருந்த பரிசேயர்கள் பார்த்து இயேசு,

"நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.

 உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.'' என்று கூறுகிறார்.

பாவமின்றி வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் கடவுளின்  கட்டளைகள் ஆன்மாவைச் சார்ந்தவை.

உடல் சுத்தத்தை வலியுறுத்தும் மனித மரபுகள் உடலைச் சார்ந்தவை.

பரிசேயர்கள் கடவுளின் கட்டளைகளைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விட மனித மரபுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

மனித மரபுகளை மீறும் போது 
வெளியேயிருந்து உள்ளே செல்வது அழுக்கு.‌‌ 

அது ஆன்மாவைத் தீட்டுப்படுத்தாது.

ஆனால் இறைவன் கட்டளைகளை மீறும் போது 

 பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, 
 
தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு  ஆகிய பாவ எண்ணங்கள் கண், காது போன்ற பொறிகள் வழியாக ஆன்மாவுக்குள் நுழைவதோடு

பாவச் செயல்களாக வெளிப்படுகின்றன.

ஆனால் பாத்திரங்களில் அழுக்கு இருந்தால் அது உணவோடு உட்சென்று கழிவோடு வெளியேறி விடும்.

ஆகவே பாத்திரச் சுத்தத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆன்மீக சுத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஐம்பொறிகளின் வழியே பாவ எண்ணங்கள் ஆன்மாவுக்குள் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்." இது குறள்.

"இயேசு சிலுவைப் பொறியில் நமக்காக தனது ஐம்பொறிகளையும் பலியாக்கினார். (அவித்தார்)

அவருடைய சீடர்களாகிய நாம் அவர் நெறி நின்று நமது ஐம்பொறிகளை அடக்கி வாழ வேண்டும்."

ஐம்பொறிகளை அடக்கி வாழ்ந்தால் நமது ஆன்மா பாவ அழுக்கு படாமல் வாழும்.
 
மனிதரைத் தீட்டுப் படுத்துவது உள்ளத்திலுள்ள தீய எண்ணங்கள் தான்.

பரிசேயர்களின் எண்ணப்படி வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும்  அழுக்கு கலந்த உணவு அவர்களைத் தீட்டுப்படுத்தும்.

இயேசுவின் போதனைப்படி  மனிதரின் உள்ளத்திலிருந்து வெளிவரும் தீய எண்ணங்கள் தான்  அவர்களைத் தீட்டுப் படுத்தும்.

நாம் நமது உள்ளத்தில் பாவ எண்ணங்கள் ஏறாதபடி கவனமாய் இருக்க வேண்டும்.

 பாவ எண்ணங்கள் ஏறாமலிருக்க வேண்டுமென்றால் கருணை, இரக்கம், மன்னிப்பு, தூய்மை போன்ற நற்குணங்களால் உள்ளம் நிறைந்திருக்க வேண்டும்.
 
உடலழகு அழகல்ல,
உள்ளழகே அழகு.

நமது உள்ளம் இறைவன் வாழும் இல்லம்.

லூர்து செல்வம்.

" உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்."(மத்தேயு.25:29)

"உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்."
(மத்தேயு.25:29)

இயேசு, செல்வந்தர் ஒருவர் தாலந்து கொடுத்த உவமையில் ஒரு தாலந்தைப் பெற்றவன் அதைக் கொண்டு எதுவும் ஈட்டாமல் அப்படியே திருப்பிக் கொடுத்ததைக் குறிப்பிடும்போது 


"உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்."

என்று கூறினார்.

இறைவன் மனிதர்களைப் படைக்கும் போது ஒவ்வொருவரையும் ஏதாவது திறமைகளோடு படைக்கிறார்.

சிலருக்குப் பல திறமைகள் இருக்கலாம்.

சிலருக்குச் சில திறமைகள் இருக்கலாம்.

சிலருக்கு ஒரு திறமை இருக்கலாம்.

இருக்கிற திறமையை இறைப் பணியில் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்துகிறவர்களுக்கு திறமைகள் அதிகமாகும்.

ஒருவருக்கு பாடும் திறமை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

தனது திறமையை இறைவனின் புகழ்பாட பயன்படுத்தினால் அவருக்கு இறைப் பண்கள் எழுதும் திறமை கொடுக்கப் படலாம்.

வேறு திறமைகளும் கொடுக்கப் படலாம்.

திறமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும்.

இருக்கிற திறமையைப் பயன்படுத்தாதவருக்கு இருக்கிறதும் காணாமல் போகும்.

திறமைகளை மட்டுமல்ல, கிடைக்கும் வளங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்

 நாம் பெற்றுள்ள எல்லா வரங்களும், திறமைகளும் கடவுளிடமிருந்து வந்தவை.

 அவற்றை நாம் வெறும் சொத்தாக வைத்துக் கொள்ளாமல், அவற்றை வளர்த்து, 

பிறருக்கு நன்மை செய்ய பயன்படுத்த வேண்டும்.

  அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை மேலும் வளரும்.

விதை சிறியதாக இருக்கலாம். நாம் அதைப் நிலத்தில் ஊன்றி நீர் ஊற்றும்போது 

ஒரு பெரிய மரமாக வளர்ந்து பலன் தரும். 

அதேபோல, நாம் நம் திறமைகளைப் பயன்படுத்தும் போது, அவை பெருகி, நமக்கு நிறைவான வாழ்க்கையைத் தரும்.


 பயன்படுத்தாவிட்டால் இழப்பு ஏற்படும்.

ஒரு விவசாயி தனது நிலத்தை பயிரிடாமல் விட்டுவிட்டால், அது வீணாகிப்போகும். 

அதேபோல, நாம் நம் திறமைகளைப் பயன்படுத்தாமல் இருந்தால், அவையும் வீணாகிப்போகும்.

இதைப் பற்றி ஆன்மீக ரீதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது:

நாம் பெற்றுள்ள எல்லா வரங்களும் கடவுளிடமிருந்து வந்தவை.

 நாம் அவற்றைப் பயன்படுத்தி பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.

 நாம் அவற்றைப் பயன்படுத்தும் போது, நாமும் ஆன்மீகத்தில் வளர்வோம், யாருக்காக பயன்படுத்துகிறோமோ அவர்களும் ஆன்மீகத்தில் வளர்வார்கள்.

பிறரன்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுபவர்களுக்குதான் திறமைகள் பயன்படும்.

யாரோடும் கலந்து கொள்ளாமல் தனித்து வாழ்பவர்களுக்கு திறமைகளால் எந்தப் பயனும் இல்லை.

பேச்சாற்றல் உள்ளவர்கள் அதை இறைவனைப் பற்றி மற்றவர்களுக்குப் போதிக்கப் பயன்படுத்த வேண்டும்.

எழுத்தாற்றல் உள்ளவர்கள் எழுத்து மூலம் இறைப்பணி ஆற்ற வேண்டும்.

அம்மா காய்கறிகளை Fridge க்குள்ளே பத்திரமாக வைத்திருந்தால் குடும்பத்தில் யாருக்கு வயிறு நிறையும்?

அம்மா அவற்றை அடுப்பாங்கரை வழியே சாப்பாட்டறைக்குக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தினர் பசி நீங்கும்.

நமது திறமைகளும் அப்படித்தான்.

 அவை சமூகத்தில் ஆன்மீகப் பணிக்கு வரவேண்டும்.

 அப்போது தான் திறமைகளும் வளரும், சமூகமும் பயன் பெறும்,
அவற்றை நமக்குத் தந்த இறைவனும் மகிழ்வார்.

 இறைவன் தந்த  வாய்ப்புகளைப் பயன்படுத்துவோம்.

 நமது வாழ்க்கையையும், பிறர் வாழ்க்கையையும் மேம்படுத்துவோம்.


 நாம் பெற்றுள்ள வரங்களுக்கு கடவுளுக்கு நமது செயலால் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

" எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."(மத்தேயு.25:13)

" எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."
(மத்தேயு.25:13)

நமது இவ்வுலக வாழ்வின் இறுதி நேரமாகிய மரணத்தைத்  தனது வருகை என்று இயேசு குறிப்பிடுகிறார்.

மரணம் இவ்வுலக வாழ்வின் இறுதி, மறுவுலக வாழ்வின் ஆரம்பம்.

அந்த வினாடியில் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக இயேசு வருவார்.

நாம் விண்ணக அரசுக்குள் நுழைய வேண்டுமென்றால் நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

பரிசுத்தமான ஆன்மாக்கள் தான் விண்ணக அரசுக்குள் நுழைய முடியும்.

ஆகவே மரண நேரத்தில் நமது ஆன்மா பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் விண்ணக அரசை இழந்து, பேரிடர் நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

ஆகையால் நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நமது மரணத்தை எதிர் பார்த்து, எப்போதும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

இயேசு கூறிய உவமையில் வரும் ஐந்து கன்னியர் விளக்குகளில் எண்ணெய் இல்லை.

ஆகவே அவர்களால் திருமண வீட்டிற்குள் நுழைய முடியவில்லை.

இயேசு வரும்போது தேவ இஷ்டப் பிரசாதம் இல்லாத ஆன்மாக்களின் நிலையும் அதுதான்.

பாவநிலையில் உள்ளவர்கள் மரண நேரத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்ளலாம் என்று அசட்டையாக இருக்கக் கூடாது.

ஏனெனில் மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

ஆகவே எப்போதும் தூய ஆன்மாவோடு இயேசுவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவின் வருகைக்காக வேறு என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது,

கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

அதாவது இயேசுவின் சித்தத்தின்படி வாழ வேண்டும்.

இறைவனை எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்து,

நம்மை நேசிப்பது போல நமது பிறனையும் நேசித்து,

தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து,

நம்மைப் பகைப்பவர்களையும் நேசித்து,

நமக்கு தீமை செய்தவர்களை மன்னித்து, அவர்களுக்கு நன்மை செய்து,

தளராத விசுவாசத்தோடு எப்போதும், ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

மரணம் குழந்தைகளுக்கும் வரும்,

பையன்களுக்கும் வரும்,

வாலிபர்களுக்கும் வரும்,

திருமணம் ஆனவர்களுக்கும் வரும், ஆகாதவர்களுக்கும் வரும்,

வயதான முதியவர்களுக்கும் வரும், 

ஆறிலும் வரும், நூறிலும் வரும்.

ஆகவே எல்லோரும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நாட்டில் இறுதி நேரப் பேர்வழிகள் நிறைய இருக்கிறார்கள்.

10 மணிக்கு Train என்றால் 9.59 க்குதான் நிலையத்துக்கு வருவார்கள்.

பள்ளிக்கூடத்துக்கு assembly
 நேரத்தில்தான் வருவார்கள்.

நாளைய தேர்வுக்கு இன்றுதான் படிப்பார்கள்.

வாழ்க்கையில் அப்படி இருக்கக் கூடாது.

நல்ல வாழ்க்கை வாழ இறுதி வரைக் காத்திருக்கக் கூடாது.

ஆரம்பம் முதல் வாழ்க்கை முழுவதும் நல்லவர்களாக வாழ வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வு நமது மரணத்துக்குப் பின்னும் நித்திய காலம் நீடிக்கும்.

நாம் பிறக்குமுன் இயேசுவின் உள்ளத்தில், நித்திய காலத்திலிருந்தே, எண்ணமாக இருந்தோம்.

பிறந்த பின் இயேசு நமது உள்ளத்தில், இவ்வுலக வாழ்வு முழுவதும், வாழ்கிறார்.

இறந்த பின் நாம் இயேசுவுக்குள்ளும், இயேசு நமக்குள்ளும், நித்திய காலமும் இருப்போம்.
(In everlasting union.)

எந்த சக்தியாலும் இயேசுவையும், நம்மையும் பிரிக்க முடியாது.

லூர்து செல்வம்.

Tuesday, August 27, 2024

''இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை."(மாற்கு.6:26)

"இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை."
(மாற்கு.6:26)

தன் சகோதரன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருந்த ஏரொது அரசன் ஏரோதியாளை திருப்தி படுத்துவதற்காக,

தனது தவற்றைச் சுட்டிக் காட்டிய திருமுழுக்கு அருளப்பரைக் கைது செய்து சிறையில் பாதுகாப்பில் வைத்திருந்தான்.

ஏரோதியாள் அருளப்பரைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மன்னனது பிறந்த நாள் விழாவில் நடனமாடிய ஏரோதியாளின் மகளிடம்  ஏரோது  "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். 

அவள் தனது தாயின் ஆலோசனைப் படி அருளப்பரின் தலையைக் கேட்டாள். 

இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பாமல் அவள் கேட்டதைக் கொடுத்தான். 

ஏரோதுவுக்குத் தான் தவறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது தெரியும்.

அருளப்பர் பரிசுத்தமானவர் என்பதும் தெரியும்.

ஏரோதியாளின் மகள் அருளப்பர் தலையைக் கேட்டது தவறு என்பதும் தெரியும்.

இவ்வளவும் தெரிந்திருந்தும் அவர் தலையை வெட்டியது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

அதுவும் தவறாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக ஒரு கொலை செய்தான்.

நாம் எப்போதாவது ஏரோதுவைப் போல் நடந்து கொண்டிருக்கிறோமா?

நிச்சயமாக யாரையும் கொலை செய்யவில்லை.

ஆனால் ஏரோதியாளைத் திருப்திப் படுத்துவதற்காக அவன் தப்பு செய்ததைப் போல நாமும் யாரையாவது திருப்திப் 
படுத்துவதற்காக ஏதாவது தப்பு செய்திருக்கிறோமா?

சிறிய தப்பாக இருந்தாலும், பெரிய தப்பாக இருந்தாலும் தப்பு தப்புத் தான்.

ஏன் ஞாயிறு திருப்பலிக்கு வரவில்லை?

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக அவர்களோடு வீட்டில் இருந்து விட்டேன்.

மது அருந்தியிருப்பது போல் தெரிகிறது?

ஆமா. நண்பனுக்கு கம்பெனி கொடுப்பதற்காகக் கொஞ்சம் குடித்தேன்.

இலஞ்சம் வாங்குவது தவறு எனத் தெரிந்தும் ஏன் வாங்கினாய்?

கிறிஸ்துமசுக்கு காஞ்சிபுரம் பட்டு தான் வேண்டுமென்று மனைவி அடம் பிடிக்கிறாள். அவளைத் திருப்திப் படுத்தா விட்டால் வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. பணம் வேண்டுமே!

அமைதியாக அமர்ந்து ஆன்மப் பரிசோதனை செய்து பார்த்தால் மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக எத்தனை தவறுகள், பாவங்கள் செய்திருக்கிறோம் என்பது புரியும்.


கடவுள்: நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயா?"  . 

ஆதாம்:  "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்,

அவளைத் திருப்திப் படுத்த நானும் உண்டேன்" . 

தகப்பனைப் போல பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் திருப்திப் படுத்த வேண்டியது கடவுளை 
மட்டும்தான்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே இயேசு உலகிற்கு வந்தார்.

நாமும் தந்தையின் சித்தத்தையே நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

"விண்ணுலகில் உள்ள எங்கள் தந்தையே, உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல பூவுலகிலும் நிறைவேறுக."

இது இயேசு கற்பித்த செபம்.

"இதோ ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்."

இது அன்னை மரியாளின் செபம்.

நம்மைப் படைத்தவருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மட்டுமே நிறைவேற்றுவது நமது பணி.

நாம் ஏன் பிறரை அன்பு செய்ய வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் இவ்வுலகில் வாழ்கிறோம்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் பாவம் செய்யக்கூடாது?

ஏனெனில் பாவம் கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது.

ஆக நாம் கடவுளுக்கு விருப்பமான அனைத்தையும் செய்ய வேண்டும்.

கடவுளுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யக்கூடாது.

உலகில் யாரையும் திருப்திப் படுத்த நாம் வாழவில்லை.

கடவுள் விரும்புவதை நாம் விரும்ப வேண்டும்.

நமக்கு வேண்டியதைச் செய்தாலும்,

பிறருக்கு வேண்டியதைச் செய்தாலும்

கடவுளுடைய மகிமைக்காகவே
செய்ய வேண்டும்.

"எல்லாம் உமக்காக.

இயேசுவின் திரு இருதயமே,

எல்லாம் உமக்காக."

லூர்து செல்வம்.





.

Monday, August 26, 2024

அன்பருக்கு ஒரு கடிதம்.

அன்பருக்கு ஒரு  கடிதம்.

அன்பே,

ஆருயிரே,

அன்பே உருவான எங்கள் இயேசுவே,

உம்மை நோக்கி எங்கள் இதயத்தைத் திறக்கும்போது,

உம்மீதான எங்கள் அன்பின் ஆழத்தை முழுமையாக வெளிப்படுத்த பொருத்தமான வார்த்தைகள் கிடைக்கவில்லை.

  எங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நீர் எங்களோடு இருக்கிறீர்.

 எங்கள் துக்கத்தில் நீரே ஆறுதல்,

 எங்கள் மகிழ்ச்சியில் நீர் பங்குதாரர், 

எங்கள் நம்பிக்கையின் தூண்.


உம்மைப் பற்றிய சிந்தனை எங்கள் உள்ளத்தை அமைதிப்படுத்துகிறது.

 உம்முடைய அன்பு எங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பான அரவணைப்பு அரணை ஏற்படுத்துகிறது. 

உம்முடைய வார்த்தைகள் எங்கள் வாழ்வின் ஒளியாகத் திகழ்கின்றன.

 உம்முடைய கருணை எங்களை எப்போதும் வழிநடத்துகிறது.

உம்முடைய கால்களில் விழுந்து உம்மை ஆராதிக்கிறோம்.

உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்கள் உள்ளத்தில் வசிக்கிறார் என்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

 உம்முடைய செயல்கள் எங்களை ஆச்சரியப்படுத்தில் அமிழ்த்துகின்றன.

 உம்முடைய அற்புதங்கள் எங்களை நம்பிக்கையால் நிரப்புகின்றன.

உம்முடைய சத்தியத்தை பகிர்ந்து கொள்ளவும், உம்முடைய அன்பை பரப்பவும் எங்களை உபயோகியுங்கள்.

 உம்முடைய இராஜ்யம் பூமியில் வரவேண்டும் என்று  பிரார்த்திக்கிறோம்.

 உம்முடைய நாமம் என்றென்றும் மகிமைப்படுத்தப்படட்டும்.

எம்மோடு எப்போதும் இருந்து எங்களை வழிநடத்தி வரும்
உமக்கு எங்கள் இதயப் பூர்வமான நன்றி.

இவ்வுலகில் உமது அருளால் வாழ்ந்து,

மறுவுலகில் உம்மோடு நித்திய பேரின்பத்தில் வாழ வரம் அருளும்.

என்றும் உம்முடைய அடிமை,

லூர்து செல்வம்.

Sunday, August 25, 2024

" வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்." (மத்தேயு.23:27)

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்."
(மத்தேயு.23:27)

இயேசு மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரையும்‌ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பிடுகிறார்.

கல்லறைகளின் உட்பகுதியில் அங்கு அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் கிடக்கும்.

ஆனால் வெளிப்புறம் வெள்ளையடிக்கப்பட்டு அழகாக இருக்கும்.

புறம் அழகு,  
அகம் அருவெறுப்பு.

அன்று வாழ்ந்த மறைநூல் அறிஞர்களைப் போலவும், ‌பரிசேயர்களைப் போலவும் இன்றும் வேடதாரிகள் வாழ்கிறார்கள்.

இவர்களுடைய 
அக வாழ்க்கைக்கும், 
புற வாழ்க்கைக்கும்
சம்பந்தமே இருக்காது.

 புறத்தில் பரிசுத்தவான்களைப் போல் நடமாடுவார்கள்.

அகம் பாவச் சிந்தனைகளால் நிறைந்திருக்கும்.

புறத்தில் பக்திமான்களைப் போல கோவிலுக்குப் போவார்கள், செபம் சொல்வார்கள், 

ஆனால் அகத்தில் ஆன்மீக வாழ்வே இருக்காது. உலக ஆசைகள் நிறைந்திருக்கும்.

புறத்தில் மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அத்தனை குறைகளும் அவர்கள் அகத்தில் செழித்து வளரும்.

புறத்தில் அனைவரையும் விட ஆன்மீகத்தில் வளர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வார்கள்.

அகத்தில் ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டார்கள்.

புறத்தில் செபமாலை மணிகளை உருட்டிக் கொண்டிருப்பார்கள்.

அகத்தில் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

புறத்தில் பைபிளும் கையுமாகச் சுற்றுவார்கள்.

அகத்தில் ஒரு வசனங்கூட பதிந்திருக்காது.

புறத்தில் எல்லா விசுவாச சத்தியங்களையும் பாராமல் சொல்வார்கள்.

அகத்தில் ஒரு விசுவாச சத்தியத்துக்குக் கூட விளக்கம் தெரியாது.

புறத்தில் மற்றவர்களின் ஆன்மீகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

அகத்தில் சுய ஆன்மீகப் பரிசோதனை செய்ய மாட்டார்கள்.

புறத்தில் தாழ்ச்சி உள்ளவர்கள் போல நடிப்பார்கள்.

அகத்தில் அகங்காரம் தலை விரித்து ஆடும்.

புறத்தில் வாழ்க்கைத் தத்துவங்களை மணிக் கணக்காய்ப் பேசுவார்கள்.

அகத்தில் முரண்பாடுகள் நிறைந்திருக்கும்.

புறத்தில் ஆன்மீகவாதிகள்.
அகத்தில் அரசியல்வாதிகள்.

அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும்,  நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமே இருக்காது.

புறத்தில் இருக்கும் இடத்திற்கு ஏற்ப வேசம் போடுவார்கள், பச்சோந்தியைப் போல.

அகத்தில் அவர்களாகவே இருப்பார்கள்.

புறத்தில் ஊருக்காக உழைப்பார்கள்.

அகத்தில் அகப்பட்டதைச் சுருட்டுவார்கள்.

யூதாசைப் போல புறத்தில் ஆண்டவரை வரவேற்பார்கள்.

அகத்தில் சாத்தானை வரவேற்பார்கள்.

சாவான பாவத்தோடு நற்கருணை வாங்குபவர்கள் இத்தகையோர்.

(அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். அரு.13:27)

வெளிவேடக்கார மறைநூல் அறிஞர்களைப் போலவும், பரிசேயர்களைப் போலவும் நாம் வாழக்கூடாது.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் உத்தமர்களாக வாழ வேண்டும்.

நல்லதைச் சிந்தித்து, நல்லதைப் பேசி,
நல்லவர்களாக வாழ வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்முள் வாழும் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

உள்ளும் புறமும் பரிசுத்தர்களாக வாழ வேண்டும்.

சொல்லால் மட்டுமல்ல, நமது வாழ்க்கையாலும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்று போல் இருக்க வேண்டும்.

லூர்து செல்வம் 

இறையரசின் அன்பும், நீதியும் Vs மனித அரசின் அன்பும், நீதியும்.

இறையரசின் அன்பும், நீதியும் Vs
மனித அரசின் அன்பும், நீதியும்.

இறைவன் தனது பண்புகளை மனிதனோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் அவனைத் தனது சாயலில் படைத்தார்.

அவர் மனிதனோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் முக்கியமானவை‌ அன்பும், நீதியும்.

இறைவன் தனது பண்புகளில் அளவில்லாதவர், மனிதன் அளவுள்ளவன்.

இறைவன் நமது அரசர்.

மனித ரீதியாகவும் நமக்கு ஒரு அரசு இருக்கிறது.

இறையரசரும், மனித அரசும் அன்பு, நீதி ஆகிய பண்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?

மனித, அன்பும் நீதியும் இணைந்து செயல்படுகின்றனவா?

அரசு தனது குடிமக்களை அன்பு செய்ய வேண்டும்,

அதாவது,

குடிமக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

குடிமக்களில் யாராவது அரசின் சட்டங்களை மீறினால் அரசு அவனைக் கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறது.

நீதிபதி குற்றவாளியை விசாரிக்கிறார்.

குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டனைத் தீர்ப்பு வழங்குகிறார்.

குற்றம் நிரூபிக்கப் படாவிட்டால் அவனை விடுதலை செய்கிறார்.

நீதிபதி ஒரு மனிதர்.

அவரிடம் இறைவன் அவரோடு பகிர்ந்து கொண்ட அன்பும், நீதியும் உள்ளன.

அன்பு குற்றவாளி மீது இரக்கப்படும்.

குற்றவாளி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடும்.

ஆனால் மன்னிப்புக் கேட்டாலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியை நீதிபதியால் மன்னிக்க முடியாது,

தண்டனை கொடுத்து தான் ஆகவேண்டும்.

நீதிபதியைப் பொறுத்த மட்டில் அன்பும், நீதியும் எதிர் எதிர் பண்புகள்.

குற்றவாளியை அன்பு மன்னிக்கும், நீதி தண்டிக்கும்.

"கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆயினும் அவன் மன்னிப்புக் கேட்டான்.

நானும் அன்புடன் அவனை மன்னித்து விட்டேன்."

என்று நீதிபதி தீர்ப்பு எழுத முடியாது.

மன்னித்தால் அரசின் முன் அவர் குற்றவாளி ஆகிவிடுவார்.

இறைவனிடம் எதிர் எதிர் பண்புகள் இருக்க முடியாது.

அவரைப் பொறுத்த மட்டில் அன்பும், நீதியும் இணைந்தே செயல்படுகின்றன.

நமது முதல் பெற்றோரைக் கடவுள் பரிசுத்த நிலையில் தான் படைத்தார்.

ஆனால் அவர்கள் அவரது கட்டளையை மீறிப் பாவம் செய்தார்கள்.

மனுக்குலமே பாவத்தில் விழுந்தது.

அளவு கடந்த அன்பாலான கடவுள் அவர்களை மன்னிக்கத் திட்டமிட்டு விட்டார்.

ஆனால் நீதிப்படி மன்னிப்புப் பெற  மனிதன் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடவுளுக்கு எதிராகச் செய்யப் பட்ட பாவத்துக்குப் போதிய பரிகாரம் செய்ய முடியாது.

ஏனெனில் பரிகாரமும் அளவில்லாததாக இருக்க வேண்டும்.

ஆகவே அன்பே உருவான அளவில்லாத கடவுள் மனிதன் செய்யவேண்டிய பரிகாரத்தை தானே செய்யத் தீர்மானித்தார்.

ஆனால் தேவ சுபாவத்தில் பரிகாரம் செய்ய முடியாது.

பரிகாரம் செய்யத் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் தேவ சுபாவத்தில் துன்பப்பட முடியாது.

ஆகவே மனிதன் மீது அளவுகடந்த அன்புள்ள கடவுள் பரிகாரம் செய்வதற்காக மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தார்.

ஆகவே தான் இறைமகன் மனுமகனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து மனித பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

இயேசு நினைத்திருந்தால் இவ்வளவு பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரிக்காமலேயே‌ அனைத்து மக்களுடைய பாவங்களுக்கும் பரிகாரம் செய்திருக்கலாம்.

அவரது ஒவ்வொரு செயலுக்கும் அளவில்லாத பலன் உண்டு.

அவர் ஒரு நாள் நோன்பு இருந்திருந்தால் கூட அதற்கு அளவில்லாத பரிகாரப் பலன் உண்டு, ஏனெனில் அவர் அளவில்லாதவர்.

ஆனாலும், நம்மீது அவர் கொண்டுள்ள அளவில்லாத அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்

எவ்வளவு அதிகம் பாடுகள் பட முடியுமோ அவ்வளவு பாடுகள் பட்டார்.

மனிதன் எல்லாவற்றையும் விட தன் உயிரை அதிகம் நேசிக்கும் இயல்பினன்.

அதனால் தான் அவனைத் 
தன்பால் ஈர்க்கத் தன் உயிரையே தியாகம் செய்தார்.

இயேசுத் தன் உயிரைத் தியாகம் செய்து செய்த பாவப் பரிகாரம் தான் நமக்கு பாவ மன்னிப்பைப் பெற்றுத் தந்தது.

மனிதன் நீதியைப் புரிந்து கொள்வது போல கடவுள் மனிதனுக்குத் தண்டனை கொடுக்க நினைத்திருந்தால் ஆதாம் ஏவாளோடு மனித குலம் அழிந்திருக்கும்.

இயேசுவின் அன்பும், நீதியும் இணைந்து செயல்பட்டதால்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதை நாம் அறிந்தால் மட்டும் போதுமா?

அதிலிருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

என்ன வாழ்க்கைப் பாடம்?

நமக்கு விரோதமாக யாராவது எதாவது தவறு செய்தால் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக நாமும் ஏதாவது செய்து விடுகிறோம்.

இது பழைய பல்லுக்குப் பல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதற்குப் பதில் இயேசுவின் தத்துவத்தைப் பின்‌ பற்றுவோம்.

அவர்கள் செய்த தவறுக்கு நாம் பரிகாரம் செய்வோம்.

அவர்களை மனதார மன்னிப்போம்.

அவர்கள் செய்த தீமைக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மை செய்வோம்.

அவர்கள் ஆன்மீக மீட்பு பெற ஆண்டவரை வேண்டுவோம்.

அப்போது தான் நாம் இறைவனின் பிள்ளைகள்.

லூர்து செல்வம்.

Friday, August 23, 2024

" சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(அரு. 6:68)

"சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு. 6:68)

  இயேசு நாம் அவரது உடலையும், உதிரத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் அருந்த வேண்டும் என்று கூறியது அவரது பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த பலருக்குப் பிடிக்கவில்லை.

அவர்கள் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.

இயேசு தனது பன்னிரு சீடர்களைப் பார்த்து,

 "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். 
 
அதற்குப் பதில் கூறும் வகையில் சீமோன் இராயப்பர்,

"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்று கூறினார்.

இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ளவை.

அவற்றை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நிலை வாழ்வளிக்க வல்லவை.

இவ்வுலக உணவை அருந்துவோர் இவ்வுலகில் மட்டும் வாழ்வர்.

இறைவார்த்தையின்படி வாழ்பவர்களும், இறைவனலயே உணவாக அருந்துபவர்களும் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வர்.

நாம் படைக்கப் பட்டிருப்பதே நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான்.

இயேசு உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்.

அவர் எதற்காக மனிதனாகப் பிறந்தாரோ அதை நிறைவேற்ற அவர் பயன்படுத்தியது

வாழ்வின் இறுதி நாட்களாகிய வியாழனையும், வெள்ளியையும்.

வியாழனன்று திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

வெள்ளியன்று நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டுத் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியதும், சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்ததும் நமது நித்திய கால பேரின்ப வாழ்வுக் காகத்தான்.

இறைவனுக்கு பலி ஒப்புக் கொடுக்கிறவர்கள் அதன் பலனை அடையும் பொருட்டு பலிப் பொருளை உண்ண வேண்டும்.

புனித வியாழனன்று இயேசு தனது சீடர்களுக்குப் பலிப் பொருளாகிய தன்னை உணவாகக் கொடுத்தார்.

உலகம் முடியுமட்டும் வாழப் போகும் தனது சீடர்களுக்குத் தன்னை உணவாகக் கொடுப்பதற்காகத்தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

தினமும் திருப்பலி நிறைவேற்றி, பலிப் பொருளை நமக்கு உணவாகத் தருவதற்காகத்தான் குருத்துவமும், திருப்பலியும்.

நாம் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ளும் போது நம்மை நாமே நித்திய பேரின்ப வாழ்வுக்குத் தயாரிக்கிறோம்.

பாவமாசின்றி திருவிருந்தில் கலந்து கொள்வதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.

நாம் நிலை வாழ்வை அடையும் பொருட்டு பாவ சங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் பிறந்ததே இறப்பதற்காகத்தான்,

உலகில் வாழ்வதும் இறப்பதற்காகத்தான்,

 இறப்பு தான் விண்ணகத்தின் வாசல்.

விண்ணகத்தில்தான் நித்திய பேரின்ப வாழ்வு.

குற்றாலத்துக்குப் போகின்றவர்கள் குளிப்பதற்காகத்தான் போவார்கள்.

குற்றாலத்தில் ஹோட்டல்கள் இருக்கும்.

சென்னையிலிருந்து குற்றாலம் வரைப் பயணம் செய்து, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் திரும்புகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விண்ணகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்பவர்களும் அப்படிப் பட்டவர்கள் தான்.

சென்னையிலிருந்து குற்றாலம் வந்து குளிக்காமல் ஊருக்குத் திரும்பி விடலாம்.

ஆனால் விண்ணகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்பவர்கள் ஒரு பக்கமும் திரும்ப முடியாது.

பேரின்பம், பேரிடர் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டும்.

இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யக் கடவுள் மனிதனுக்கு பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இரண்டும் வேண்டாம் என்று கூற‌ முடியாது.

நாம் பேரின்ப வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைமகன் மனுமகனாகப் பிறந்து நமக்காகப் பாடுகள் பட்டு மரித்தார்.

நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பைப் புரிந்து கொண்டு,

பேரின்ப வாழ்வைத் தேர்வு செய்வோம்.

பாவமின்றி வாழ்வோம்.

பலகீனத்தால் விழ நேர்ந்தால் பாவ சங்கீர்த்தனத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.

நமக்கு வேண்டிய உதவி செய்ய நற்கருணை நாதர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

தினமும் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்வோம்.

நற்கருணை நாதரை உரிய தயாரிப்போடு உணவாக உட்கொண்டால் நமக்கு பேரின்ப வாழ்வு உறுதி.

''எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்."
(அரு. 6:54)

இயேசு நம்மோடு.

நமது பேரின்ப வாழ்வு அவரோடு.

லூர்து செல்வம்.

Thursday, August 22, 2024

" அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். (அரு.1:46)

"அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். 
(அரு.1:46)

 இயேசு பிலிப்பைப் பார்த்து, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறுகிறார். 

ஆனால் பிலிப்பு நத்தனியேலிடம் செல்கிறார்.

அவரைப் பார்த்து,

" இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம்.

 நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று கூறுகிறார்.

இயேசு அழைத்தது பிலிப்புவை.

அவர் உடனே தன் அழைப்பை நத்தனியேலோடு பகிர்ந்து கொள்கிறார்.

தனக்குக் கிடைத்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் உள்ள ஆர்வத்தைப் பாருங்கள்!

இதுதான் அப்போஸ்தலிக்க ஆர்வம்.

அவரை இயேசு அப்போஸ்தலராக நியமிப்பதற்கு முன்பே அவரிடம் அப்போஸ்தலிக்க இருந்தது!

பிலிப்புவுக்குப் பதில் கூறும் விதமாக நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்கிறார். 

நத்தனியேல் பைபிள் வாசிப்பிலும், தியானிப்பதிலும்
ஆர்வம் உள்ளவர்.

"அத்திமரத்தடியில் உம்மைக் கண்டேன்" என்ற வார்த்தைகளே இதை உறுதிப்படுத்தும்.

" நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்; உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். "
(மீக்கா 5:2)

என்ற வசனப்படி மெசையா பெத்லகேமில் தோன்றுவார் என்று அவர் நம்பியிருந்திருப்பார்.

ஆகவே வெள்ளை மனதுடன் மனதில் பட்டதைச் சொல்லி விட்டார்.

"இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்"

என்ற இயேசுவின் வார்த்தைகள் இதை உறுதிப் படுத்துகின்றன.

பிலிப்பு நத்தனியேலுக்குச் சொந்த விளக்கம் எதுவும் கொடுக்காமல்

"வந்து பாரும்" என்று கூறுகிறார். 

நத்தனியேலும் பிலிப்புவோடு இயேசுவிடம் வருகிறார்.

 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்கிறார்.

 நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்க,

 இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளிக்கிறார். 

 நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்கிறார்.

பிலிப்பு அவரிடம்.

"நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று தான் சொன்னார்.

ஆனால் நத்தனியேல்,

"ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்று நேரடியாகவே உண்மையைச் சொல்லிவிட்டார்.

இது அத்திமரத்தடியில் இருந்து தியானித்ததன் விளைவு!

திராட்சைக் கொடி,  ஒலிவ மரம், அத்தி மரம் ஆகியவை யூத மக்களுக்குப் பிடித்தமான தாவரங்கள்.

அத்திமர நிழலில் அமர்ந்து பைபிள் வாசிப்பது, இறை வார்த்தைகளைத் தியானிப்பது யூத மக்களின் வழக்கம்.

நத்தனியேல் அவ்வாறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக இயேசு கூறுகிறார்.

நாமும் இறை வார்த்தையை வாசிப்பதிலும், தியானிப்பதிலும் ஆர்வம் காட்டினால் இயேசு அவரது பணிக்கு நம்மையும் அழைப்பார்.

இறை அழைத்தல் பெற நமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்பதற்கு நத்தனியேல் ஒரு 
முன்னுதாரணம்.

நசரேத் குறித்து நத்தனியேலின் வார்த்தைகளைச் சிறிது தியானிப்போம்.

நசரேத் ஒரு சிறிய நகரம்.

வல்லமை வாய்ந்த கடவுள் சிறிய நகரைத் தன் வருகைக்குத் தேர்ந்தெடுப்பாரா

என்று  நத்தனியேல் நினைத்திருக்கலாம்.

அதனால் தான் 

"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். 

இப்பதில் இயேசுவின் முக்கியமான போதனையை நினைவூட்டுகிறது.


" ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" 
(மத்தேயு.19:30)

முக்கியமற்றவை என்று நாம் நினைப்பவை இறைவன் முன் முக்கியமானவையாய் இருக்கும்.

நத்தனியேல் ஒரு பைபிள் அறிஞர்.

அவர் கண்ணுக்கு முக்கியமற்றதாகத் தோன்றிய நாசரேத்தை இயேசு மீட்பின் வரலாற்றில் முக்கிய நகராகத் தேர்வு செய்தார்.

அவர் பெத்லகேமில் பிறந்தாலும்

அவரை நசரேத் ஊர் இயேசு என்று தான் அழைக்கிறோம்.

தந்தை இறைவன் நசரேத்துக்குதான் தனது தூதரை அனுப்பி மீட்பின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்.

இது நமக்கு ஒரு பாடம்.

யாரையும் சிறியவர் என்று ஒதுக்கக்கூடாது.

புனித சிறுமலர் தெரசா புனித சவேரியார் அளவுக்குப் பெரிய வேத போதக நாடுகளின் பாதுகாவலர்.

புனித சவேரியார் உலகம் எங்கும் வலம் வந்து மனம் திருப்பிய ஆன்மாக்களின் அளவுக்கு 

புனித சிறுமலர் தெரசா மடத்தில் இருந்து கொண்டே தன் செபவாழ்வால் மனம் திருப்பினார்.

நத்தனியேல் இயேசுவால் பன்னிரு சீடர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

நத்தனியேலின் இன்னொரு பெயர் பர்த்தலேமியு.

இவர் ஆர்மேனியாவில் நற்செய்தியை அறிவித்து வேத சாட்சியாக மரித்தார்.

நாமும் அவரைப் போல உண்மையான, கபடற்ற சீடராக வாழ்ந்து இயேசுவுக்கு சாட்சி சொல்வோம்.

லூர்து செல்வம்.

" உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."(மத்தேயு.22:39)

"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."
(மத்தேயு.22:39)


 " திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?"

 என்ற திருச்சட்ட அறிஞர் ஒருவரின் கேள்விக்குப் பதிலாக இயேசு 

 "உன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."

இரண்டு வசனங்களையும் நான்கு கூறுகளாகப் பிரித்து தியானிப்போம்.

1. கடவுளை நமது முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனத்தோடும் நேசிக்க வேண்டும்

"We should love  God with all our heart, and with all our soul and with all our mind.'"

2. நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

3.நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

4. பிறரன்பு இறையன்புக்கு இணையானது.

முதல் கட்டளையைத் தியானிக்கும்போது மனதில் ஒரு எண்ணம் தோன்றும்.

நமக்கு இருப்பது ஒரு இதயம், ஒரு ஆன்மா, ஒரு மனது.

இவற்றை எல்லாம் முழுமையாகக் கடவுளுக்குக் கொடுத்து விட்டால்,

நம்மை எப்படி நேசிப்பது, நம்மைப் போல் நமது பிறனை எப்படி நேசிப்பது?

நமது சிந்தனை எப்போதும் நேர்மறையாக (Positive) இருக்க வேண்டும். 

எதிர்மறையாக (Negative) இருக்கக் கூடாது.

இறைவன் சர்வ வியாபி.

படைக்கப்பட்டவை அனைத்தும் அவரது சிந்தனையில்.

குடத்திற்குள் தண்ணீர் இருக்கிறது.

குடம் பத்திரமாக இருந்தால் குடத்தோடு தண்ணீரும் பத்திரமாக இருக்கும்.

கடவுளை நேசிக்கும் போது அவருள் இருக்கும் மனுக்குலத்தையும் நேசிக்கிறோம்.

அதாவது கடவுளையும் அவரது படைப்பாகிய மனுக்குலத்தையும் நேசிப்பது தான் உண்மையான அன்பு.

அதனால் தான் பிறரன்புக் கட்டளையைத்‍‌ தனியாகக் கொடுக்கும் போது

அதை முதல் கட்டளைக்கு இணையான கட்டளை என்று கூறுகிறார்.

இயேசு கடவுளை நமது முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனதோடும் அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லும் போது 

கடவுளையும், மனுக்குலத்தையும் அன்பு செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறார்.

ஆகவே இறையன்பும் பிறரன்பும் பிரிக்க முடியாதவை.

 இரண்டாவது கட்டளை முதல் கட்டளைக்கு இணையானது.

கடவுளை நேசிக்காதவனால் அவனது பிறனை நேசிக்க முடியாது.

கடவுள் இல்லை என்று கூறுகிறவர்கள் மனிதத்தை நேசிக்கிறோம் என்று சொல்வது அடிப்படையில் பொய்.

ரூபாய் நோட்டில் காந்தி படம் இருக்கிறது.

ஆனால் காந்தி படம் இருக்கும் நோட்டெல்லாம் ரூபாய் நோட்டல்ல. அரசு வெளியிடும் நோட்டுதான் ரூபாய் நோட்டு.

அதேபோல் இறையன்பிலிருந்து புறப்படும் பிறரன்புதான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறரன்பு.

அதுதான் இறைவன் முன் செல்லத் தக்கது.

அன்பு ஆன்மாவைச் சேர்ந்தது.
ஆன்மாவை நம்பாதவர்களால் அன்பு செய்ய முடியாது.

நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்திருக்கிறாரா?

கடவுள் நம்மைப் படைக்கும் போதே இயல்பிலேயே அன்பு உள்ளவர்களாகப் படைத்திருக்கிறார்.

நாம் நம்மை இயல்பாகவே நேசிக்கிறோம். அதனால் தான் வாழ விரும்புகிறோம்.

தன்னை நேசிப்பதால்தான் குழந்தை பிறந்தவுடன் மூச்சு விடவும், பால் குடிக்கவும் விரும்புகிறது.

நாம் வாழ விரும்புவது சுய அன்பு.

அதேபோல் மற்றவர்களும் நம்மைப் போல் வாழ விரும்புவது பிறரன்பு.

நமக்கு நாம் உணவு கொடுப்பது சுய அன்பு.

அதேபோல் மற்றவர்களுக்கும் நாம் உணவு கொடுப்பது பிறரன்பு.

நாம் மோட்சத்தில் இறைவனோடு வாழ ஆசைப் படுவது சுய அன்பு.

நம்மைப் போல் மற்றவர்களும் 
மோட்சத்தில் இறைவனோடு வாழ ஆசைப் படுவது பிறரன்பு.

நாம் மீட்புப் பெற நற்செய்தியை அறிய விரும்புவது சுய அன்பு.

மற்றவர்களும் மீட்புப் பெற அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க விரும்புவது பிறரன்பு.

இறையன்பு உள்ளவர்களிடம் சுய அன்பும் இருக்கும், பிறரன்பும் இருக்கும்.

ஆகவே நாம் இறைவனை நேசித்தால் நாமும் நற்செய்தியை வாசிப்போம்,

பிறருக்கும் நற்செய்தியை அறிவிப்போம்.

நாமும் நற்செய்தியை வாழ்வோம், மற்றவர்களும் வாழ உதவுவோம்.

ஆக, நாம் கடவுளை முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனதோடும் நேசித்தால்

நம்மையும் நேசிப்போம், நமது பிறனையும் நேசிப்போம்.

அன்பு செய்வோம்.

அன்புக்கு பங்கம் ஏற்படாமல் விருப்பப்படி வாழ்வோம்.

“Love and do what you like”.
(St. Augustine)

லூர்து செல்வம்.

Wednesday, August 21, 2024

" அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்."(மத்தேயு .22:5)

''அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்."
(மத்தேயு .22:5)

அழைத்தவர் மீது அன்பிருந்தால் அழைக்கப் பட்டவர்கள் அழைப்பை ஏற்பார்கள்.

அன்பு இல்லாதவர்கள் அழைப்பைக் குப்பையில் போட்டு விட்டு தங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள்.

இயேசு விண்ணக விருந்துக்கு நம் அனைவரையும் அழைத்திருக்கிறார்.

அழைப்பை ஏற்றுக் கொள்பவர்கள் அவரது கட்டளைகளை அனுசரித்து அவரது விருப்பப்படி வாழ்வார்கள்.

இயேசுவின் கட்டளைகளின்படி வாழாதவர்களுக்கு அவர் மீது அன்பு இல்லை என்று சொல்லத் தேவையில்லை.

ஞானஸ்நானம் பெற்ற அனைவருக்கும் இயேசு விண்ணகத் திருவிருந்துக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார்.

அழைப்பைப் பெற்ற அனைவரும் திருச்சபையின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும்.

இன்று திருச்சபையில் இருப்பவர்களில் அநேகர் ஆண்டவரின் அழைப்பை ஏற்றதற்காக இருக்கவில்லை.

தங்கள் சுய விருப்பங்களுக்காகவே இருக்கிறார்கள்.

அவர்கள் செபம் சொல்வதும், கோவிலுக்குப் போவதும், பூசையில் கலந்து கொள்வதும்

தாங்கள் நலமுடன் வாழ வேண்டும், 
தங்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வேண்டும்,
 தங்கள் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும், 
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும், 
இன்னும் இவை போன்ற கருத்துகளுக்காகத் தான்.

வாசிக்கப்படும் பூசைக் கருத்துக்களைக் கேட்டால் இது புரியும்.

தங்கள் கருத்துகள் தங்கள் விருப்பப்படி நிறைவேறாவிட்டால் அவர்களது பக்தி குறைந்துவிடும்.

சிலர் கோவிலுக்குச் செல்வதையே நிறுத்தி விடுவார்கள்.

சிலர் செபம் சொல்வார்கள்.

ஆனால் செபமா அல்லது TV யா என்று கேட்டால் TV க்கு தான் முதலிடம்.

செபம் சொல்ல வேண்டிய நேரத்தில் TVயில் ஒரு படம் போட்டால் படம் பார்த்து விட்டு தான் செபம் சொல்வார்கள்.

TVபார்த்துக் கொண்டே செபம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.


ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் போக வேண்டும்.

அதே நேரத்தில் நண்பர் வீட்டில் ஒரு விழா.

விழாவுக்குப் போகாவிட்டால் நண்பர் வருந்துவார்.

பூசையை Cut அடித்து விட்டு விழாவுக்குச் சென்று விடுவார்கள்.

கடன் பூசை மனதை உறுத்தாது.

ஞாயிற்றுக்கிழமை வயலில் வேலை செய்யக் கூடாது, இது திருச்சபையின் கட்டளை.

அன்று உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சாவிட்டால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும்.

வயலுக்குப் போய் விடுவார்கள்.

ஆன்மீக வளர்ச்சியை விட பயிர் வளர்ச்சி தான் அவர்களுக்கு முக்கியம்.

அருட் செல்வத்தை விட பொருட் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு விண்ணக விருந்து ஒரு பொருட்டேயில்லை.

ஒழுக்கமாய் வாழ்ந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை அடையலாம்.

ஒழுக்க விதிகளைப் பற்றி கவலைப் படாமல் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பமாய் வாழலாம்.

பார்த்தால் பாவம் வரும் என்றால் பார்க்கக்கூடாது என்பது ஒழுக்கவிதி.

சினிமா எடுப்பவர்களுக்கு ஒழுக்க விதிகளைவிட பணம்தான் முக்கியம்.

அரைகுறை ஆடைகளோடு பெண்களை ஆடவிட்டு எடுக்கப்படும் சினிமாக்களைப் பார்ப்பவர்களின் கண் வழியே பாவம் நுழைகிறது.

விண்ணக விருந்துக்கு அழைக்கப்பட்ட நம்மவர்களிலும் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

தீமை செய்பவர்களை மன்னியுங்கள் என்கிறது இறைவாக்கு.

மன்னிப்பவர்களுக்குதான் மன்னிப்புக் கிடைக்கும்.

மன்னிப்புக் கிடைத்தால்தான்ற விண்ணக விருந்து.

நம்மவர்களில் எத்தனை பேர் மன்னிக்கிறோம்?

சிந்தித்துப் பார்ப்போம்.


நமக்கு வருமானம் வருகிறது.

தருபவர் கடவுள்.

கடவுள் நமக்காக மட்டும் நமக்கு வருமானம் தரவில்லை.

நமது அயலானுக்கு உதவுவதற்காகவும் சேர்த்துதான் நமக்குத் தருகிறார்.

பிறருக்கு தங்களால் இயன்ற உதவி செய்பவர்களுக்கு மட்டும் தான் விண்ணக விருந்து.

விண்ணக விருந்துக்கான அழைப்பை ஏற்காதவர்கள்தான் பிறருக்கு இயன்ற உதவியைச் செய்ய மறுப்பார்கள்.

அநேகருக்கு இவ்வுலகில் சொத்துக்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ள அளவுக்கு

மறுவுலகில் சொத்துக்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை   இருப்பதில்லை.

அநேக சமயங்களில் உலகில் சொத்து சேர்ப்போர் அதை அனுபவிக்க வாழ்வதில்லை.

ஆயிரம் கோடிகள் செலவழித்துக் கட்டப்படும் பல மாடிக்கட்டடங்கள் ஒரு நில நடுக்கத்தைத் தாங்காது.


1999ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்
 33 மாடிக் கட்டிடம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சில வினாடிகளில் ஒன்றுமில்லாத ஓட்டாண்டி ஆகிவிட்டார்.

விண்ணகத்தில் சேர்த்து வைக்கும் சொத்து ஒருபோதும் அழியாது.

அநேகருக்கு அறிவியலில் இருக்கும் ஆர்வம் ஆன்மீகயியலில் இருப்பதில்லை.

செய்தித்தாள் படிப்பதில் உள்ள ஆர்வம் விவிலிய வாசிப்பில் இருப்பதில்லை.

செய்தித்தாள் அறிவைக் கொடுக்கும்.

விவிலியம் ஞானத்தைக் கொடுக்கும்.

ஞானம்தான் விண்ணக விருந்துக்கு அழைத்துச் செல்லும்.

நல்ல விசயங்களைப் பற்றி பேசும் போது நமது கருத்துக்களுக்கும், உலகப் பெரியோரின் கருத்துக்களுக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை விவிலியக் 
கருத்துக்களுக்குக் கொடுக்கிறோமா?

பிள்ளைகளின் திருமணம் பற்றிப் பேசும் போது

அழகு, வசதி, வேலை, சம்பளம், வீடு, நிலம், பணம் பற்றி பேசுகிறவர்கள்

தெய்வபக்தி, குணம், அன்பு, பொறுமை போன்ற ஆன்மீக காரியங்களைப் பற்றி பேசுகிறார்களா?

முந்தியவை இவ்வுலகில் கொஞ்ச நாள் வாழவைக்கும்.

பிந்தியவை விண்ணுலகில் நிரந்தரமாக வாழவைக்கும்.

முடிந்து போகும் வாழ்வு முக்கியமா?

நிலை வாழ்வு முக்கியமா?

சிந்திப்போம்.

நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.

அதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, August 19, 2024

" கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்."(மத்தேயு.20:12)

"கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்."
(மத்தேயு.20:12)

இறைப்பணி ஆற்றி மரிப்பவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

எல்லோரும் ஒரே மாதிரியாக இறைப்பணி ஆற்றுவதில்லை.

சிலர் பிறப்பு முதல் இறப்பு வரை இறைப்பணி ஆற்றுகிறார்கள்.

வாலிபப் பருவம் வரை இஷ்டப்படி வாழ்ந்து விட்டு அதன்பின் மனம் திரும்பி இறைப்பணி ஆற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

முதிய வயது வரை இஷ்டப்படி வாழ்ந்து விட்டு அதன்பின் மனம் திரும்பி இறைப்பணி ஆற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்வின் இறுதிக் கட்டம் வரை இஷ்டப்படி வாழ்ந்து விட்டு அதன்பின் மனம் திரும்பி, இறைப்பணி ஆற்ற நேரம் இல்லாமல் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட அனைவருக்குமே விண்ணக வாழ்வு கிடைக்கிறது.

வாழ்நாள் முழுவதும் இறைவனுக்காக அர்ப்பண வாழ்வு வாழ்ந்து விட்டு மரித்த அன்னை மரியாள்  வாழ்கின்ற அதே மோட்சத்தில்தான்

வாழ்நாள் முழுவதும் திருடியே வாழ்ந்துவிட்டு இறுதி வினாடியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனும் வாழ்கிறான்.

The good thief thieved heaven itself at the last moment.

நல்ல கள்ளன் இறுதிக் கட்டத்தில் மோட்சத்தையே திருடிவிட்டான் என்று வேடிக்கையாகக் கூறுவார்கள்.

முப்பது வயது வரை பாவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு அதன் பின் மனம் திரும்பிய புனித அகுஸ்தீனார் இன்று
 Doctor of the church.

இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பொறுப்பேற்று 
அவரைச் சிலுவையில் அறைந்ததுமல்லாமல் அவரது விலாவை ஈட்டியால் குத்திய நூற்றுவர் தலைவர் லோன்சினுஸ் இன்று திருச்சபையில் புனிதர்.
(Saint Longinus)

கிறிஸ்தவத்தை அழிப்பதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட சவுல் 
இன்று திருச்சபையின் இரண்டு தூண்களில் ஒருவர்.
(St. Peter and St. Paul are  the pillars of the Church.)

வாழ்நாளெல்லாம் பாவிகளாக வாழ்ந்து விட்டு பரிசுத்தர்களாக மரித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வாழ்நாளெல்லாம் புனித வாழ்வு வாழ்ந்து விட்டு மோட்சத்திற்குச் சென்றிருப்பவர்களோடு

வாழ்நாளின் பெரும் பகுதியை இறைவனுக்கு எதிராக வாழ்ந்து விட்டு மனம் திரும்பியவர்களும்  சென்றிருப்பது எதைக் காட்டுகிறது?

இறைவனின் அளவு கடந்த அன்பையும், தாராள குணத்தையும் காட்டுகிறது.

இறைவன் பாவிகளை அதிகம் நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் உவமையில் நாள் முழுவதும் வேலை செய்தவர்கள்

"கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" 

என்று கேட்டபோது தோட்ட உரிமையாளர் 

 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 

எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார். "

இறைவன் நல்லவர். அளவில்லாத வரங்களுக்கு உரிமையாளர்.

தாராள குணமுள்ளவர்.

தனது வரங்களை அள்ளிக் கொடுப்பதற்காகவே நம்மைப் படைத்தவர்.

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கையில் வெகு மந்தமான மாணவனின் விடைத்தாள் வந்தால் அவனை எப்படியாவது வெற்றி பெற வைப்பதற்காக மாற்குப் போட பேப்பரின் மூலைமுடுக்கெல்லாம் தேடுவார்.

தவறான விடையாக இருந்தாலும் சரியான விடை அருகில் வந்தாலும் மாற்குப் போட்டு விடுவார்.

ஒரு பையன் பாஸ் செய்ய ஒரு மாற்கு தேவை.

எங்காவது இடம் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறார்.

"இந்தியா 1947 ஆகஸ்டு 14ல் சுதந்திரம் பெற்றது"

அதற்குத் X போட்டிருந்தார்

தப்பை அடித்து ✓ போட்டார்.

பையன் வெற்றி.

Chief எப்படிப் போடலாம் என்று கேட்டபோது,

"சார், நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் கிடைத்தது.

14ஆம் தேதி முடியும் நேரமும் 15ஆம்  தேதி ஆரம்பிக்கும் நேரமும் ஒரே நேரம் தானே!" என்றார்.

நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கடவுள் நம்மை மனம் திருப்ப ஒவ்வொரு வினாடியும் தனது அருளைத் தொடர்ந்து பொழிந்து கொண்டேயிருப்பார்.

பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்ட வினாடியில் நமது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவார்.

மனஸ்தாபப்பட அரை வினாடி போதும்.

அந்த அரை வினாடியில் மரித்தால் மோட்சம் உறுதி.

யூதாஸ் அப்படித்தான் மோட்சத்திற்குச் சென்றிருப்பான்.

நம் ஒவ்வொருவருக்காகவும் தனது 33 ஆண்டு கால வாழ்வையும் அர்ப்பணித்தவர் இயேசு.

வாழ்வின் பெரும்பகுதியை வீணடித்து விட்டோமே என்று நம்பிக்கையை கைவிட்டு விட வேண்டாம்.

மீதி இருப்பதைப் பயன் படுத்தினாலே விண்ணகம் செல்ல முடியும்.

வாழ் நாளெல்லாம் பாவத்தில் வாழ்ந்து விட்டோமே, மரணம் நெருங்கி விட்டதே என்று அதைரியப்பட வேண்டாம்,

மரண நேரத்தில் மனம் திரும்பினாலும் விண்ணகம் சென்று விடலாம்.

இறைவன் ஒவ்வொரு வினாடியும் நமது முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நாம் அவர் முகத்தைப் பார்க்க வேண்டியதுதான்.

நம்மை அள்ளி அணைத்துக்  கொள்வார் விண்ணகம் அழைத்துச் செல்ல.

போனது போகட்டும்,

இருப்பதை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

லூர்து செல்வம்.

" மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார். (மத்தேயு.19:24)

"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்."
(மத்தேயு.19:24)

"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது" என்பது யூத மக்கள் பேசிய மொழியின் ஒரு சொல்லாடல்.

"நடப்பது மிகவும் கடினம்" என்பதைக் குறிக்க இதைப் பயன்படுத்துவார்கள்.

தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு,

"கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை."

கூழ் குடிக்க ஆசைப்படுகிறவன் மீசைக்கு ஆசைப்படக்கூடாது.

மீசை வைக்க ஆசைப்படுகிறவன் கூழ் குடிக்க ஆசைப்படக்கூடாது.

ஏன்?

கூழ் மீசையில் ஒட்டும்.
இது மீசைக்கு ஆசைப்படுவோர் கொடுக்கும் பதில்.

யூதச் சொல்லாடலை தமிழ்ப் படுத்தினால்,

"செல்வத்துக்கும் ஆசை, இறையாட்சிக்கும் ஆசை."

செல்வப்பற்று உள்ளவர்களுக்கு இறைப்பற்று இருக்காது, இருக்க முடியாது.

இறைப் பற்று உள்ளவர்களுக்கு செல்வப் பற்று இருக்காது, இருக்க முடியாது.

நமது உள்ளத்தில் ஒரு பற்றுக்குதான் இடம்.

இறைப்பற்று இருந்தால் செல்வப்பற்று உள்ளே வராது.

செல்வப் பற்று இருந்தால் இறைப்பற்று உள்ளே வராது.

இறைப்பற்றும், செல்வப் பற்றும் சேர்ந்து குடியிருக்க முடியாது.

அப்படியானால் இறையரசுக்குள் நுழைய விரும்புகிறவர்களிடம் பணம், வீடு, உடை, நிலம் உள்ளிட்ட சொத்துக்களே இருக்கக் கூடாதா?

இருக்கக் கூடாதது பற்று.

செல்வம், இறைவன் இரண்டில் 
 ஒருவர்மேல் தான் பற்று இருக்க முடியும், இருவர் மேலும் இருக்க முடியாது.

எப்படி ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியாதோ அதேபோல செல்வப் பற்று உடையவன் இறைவனை அடைய முடியாது.

உலகில் தான் பிறந்தோம்,
உலகில் தான் வாழ்கிறோம்.

ஆனால் உலகின் மீது பற்று இல்லாமல் வாழ வேண்டும்.

எதிர் பாராமல் மரணம் வருகிறது.

மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்பவனிடம் உலகப் பற்று இல்லை.

மரணத்துக்குத் தப்பிக்க விரும்புகிறவனிடம் உலகப் பற்று இருக்கிறது.

இறைப்பற்று மட்டும் இருந்தால் அவன் மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பான்.

புகைவண்டியில் தென்காசிக்கு டிக்கெட் எடுத்திருப்பவன் தென்காசி வந்தவுடன் இறங்குவானா அல்லது புகைவண்டியிலேயே தொடர்ந்து இருக்க விரும்புவானா?

இரயில் பற்று உள்ளவனால் ஊருக்கு ஒரு நாளும் போக முடியாது.

துறவிகள் கொடுக்கும் வார்த்தைப்பாடுகளில் முதன்மையானது தரித்திர (Poverty)வார்த்தைப்பாடு.

இந்த வார்த்தைப்பாடு கொடுப்பவர்கள் உலகப் பொருட்கள் மீது பற்றோ, உரிமையோ கொண்டாட முடியாது.

அவற்றை உலகில் வாழப் பயன் படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

அவர்கள் பயன்படுத்தும் பேனாகூட அவர்களுக்கு உரியது அல்ல.

ஒரு மடத்தில் Superior பதவி வகிப்பவர் சமையல் உதவியாளராக மாற்றப் படலாம்.

பணிவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உலகையே படைத்த இறைமகன் மனுமகனாகப் பிறந்த போது தலை சாய்க்க சொந்த இடமில்லாமல்தான் வாழ்ந்து வந்தார்.

பிறந்தது யாருக்கோ சொந்தமான மாட்டுத் தொழுவம்.

படுக்கை மாட்டின் தீவனத் தொட்டி.

மரித்தது குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை.

அடக்கம் செய்யப்பட்டது வேறு யாருக்காகவோ வெட்டப்பட்ட கல்லறை.

அவர் அணிந்திருந்த உடை மீது கூட அவர் பற்று வைக்கவில்லை.

அதை அவருடைய உடலிலிருந்து உரியும்போது அவர் அதைத் தடுக்கவில்லை.

உரிந்தவர்களே தங்களுக்குள்ளே சீட்டுப் போட்டு எடுத்துக் கொண்டார்கள்.

அன்னை மரியாள் பின்னி மகனுக்குப் போட்ட ஆடை அவர் வளர வளர அவரோடு வளர்ந்தது.

தன்னிடம் இருந்த கடைசிப் பொருளாகிய ஆடையையும் அவரைப் பகைத்தவர்களுக்கு கொடுத்து விட்டுதான் மரித்தார்.

அவர் அவர்களை நேசித்தார், அதனால்தான் மன்னித்தார்.

உடுத்தியிருந்த உடைமீது கூட பற்றில்லாமல் வாழ்ந்தவர் இயேசு.

நாம் அவருடைய சீடர்கள்.

நாமும் உலகப் பொருட்கள் மீது பற்று இல்லாதவர்களாக வாழ்ந்தால்தான் இயேசுவின் சீடர்கள் என்ற பெயருக்குப் பொருத்தமானவர்கள்.

என்னுடைய உயர்நிலைப்பள்ளிக் காலத்தில் 
(St. Mary's, Madurai. 1952-1955)

எங்களுடைய தமிழாசிரியர் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது.

"இரைப் பற்று இல்லாதவனிடம் தான் இறைப் பற்று இருக்கும்."

உண்மை.

இரைக்காக மட்டும் உழைப்பவன்

இறைக்காக உழைக்க மாட்டான்.

உண்பது வாழ்வதற்கு,
வாழ்வது உண்பதற்காக அல்ல.

வாழ்வது இறைவனுக்காக மட்டுமே.

இறைவன் மீது மட்டும் பற்று உள்ளவர்களாக வாழ்வோம்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" (குறள்)

லூர்து செல்வம்.

Sunday, August 18, 2024

"வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." (அரு.6:57)

' வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." 
(அரு.6:57)

அன்பே கடவுள்.

பரிசுத்த தம திரித்துவத்தின் அன்பு வாழ்வின் மகத்துவத்தை விளக்கும் இறைவாக்கு.

ஈருடல் ஓருடலாய் வாழும் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வது,

"உன்னால் நான் வாழ்கிறேன்.
நீயின்றி நானில்லை."

இவ்வாக்கியங்கள் அவர்களின் அன்பின் நெருக்கத்தை வெளிக் கொணர்கின்றன.

இருவர் வாழ்வதும் ஒரு வாழ்வுதான் என்று கூறுவதன் மூலம் இருவரும் ஒருவர்தான் 
என்று அழுத்தமாகக் கூறுகின்றன.

இயேசு "நானும் அவரால் வாழ்கிறேன்" என்று கூறும்போது

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் நெருக்கத்தை வலியுறுத்துகிறார்.

தந்தை சுயம்பு, நித்தியர்.
மகன் சுயம்பு, நித்தியர்.

தந்தை நித்திய காலமாக மகனைப் பெறுகிறார்.

தந்தைக்கும் துவக்கமில்லை.
மகனுக்கும் துவக்கமில்லை.

இருவரும் ஒருவருள் ஒருவர் இருக்கும் நெருக்கத்தின் ஆழத்தை வலியுறுத்தவே

"நானும் அவரால் வாழ்கிறேன்."
என்று இயேசு கூறுகிறார்.

இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உணவாக உட்கொள்ளும் போது,

தந்தையையும் மகனையும் போல,

நாம் (இயேசுவும் நாமும்) ஒருவருள் ஒருவராக ஒன்றாகி விடுவோம்.

நாம் திவ்ய நற்கருணை அருந்தும் போது நமக்கும் இயேசுவுக்கும் ஏற்படும் உறவின் நெருக்கத்தை தம திரித்துவத்தின் ஆட்களுக்குள் உள்ள உறவின் நெருக்கத்துக்கு ஒப்பிடுகிறார் இயேசு.

இயேசு உணவாக நம்முள் வரும்போது நாம் இயேசுவோடு ஒருவர் ஆகிவிடுகிறோம்.

When we receive Holy Communion we become one with Jesus.

"வாழ்வது நானல்ல, இயேசு என்னில் வாழ்கிறார்"  என்ற புனித சின்னப்பரின் கூற்று நமக்கும் பொருந்தும்.


'இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்."
(கலாத்தியர் 2:20)

நாம் திருவிருந்து முடிந்து வீட்டுக்கு வரும்போது இயேசுதான் வீட்டுக்கு வருகிறார். (நம் உருவத்தில்)

அன்று அன்னை மரியாளின் வீட்டுக்கு வந்த அவளுடைய மகனாகிய இயேசு நம் வீட்டுக்கு வருகிறார்.

அந்த உணர்வுடன் நற்கருணை நாதரோடு நாம் வீட்டுக்கு வந்தால் இயேசு மரியாளின் வீட்டில் எப்படி நடந்து கொண்டாரோ அதே போல் நாம் நமது வீட்டில் நடந்து கொள்வோம்.

கோவிலுக்குப் போகுமுன் கணவனுக்கும் மனைவிக்கும்‌ சண்டை.

மூஞ்சைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போகிறார்கள்.

பூசையும் காண்கிறார்கள்.

நன்மையும் எடுக்கிறார்கள்.

பூசை முடிந்து வீட்டுக்கு வருகிறார்கள்.

சண்டை தொடர்கிறது.

பேசிச் சண்டை போட்டு பேசாமல் மூஞ்சைத் தூக்கிக் கொண்டு ஆளுக்கொரு பக்கம் இருக்கிறார்கள்.

இயேசு இப்படி நடந்து கொள்வாரா?

மன்னிக்கும் தேவன் இயேசு.
தீமைக்கு நன்மை செய்யும் தேவன் இயேசு.

அப்படியானால் இயேசுவை உட்கொண்டவர்கள் இப்படி நடந்து கொண்டால் அவர்கள் சரியான மன நிலையில் இயேசுவை உட்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

குளிக்கப் போய் சேற்றை வாரிப் பூசிக் கொண்டார்கள் என்று அர்த்தம்.

இயேசுவும் தந்தையும் ஒன்றித்து வாழ்வது போல நாமும் இயேசுவும் ஒன்றித்து வாழ்ந்தால் மண்ணகத்திலேயே விண்ணக வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம்.

உரிய தயாரிப்புடன் திருவிருந்தை அருந்துவோம்.

இயேசுவாக மாறுவோம்.

இயேசுவாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, August 16, 2024

" உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்." (அரு. 6:58)

"உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்." (அரு. 6:58)

இறைவன் நம்மை நிரந்தரம் இன்றி வாழ்ந்து, ஒருநாள் மண்ணுக்குத் திரும்பி அழிந்து போகக்கூடிய உடலோடும்,

அழியாமல் என்றென்றும் வாழக்கூடிய ஆன்மாவோடும்
படைத்திருக்கிறார்.

இரண்டும் அததன் தன்மைக்கு ஏற்ப வாழ வேண்டும்.

உடல் மண்ணுக்குத் திரும்ப வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அது மண்ணுக்குத் திரும்பும் வரை வாழ வேண்டும்.

அதற்காக அது மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட தாவர உணவை உண்கிறது.

தாவரங்களைப் போலவே அதுவும் ஒரு நாள் மண்ணில் மக்கி, தாவரங்களுக்கு உணவாக மாறிவிடும்.

தாவர உணவை உண்ட உடல் தாவரங்களுக்கே உணவாக மாறிவிடும்.

நமது அழியாத ஆன்மாவுக்கும் உணவு வேண்டும்.

அது ஆன்மாவைப் போலவே அழியாத உணவாக இருக்க வேண்டும்.

ஆன்மாவைப் படைத்த இறைவனின் அருள்தான் ஆன்மாவின் உணவு.

அருள் இருவகை.

1. தேவ இஷ்டப் பிரசாதம்.
(Sanctifying grace)

2.உதவி வரப்பிரசாதம்.
(Actual grace)

தேவ இஷ்டப் பிரசாதம்தான் ஆன்மாவின் உயிர்.

இந்த உயிரைத்தான் நமது முதல் பெற்றோர் பாவத்தின் மூலம் இழந்தனர்.

நாம் பிறக்கும் போது இந்த உயிரின்றி, அதாவது, சென்மப் பாவத்தோடு பிறந்தோம்.

திருமுழுக்கின்போது நமது ஆன்மா உயிர் பெற்றது.

சாவான பாவத்தினால் நமது உயிரை இழக்காமல் காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

சாவான பாவத்தினால் உயிரை இழக்க நேரிட்டால் அதைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.

நமது ஆன்மா தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருந்தால்தான் நமக்கு இறைவனோடு ஆன்மீக உறவு இருக்கும்.

இறைவனோடு ஆன்மீக உறவில் இருப்பவர்கள் தான் மோட்ச வாழ்வுக்குத் தகுதியானவர்கள்.

நாம் ஒவ்வொரு வினாடியும் மோட்ச வாழ்வுக்குத் தகுதியானவர்களாக வாழ வேண்டும்.

அப்போதுதான் நாம் எந்த வினாடியில் இறந்தாலும் மோட்ச வாழ்வை அடைவோம்.

உதவி வரப்பிரசாதம்:

நாம் நற்செயல் செய்வதற்கு சக்தி தரும் வரம்தான் உதவி வரப்பிரசாதம்.

உடலியல் ரீதியாகக்கூட நாம் உயிரோடு இருந்தால் மட்டும் போதாது.

நாம் எழுந்து நடக்க, செயல் புரிய சக்தி வேண்டும்.

ஆன்மீக ரீதியாக நமது ஆன்மா உயிரோடு இருந்தால் மட்டும் போதாது.

அது நற்செயல் புரிய சக்தி வேண்டும்.

அந்த சக்தியைத் தருவதுதான்
உதவி வரப்பிரசாதம்.

நாம் மனம் திரும்ப உதவி வரப்பிரசாதம் உதவுகிறது.

மனம் திரும்பியவுடன் திரு முழுக்கின் மூலம் நமது ஆன்மா தேவ இஷ்டப் பிரசாதத்தைப் பெற்று உயிர் பெறுகிறது.

உயிர் பெற்ற‌ ஆன்மா நற்செயல்கள் மூலம் ஆன்மீக வாழ்வு  வாழ உதவி வரப்பிரசாதம் உதவுகிறது.

இறைவன் தான் நாம் பெறும் அருளின் ஊற்று.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது அருளின் ஊற்றாகிய இறைவனே நமக்குள் உணவாக வருகிறார்.

இவ்வுணவை உண்ணும் நாம் என்றும் வாழ்வோம்.

உணவோடேயே, அதாவது, இயேசுவோடேயே என்றென்றும் வாழ்வோம்.

"வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்."

விவிலியத்திலிருந்து இயேசுவின் வார்த்தைகளை வாசித்து தியானித்தால் மட்டும் போதாது.

அவரது வார்த்தைகள் நமது உணர்வோடு உணர்வாக ஒன்றிக்க வேண்டும்.

ஒன்றித்தால் உரிய தயாரிப்புடன் திருவிருந்தை அருந்துவோம்.

நிலைவாழ்வின் முன்ருசியுடன் அருந்துவோம்.

ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று ருசித்துப் பார்த்துக் கொண்டே அருந்துவோம்.

திருவிருந்து வெறும் சடங்காக இருக்காது, அனுபவிக்கும் இறை அனுபவமாக இருக்கும்.

ஒவ்வொரு வினாடியும் நமது உடல் உயிர் வாழ எப்படி மூச்சு இன்றியமையாததோ

அப்படியே ஒவ்வொரு வினாடியும் நாம் ஆன்மீக வாழ்வு வாழ இறையருள் இன்றியமையாதது.

அருளின் உதவியின்றி நாம் செய்யும் செயல்கள் முழுக்க முழுக்க லௌகீகமானவை.

ஆன்மீக ரீதியாகப் பயனற்றவை.

ஒவ்வொரு வினாடியும் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டுமென்றால் நாம் இறைப் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

காலையில் இறைவன் பெயரால் எழுவதோடு,

அன்றைய ஒவ்வொரு செயலையும் "இறைவா உமக்காக" என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.

அப்போதுதான் நாம் உண்பது, உடுப்பது, நடப்பது, உறங்குவது உட்பட அனைத்தும் ஆன்மீக வாழ்வாக மாறும்.

நமது ஆன்மீக வாழ்வு மண்ணுலகில் தொடங்கி, விண்ணுலகில் தொடர வேண்டும்.

இவ்வுலக மரணம் கூட இறைவனுக்காகத்தான்.

மரணம்தான் நமக்கு விண்ணக வாசல்.

வாசல் வழியாகத்தானே வீட்டிற்குள் நுழைய முடியும்.

அருள் இருந்தால்தான் ஆன்மீக வாழ்வு.

அருள் இருந்தால்தான் நிலை வாழ்வு.

"அருள் நிறைந்த மரியின் புதல்வா,

எங்களையும் உம் அருளால் வழிநடத்தும்."

லூர்து செல்வம்.

"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்."(மத்தேயு.19:14)

"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்."
(மத்தேயு.19:14)

இயேசு அனைவரையும் தான் அழைக்கிறார்.

ஏன் விசேசமாக 
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்." என்று கூறுகிறார்?

பெரியவர்களுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் என்ன வித்தியாசம்?

பெரியவர்கள் உலகுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.

சிறு பிள்ளைகள் உலகுக்கு வந்து சில ஆண்டுகள் ஆகின்றன.

பல ஆண்டுகளுக்கும் சில ஆண்டுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் வித்தியாசம்.

சிறு பிள்ளைகளிடம் இருக்கும் அநேக குணங்கள் பெரியவர்களிடம் இல்லாமல் போனதுதான் வித்தியாசம்.

என்ன குணங்கள்?

குழந்தை பிறப்பதற்கு முன் பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருக்கிறது.

அங்கு அதற்கு சுயமாக எந்த அனுபவமும் கிடையாது.

பிறக்கும் போது அது அது வரைப் பார்த்திராத உலகைப் பார்க்கிறது.

அப்போது அதற்குள் இருக்கும் குணம்தான் அதனுடைய குணம்.

வளர வளர சமூகத்திலிருந்து பாடம் கற்கிறது, அதன் இயற்கைக் குணம் மாறிக்கொண்டே வருகிறது.

அதன் இயற்கைக் குணங்கள் எவை?

ஆர்வம். (Curiosity)
மாசு மறுவற்ற தன்மை.(Innocence)
திறந்த மனது.(Open-mindedness)
தாழ்ச்சி (Humility)
கற்க ஆர்வம்.(willingness to learn)

பிறந்தவுடன் அதன் முதல் பார்வை தாயின் மேல் படுகிறது.  

அது யார் என்று அறிய ஆர்வத்துடன் பார்க்கிறது.

அவள் மகிழ்ச்சியோடு கையில் எடுக்கும் போது அவளது புன்னகை பூத்த முகத்தைப் பார்க்கிறது.

அது கற்றுக் கொண்ட முதல் அனுபவம் புன்னகை.

அதன் சிறுபிள்ளைப் பருவத்தில் அதற்கு அழகூட்டுவது அதன் குழந்தைப் பருவப் புன்னகை தான்.

தாய் குழந்தையை மார்போடு அணைத்துப் பாலூட்டும் போது,

தாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே,

தாயை அடையாளம் தெரிந்து கொள்கிறது.

அன்று ஆரம்பிக்கிற‌ அன்பு அதன் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

அதன் சிறுபிள்ளைப் பருவம் முழுவதும் புன்னகையும் அன்பும் நீடிக்கும்.

தாயைப் பார்க்காமல் பிள்ளையால் இருக்க முடியாது.

தாயைப் பார்த்தவுடன் மனதில் கவலைகள் இருந்தாலும் மாயமாய் மறைந்து போகும்.

புன்னகை மாறாது.

அதே தன்மை வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.

இருக்கிறதா?

குழந்தைகளும், , சிறுபிள்ளைகளும் மனதில் மாசுமருவின்றி, சூதுவாதின்றி  இருக்கிறார்கள்.

அதே தன்மை வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.


சிறு பிள்ளைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டார்கள்.

சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்று போல் இருக்கும்.

சிறு பிள்ளைகளிடம் தாழ்ச்சி இருக்கும்.

பெரியவர்களிடம் பழகும் போது சிறு பிள்ளைகளாகவே பழகுவார்கள்.

தங்கள் உண்மையான நிலை அவர்களுக்குத் தெரியுமாகையால் அவர்களுக்கு புதிதாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

அவர்கள் உள்ளம் பரிசுத்தமாக இருக்கும்.

அவர்களிடம் நற்குணங்களைக் கருதிதான்

இயேசு "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்." என்கிறார்.

விண்ணரசு இத்தகைய குணம் உள்ளவர்களுக்கே உரியது என்று இயேசு கூறுகிறார்.

சிறு பிள்ளைகளிடம் இயல்பாய் உள்ள இக்குணங்கள் பெரியோர்களிடம் இருக்க வேண்டும்.

அதோடு பெரியவர்கள் தங்கள் வீட்டில் வாழும் சிறு பிள்ளைகளின் இயல்பான குணங்களைப் பயன்படுத்தி அவர்களைப் பக்தியுள்ள கிறிஸ்தவர்களாக வளர்க்க வேண்டும்.

இந்த நற்குணங்கள் அவர்களது வாழ்நாளெல்லாம் நீடிக்கும்படி செய்ய வேண்டும்.

பெற்றோர் தங்கள் சிறுபிள்ளைகளின் மனதில் விசுவாசத்தையும், இறைப் பற்றையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

 தாங்கள் காலை, மாலை செபம் சொல்லும் போது சிறுவர்களையும் அருகில் அமரவைத்து

அவர்களுக்கும் செபிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

திருப்பலிக்கு சிறுவர்களைத் தங்களோடு அழைத்துச் செல்வதோடு,

தாங்களும் பராக்குக்கு இடம் கொடுக்காமல் பக்தியுடன் திருப்பலி காண வேண்டும்,

 தங்கள் பிள்ளைகளையும் பக்தியுடன் திருப்பலியில் கலந்து செபிக்கக் கற்றுத் தர வேண்டும்.

சுவாமியார் பிரசங்கத்தில் என்ன சொன்னார் என்று பூசைக்குப் பின் அவர்களிடம் கேட்பதைப் பழக்கமாக வைத்திருந்தால்

பிள்ளைகள் பிரசங்கத்தைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடக் கல்வியில் ஆர்வம் இருக்க வேண்டியதுதான்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் அதைவிட அதிக ஆர்வம் இருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிக்கு வராமல் 
Tution க்குப் போகிற பழக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

புதுநன்மை எடுக்கும் போது திவ்ய நற்கருணையின் மகத்துவத்தைப் பிள்ளைகள் உணர்ந்திருக்க வேண்டும்.

பிள்ளைகள் பிறக்கும்போது இயேசுவுக்கு ஏற்ற நல்ல பண்புகளுடன்தான் பிறக்கிறார்கள்.

அவர்கள் அந்த பண்புகளில் வளரும்படி கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் பெரியோராகிய நமது கடமை.

நமது கடமையை ஒழுங்காகச் செய்வோம்.

நற்கருணைப் பேழையில் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு நம்மிடம் சொல்கிறார்,

"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்."

நமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரிடம் வருவோம்.

விண்ணரசு நமக்கு உரியது.

லூர்து செல்வம்.

Thursday, August 15, 2024

கடவுள் இயற்கையை படைத்து விட்டு அதை ஆள்வதற்காக மனிதனைப் படைத்தார்.

கடவுள் இயற்கையை படைத்து விட்டு அதை ஆள்வதற்காக மனிதனைப் படைத்தார்.

இயற்கை மனிதனுக்காகப் படைக்கப்பட்டது.
(தொடக்கநூல் 1:28-31)

மனித உடல் இயற்கையிலிருந்து (மண்) எடுக்கப்பட்டது.

ஆகவே தான் இயற்கையில் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் மனித உடலைப் பாதிக்கின்றன.

கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.

மனித ஆன்மாவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது.

இயற்கை ஒருநாள் அழியும், மனித ஆன்மா அழியாது.

மனிதனின் பாவம்  
இயற்கையைப் பாதித்தது.

 (நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது;)
(தொடக்கநூல் 3:17)

மனித உடல் இயற்கையின் ஒரு அங்கமாகியதால் மனித வாழ்வு இயற்கையோடு பின்னி பிணைக்கப்பட்டுள்ளது.

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தால் மனிதனும் பிழைப்பான் இயற்கையும் பிழைக்கும்.

மனிதன் இயற்கையை வெட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறான், அதன் விளைவு தான் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள்.

தென்னிந்தியாவின் நீர் வளத்துக்கும் நில வளத்துக்கும் ஒரே காரணம் மேற்கு தொடர்ச்சி மலை.

மலையின் மேல் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்கள் பருவ மழைக்குக் காரணமாக இருப்பதோடு மலையையும் பாதுகாக்கின்றன.

பின்னிப் பிணைந்து மலைக்குள் வளரும் மர வேர்கள் மலையில் பிளவுகள் ஏற்படாதவாறு இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றன.

ஆனால் மனிதன் செயற்கையாக தோட்டங்கள் போடுவதற்காக இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டி விட்டது தான் மலைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்குக் காரணம்.

மரவேர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பகுதிகள் வேர்கள் அப்புறப்படுத்தப்பட்டவுடன் இடம்பெயர்ந்து சரிய ஆரம்பித்துவிட்டன.

விளைவு அதன் மேல் வாழ்ந்து வந்த மனிதர்களும் அவற்றோடு சேர்ந்து சரிந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டார்கள்.

வயநாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணம் மனிதன் மட்டும் தான்.

மனிதன் இயற்கையைக் காப்பாற்றினால் இயற்கை மனிதனை காப்பாற்றும்.

மனிதன் இயற்கையை அழித்தால் இயற்கை மனிதனை அழிக்கும்.

இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை இறைவன் மனிதன் வசம் ஒப்படைத்திருக்கிறார்.

"இயற்கையை மறந்ததாலேயே, நாம் அழிந்து வருகிறோம்"


புனித பிரான்சிஸ் அசிசியின் கருத்துப்படி

இயற்கையின் அனைத்துப் பொருட்களும் நமது சகோதரர்கள்.

இத்தகைய உடன்பிறந்த உணர்வு இல்லாமல், இயற்கையை நாம் அணுகும்போது, அதனை ஆள்பவர்களாக, நுகர்பவர்களாக, பரிவின்றி பறிப்பவர்களாக மாறிவிடுகிறோம். 

இதற்கு மாறாக, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் அனைத்தின்மீதும் அக்கறை கொண்டவர்களாக மாறினால், அவற்றைப் பாதுகாக்கும் வகையில், நம் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவோம்.

இயற்கையில் வாழும் பறவைகளையும் மற்ற உயிர்ப் பிராணிகளையும் தனது உறவுகளாக கருதினார் அசிசியார்.

அவைகளுக்காக இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்.

புவி வெப்பமடைதலால் (Global warming) ஏற்படும் தீமைகளுக்கு‌க் காரணம்‌ மனிதனுடைய நடவடிக்கைகள் தான்.

வயநாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த பகுதியிலும் ஏற்படும் இயற்கை அழிவுகளுக்கு காரணம் மனிதன் மட்டுமே.

இவற்றுக்குப் பரிகாரம் செய்ய வேண்டியது மனிதனின் கடமை.

இந்த அழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டியது சக மனிதர்களுடைய கடமை.

இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து மனிதர்களகன் கடமை.

இயற்கையை ஒரு பொருளாகக் கருதாமல்,

அசிசி பிரான்சிஸ் கருதியது போல,

நமது பிறனாகக் கருதினால் இயற்கையை நாம் நேசிப்போம்.

அழிக்க மாட்டோம்.

இயற்கையும் நம்மை அழிக்காது.

எதிர் காலத்திலாவது வயநாட்டை வாழ வைப்போம்.

நாமும் வாழ்ந்திடுவோம்.

லூர்து செல்வம்.

''மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."(மத்தேயு.19:5)

" மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."
(மத்தேயு.19:5)

இந்த வசனத்தைத் தியானிப்பதற்கு முன்,

கடவுள் கணவனையும், மனைவியையும் எப்படிப் படைத்தார் எனக் கூறும் வசனத்தைத் தியானிக்க வேண்டும்.


" கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; 

கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; 

ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."
(தொடக்கநூல் 1:27)

இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்

"உருவம்" தொடர்பான இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.


"சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா?"

என்ற பரிசேயர்களின் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு

இயேசு தெனாரியம் நாணயத்தில்
யாருடைய உருவம் (Image) பொறிக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்.

சீசருடையது என்ற பதில் வந்தது


 இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் 

கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். 

இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கும், மனிதனைப் படைத்ததற்கும் என்ன சம்பந்தம்?

தெனாரியத்தில் சீசரின் உரு இருப்பதால் அது சீசருக்குச் சொந்தம்.

எதில் யாருடைய உரு இருக்கிறதோ அது அவருக்குச் சொந்தம்.

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்.

மனிதனில் கடவுளின் உரு இருக்கிறது.

ஆகவே மனிதன் கடவுளுக்குச் சொந்தம்.

''ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."

நம்முடைய முதல் பெற்றோரை ஆணும், பெண்ணுமாகப் படைத்தார்.

கடவுள் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல.

அவர் ஆவி.‌ (Spirit)

ஆணும், பெண்ணுமாகப் படைக்கப் பட்டவர்களில் அவருடைய உரு எப்படி இருக்கும்?

ஆதாமும் ஏவாளும் உடலளவில் வேறுபட்டவர்கள்.

ஆன்மா அளவில் ஒன்றுபோல் உள்ளவர்கள்.

இருவருடைய ஆன்மாக்களும் ஆவி.

அவர்களுடைய ஆன்மாக்கள் கடவுளுடைய உருவைப் (Image) பெற்றுள்ளன.

கடவுள் அன்பு, இரக்கம், நீதி, சுதந்திரம் போன்ற பண்புகளையும் அவர்களுடைய ஆன்மாக்களோடு பகிர்ந்து கொண்டார்.

ஆகவே அவர்கள் கடவுளின் உருவை, அதாவது, சாயலைப் பெற்றிருந்தார்கள்.

இருவருடைய ஆன்மாக்களும், இருவருடைய உடல்களும் சேர்ந்து ஒரு குடும்பம்.

இருவரும் சேர்ந்து ஒரு குடும்பம் என்ற அமைப்பு ஏதோ ஒரு வகையில் கடவுளை ஒத்திருக்கிறது.

எந்த வகையில்?

"மூன்று ஆட்கள், ஒரு கடவுள்."

"இரண்டு ஆட்கள், ஒரு குடும்பம்."

ஆணிலிருந்து எடுக்கப்பட்டதுதான் பெண்ணின் உடல்.

ஆக, ஈருடல் = ஓருடல் 

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர்." இவையும் இயேசுவின் வார்த்தைகள்தான்.

"ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."

"கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; "

என்ற ஆதியாகம வசனங்களையும்

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர்"

என்ற இயேசுவின் வசனத்தையும் பொருத்திப் பாருங்கள்.

மனித குடும்பத்தில் பரிசுத்த தம திரித்துவத்தின் சாயல் இருப்பது புரியும்.

மனுக்குலத்தில் கடவுளின் சாயல் இருப்பதால் அது கடவுளுக்குச் சொந்தம் என்பதும், அது கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதும் புரியும்.

இப்போது ஆரம்ப வசனத்துக்கு வருவோம்.

"மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."

கடவுள் முதல் கணவன் மனைவியின் உடலை அவர் ஏற்கனவே படைத்திருந்த மண்ணிலிருந்து உண்டாக்கி விட்டு ஆன்மாவை நேரடியாகப் படைத்து உடலோடு சேர்த்தார்.

இப்போது மனித உடலை உண்டாக்கும் பொறுப்பை மனிதனிடமே விட்டு விட்டார்.

ஆன்மாவை மட்டும் அவர் படைக்கிறார்.

உடலை உண்டாக்கும் பொறுப்பை திருமணமான தம்பதியரிடம் விட்டிருக்கிறார்.

தம்பதியர் படைப்புத் தொழிலை இறைவனோடு சேர்ந்து செய்வதால் அவர்களது குடும்பம் இறைவனின் சாயலைப் பெற்றிருக்கிறது.

இறைவன் சுயமாகச் செயல்படுவது போல அவர்களும் சுயமாகச் செயல்பட வேண்டும். 

ஆகவே தங்கள் தாய் தந்தையரை விட்டுவிட்டுத் தனியாக ஒன்றித்திருக்க வேண்டும்.

இனப் பெருக்க விசயத்தில் இறைவனின் சாயலைப் பெற்றிருப்பதால் அவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.

அவர்களுடைய பெற்றோர் அவர்களுடைய உரிமைகளில் குறிக்கிடும் போதுதான் அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கணவன் மனைவியைத் தன் உடலாகவும், மனைவி கணவனைத் தன் உடலாகவும் கருதி வாழ வேண்டும்.

இருவரும் ஒருவர், ஒருவருக்குள் ஒளிவு மறைவு இருக்க முடியாது.

நம்மை நாமே திருத்திக் கொள்வது போல இருவரும் தங்கள் குறைகளைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும், ‌குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களின் சொல் கேட்டு அல்ல.

அவர்கள் வயிற்றில் குழந்தை உற்பவித்தாலும் அது கடவுளுடைய குழந்தை.

அதை அழிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.

உற்பவிக்கும் குழந்தை கடவுளின் உருவைப் பெற்றிருப்பதால் அது அவருக்கே முற்றிலும் சொந்தம்.

கணவனையும் மனைவியையும் ஓரே குடும்பமாக இணைத்திருப்பது கடவுள்,

அதைப் பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவர்களே ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக முடியாது.

கடவுளின் சாயலுக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும்.

இதை உணர்ந்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 14, 2024

" மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.". (லூக்கா நற்செய்தி 1:41)

"மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்."
(லூக்கா நற்செய்தி 1:41)

அன்னை மரியாளும் எலிசபெத்தும் உறவினர்கள்.

தூய ஆவியின் வல்லமையால் இறைமகனை மனுமகனாகக் கருத்தரித்த மரியாள்

அவளுடைய உறவினரான எலிசபெத்தும் முதிய வயதில் கருத்தரித்திருப்பதை கபிரியேல் தூதர் மூலம் கேள்விப்பட்டு

அவளைக் கண்டு அவளை வாழ்த்துவதற்காகவும், அவளுக்குப் பணி புரிவதற்காகவும் அவள் வாழும் மலை நாட்டு ஊருக்கு நடந்து செல்கிறாள்.

அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார். 

இருவருமே தூய ஆவியால் நிறப்பப் பட்டுள்ளனர்.

இருவரும் சந்திக்கும் போது

மரியாளின் வயிற்றிலிருந்த குழந்தை இயேசுவும்,

எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அருளப்பரும் சந்திக்கிறார்கள்.

இந்த சந்திப்பின் போது ஒரு அற்புதமான நிகழ்வு நடை பெறுகிறது.

தூய ஆவியின் வல்லமையால் அருளப்பர் சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.

குழந்தை அருளப்பர் அந்த மகிழ்ச்சியால் துள்ளுகிறார்.   

 (Infant John leaped in her womb out of joy.)

சென்மப் பாவ மாசின்றி அன்னையின் வயிற்றில் உற்பவித்தவள் மரியாள் மட்டுமே.

அருளப்பர் சென்மப் பாவத்தோடு உற்பவித்தார்.

ஆனால் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவியால் அது மன்னிக்கப்பட்டு

சென்மப் பாவம் இல்லாமல் பிறந்தார்.

பாவ மாசின்றி உற்பவித்து, பாவ மாசின்றி அருள்
நிறைந்தவளாய் வாழ்ந்தவள் மரியாள் மட்டுமே.

கடவுளின் தாய்க்கு கடவுளால் வழங்கப்பட்ட விசேச வரம் இது.

இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் சுவிசேச அருளப்பர் மரியாளைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டார்.

அருளப்பரின் இல்லத்தில் அவள் 14 ஆண்டுகள் வாழ்ந்தாள்.

அவள் மரணம் அடைந்த போது அவளுக்கு வயது 60.

அவள் மரணப் படுக்கையில் இருக்கும் போது அனைத்து அப்போஸ்தலர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

இந்தியாவில் நற்செய்திப் பணி செய்து கொண்டிருந்த தோமையாரைத் தவிர அனைவரும் வந்து விட்டார்கள்.

அவர்கள் முன்னிலையில் மரணம் அடைந்த மரியாள் அவர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டாள்.

தோமையார் மூன்று நாட்கள் கழித்து தான் வந்தார்.

"நான் வரும் முன் ஏன் அடக்கம் செய்தீர்கள்?"

என்று வினவியவர்,

"நான் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும். கல்லறையைத் திறங்கள்." என்று கட்டாயப் படுத்தினார்.

வேறு வழியின்றி கல்லறையைத் திறந்தார்கள்.

அங்கே அவரது உடல் இல்லை.

"மகனைப் போலவே தாயும் ஆன்ம சரீரத்தோடு மோட்சத்தில் இருக்கிறாள்." என் முடிவு செய்தார்கள்.

மகன் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தினார்.
(Jesus ascended into Heaven.)

மரியாள் மரித்தவுடன் அவளது ஆன்மா விண்ணகம் சென்றது.

உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இறை வல்லமையால் அவள் உடல் அழியாமல்‌ விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு ஆன்மாவோடு இணைக்கப்பட்டது.

(Her body was "assumed" into heaven to be reunited with her soul, instead of going through the natural process of physical decay upon death.)

இயேசு சொந்த வல்லமையால் விண்ணகம் எய்தினார். (ascended)

மரியாள் இறை வல்லமையால் எடுத்துக் கொள்ளப்பட்டாள். (was "assumed")

அன்று முதல் அன்னை மரியாளின் விண்ணேற்பு விழாவாகத் திருச்சபையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்தாலும் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் தான் அதை விசுவாசப் பிரமாணமாக அறிவித்தார்.
(Dogma of Faith)

நாம் எல்லோரும் மரிப்போம்.

உலகத்தின் இறுதி நாளில் உயிரோடு எழுப்பப்பட்டு

ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம்.

ஆனால் அதுவரை நமது உடல் அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கியிருக்கும்.

ஆனால் மரியாளின் உடல் அழிவைச் சந்திக்காமலேயே ஆன்மாவோடு சேர்த்துக் கொள்ளப் பட்டது.

இது கடவுளின் தாய் என்ற முறையில் அவளுக்கு அளிக்கப்பட்ட விசேச வரம்.

இவ்வுலகில் நமது உடல் சடப் பொருள். (Matter)

விண்ணகம் செல்லும் போது ஆன்மீக உடலாக மாறும்.
(Spiritual body)

உலகம் இடத்துக்கும், நேரத்துக்கும் உட்பட்டது. (Space and time)

விண்ணகத்தில் இடம் இல்லை.
ஆகவே நமது உடல் ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழும்.


'மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு."
(1 கொரிந்தியர் 15:44)

நமது அன்னையின் விண்ணேற்பு விழாவைக் கொண்டாடும் போது நமது எதிர் கால விண்ணக வாழ்வுக்காக இப்போதே ஆன்மீக ரீதியாகத் தயாரிப்போம்.

நாம் விழா கொண்டாடுவதன் நோக்கமே அதுதான்.

லூர்து செல்வம்.