நம்முடைய முதல் தாய் ஏவாள் தனது விசுவாசமின்மை காரணமாக மனுக்குலத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானாள்.
நமது அன்னை மரியாள் தனது ஆழ்ந்த விசுவாசத்தின் காரணமாக மனுக்குலத்தின் மீட்புக்குக் காரணமானாள்.
அவளை விசுவாசத்தின் தாய் என்று அழைக்கிறோம்.
எது அவளை விசுவாசத்தின் தாயாக்கியது?
கடவுள் கபிரியேல் என்னும் வானதூதரைக் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
அவள் பெயர் மரியாள்.
அவர் தாவீது குடும்பத்தினராகிய சூசை என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்நிறைந்தவரே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
உலக வரலாற்றில் கடவுளுடைய தூதர் ஒரு மனிதப் பெண்மணியை வாழ்த்தியது அன்னை மரியாளை மட்டுமே.
மரியாள் வாழ்த்தைக் கேட்டு கலங்கினாள்.
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கணவனை அறியேனே!" என்றார்.
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்." என்றார்.
தூய ஆவியின் வல்லமையால் இது நடக்கும் என்பதை அறிந்தவுடன்
மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
உலகில் ஒரு பெண் ஆணின் உதவியில்லாமல் கருத்தரிக்க முடியாது.
அதனால்தான் "இது எப்படி நிகழும்? நான் கணவனை அறியேனே!" என்று மரியாள் கூறினாள்.
ஆனால் இது தூய ஆவியின் வல்லமையால் நிகழும் என்பதை அறிந்தவுடன்
கடவுளால் எல்லாம் முடியும் என்ற விசுவாசத்தின் அடிப்படையில்
மரியாள் இறைத்தூதர் மூலம் வந்த நற்செய்தியை ஏற்றுக் கொண்டாள்.
ஒன்றுமில்லாமையில் இருந்து உலகை உருவாக்கிய கடவுளுக்கு ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு கருவை உருவாக்க முடியாதா?
மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற போது
எலிசபெத் தூய ஆவியால் நிறப்பப் பெற்றவராய்,
"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.
(லூக்கா.1:45)
தூய ஆவியின் ஏவுதலால் எலிசபெத் கூறிய இவ்வார்த்தைகள்ய் விசுவாசத்தின் இலக்கணத்தையே வெளிப்படுத்துகின்றன.
விசுவாசம் என்றால் என்ன?
கடவுள் சொல்வதை ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம்.
இந்த இலக்கணத்தின் இலக்கியம் தான் மரியாள்.
"தாய் சொல்லைத் தட்டாதே" என்கிறது தமிழ்.
விசுவாசத்தின் தாய் மரியாள்.
அவளையும் ஏற்றுக் கொள்கிறோம்,
அவள் சொன்னதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
மரியாள் சூசையப்பருக்கு மண ஒப்பந்தம் ஆன பெண்.
நமது உலக முறைப்படி திருமண ஒப்பந்த விழாவில் மணமாகப்போகும் தம்பதியரை வாழ்த்தும் ஒருவர்
"உங்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறக்கும்" என்று வாழ்த்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
மணமக்கள் மகிழ்வார்களா அல்லது "அது எப்படி நிகழும்?" என்று கேட்பார்களா?
உலக முறைப்படி மகிழ்வார்கள் என்று தான் நினைக்கிறேன்.
ஏனெனில் குழந்தைப் பேற்றுக்காகத்தான் திருமணம் முடிக்கிறார்கள்.
ஆனால் திருமண ஒப்பந்தமான மரியாள்
ஏன் "இது எப்படி நிகழும்?" என்று கேட்டாள்?
ஏனெனில் அவள் திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நித்திய கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.
அவள் திருமண ஒப்பந்தம் செய்திருந்தது குழந்தைப் பேற்றுக்காக அல்ல.
தனது கன்னிமைக்குப் பாதுகாப்பாக.
சூசையப்பர் மரியாளின்
கன்னிமைக்குப் பாதுகாப்பாக இருக்க சம்மதித்ததால் தான் மரியாள் திருமண ஒப்பந்தத்திற்குச் சம்மதித்தாள்.
அவள் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தது அவளை வளர்த்த கோவில் குருவுக்குத் தெரியும்.
அவள் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்ததால்தான்
கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொன்னபோது,
"இது எப்படி நிகழும்?" என்று கேட்டாள்.
தனது கன்னிமைக்குத் தூய ஆவி பாதுகாப்பாய் இருப்பார் என்பது தெரிந்த பின்பே கபிரியேல் தூதரின் மங்கள வார்த்தையை ஏற்றுக் கொண்டார்.
இயேசு அவள் வயிற்றில் உற்பவிக்கும் போதும்
அவள் கன்னி,
இயேசு பிறக்கும் போதும் அவள் கன்னி,
இயேசு பிறந்த பின்னும் அவள் கன்னி,
முக்காலமும் அவள் கன்னி.
நமது பிரிவினை சபையினர் கூறுவது போல மரியாளுக்கு இயேசுவுக்குப் பின் குழந்தைகள் பிறக்கவில்லை.
உலகியலில் நடக்க முடியாதது இறைவனால் நடக்கும்.
அதை உறுதியாக விசுவசித்ததால் மரியாள் விசுவாசத்தின் தாய்.
தாயைப்போல்தான் நாமும் இருக்க வேண்டும்.
மரியாளின் வாழ்க்கை முறையை அவளுடைய விசுவாசம்தான் தீர்மானித்தது.
விசுவாசத்தின் அடிப்படையில் தான் அவள் எலிசபெத்துக்கு உதவ மலை நாட்டுக்கு நடந்தே சென்றாள்.
விசுவாசத்தின் அடிப்படையில் தான் உலகத்தையே படைத்தவரை ஒரு மாட்டுத் தொழுவத்தில் மகனாகப் பெற்றார்.
விசுவாசத்தின் அடிப்படையில் தான் கடவுளைக் காப்பாற்ற எகிப்துக்கு 40 மைல் தூரம் குடும்பத்துடன் நடந்தே சென்றாள்.
நமது தாய் வாழ்ந்தது போல நாமும் நற்செய்தியை விசுவசித்து அதன்படி வாழ வேண்டும்.
விசுவசிப்போம்.
விசுவாசத்தை வாழ்வோம்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment