Sunday, July 28, 2024

"ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்"(லூக்கா.10:42)

" ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்"
(லூக்கா.10:42)

 வீட்டிற்கு வந்திருந்த இயேசுவுக்கு உணவு கொடுப்பதற்காக மார்த்தா சமையல் வேலையில் மும்முரமாக இருக்கிறாள்.

ஆனால் அவளது தங்கை மரியாள் அவளுக்கு உதவி செய்யாமல் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

 மார்த்தா இயேசுவிடம், "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,

 உமக்குக் கவலையில்லையா?

 எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும்" என்கிறாள். 


ஆண்டவர் அவளைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 


ஆனால் தேவையானது ஒன்றே. 

மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்கிறார்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது மார்த்தா இயேசுவுக்காக,

அவருக்கு உணவு கொடுப்பதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

மரியா தனக்காக, தனது ஆன்மாவின் நலனுக்காக, ஆண்டவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

மரியா மார்த்தாவுக்கு உதவி செய்தால் அது இயேசுவுக்கு செய்கிற பணியாகத்தான் இருக்கும்.

ஆனால் இயேசு "மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்." என்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

அவர் எதற்காக மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தாரோ அதைச் செய்வது தான் நாம் அவருக்கு ஆற்றும் பணி.

நமது ஆன்மீக மீட்புக்காகத்தான் அவர் சிலுவையில் மரித்தார்.

நமது ஆன்மா அவருக்கு உரியது.

அவருக்கு உரியதைக் காப்பாற்ற செய்யும் பணி அவருக்குச் செய்யும் பணிதானே!

நம்மை நாமாகப் பார்க்காமல் கடவுளால் படைக்கப் பட்டவர்களாகப் பார்ப்போம். உண்மை புரியும்.

எனக்கு வெளியில் நின்று கொண்டு என்னை நான் பார்த்தால்

 நானே எனது அயலான் தான்.

என் அயலானுக்குச் செய்யும் பணி இயேசுவுக்குச் செய்யும் பணிதானே.

தண்ணீருக்குள் மூழ்கியவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் நாம் தண்ணீருக்குள் மூழ்கி விடக்கூடாது.

கீழே விழுந்தவனைத் தூக்கி விட வேண்டுமென்றால், நமது கால்கள் தரையில் ஊன்றியிருக்க வேண்டும்.

மற்றவர்களை மீட்புப் பாதைக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் முதலில் நாம் மீட்புப் பாதையில் நடக்க வேண்டும்.

அயலானுக்குக் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் இருக்க வேண்டும்.

நமக்குக் கண் தெரிந்தால்தான் நம்மால் குருடனுக்கு வழி காட்ட முடியும்.

ஆகவே நமது ஆன்மாவை காப்பாற்றிக் கொண்டு, பிறரின் ஆன்மாவையும் காப்பாற்ற வேண்டும்.

இரண்டுமே இயேசுவுக்குச் செய்யும் பணிதான்.

நமது பங்கை எடுத்துக் கொள்வோம்.

ஒரு பங்குக் குரு. ஆயிரம் சபையினர்.

குருவானவர் இயேசுவாக நின்று கொண்டு ஆயிரம் பேருடைய பாவங்களை மன்னிக்கிறார்.

ஆயிரம் பேருக்காகத் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

ஆயிரம் பேருக்குத் திருவிருந்து அளிக்கிறார்.

குருவானவர் நேரடியாக இறைப் பணி ஆற்றுகிறார்.

ஆனால் ஆயிரம் பேரும் அவரவர் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறார்கள்.

அவரவர் திருப்பலி காண்கிறார்கள்.

அவரவர் திருவிந்து உண்கிறார்கள்.

இப்போது குருவானவரையும், ஒரு விசுவாசியையும் எடுத்துக் கொள்வோம்.

இருவருள்  இயேசுவுக்கு அதிகம் பணிபுரிவது யார்?

குருவானவர் மார்த்தாவைப் போல,

மார்த்தா வீட்டில் இருக்கக்கூடிய
அனைவருக்கும்
உணவளிக்க உழைக்கிறாள்.

குருவானவர் பங்கில் உள்ள அனைவருக்கும் ஆன்மீக உணவளிக்க உழைக்கிறார்.

விசுவாசி மரியாவைப் போல.

மரியா தன் ஆன்மீக நலனுக்காக நற்செய்தியைக் கேட்கிறாள்.

விசுவாசியும் தன் ஆன்ம நலனுக்காக விசுவாசியாக இருக்கிறான்.

இவ்விருவருள் இயேசுவுக்கு அதிகம் பணி புரிவது யார்?

இயேசுவைப் பொறுத்த மட்டில் இருவருமே அவரவர் பணியைச் செய்கிறார்கள்.

அவரவர் தேர்வு செய்து கொண்ட பணியைச் செய்கிறார்கள்.

மார்த்தா செய்வதும் மேலான பணிதான்.

மரியா செய்வது அவள் தேர்வு செய்து கொண்ட இறைப்பணி.

நாம் அனைவரும் அவரவர் பணியை இயேசுவுக்காகச் செய்வோம்.

"இயேசுவுக்காக" என்பதுதான் முக்கியம்.

திருப்பலியின்போது குருவானவர் இயேசு.

குருவானவரிடம் பாவ மன்னிப்புப் பெறுவோம்.

குருவானவர் பிரசங்கத்தில் கூறும் நற்செய்தியைக் கூர்ந்து கவனிப்போம்.

குருவானவரோடு சேர்ந்து திருப்பலியை ஒப்புக் கொடுப்போம்.

குருவானவர் கையிலிருந்து இயேசுவை நாவில் வாங்குவோம்.

திருப்பலியின்போது கூர்ந்து கேட்ட நற்செய்தியைத் தினமும்  வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment