Saturday, July 27, 2024

"தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். "(அரு.6:6)

"தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். "
(அரு.6:6)

பைபிளில் இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும் போதும், அவற்றைத் தியானிக்கும் போதும்

நமது மனதில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மறை உண்மை

அவர் முழுமையாகக் கடவுள்,

முழுமையாக மனிதன்.

Jesus is fully God and fully Man.

பரிசுத்த தம திரித்துவம் - ஒரு கடவுள், மூன்று ஆட்கள்.

இயேசு - ஒரு ஆள் (தேவ ஆள்), இரண்டு சுபாவங்கள். (தேவ சுபாவம், மனித சுபாவம்.) 

இறை மகனும், மனு மகனும் ஒரே ஆள்தான்.

தேவ ஆள்தான் மரியாளின் வயிற்றில் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே தான் மரியாளைத் தேவமாதா என்கிறோம்.

இறைமகன் மனுமகனாகப் பிறந்த பின்பு தான் அவருக்கு இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டது.

இப்போது எதற்கு இந்த விபரம்?

இந்த விபரம் ஞாபகத்தில் இருந்தால்தான் இயேசுவின் செயல்கள் முழுமையாகப் புரியும்.

நாம் ஒரு செயலைத் திட்டம் தீட்டும் போதுதான் அதைப் பற்றி நமக்குத் தெரியும்.

இயேசு நித்தியர்.

ஆகவே அவரது திட்டங்களும் நித்தியமானவை.

எப்படி மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது அவரது நித்திய காலத் திட்டமோ

அப்படியே ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.

அதனால்தான் 

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டபோது,

"தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் 

அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். "

என்று நற்செய்தியாளர் கூறுகிறார்.

இதைத் தெரிந்து நமக்கு என்ன பயன்?

அன்று இயேசு எப்படி செயலாற்றிக் கொண்டிருந்தாரோ அப்படியே நம் மத்தியிலும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய ஒவ்வொரு அசைவும், ஆசையும், தேவையும் நம்முடனே இருக்கும் இயேசுவுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமது செபத்தின் போது நாம் அவரிடம் என்ன கேட்கப் போகிறோம் என்பது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

ஆகவே தான் "கேளுங்கள், கொடுக்கப்படும்" என்கிறார்.

உணவு தயாரான பின்புதான் அம்மா, "வாருங்கள், சாப்பிடுங்கள்" என்று கூறுவார்கள்.

இயேசுவும் நமக்கு வேண்டியதைத் தயாராக வைத்துக் கொண்டு தான்,

"கேளுங்கள், கொடுக்கப்படும்" என்கிறார்.

ஆனால் நமது செபம் முழுவதையும் வேண்டியதைக் கேட்பதற்கே செலவழிக்கக் கூடாது.

நமது நண்பர் ஒருவர் நமது வீட்டுக்கு வந்திருக்கிறார்.

ஏதோ ஒரு உதவி கேட்க வந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

வந்தவுடனே, "எனக்கு ஐயாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது, உடனே தாருங்கள்" என்று சொல்லமாட்டார்.

முதலில் நலம் விசாரித்து விட்டு, குடும்ப விசயங்களைப் பற்றி பேசி விட்டு, ஊர் உலகத்தைப் பேசி விட்டு கடைசியில் தான் வந்த காரணத்தைச் சொல்வார்.

அதுதான் உறவு.

நாம் செபம் செய்யும் போது இரண்டு விசயங்களை மறந்து விடுகிறோம்.

1. நாம் கேட்கப் போவது என்னவென்று கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

2. கடவுள் நம்மைப் படைத்தவர்,
ஆகவே அவர் நமக்குத் தேவையானதைக் கட்டாயம் தருவார்.

நாம் படைக்கப்பட்டவர்கள். நாம் படைத்தவருக்குக் கொடுக்க வேண்டியவைகளும் இருக்கின்றன.

1. நாம் ஒரு கார் வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.

அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு தான் வாங்குவோம்.

எப்போது பெட்ரோல் வேண்டுமென்று கார் கேட்காது, நாம்தான் தெரிந்து பெட்ரோல் போடுவோம்.

மனிதர்களாகிய நமக்கே நமது உடமைப் பொருட்களை எப்படிப் பேண வேண்டும் என்று தெரிந்திருக்கும் போது 

நம்மை எப்படிப் பேண வேண்டும் என்று நம்மைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா?
தெரிந்தும் ஏன், "கேளுங்கள்." என்று சொன்னார்.

நம்மை அவரோடு பேச வைப்பதற்காகத்தான்.

நாம் அவரைச் சார்ந்தவர்கள் என்று நம்மை உணர வைப்பதற்காகத்தான்.

அவர் நித்திய காலத்திலிருந்தே நம்மை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் அவரை நினைக்கா விட்டாலும் நம்மைப் பராமரித்துக் கொண்டுதானிருப்பார்.

அதனால் தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் எதற்காகப் படைக்கப் பட்டோமோ அதை அடைய வேண்டுமென்றால் அவரோடு உறவோடு இருக்க வேண்டும்.

நாம் இவ்வுலகில் கடவுளுக்காக ஆன்மீக வாழ்வு வாழ்ந்து இவ்வுலக வாழ்வுக்குப் பின் அவரோடு நித்திய காலம் மோட்சத்தில் வாழ்வதற்காகவே நம்மைப் படைத்தார்.

மறுவுலகில் அவரோடு நித்திய காலம் வாழ வேண்டும் என்றால் அவரோடு உறவோடு இருக்க வேண்டும்.

ஒருவரோடொருவர் பேசாமல் எப்படி உறவு வளரும்?

நாம் அவரோடு பேசுவதற்காக தான் நம்மை "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னார்.

கடவுளோடு பேசும்போது நாம் அவரை நேசிப்பதாக அவரிடம் கூற வேண்டும்.

"இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்."

"Jesus, I love you."

நமது இருதயத்திலிருந்து வரும் இந்த சிறிய செபம் இயேசுவின் இருதயத்துக்கு மிகப் பிடித்தமான செபம்.

"என்னைப் படைத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே, உமக்கு எனது மனமார்ந்த நன்றி."

"பாவத்திலிருந்து என்னை மீட்பதற்காக விலை மதிப்பற்ற உமது உயிரையே பலியாக ஈந்த அன்பு இயேசுவே,

என் மீது இரங்கி உமது மரணத்திற்குக் காரணமான எனது பாவங்களை மன்னியும்."

நமது அன்பைத் தெரிவிக்கவும்,
 நன்றியைத் தெரிவிக்கவும்,
பாவ மன்னிப்புக் கேட்கவும்

சிறு சிறு செபங்களை எவ்வளவு நேரம் சொன்னாலும் இயேசு மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டிருப்பார்.

சொல்லச் சொல்ல விண்ணகத்தில் நமது பேரின்பத்தின் அளவு கூடிக் கொண்டேயிருக்கும்.

" நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்."
(மத்தேயு.6:8)

"எனக்கு வேண்டியதைத் தாரும் ஆண்டவரே" என்று மட்டும் சொன்னால் போதும்.

நமது தேவைகளைச் சொல்லாவிட்டாலும்  அவர் பூர்த்தி செய்வார்.

2. நாம் படைக்கப்பட்டவர்கள். நாம் படைத்தவருக்குக் கொடுக்க வேண்டியவைகளும் இருக்கின்றன.

படைத்தவர் சர்வ வல்லவர்.
சர்வத்துக்கும் உரிமை உள்ளவர்.
அவருக்கு என்ன தேவை?

அவரால் படைக்கப் பட்டவர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் அவருக்குத் தேவை.

ஆகவே அவரால் படைக்கப் பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம்.

நமது ஆன்மா அவருக்குத் தேவை.

அதைப் பாவமின்றி காப்பாற்றி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமை.

அதேபோல் அவரால் படைக்கப்பட்ட நமது பிறரும் மீட்புப் பெற உதவ வேண்டியதும் நமது கடமை.

அவர்களின் உலகைச் சார்ந்த உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவ வேண்டியதும் நமது கடமை.

நமது பிறனுக்கு உணவு கொடுக்கும்போது நாம் இயேசுவுக்கே கொடுக்கிறோம்.

நமது பிறனுக்கு உடை கொடுக்கும்போது நாம் இயேசுவுக்கே கொடுக்கிறோம்.

நமது பிறரை வாழ்த்தும் போது இயேசுவையே வாழ்த்துகிறோம்.

நமது பிறனுக்கு என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கே செய்கிறோம்.

பிறனுக்குத் தீங்கு செய்தால் இயேசுவுக்கே தீங்கு செய்கிறோம்.

நமது பிறனுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் நமக்கு விண்ணகத்தில் சன்மானம் கிடைக்கும்.

' இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''
(மத்தேயு.10:42)

ஆக எல்லாம் இயேசுவுக்குத் தெரியும்.

பள்ளிக்கூடத்தில் மாணவன் படிப்பில் வெற்றி பெறுவான் என்று தெரிந்திருந்தாலும் ஆசிரியர் அவனுக்குத் தேர்வு வைத்து மதிப்பெண் கொடுப்பது போல

நமது விசுவாசம் உறுதியானது என்று தெரிந்திருந்தாலும் கடவுள் யோபுவைச் சோதித்தது போல நம்மையும் சோதிக்கலாம்.

அதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment