Thursday, July 25, 2024

''மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன."(மத்தேயு.13:7)

"மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன."
(மத்தேயு.13:7)

விதை, இறைவாக்கு.

விதைப்பவர், நற்செய்தியை அறிவிப்பவர்.

நிலம், நற்செய்தியைக் கேட்பவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி.

பைபிள் வாசகங்கள், அடுத்து குருவானவருடைய பிரசங்கம்.

வாசகங்களில் இறைவாக்கு வாசிக்கப்படுகிறது,

பிரசங்கத்தில் வாசிக்கப்பட்ட இறைவாக்கு விளக்கப்படுகிறது.

வாசகத்தையும், பிரசங்கத்தையும் கேட்பவர்கள் கோவிலுக்குள் உள்ள இறைமக்கள்.

இறை வாக்கு விதையானால் இறைமக்கள் நிலம்.

எப்படி எல்லா நிலங்களும் ஒரே மாதிரி இல்லையோ அப்படியே எல்லா மக்களும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்.

இறைவாக்காகிய விதை விழுவது மக்களின் உள்ளத்தில்.

சிலரது உள்ளம் மக்கள் நடமாடும் வழிநிலம் போன்றிருக்கும்.

சிலரது உள்ளம் பாறை போல் கடினமானதாக இருக்கும்.

சிலரது உள்ளம் முட்செடிகள் போன்ற தேவையற்ற எண்ணங்களால் நிறைந்திருக்கும்.

சிலரது உள்ளம் நல்ல நிலம் போல இருக்கும்.

இன்றைய தியானத்தின் தலைப்பு

"மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன."

காடுகள், பாலைவனங்கள், முட்செடிகள் நிறைந்த இடங்கள்,
கடலோரப் பகுதிகள் ஆகியவை இயற்கை தந்த நிலவகைகள்.

"அவர் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; 

உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். 

 முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்.

 வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய். 

நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார். 
(தொடக்கநூல் 3:17-19)

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக நிலம் சபிக்கப்பட்டது.

விளைவு, மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து

முட்செடியையும் முட்புதரையும்  அகற்றி,  நிலத்தைப் பண்படுத்தி 

அதை வயல் வெளியாக மாற்றி பயிர்செய்து உண்ண வேண்டும்.

இது பாவத்தின் உலகியல் விளைவு.

ஆன்மீகத்தில் மனிதன் செய்த பாவம் மனித மனதைக் கெடுத்து விட்டது.

காயீன் செய்த கொலை இதன் விளைவுதான்.

முதல் பெற்றோரின் பாவம் மனித மனதில் பாவ எண்ணங்களாகிய முட்புதர்களை முளைக்க வைத்தது.

இம் முட்புதர் எண்ணங்களை அப்புறப்படுத்தி மனதைப் பண்படுத்தினால்தான்

அங்கு விழும் இறைவாக்காகிய விதை முளைத்துப் பலன் தரும்.

இல்லாவிட்டால் முளைத்த விதையைப் பாவ எண்ணங்கள் அமுக்கி விடும்.

மனித மனதைப் பக்குவப் படுத்தி இறைவாக்கை விதைக்கவே இறைவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.

மனிதன் மனமாறுவதற்காக இறைமகனே மனிதனாகப் பிறந்தார்.

நம் நிலைக்கு வருவோம்.

திருப்பலியின்போது வாசிக்கப் பட்டு, விளக்கப்படும் இறைவாக்கு நமது மனதில் முளைத்து ஒன்றுக்கு நூறாகப் பலன் தர வேண்டுமென்றால்

பாவங்களும், பாவ எண்ணங்களும் இல்லாத தூய மனதோடு திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

பாவ எண்ணங்கள் மட்டுமல்ல திருப்பலிக்கு சம்பந்தம் இல்லாத சாதாரண எண்ணங்கள் கூட மனதில் இருக்கக் கூடாது.

திருப்பலிக்குப் போகும் போதே

"பூசை எத்தனை மணிக்கு முடியும், கசாப்புக் கடையில் கறி இருக்குமா, பிரியாணி வைப்போமா, கறிக் குளம்பு வைப்போமா போன்ற எண்ணங்களால் மனதை நிறைத்துக் கொண்டு போனால்

இறை வாக்கும் அதன் விளக்கமும் எங்கே விழும்?

மனதில் தான் இடமில்லையே.

அப்படியே விழுந்தாலும் மற்ற எண்ணங்கள் அதை அமுக்கி விடும்.

கறிக் கடையையே நினைத்துக் கொண்டு பிரசங்கம் கேட்டால் குருவானவர் பிரசங்கத்தைக் கொஞ்சம் நீட்டி விட்டால் அவர் மேலேயே எரிச்சல் வரும்.

அந்த எரிச்சலில் அவர் வார்த்தைகள் எரிந்து விடும்.

ஆகவே திருப்பலிக்குச் செல்லும் போது தூய உள்ளத்தோடு போவோம்.

கோவிலில் மட்டுமல்ல, வீட்டில் வைத்து பைபிள் வாசிக்கும் போதும் தூய்மையான உள்ளத்தோடு வாசிப்போம்.

தூய்மையான உள்ளத்தோடு இறைவாக்கை வாசித்தால் தான் அது ஒன்றுக்கு நூறாகப் பலன் தரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment