Friday, July 12, 2024

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."(மத்தேயு.10:16)(தொடர்ச்சி)

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."
(மத்தேயு.10:16)

(தொடர்ச்சி)

 பாம்பின் குணங்கள்.

பாம்பு தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடைமுறைகளை மாற்றிக் கொள்ளும்.

காடுகளில் வாழ நேர்ந்தால் புதர்களுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

திறந்த வெளியில் வாழ நேர்ந்தால் கரையான் புற்றில் அல்லது கல்களுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும்.

ஒரு முறை ஒரு பாம்பு ஒரு வீட்டில் உரலுக்கு அடியில் ஒளிந்திருந்தது.

நற்செய்திப் பணிக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்தலுக்கும் (Adaptability) என்ன சம்பந்தம்?

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் போதிக்க வேண்டியது சீடரின் கடமை.

எல்லா இடங்களும் ஒரே மாதிரி இருக்காது.

நாம் எந்தப் பகுதியில் நற்செய்தி அறிவிக்கிறோமோ அங்கு வாழும் மக்களின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நற்செய்தி அறிவிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

அருட்திரு பெஸ்கி அடிகளார் மேல் நாட்டிலிருந்து நற்செய்திப் பணி ஆற்ற தமிழ் நாட்டுக்கு வந்தார்.

வந்து முதல் வேலையாகத் தமிழ்க் கற்றார்.

தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ் நாட்டுத் துறவிகளைப் போல் காவி உடை அணிந்தார்.

இந்துக்கள் மத்தியில் காவி உடையில், தூய தமிழில் நற்செய்தியை அறிவித்தார்.

அவருடைய பணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் மொழியில் காவியங்கள் இயற்றி கற்றோர் மத்தியில் நற்செய்தியை அறிவித்தார்.

புனித சூசையப்பரைப் பற்றி அவர் எழுதிய தேம்பாவணி என்னும் இலக்கியம் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆன்மீகச் செல்வமாக விளங்குகிறது.

வளனார் சூசையப்பரின் தமிழ்ப் பெயர்.

நாம் எந்த இடத்தில் நற்செய்தி‌‌ அறிவிக்கிறோமோ அந்த இடத்தில் வாழும் மக்களின் நடை, உடை, பாவனை, உணவுப் பழக்கங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் நாம் அறிவிப்பதை விருப்பத்தோடு கேட்பார்கள்.

இயேசு ஒரு யூதர். சீடர்களும் யூதர்கள். யூத இன வழக்கப்படி விருத்த சேதனம் செய்து கொண்டவர்கள்.

ஆனாலும் புற இன மக்களிடையே நற்செய்தியை அறிவித்தபோது அவர்களிடையே விருத்த சேதனம் இல்லாததால் மனம் திரும்பியவர்களை விருத்த சேதனம் செய்யச் சொல்லவில்லை.

ஆக ஆண்டவர் நம்மை பாம்புகளைப் போல் வாழச் சொல்லவில்லை.

அவற்றைப் போல விவேகம் உள்ளவர்களாக வாழச் சொல்கிறார்.

அதோடு புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் வாழச் சொல்கிறார்.

நற்செய்தி அறிவித்தலின் நோக்கமே மக்களை நல்வழிப் படுத்துவது.

மக்களின் ஆன்மீக நலன் கருதி போதிப்பது தான் நற்செய்தி.

கபடு மற்றவர்களைக் கெடுப்பதற்கான சூழ்ச்சி.

சினிமாக்களில் வில்லன் செயல் படுவது போல ஒருவன் வாழ்க்கையில் செயல் பட்டால் அவன் கபடுடன் பழகுகிறான்.

நாம் மற்றவர்களுடன் கள்ளங்கபடு இன்றி திறந்த மனதுடன் பழக வேண்டும்.

மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் நோக்கத்தோடு பழகக்கூடாது.

தீங்கு செய்வது சாத்தானின் வேலை.

சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற்று இறையன்பில் வளர்வதுதான் நற்செய்தி அறிவித்தலின் நோக்கம்.

ஆகவே நற்செய்தி அறிவிப்பவர்களும், அதன்படி வாழ்பவர்களும் கள்ளங்கபடின்றி மற்றவர்களோடு பழக வேண்டும்.

இறைவசனம்

"எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.''

என்று கூறுகிறது.

எனவே...

எதற்காக?

"ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே...."

"நான் உங்களை ஆடுகளை ஓநாய்களிடையே அனுப்புவது போல அனுப்புவதால்,

விவேகமாகவும் கபடில்லாமலும் இருங்கள்."

இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

ஆடுகள் சாதுவானவை. யாருக்கும் தீங்கு நினைக்காதவை.

ஒநாய்கள் ஆடுகளைக் கடித்துச் சாப்பிடக் கூடியவை.

உண்மையில் ஆண்டவர் நற்செய்தியாளர்களை அனுப்புவதன் நோக்கம் ஓநாய் போன்ற குணம் உடையவர்களை ஆடுகள் போன்ற குணம் உள்ளவர்களாக மாற்றுவதற்காகத்தான்.

ஆதித் திருச்சபையில் சீடர்கள் ரோமை மன்னர்களால் கொல்லப்பட்டனர்.

சீடர்கள் ஆடுகள், மன்னர்கள் ஓநாய்கள். 

ஓநாய்கள் ஆடுகளைக் கொன்று விட்டன.

ஆனாலும் ஆடுகள் அனுப்பப் பட்டது கொல்லப் படுவதற்காக அல்ல.

ஓநாய்களை மனம் திருப்புவதற்காக.

நல்லவர்கள் கெட்டவர்களை மனம் திருப்ப வேண்டுமென்றால் அவர்கள் நல்லவர்களாக முன்மாதிரிகையான வாழ வேண்டும்.

அதையும் மீறி ஓநாய்கள் ஓநாய்களாகவே வாழ்ந்தால் அது அவற்றின் பாடு.

ஆண்டவர் மனித உரு எடுத்து உலகிற்கு வந்தது  கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றுவதற்காக தான்.

இயேசு உலகத்தின் பாவங்களைப் போக்க வந்த ஆட்டுக்குட்டி.

அந்த ஆட்டுக்குட்டியை ஓநாய்களாகிய பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கடித்து குதறிக் கொன்று விட்டார்கள்.

நம்மை சுற்றி உள்ளவர்களை மனம் திருப்பும் நோக்கத்தோடு நாம் ஆடுகளைப் போல நல்லவர்களாக வாழ்வோம்.

நமக்கும் இயேசுவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படலாம்.

ஏற்பட்டால் ஏற்றுக் கொள்வோம்.

ஆனாலும் நம்மைப் பார்த்து அவர்கள் மனம் திரும்ப உழைப்போம்.

அவர்கள் மனம் திரும்பும்படி வேண்டிக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment