(மத்தேயு.9:38)
இயேசு தனது நற்செய்தி அறிவிப்பை யூத மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த யூதேயா, கலிலேயா நாடுகளில் தான் ஆரம்பித்தார்.
ஆனால் அவர் உலகுக்கு வந்தது நற்செய்தியை அறிவிப்பதற்காக மட்டுமல்ல.
பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்து மனுக்குலம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, மனிதர்களுக்கு பாவ மன்னிப்பு அளிப்பது தான் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம்.
நற்செய்தி அறிவித்தல் அதற்கான தயாரிப்பு தான்.
பாவப் பரிகாரமும் பாவ மன்னிப்பும் யூத மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலக மக்களுக்கும்.
ஆகவே பாவமன்னிப்புக்குத் தயாரிப்பான நற்செய்தி அறிவிப்பும் அனைத்து உலக மக்களையும் சென்றடைய வேண்டும்.
அப்படிக் கொண்டு செல்வதற்காகத் தான் பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.
பன்னிருவரும் அப்போஸ்தலர்கள்.
அவர்கள் போக இன்னும் அநேக சீடர்களும் இருந்தார்கள்.
அவர்களிலிருந்துதான் 72 பேரை நற்செய்தி அறிவிக்க அனுப்பினார்.
நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய உலகப் பரப்போடு சீடர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் சீடர்களின் எண்ணிக்கை போதாது.
ஆகவே தான் அவர் தம் சீடரை நோக்கி,
"அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்று கூறினார்.
நற்செய்தி அறிவித்தல் மூலம் மனம் திருப்பப்பட வேண்டிய மக்களைத் தான் ஆண்டவர் அறுவடை என்று குறிப்பிடுகிறார்.
உலக மக்கள் அனைவரும் நற்செய்தி அறிவித்தல் மூலம் மனம் திருப்பப்பட வேண்டும்.
அறுவடையின் உரிமையாளர் கடவுள்.
ஆக இயேசுதான் அறுவடையின் உரிமையாளர்.
தன்னைத் தந்தை அனுப்பியதாகத் தான் இயேசு கூறுவது வழக்கம்.
" தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."
(அரு. 3:16)
ஆனாலும் தந்தையும் மகனும் ஒரே கடவுள் தானே.
இப்போது ஒரு கேள்வி எழும்.
யாரும் கேட்டு தந்தை மகனை உலகிற்கு அனுப்பவில்லை.
யாரும் சொல்லி இயேசு பன்னிருவரையும், 72 பேரையும் இயேசு தேர்வு செய்யவில்லை.
இன்னும் அதிகமானோரை அவரால் தேர்வு செய்ய முடியும்.
ஏன் சீடர்களை நோக்கி,
"தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்று சொல்கிறார்?
இயேசுவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.
அவரது வாயிலிருந்து அனாவசியமான வார்த்தைகள் வெளிவராது.
திருச் சட்டத்தைப் பற்றி குறிப்பிடும் போது.
"விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். "
(மத்தேயு 5:18) என்கிறார்.
சிற்றெழுத்துக்கும், புள்ளிக்கும் கூட பொருள் இருக்கும்.
இயேசுவின் வார்த்தைகளுக்கும் அப்படித்தான்.
புனித சின்னப்பர் சீடர்களை கடவுளின் உடன் உழைப்பாளர்கள் என்கிறார்.(1 கொரிந்தியர் 3:9)
இயேசு கடவுள். தனது சீடர்கள் தனது உடன் உழைப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இயேசுவுக்கு நற்செய்தி அறிவிப்பில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அவ்வளவு ஆர்வம் சீடர்களுக்கும் இருக்க வேண்டும்.
ஆர்வம் உள்ள ஒரு சீடரைப் பார்த்து இயேசு "நற்செய்தியை அறிவிக்கப் போ." என்று சொன்னால் அவர் எப்படி எதிர்வினையாற்றுவார்?
(How will he react?)
"நான் போகிறேன், ஆண்டவரே.
ஆனால் நற்செய்தி அறிவிக்கப் படவேண்டிய ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்
நான் ஒருவன் பற்றாது. என்னோடு இன்னும் அதிக சீடர்களை அனுப்புங்கள்."
என்று கூறுவார்.
இயேசு நம்மை நற்செய்தி அறிவிக்க அழைத்தால்
நாமும் இப்படித்தான் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
ஆகவே தான்,
"தேவையான வேலையாள்களை அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம்
(என்னிடம்) மன்றாடுங்கள்"
என்கிறார்.
நாமும் இயேசுவின் சீடர்கள்.
நற்செய்தியை வாழ்ந்து அறிவிக்கும் படி அழைக்கப் பட்டிருக்கிறோம்.
இயேசு தனது வாழ்க்கையை நமக்கு நற்செய்தியைத் தந்திருக்கிறார்.
தனது நற்செய்தியை அவரே வாழ்ந்தார்.
அதை நாம் வாழும் போது இயேசுவைப் போல் மாறுகிறோம்.
நற்செய்தி வாழ்வில் இயேசுவோடு ஒன்றித்து நற்செய்தி அறிவிக்கிறோம்.
இயேசுவும் நாமும் இணைந்து நற்செய்தியை அறிவித்தால் அதைக் கேட்போர் நம்மைப் போல இயேசுவோடு இணைந்து வாழ ஆரம்பிப்பர்.
எத்தனை பேர் நற்செய்தியைக் கேட்கிறார்களோ அத்தனை பேரும் இயேசுவோடு இணைந்து நற்செய்தியை வாழ ஆரம்பிப்பர்.
நாம் அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடியதன்
பலன் கிடைக்கும்.
நாம் இயேசுவின் உடன் உழைப்பாளர்களாக செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment