Tuesday, July 23, 2024

"உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்."(மத்தேயு.20:27)

" உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்."
(மத்தேயு.20:27)

இரண்டு எதிர் எதிர் சக்திகளின் இணைப்பு தான் மனிதன்

மனித உடல் மண்ணுக்குரியது,  ஆன்மா விண்ணுக்குரியது.

லௌகீகம் ஆன்மீகத்துக்கு எதிரானது.

ஆனாலும் உடல் படைக்கப்பட்டது  ஆன்மாவுக்காக.

உடல் சார்ந்த வாழ்வு ஆன்மாவுக்காக வாழப் பட வேண்டியது.

ஆன்மாவுக்காக வாழ்பவன் தான் உடலின் மேன்மையைப் பாதுகாக்கிறான்.

உடலுக்காக வாழ்பவன் ஆன்மீகத்தையும் கெடுக்கிறான் உடலின் மேன்மையையும் கெடுக்கிறான்.

உடல் சார்ந்த வாழ்வு தவறானது அல்ல, அது ஆன்மாவுக்காக வாழப்பட்டால்.

ஆண்டவர் இயேசு தனது பாடுகளின் போது தனது உடல் வேதனைகளை நமது ஆன்மாவின் மீட்புக்காக ஒப்புக் கொடுத்தார்.

மனிதர்களின் மீட்புக்காக தான் அவர் மனித உருவெடுத்தார்.

மனித உரு என்றாலே உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான்.

நமது ஆன்மாவின் மீட்புக்காக தனது உடலைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆனால் ஆன்மாவை மறந்த உடல் சார்ந்த வாழ்வு தவறானது.

முதன்மை, கடைசி எதிர் எதிர் வார்த்தைகள்.

முதலாளி, பணியாள் எதிர் எதிர் அந்தஸ்துகள்.

மனிதன் இயல்பாக முதன்மைக்கு ஆசைப்படுபவன்.

ஆண்டவர் சொல்லுகிறார்,

"முதன்மையானவனாக இருக்க ஆசைப்படுகிறாயா? பணியாளனாக இரு.

உலகியலில் முதலாளியாக இருப்பவன் முதன்மையானவன்.

ஆன்மீகத்தில் பணியாளனாக இருப்பவனே முதன்மையானவன்.

அன்னை மரியாள் மிகச் சிறந்த ஆன்மீகவாதி.

மண்ணுலகில் அடிமையாக வாழ்ந்தாள்.  விண்ணுலகில் அரசியாக வாழ்கிறாள்.

அவள் அரசி ஆவதற்காக அடிமையாக வாழவில்லை,

அடிமையாக வாழ்ந்ததால் அரசியானாள்.

அவள் விரும்பியது அடிமை வாழ்வு, ஆண்டவர் கொடுத்தது அரசி வாழ்வு.

மண்ணுலகில் கடைசியானவர்கள் 
விண்ணுலகில் முதன்மையானவர்கள்.

"இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார்."
(மத்தேயு.20:16)

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. 

ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு.11:11)

செபதேயுவின் மக்களாகிய அருளப்பரும், வியாகப்பரும் இயேசுவின் அரசில் முதன்மை இடத்தை விரும்பினார்கள்.

அவர்களைப் பார்த்து இயேசு 

"உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்."
(மத்தேயு.20:27)
என்று கூறினார்.

பணியாளராக இருப்பதுதான் முதன்மைப் பதவி.


"இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்."
(மத்தேயு நற்செய்தி 20:28)

இறைமகன் இயேசு உலகை ஆள்பவர், ஆனால் அவர் தொண்டு புரிவதற்காக மனிதனாகப் பிறந்தார்.
 
30 ஆண்டுகள் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

தேவசுபாவத்தில் எங்கும் வாழ்பவர்,

மனித சுபாவத்தில் பொது  வாழ்வுக்கு வருவதற்கு முன் நசரேத் ஊரில்தான் வாழ்ந்தார்.

33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்த கடவுளாகிய இயேசு 30 ஆண்டுகள் தன்னால் படைக்கப்பட்ட மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொது வாழ்வின் போது தாழ்ச்சியைப் பற்றி போதித்த இயேசு 30 ஆண்டுகள் தாழ்ச்சியை வாழ்ந்தார்.

அவரது சாதனையைத்தான் போதனையாக்கினார்.

பொது வாழ்வின் போது ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேர் சாப்பிடும் அளவிற்கு புதுமையால் பலுகச் செய்த இயேசு 

திருக் குடும்பத்தில் உணவுக்காகத் தச்சு வேலை செய்தார்.

"உண்டாகுக" என்று ஒரு வார்த்தையால் உலகை படைத்தவர் 

வாழ்க்கைக்கு வேண்டியவற்றை உழைத்துச் சம்பாதித்தார்.

உலகைப் படைத்த கடவுள் தான் படைத்த உலகில் ஏழையாக வாழ்ந்தார்.

ஆண்டவர் பணி செய்தார்.

':உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்."
(மத்தேயு.20:26)

என்ற அவருடைய போதனை உண்மையிலேயே அவருடைய வாழ்க்கை.

அவரது நற்செய்தியை அவரே வாழ்ந்தார்.

நாம் அவருடைய சீடர்கள்.

நாமும் நற்செய்தியை வாழ்ந்து போதிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment