Monday, July 15, 2024

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்தேயு.12:)

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" 
(மத்தேயு.12:7)

பசி,  சாப்பாடு.
தாகம், குடி.
இரக்கம், பலி.


பசி.          _ உணர்வு.
சாப்பாடு _ செயல்.
முந்தியது, காரணம்
பிந்தியது,  காரியம்.

தாகம்_.    உணர்வு.
குடி_.          செயல்‌.
முந்தியது, காரணம்
பிந்தியது,  காரியம்.

இரக்கம் _.    உணர்வு.
பலி_             செயல்.
முந்தியது, காரணம்
பிந்தியது,  காரியம்.

உணர்வும், செயலும் காரண காரியத் தொடர்பு உடையவை.

காரணம் இன்றி காரியமில்லை.

இரக்கம் இன்றி பலி இல்லை.

இயேசுவுக்கு நம்மீது இரக்கம் இருந்தது,

விளைவு,

தன்னையே நமக்காகச் சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

இறைவன் அவரது படைப்புகளின் மீது அளவுகடந்த அன்பும், இரக்கமும் உள்ளவர்.

அன்பின் விளைவாக நம்மைப் படைத்தார்.

இரக்கத்தின் விளைவாக

பாவிகளாகிய நமக்காக மனிதனாகப் பிறந்து,
பாடுகள் பட்டு,
சிலுவையில் அறையப்பட்டு, தன்னையே நமக்காகப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

தந்தையின் விருப்பத்திற்கு இணங்கவே மனுவுரு எடுத்ததாக இயேசுவே சொல்கிறார்.

அப்படியானால் இயேசு மனிதர்களுக்காக பலியாக வேண்டுமென்பது தந்தையின் விருப்பம் தானே.

அப்படியிருக்க 

இயேசு ஏன்,  "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று சொல்கிறார்.

தியானிப்போம்.

மகனின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்யும் தந்தை

முதலில் பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்பாரா?

பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டு என்று சொல்வாரா?

விருப்பம் இன்றி திருமணம் இல்லை.

இறைவன் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

துவக்கமில்லாத காலத்திலிருந்தே 

அவரது எண்ணத்தில் இருந்த மனிதன் மீது இரங்கினார்.

துவங்கிய காலத்தில் எண்ணத்தில் இருந்த மனுக்குலத்தைப் படைத்தார்.

நித்திய காலமாக அவரிடம் இருந்த இரக்கம் அவரை மனிதனாகப் பிறக்கச் செய்தது.

தன்னை நேசிப்பது போல கடவுள் நம்மை நேசிக்கிறார்.

அவர் நம்மை நேசிப்பது போல நாமும் அவரை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவர் நம்மோடு அவரது பண்புகளைப் பகிர்ந்து,

நம்மை அவர் சாயலில் படைத்தார்.

ஆனால் நாம் நமது பாவத்தின் விளைவாக அவரது சாயலை இழந்தோம்.

இழந்த சாயலை மீட்டுத்தரவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

பாவத்தால் நாம் இழந்த அன்பையும் இரக்கத்தையும் நாம் மீண்டும் பெற வேண்டும்.

பாவ நிலையில் இறையன்பு நம்மிடம் இருக்க முடியாது.

உண்மையான பிறரரன்பும் இருக்க முடியாது.

உண்மையான அன்பும், இரக்கமும் நம்மிடம் இருந்தால் இயேசுவைப் போல் நம்மால் வாழ முடியும்,

நம்மையே இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க முடியும்.

ஆகவே தான் நாம் இரக்கம் உள்ளவர்களாக மாற வேண்டும்.

உண்மையான இரக்கம் பாவமற்ற நிலையில் தான் இருக்கும்.

ஆகவே முதலில் மனம் திரும்பி, பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நாம் இழந்த உண்மையான அன்பும் இரக்கமும் திரும்பி வந்துவிடும்.

நாம் இறைவனுக்காக பலி வாழ்வு வாழ ஏற்றவர்களாக மாறிவிடுவோம்.

இப்போது புரிகிறது,

காரணம் இன்றி  காரியம் இல்லை.

இரக்கம் இன்றி பலிவாழ்வு இல்லை.

ஆகவே தான் நாம் முதலில் இரக்கப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நாம் பாவிகள். கடவுள் நம்மீது இரக்கமாக இருக்கிறார்.

நாமே பாவிகளாய் இருக்கும் போது நாம் யார் மேல் இரங்க வேண்டும்?

Charity begins at home, 

என்று ஒரு ஆங்கிலப் பழமொழி இருக்கிறது.

பாவிகளாகிய நம் மீது முதலில் இரக்கப்பட வேண்டும்.

நம் ஆன்மாவை நாம் உண்மையான அன்போடு உற்று நோக்கினால் நம்மீது இரக்கம் தானாகவே வந்து விடும்.

நம் ஆன்மா மீது உள்ள பாவ அழுக்கு நம்மீது இரக்கத்தையும், பாவ மனஸ்தாபத்தையும் ஏற்படுத்தும்.

மனஸ்தாபம் மன்னிப்புக்கு இட்டுச் செல்லும்.

நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்ற நாம்,  

"உன்னைப் உன் அயலானையும் நேசி" என்ற இறைக் கட்டளைக்கு இணங்க,

நம்மைச் சுற்றி மனம் திரும்பாமல் வாழும் நம் பிறரும் நம்மைப் போல் மனம் திரும்ப வேண்டும் என்ற ஆசை இயல்பாக வந்துவிடும்.

அவர்களுக்காக இரங்கி அவர்கள் மனம் திரும்ப இறைவனை நோக்கி வேண்டுவதோடு

மனம் திருப்பும் நோக்கத்தோடு அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

அது நமது கடமை.

நாம் மனம் திரும்ப வேண்டும், 
மற்றவர்களையும் மனம் திருப்ப வேண்டும்.

ஒரு ஓய்வு நாளில் இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தபோது,

 பசியாயிருந்த அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பரிசேயர்கள் 

 இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்" என்று கூறினார்கள். 

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் 

குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்."

என்று கூறினார்.

மற்றவர்கள் கஷ்டப்படும்போது சட்டம் பேசாமல் அவர்கள்மீது இரக்கம் படுவோம்.


"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்."
(மத்தேயு.5:7)

லூர்து செல்வம்.

1 comment: