அபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கிறோம்.
மனித புத்தியினால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை கடவுளின் வார்த்தையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம்.
அவருக்கு வயது எழுபத்தைந்து நடக்கும் போது ஆபிராம் கடவுளிடம்,
"என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்?
எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்" என்றார்.
கடவுள் மறுமொழியாக, "இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான்.
ஆனால் உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்" என்று வாக்குக் கொடுத்தார்.
ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார்.
கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
ஆபிரகாம் தமக்குப் பிறந்த,
சாரா தமக்குப் பெற்றுக் கொடுத்த, மகனுக்கு "ஈசாக்கு" என்று பெயரிட்டார்.
ஈசாக்கின் மூலமே அவரது வழிமரபு விளங்கும் என்று கடவுள் உறுதியளித்தார்.
பிறந்த குழந்தை வளர்ந்து பையன் ஆனான்.
ஒரு நாள் ஆண்டவர் அபிரகாமை நோக்கி,
"உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல்.
அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார்.
இந்த ஒரு சூழ்நிலையில் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.
எந்த மகனின் வழியாக வானத்து விண்மீன்களின் அளவுக்கு எதிர்கால சந்ததியர் இருப்பார்கள் என்று வாக்கு கொடுத்தாரோ
அந்த மகன் இறந்து விட்டால் எப்படி எதிர்கால சந்ததியினர் எப்படித் தோன்றுவர்? என்ற கேள்வி மனதில் எழும்.
கடவுள் கொடுத்த வாக்குறுதி பொய் என்று மனதில் தோன்றும்.
ஆனால் ஆனால் ஆபிரகாமின் மனதில் எந்த சலனமும் ஏற்படவில்லை.
ஆண்டவர் கேட்டுக் கொண்டபடியே பலி கொடுப்பதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்.
மகனைக் கொன்று விட்டால் எதிர் காலச் சந்ததி எப்படித் தோன்றும் என்ற கேள்வியே மனதில் எழுந்ததாகத் தெரியவில்லை.
ஈசாக்கின் மூலமே அவரது வழிமரபு விளங்கும் என்று கடவுள் சொன்னார்.
அபிரகாம் நம்பினார்.
ஈசாக்கைப் பலியிடு என்று அதே கடவுள் கூறினார்.
உடனே கீழ்ப்படிந்தார்.
ஈசாக்கின் மூலமே அவரது வழிமரபு என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது.
இது ஒரு பரிசோதனை (test) என்று கடவுளுக்குத் தெரியும்.
அபிரகாமுக்குத் தெரியாது.
அவருக்குக் கடவுள்தான் எல்லாம்.
அவர் என்ன சொன்னாலும் அதன்படி செயல்பட வேண்டும் என்பது நமது கடமை.
Total surrender to the will of God.
ஒன்று உறுதி.
கடவுள் வாக்குக் கொடுத்தபடி ஈசாக்கு மூலம் தனது சந்ததி பெருகும் என்பதை உறுதியாக நம்பினார்.
எப்படி?
எப்படி என்ற கவலை நமக்கு எதற்கு?
கடவுள் எல்லாம் வல்லவர்.
அவர் கொடுத்த வாக்கின்படி ஈசாக் மூலம் அவருடைய சந்ததியைப் பெருகச் செய்வார்.
இங்கு திருமுழுக்கு அருளப்பருடைய வார்த்தைகள் நினைவு கூறத்தக்கவை.
"ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம்.
இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.
(மத்தேயு.3:9)
நமது புத்திக்கு எட்டுகிறதோ இல்லையோ, கடவுளால் எல்லாம் முடியும் என்று ஏற்றுக் கொள்வது தான் உண்மையான விசுவாசம்.
இந்த விசுவாசம் அபிரகாமுக்கு இருந்தது.
அதனால்தான் அவர் விசுவாசத்தின் தந்தை.
அவர் விசுவசித்தபடியே ஈசாக்கு மூலமாகத்தான் அவர் சந்ததி பெருகியது.
பலியிடும் நேரத்தில் கடவுள் ஈசாக்கைக் காப்பாற்றி விட்டார்.
ஈசாக்குக்குப் பதில் ஒரு ஆடு பலியிடப் பட்டது.
"நம்புங்கள்.
செபியுங்கள்,
நல்லது நடக்கும்."
நம்பிக்கையோடு செபித்தால் நல்லது நடக்குமா?
நான் நம்பிக்கையோடு செபித்தேன்.
நான் கேட்டது கிடைக்கவில்லையே!
எதிர்மாறானது அல்லவா கிடைத்தது!
Very good.
நீ கேட்டது உனக்கு நல்லது அல்ல. ஆகவே அது உனக்குக் கிடைக்கவில்லை.
உனக்கு எது நல்லது கடவுளுக்குத் தெரியும்.
அதைத்தான் தருவார்.
அந்தப் பாடலை எப்படிப் புரிந்து கொள்வது?
"நம்புங்கள்,
செபியுங்கள்,
எது கிடைத்தாலும் அதுவே உங்களுக்கு நல்லது."
கடவுள் நமக்கு நல்லதை மட்டும் தான் செய்வார் என்று உறுதியாக நம்புவோம்.
செல்வத்தைத் தருகிறாரா, நன்றியோடு ஏற்றுக் கொள்வோம்.
ஏழ்மையைத் தருகிறாரா,
நன்றியோடு ஏற்றுக் கொள்வோம்.
வியாதியைத் தருகிறாரா,
நன்றியோடு ஏற்றுக் கொள்வோம்.
சுகத்தைத் தருகிறாரா,
நன்றியோடு ஏற்றுக் கொள்வோம்.
மரணத்தைத் தருகிறாரா,
நன்றியோடு ஏற்றுக் கொள்வோம்.
உலகில் கடவுளோடு வாழ்ந்தால், மறுவுலகிலும் கடவுளோடு தான் வாழ்வோம்.
மரணத்தால் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்க முடியாது.
விசுவசிப்போம்,
உறுதியாக விசுவசிப்போம்,
என்ன நடந்தாலும் அது நமது நன்மைக்காகவே நடக்கும்.
இயேசு பிறந்தபோது இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை எல்லாம் ஏரோது கொன்று விட்டான்.
குழந்தைகள் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள்!
உலகில் எந்த துன்பத்தையும் அனுபவிக்காமல் மோட்சத்துக்குப் போவது எவ்வளவு பெரிய பாக்கியம்!
விசுவசித்து அதன்படி வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்.
மரணம் வாழ்வின் முடிவல்ல, ஆரம்பம்.
நிலை வாழ்வின் ஆரம்பம்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment