Friday, July 5, 2024

"அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்."(மத்தேயு.9:15)

"அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்."
(மத்தேயு.9:15)


யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, 

"நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்று 
கேட்கிறார்கள். 

அதற்கு இயேசு ஒரு உருவகத்தைப் பயன்படுத்திப் பதில் சொல்கிறார்.

திருமண விழாவின் போது மணமகனின் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

சிரிப்பாரோடு சிரிப்பதும், அழுவாரோடு அழுவதும் முறை.

திருமண விழாவில் மணமகன் மகிழ்ச்சியாக இருப்பார்.

அவருடைய தோழர்களும் அவரைப் போலவே மகிழ்ச்சியாக இருப்பதுதான் முறை.

இயேசு தன்னை மணமகனுக்கும் சீடர்களை தோழர்களுக்கும் ஒப்பிடுகிறார்.

தன்னோடு இருக்கும் வரை சீடர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால் இயேசு அவர்களை விட்டுப் பிரியும் காலம் வரும்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

தனது பாடுகளையும், மரணத்தையுமே பிரியும் காலமாக இயேசு குறிப்பிடுகிறார்.

இந்த வசனத்தை ஆழமாகத் தியானித்தால் மிக முக்கியமான ஒரு இறையியல் தத்துவம் புரியும்.

இயேசு இறைமகன்.

நித்திய காலமாக மகிழ்ச்சியாக இருப்பவர்.

மகிழ்ச்சியே உருவானவர்.

தனது சாயலில் மனிதனைப் படைத்தார்.

மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

 அவனைப் பரிசுத்த நிலையில் படைத்தார்.

தேர்வு செய்வதில் சுதந்திரத்தோடு 
(Freedom of choice) படைத்தார்.

அதுவும் அவருடைய இயல்பு.

ஆனால் மனிதன் தன் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்ததால் தனது ஆன்மீக மகிழ்ச்சியை‌ இழந்தான்.

இழந்த ஆன்மீக மகிழ்ச்சியை‌ அவன் திரும்பப் பெற வேண்டுமென்றால் பாவ மன்னிப்புப்  பெற வேண்டும்.

மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும்.

அதற்காகத் தான் இறைமகன் மனு மகனாகப் பிறந்தார்.

இயேசு தனது பொது வாழ்வின் போது சீடர்களைத் தேர்வு செய்தார்.

தனது சிலுவை மரணத்துக்குப் பின் அதன் ஆன்மீகப் பயனை உலகெங்கும் எடுத்துச் செல்லவே சீடர்கள்.

நோன்பு என்பது பாவப் பரிகாரச் செயல்.

இயேசு செய்த பரிகாரச் செயலை பாவ மன்னிப்புப் பெற ஆசிக்கும் அனைவரும் செய்ய வேண்டும்.

இச்செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லவே சீடர்களும், அவர்களுடைய வாரிசுகளாகிய குருக்களும்.

நமக்குப் புரியும் இறையியல் தத்துவம்,

1. இயேசுவோடு இணைந்து வாழும் மோட்ச வாழ்வில் மகிழ்ச்சி.

2. அதற்காக தயாரிக்கும் இவ்வுலக வாழ்வு நோன்பு, ஒறுத்தல்கள் நிறைந்த தவ வாழ்வு.

மோட்சத்தில் ஆன்ம சரீரத்தோடு வாழும் இயேசுவோடு நாமும் ஆன்ம சரீரத்தோடு நித்திய காலமும் வாழ்வோம்.

உலகில் இயேசுவின் மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது

அவர் ஆன்ம சரீரத்தோடு வாழ்ந்தார்.

சீடர்களுக்கு மூன்று ஆண்டுகள் இரவும், பகலும் இயேசுவோடு வாழும் பாக்கியம் கிடைத்தது.

நமக்கு விண்ணகத்தில் கிடைக்க வேண்டிய பாக்கியம் அவர்களுக்கு உலகிலேயே கிடைத்தது.

அது பேரின்ப வாழ்வாக இல்லாவிட்டாலும்
(பேரின்ப வாழ்வு மோட்சத்தில் மட்டும் தான்)

மகிழ்ச்சிகரமான வாழ்வாக இருந்தது.

''மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?"

என்று இயேசுவே கேட்கிறார்.

இயேசுவுக்குப் பாடுகள் ஆரம்பிக்கும் போது சீடர்களுக்கு நோன்பு வாழ்வு ஆரம்பித்து விட்டது.

இயேசு விண்ணகம் எய்திய பின் மரிக்கும் வரை அவர்களுக்கு வேத சாட்சிக்களுக்கு உரிய சிலுவை வாழ்வுதான்.

அதன்பின் நித்திய பேரின்ப வாழ்வு.

நமக்கு வருவோம்.

நாம் விண்ணகப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம்.

நமது வாழ்வு சிலுவை வாழ்வுதான்.

ஆனால் திவ்ய நற்கருணை நாதர் நமக்குள் வரும்போது அவரோடு இணைக்கிறோம்.

பயபக்தியுடன் இணைந்து செபித்தால் விண்ணக வாழ்வின் முன்ருசியை நாம் அனுபவிக்கலாம்.

(We can have a pretaste of heaven when we are united with Holy Eucharist when we receive Holy Communion)

நமது உலக வாழ்வு நோன்புகள் நிறைந்த பாவப் பரிகார வாழ்வாக இருந்தாலும்

அதிலும் ஒரு விதமான ஆன்மீக மகிழ்ச்சி இருக்கிறது.

ஐந்து காய வரம் பெற்ற புனிதர்கள் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்தார்கள்.

நித்திய பேரின்பத்தில் நம்மோடு வாழப் போகும் இயேசு  இப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.

ஆகவே சிலுவைகள் மத்தியிலும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment