(மத்தேயு.12:10)
ஓய்வு நாளில் இறைப் பணி சார்ந்த செயல்களை மட்டும் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இறைவனுக்காக மட்டுமே வாழ வேண்டும்.
நாம் வாழ்வதற்கு இறைவன் நமக்கு ஆன்மாவையும், உடலையும் தந்திருக்கிறார்.
ஆன்மாவைச் சார்ந்த பணிகள் ஆன்மீகப் பணிகள்.
இறை வழிபாடு, பிறர் அன்புச் செயல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
உடல் சார்ந்த பணிகள் லௌகீகப் பணிகள்.
நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் சார்ந்த பணிகள் இதில் அடங்கும்.
இவற்றை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் போது இவை ஆன்மீகப் பணிகளாக மாறிவிடுகின்றன.
இவற்றுக்காக பணம் ஈட்டுவதற்காக செய்யப் படுவது வேலை.
ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது.
இது இறைவன் கட்டளை.
ஓய்வு நாளில் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டும்,
ஆன்மீகப் பணிகளிலிருந்து அல்ல.
முழுக்க முழுக்க இறைவழிபாடு செய்ய வேண்டும்.
திருப்பலி மட்டுமல்ல, பிறரரன்புப் பணிகளும் இறைவழிபாடு தான், ஏனெனில் நாம் நமது பிறருக்குச் செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்கிறோம்.
ஆனால் பரிசேயர்கள் திருச் சட்டத்திற்குத் தங்கள் விருப்பம் போல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஓய்வு நாளில் வயலில் வேலை செய்யக் கூடாது.
தானியங்களை அறுவடை செய்வது விலக்கப்பட்ட வேலை.
இயேசு வயல் வழியாகத் தனது சீடர்களுடன் சென்று கொண்டிருந்தபோது
சீடர்கள் பசியின் காரணமாகச் சில கதிர்களைக் கொய்து, கையால் கசக்கித் நின்றார்கள்.
பரிசேயர்கள் கதிர்களைக் கொய்ததுக்கு அறுவடை என்றும்,
கையால் கசக்கியதற்கு மில்லில் அரைப்பது என்றும் பொருள் கொடுத்து,
சீடர்கள் ஓய்வு நாள் விதியை மீறியதாகக் குற்றம் சாட்டினார்கள்.
பசி நீங்க சாப்பிடுவதைத் கூட வேலை என்று கூறிய முதல் பெரியவர்கள் பரிசேயர்கள் தான்.
"ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று இயேசுவிடம் கேட்டனர்.
இது சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக அல்ல,
இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்காக.
ஆனால் இயேசு செய்தது பிறரரன்புப் பணி.
அன்பினாலும், இரக்கத்தினாலும் தூண்டப்பட்ட பணி.
இயேசுவைக் கொல்வதற்கு வழி தேடிக் கொண்டிருந்தவர்கள்
அதற்கானக் காரணங்களை உருவாக்க முயன்றார்கள்.
இந்நிகழ்வுகளிலிருந்து நாம் என்ன பாடம் கற்கிறோம்.
நமக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள்.
வேலைக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டு,
முழு நாளையும் இறை வழிபாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
கோவிலுக்கு உள்ளே திருப்பலியும், திருவிருந்தும்.
கோவிலுக்கு வெளியே பிறர் அன்புச் செயல்கள்.
கோவிலுக்கு உள்ளே சென்று முழுத் திருப்பலியிலும் பங்கேற்க வேண்டும்.
திருப்பலி ஆரம்பிக்கும் முன்பே கோவிலுக்குள் வந்து விட வேண்டும்.
நம்முடன் பராக்கு ஏற்படுத்தக் கூடிய Cell phone போன்றவற்றைக் கொண்டு வரக்கூடாது.
நமது கண்ணும் கருத்தும் பீடத்தில் இருக்க வேண்டும்.
கோவில் அலங்காரத்தையும், ஆட்களின் அலங்காரத்தையும் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கக் கூடாது.
குருவோடு சேர்ந்து நாமும் செபிக்க வேண்டும்.
பலியை ஒப்புக் கொடுப்பது குருவானவர் மட்டுமல்ல, நாமும் சேர்ந்துதான்.
ஆண்டவருடைய பொது வாழ்க்கை முழுவதும் கோவிலில் அரங்கேறிக் கொண்டிருக்கும்.
முதலில் நற்செய்தி அறிவித்தல்,
அடுத்து தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தல்.
வாசகங்களையும், பிரசங்கத்தையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.
காதுக்குள் வாங்கியதை கருத்தில் பதிய வைக்க வேண்டும்.
பதிய வைத்ததை நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழ வேண்டும்.
நடுப்பூசையின்போது குருவோடு சேர்ந்து இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பரம பிதாவுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
திருவிருந்தின்போது நற்கருணை நாதரை முழங்காலில் இருந்து நாவில் வாங்க வேண்டும்.
சாவான பாவம் இல்லாத பரிசுத்தமான உள்ளத்தோடு நற்கருணை வாங்க வேண்டும்.
பாவ நிலையில் உள்ளோர் பாவ சங்கீர்த்தனம் செய்தபின்புதான் நற்கருணை வாங்க வேண்டும்.
பாவ நிலையில் நற்கருணை வாங்குவது பாவம்.
நற்கருணை வாங்கியபின் அவரோடு உரையாட வேண்டும்.
நண்பரை நமது அழைத்து விட்டு
அவர் வரும்போது
"வாருங்கள்" என்று கூட சொல்லாமலும்
அவரோடு பேசாமலும் இருந்தால் அவரை அவமானப் படுத்துவதாக இருக்காது?
நமது உள்ளமாகிய இல்லத்துக்கு வரும் இயேசுவோடு பேச வேண்டும்.
அவருக்கு நமது அன்பைத் தெரிவிக்க வேண்டும்.
நமது பிரச்சனைகளை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்.
அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நாள் முழுவதும் அவருடைய பிரசன்னத்தில் வாழ வேண்டும்.
ஓய்வு நாள் கறி எடுத்துச் சாப்பிட்டு விட்டுத் தூங்குவதற்காகத் தரப்படவில்லை.
பிறர் அன்புப் பணி செய்வதற்காகத் தரப்பட்டிருக்கிறது.
ஆதரவற்றோர் வாழும் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு உரையாடுவதோடு
அவர்களுக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.
சுகமில்லாதவர்களைப் பார்க்கச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறலாம்.
ஏழைகளுக்கு உணவு தயாரிக்க வேண்டிய பொருட்களைக் கொடுக்கலாம், உடைகள் வாங்கிக் கொடுக்கலாம்.
நமது பிறருக்கு என்ன கொடுக்கிறோமோ அதை இறைவனுக்குக் கொடுக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை முழுத் திருப்பலியில் கலந்து கொள்வோம்.
பரிசுத்தமான உள்ளத்தோடு நற்கருணை விருந்தில் கலந்து கொள்வோம்.
நம்மால் இயன்ற பிறர் அன்புப் பணிகள் செய்வோம்.
இவற்றை முழுமையாகச் செய்வதுதான் உண்மையான ஞாயிறு வழிபாடு.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment