(திருப்பாடல்கள் 145:9)
எல்லாருக்கும் = அனைவருக்கும்.
நல்லவர், கெட்டவர்,
உயர்ந்தவர், தாழ்ந்தவர்,
வேறுபாடின்றி அவரால் படைக்கப்பட்ட அனைவருக்கும்.
கடவுள் அன்பு மயமானவர்.
இரக்கம் அன்பின் குழந்தை.
மன்னிக்கும் தன்மையும் அன்பின் குழந்தை தான்.
கடவுளுடைய பண்புகளுக்கும்,
நமது பண்புகளுக்கும் இடையில் பார தூர வித்தியாசம் இருக்கிறது.
நாம் பண்பு உள்ளவர்கள், நம்மிடம் பண்பு இருக்கும்.
ஆனால் கடவுள் பண்பு மயமானவர்.
நம்மிடம் எதிர் எதிரான பண்புகள் இருக்கலாம்.
அன்பும் இருக்கும் நபரிடம் வெறுப்பும் இருக்கலாம்.
அதனால் நாம் சிலரிடம் அன்பும், சிலரிடம் வெறுப்பும் காட்டுகிறோம்.
திருமணத்தின் போது மனைவியை நேசிக்கும் சிலர்
திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆனால் கடவுள் அன்பு மயமானவர்,
அன்புதான் கடவுள்.
God is Love.
அவரால் அனைவரையும் அன்பு செய்யத்தான் முடியும்.
யாரையும் வெறுக்க முடியாது.
அவரை நேசிப்பவர்களையும் நேசிக்கிறார், வெறுப்பவர்களையும் நேசிக்கிறார்.
லூசிபரை அவர்தான் படைத்தார்.
லூசிபர் சாத்தானாக மாறிவிட்டான்.
கடவுளால் மாற முடியாது.
லூசிபரை எவ்வளவு நேசித்தாரோ அதே நேசத்தோடு தான் சாத்தானையும் நேசிக்கிறார்.
சாத்தானால் பதிலுக்கு நேசிக்க முடியாது.
மோட்ச நிலையில் உள்ளவர்களை நேசிக்கும் கடவுள்
அதே நேசத்தோடு பேரிடர் நிலையில் உள்ளவர்களையும் நேசிக்கிறார்.
மோட்சவாசிகள் கடவுளை நேசிக்கிறார்கள், பேரிடர் வாசிகளால் நேசிக்க முடியாது.
அப்படியானால் அன்பே உருவான கடவுள் ஏன் கெட்டவர்களைப் பேரிடர் நிலைக்கு அனுப்புகிறார் என்று சிலர் கேட்கிறார்கள்.
கேள்வியே தவறு, கடவுள் யாரையும் பேரிடர் நிலைக்கு அனுப்புவதில்லை.
தனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவ நிலையைத் தேர்ந்தெடுக்கும் மனிதன்
அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி பேரிடர் நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.
கடவுள் மனிதனுடைய சுதந்திரத்தை மதிக்கிறார்.
சுதந்திரம் கடவுளுடைய பண்பு, அதை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நாம் அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அதற்குக் கடவுள் பொறுப்பல்ல.
நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நித்திய பேரின்ப வாழ்வுக்கு நம்மைத் தயாரிப்பது தான் இவ்வுலகில் நமது வேலை.
தனது அளவற்ற அன்பின் மூலமும், இரக்கத்தின் மூலமும் கடவுள் நமக்கு உதவி செய்கிறார்.
பாவத்தில் விழாமல் புண்ணியத்தில் வளர இறையன்பு நமக்கு உதவுகிறது.
நாம் பாவத்தில் விழுந்து விட்டால் அதிலிருந்து வெளியேறவும் அவரது அன்பு உதவுகிறது.
கடவுள் நம்மீது அளவு கடந்த இரக்கம் உள்ளவர்.
அதனால் தான் நாம் பாவம் செய்தாலும் நம் மேலுள்ள நேசம் குறையாமல் நம்மைப் பராமரித்து வருகிறார்.
இறைமகன் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கி
நமது பாவங்களுக்கு அவர் பரிகாரம் செய்தது அவர் நம்மீது கொண்டுள்ள அளவற்ற இரக்கத்தின் காரணமாகத்தான்.
கடவுள் மாறாதவர். நித்திய காலத்திலிருந்தே அவர் நம்மீது அன்பும் இரக்கமும் கொண்டிருக்கிறார்.
நாம் அவருக்கு விரோதமாக எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும், எத்தனை முறைகள் செய்தாலும், எவ்வளவு காலம் செய்தாலும்
நம்மீது அவருக்கு இருக்கும் அன்பும், இரக்கமும் எள்ளளவும் குறையாது.
ஒவ்வொரு வினாடியும் நம்மோடிருந்து நம்மை மனம் திரும்பும்படி தூண்டிக் கொண்டேயிருப்பார்.
யூதாசால் அவரைக் காட்டிக் கொடுத்ததை விட பெரிய பாவம் செய்திருக்க முடியாது.
ஆனால் அவனையும் "நண்பனே" என்றுதான் இயேசு அழைத்தார்.
ஒப்புக்கு அப்படி அழைக்கவில்லை.
உண்மையாகவே அழைத்தார்.
இயேசுவால் நடிக்க முடியாது.
''மாசில்லா இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனே" என்ற மனஸ்தாப உணர்வை அவனுள் தூண்டியது அவர்தான்.
அதனால் தான் அவன் வாங்கிய பணத்தை வாங்கிய இடத்திலேயே வீசி எறிந்து விட்டான்.
ஆனாலும் அவரிடம் திரும்பாமல் நாண்டு கொண்டது அவன் தவறு.
ஆனாலும் இயேசுவின் இரக்கம் அளவில்லாதது.
சிலுவையில் தொங்கியபோது இயேசு தனது மரணத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
மகனின் செபத்தைத் தந்தை கேட்காமலிருப்பாரா?
பாவி மனம் திரும்ப ஒரு வினாடி போதும்.
இரக்கம் நிறைந்த இயேசுவின் செபத்தின் வல்லமையால் யூதாஸ் உயிர் பிரியும் வினாடியில் உத்தம மனஸ்தாபப் பட்டிருப்பான்.
அவன் பாவம் மன்னிக்கப் பட்டிருக்கும்.
இப்போது அதை யூகிக்கும் நாம் விண்ணகம் செல்லும் போது நேரடியாகப் பார்த்து மகிழ்வோம்.
"ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்."
இதைப் பாடிய தாவீது மனம் திரும்பிய பாவி.
பாவிகள் அனைவரும்
இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்போம்.
மனம் திரும்புவோம், மன்னிப்புப் பெறுவோம்.
நித்திய பேரின்ப வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment