Tuesday, July 2, 2024

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மத்தேயு.9:2)

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மத்தேயு.9:2)

இறைமகன் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு.

புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல.

பாவ மன்னிப்பில் தான் மீட்பு அடங்கியிருக்கிறது, உடல் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதில் அல்ல.

அப்படியானால் ஏன் அவர் தனது பொது வாழ்வில் சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து மக்களின் நோய்களைக் குணமாக்கினார்?

ஆன்மீக மீட்புக்கான அடிப்படைகளைப் போடுவதற்காக.

கட்டடம் கட்டுமுன் அதற்கான அடிப்படையைப் போடுகிறோம்.

அடிப்படையின் மேல் தான் கட்டடம் நிற்கும்.

மேல் நோக்கிக் கட்டடம் கட்ட ஏன் கீழ் நோக்கித் தோண்டுகிறோம்?

அடிப்படைக்காக.

மீட்புக்கான ஆன்மீக வாழ்வின் அடிப்படை விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு.

இதற்கும் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்குவதற்கும் என்ன சம்பந்தம்?

நோய்களைக் குணமாக்கும் ஒவ்வொரு முறையும் இயேசு சொன்னார்,

" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

குணமாக்கியவர் இயேசு.

தன்மீது விசுவாசம் உள்ளவர்களைக் குணமாக்குகிறார்.

உண்மையான விசுவாசம் இருக்கும் இடத்தில் தான் நம்பிக்கையும், இறையன்பும் இருக்க முடியும்.

நோய்களைக் குணமாக்கியதன் நோக்கமே இந்த மூன்று புண்ணியங்களையும் மக்களிடையே வளர்ப்பது தான்.

ஒவ்வொரு நோயாளியைக் குணமாக்கும் போதும் அவனுக்குள் இம்மூன்றும் விதைக்கப்படும்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவிலும் இறைவன் அவரது தூண்டுதல் (Inspiration) மூலம் இறைவன் செயல்புரிந்து கொண்டிருக்கிறார்.

முதலில் நமது ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுவார்.

நாம் தூண்டுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் அவரை விசுவசிப்பர்.

பாவம் தவிர மற்ற அனைத்து ஆன்மீக செயல்பாடுகளுக்கும் காரணர் கடவுள் தான்.

ஆக நோயாளிகளின் ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுகிறார்.

அதை ஏற்றுக் கொள்வர்கள் அவரைத் தேடி வருவார்கள்.

முடக்குவாதன் குணமான புதுமையை எடுத்துக் கொள்வோம்.

"சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்.

 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், 

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."

ஆக நோயாளியும், அவனைக் கொண்டு வந்தவர்களும் கடவுளின் விசுவாசத் தூண்டுதலை ஏற்றுக் கொண்டு, விசுவாசத்தோடு அவரைத் தேடி வருகிறார்கள்.

விசுவாசத்தோடு இருந்ததால் அவர் நோயாளியைப் பார்த்து,

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

என்கிறார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தும்.

இயேசு உலகுக்கு வந்தது ஆன்மாவின் நோயைக் குணமாக்க.

ஆகவே தான் நோயாளியைப் பார்த்து,

"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன". என்கிறார்.

அப்படியானால் பாவ மனஸ்தாபத்துக்கான தூண்டுதலையும் நோயாளி ஏற்றுக் கொண்டான் என்று அர்த்தம்

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்."
(மத்தேயு.9:6)

தான் இறைமகன் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக நோயாளியின் பாவங்களை மன்னிக்கிறார்.

தொடர்ந்து அவனைக் குணப்படுத்துகிறார்.

நோயாளிகளின் ஆன்மீக நோய் குணமான பிறகுதான் அவனது உடல் நோய் குணமானது.

ஆக, இயேசு உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கியதின் நோக்கமே ஆன்மீக நோயை குணமாக்குவது தான்.

அவர் செய்த புதுமைகள் மூலம் விசுவாசம் தோன்றியது, வளர்ந்தது, உறுதிப்பட்டது.

நமது வாழ்க்கைக்கு நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

நாமும் நமது உடல் சார்ந்த நோய்கள் குணமாவதற்காக இயேசுவை நாடுகிறோம்.

இயேசு நம்மிடம் சொல்கிறார்,

"முதலில் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து உங்களது ஆன்மீக நோயிலிருந்து விடுதலை பெறுங்கள்.

அதன் பிறகு உடல் சார்ந்த நோய்களிலிருந்து விடுதலை பெற விண்ணப்பியுங்கள்.

நான் உங்களை முழுமையாகக் குணப்படுத்துவேன்."

பாவ நோயிலிருந்து விடுதலை பெறாமல் உடல் சார்ந்த நோயிலிருந்து விடுதலை பெற்று வாழ்வதில் எந்த பயனும் இல்லை.

உடலில் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நாள் உடல் மண்ணுக்குள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆகவே நமது ஆன்மா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே முழுக் கவனத்தையும்  செலுத்துவோம்.

ஆண்டவர் நம்மை இரண்டு வகை நோய்களிலிருந்தும் குணமாக்குவார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment