Wednesday, July 10, 2024

"கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."(மத்தேயு.10:8)

''கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."
(மத்தேயு.10:8)

குடும்ப விழாக்களுக்குச் செல்வோர் பரிசுப் பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

விழா‌ முடிந்தவுடன் வீட்டில் உள்ளோர் என்னென்ன பொருட்களை யார் யார் கொண்டு வந்துள்ளார்கள் என்ற விபரங்களைக் குறித்து வைப்பது வழக்கம்.

பரிசுப் பொருட்கள் இலவசமாகத் தரப்படுபவை.

பரிசுப் பொருட்களைத் தந்தவர்கள் வீட்டில் விழா‌ நடந்தால் பெற்ற பரிசுப் பொருளுக்கு ஈடாக அவர்களுக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நாம் தாயின் வயிற்றில் குழந்தையாய் உற்பவிக்கும்போது நமது உடலையோ ஆன்மாவையோ நாம் உண்டாக்கவில்லை.

அவை இறைவனால் படைக்கப்பட்டு நமக்கு இலவசமாய்த் தரப்பட்டவை.

உண்மையில் நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

நம்மைப் படைத்தவருக்குச் சொந்தமானவர்கள்.

படைத்தவர் எதற்காகப் படைத்தாரோ அதைச் செய்ய வேண்டியது நமது கடமை.

நாம் சொந்தமாக ஒரு கார் வாங்கியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அது நாம் விருப்பப் படுகிற இடத்துக்குச் செல்லப் பயன் படுத்துவோம்.

மற்றவர்கள் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்.

கடவுள் விருப்பப்படி செயல்பட வேண்டியது தான் நமது கடமை,

கடவுளை விரும்பாதவர்கள் விருப்பப்படி செயல்பட நமக்கு உரிமை இல்லை.

கடவுள் நம்மைச் சில ஆற்றல்களோடு (talents) படைத்திருக்கிறார்.

அவற்றைப் பயன்படுத்தி இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம்மைக் கடவுள் தனிமையாக வாழப் படைக்கவில்லை, சமூகத்தில் வாழப் படைத்திருக்கிறார்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி.

நமது உடல் உறுப்புகளின் சமூகம்.
உடல் உறுப்புக்கள் சமூகமாகிய உடலுக்காகவே இயங்குகின்றன.

உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்து இயங்குகின்றன.

கால் மட்டும் தனியாக எங்கும் செல்வதில்லை.

தலையில் வலி என்றால் கால்கள் தான் அதை மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றன.

காலில் முள் குத்தினால் கைகள் தான் அதை எடுத்து விடுகின்றன.

கைகள் உதவியின்றி வாயால் சாப்பிட முடியாது.

நாம் சமூகமாகிய உடலின் உறுப்புக்கள்.

ஒரு மனிதன் தான் பிறந்த சமூகமாகிய மனுக் குலத்திற்கு உதவிகரமாக வாழ வேண்டும்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக வாழ வேண்டும்.

நாம் கடவுளிடமிருந்து இலவசமாகப் பெற்ற ஆற்றல்களை இலவசமாக மற்றவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

இலவசமாகப் பெற்றதை இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமை.

இதை செய்வதற்காகத்தான் இயேசு,

'' நீ உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி" என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

நமது ஆற்றலைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுகிறோம்.

நாம் ஈட்டிய பொருளை நமக்காக மட்டுமல்லாமல் நமது அயலானுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

அன்பு செய்யும் ஆற்றல் நாம் இறைவனிடமிருந்து இலவசமாக பெற்றது.

அன்பு செய்ய காசு பணம் தேவையில்லை.

அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.

இரக்கம், தாராள குணம், பேச்சாற்றல் ஆகியவையும் இலவசமாகப் பெற்றவை தான்.

கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்து இரக்கப்பட காசு தேவையில்லை.

அவர்களுக்குக் கொடுக்க நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் 

ஆறுதல் வார்த்தைகளைத் தாராளமாகக் கொடுக்கலாமே.

மற்றவர்கள் மீது நமக்கு இருக்கும் அன்பை வாயினால் சொன்னால் அவர்களும் மகிழ்வார்கள், அதைப் பார்த்து நாமும் மகிழலாமே!

மகிழ்ச்சியை இலவசமாக பகிர்ந்து கொள்ளலாமே!

நாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் நோக்கம் அறிவைப் பகிர்ந்து கொள்வதுதான்.

ஆனால் தாங்கள் நாகரீகத்தில் வளர்ந்து விட்டதாகச் சொல்பவர்கள் கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றிவிட்டார்கள்.

NEET படும் பாட்டைத்தான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

மற்றவர்களுக்கு நமது உணர்வுப் பூர்வமான ஆதரவைக் கொடுக்க வேண்டும்.

கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் ஆதரவாக இருந்தால் அவர்களுக்கு உழைப்பு கஷ்டமாகத் தெரியாது.

மெதுவாக நடப்பவனை உற்சாகப் படுத்தினால் வேகமாக நடக்க ஆரம்பிப்பான்.

பணி செய்பவர்களை உற்சாகப் படுத்த வேண்டும்.

குறைகள் சொல்லி யாரையும் திருத்த முடியாது.

நல்லதைச் சுட்டிக் காண்பித்து உற்சாகப் படுத்தினால் குறைகள் தாமாகவே மறைந்து விடும்.

நமது நேரத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது.

ஆனால் நேரத்தை மற்றவர்கள்களோடு செலவழிக்கலாம்.

குறிப்பாக பெற்றோருக்கு இது பொருந்தும்.

அநேக பிள்ளைகள் கெடக் காரணம் பெற்றோர் அவர்களது நேரத்தைப் பிள்ளைகளோடு செலவழிக்காததுதான்.

நேரத்தைப் பிள்ளைகளோடு செலவழிக்காமல் பணம் ஈட்ட மட்டும் செலவழித்தால் ஈட்டிய பணம் யாருக்கும் உதவாது.

நேரத்தை உழைப்பதற்கு மட்டுமல்ல, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவும் செலவழிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உழைப்பால் பயனில்லை.

நமது அன்பு உணர்வுகளையும், இரக்க உணர்வுகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதென்ன அன்பு உணர்வு?

சிலர் அன்பாக இருப்பார்கள்.

ஆனால் அன்பு மனதில் ஏற்படும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

தாய் குழந்தையை அன்பு செய்தால் மட்டும் போதாது.

அதை குழந்தைக்குக் காட்ட வேண்டும்.

குழந்தையைப் பார்த்துப் புன்னகை செய்தல், முத்தம் கொடுத்தல், குழந்தையோடு விளையாடுதல் போன்றவை அன்பைக் காட்டும் வழிகள்.

பால் கொடுப்பது கடமையை மட்டும்தான் காட்டும்.

புன்னகையைப் போன்ற சக்தி உலகில் எதுவும் இல்லை.

எதிரியைப் பார்த்து புன்னகை செய்தால் அவன் நண்பனாகி விடுவான்.

நண்பர்களை இணைத்து வைப்பதே புன்னகை தான்.

இலவசமாகப் பெற்றதை இலவசமாகக் கொடுத்தால்

மற்றவர்கள் மகிழ்வார்கள்.

அதைப் பார்த்து நாம் மகிழ்வோம்.

இலவசமாகப் பெற்றதை அனைவரோடும் பகிர்ந்து கொண்டால்

உலகமே நம்மோடு மகிழும்.

மண்ணவர்கள் மகிழ்வதைப் பார்த்து விண்ணவர்களும் மகிழ்வார்கள்.

இறைவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அவரோடு நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவர் திருவுளம்.

"விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவர்
விண்ணரசுக்குள் செல்வர்."
(மத்தேயு.7:21)

கொடையாகப் பெற்றோம்; கொடையாகவே வழங்குவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment