Saturday, July 13, 2024

"நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்." (எபேசியர் 1:4)

"நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்." 
(எபேசியர் 1:4)

கடவுள் நித்தியர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

காலங்களுக்கு முன்பே, உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே, நித்திய காலமாகவே

அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அன்பு செய்து கொண்டிருக்கிறார்.

தன்னைத் தானே அன்பு செய்கிறார்.

தன்னால் படைக்கப்படவிருக்கும் மனிதர்களையும் அன்பு செய்கிறார்.

நாம் வாழும் பிரபஞ்சத்தை அவர் படைத்த போது காலம் ஆரம்பமானது.

பிரபஞ்சம் அவருடைய நித்திய கால திட்டத்தின் விளைவு.

காலங்களின்போது அவர் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி அவர் நித்தியத்திலிருந்தே திட்டம் 
தீட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர் மாறாதவர்.

திட்டங்களை அவர் மாற்றுவதில்லை.

நாம் பாவம் செய்ய வேண்டும் என்பது அவரது திட்டமல்ல, 

அது நமது சுதந்திரத்தைத்‌ தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு.

ஆனாலும் நாம் பாவம் செய்வோம் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவரது அளவு கடந்த ஞானத்தின் காரணமாக நாம் செய்யும் பாவமாகிய தீமையிலிருந்து எப்படி நன்மையை வரவழைப்பது என்பதையும் நித்திய காலமாகத் திட்டமிட்டு விட்டார்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றது மிகப் பெரிய பாவம்.

ஆனால் அதிலிருந்து தான் இயேசு நமக்குரிய மீட்பை வரவழைத்தார்.

ஆகவே மனிதனைப் படைக்கும் திட்டமும், மீட்பின் திட்டமும் நித்தியமானவை.

"உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்."

 என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் இயேசுவின் நித்திய மீட்புத் திட்டத்தைக் குறிக்கின்றன.

உலகம் தோன்றுவதற்கு முன்பே = நித்திய காலத்திலிருந்தே 

கிறிஸ்து வழியாக = இயேசுவின் பாடுகளின் மூலமாக.

நம்மைத் தேர்ந்தெடுத்தார் = நம்மை மீட்டார்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி =

இயேசுவின் பாடுகள் மூலமாக நாம் பாவ மன்னிப்புப் பெற்று,

அதனால் தூய்மையையும், மாசற்ற தன்மையையும் பெற்றால்தான்

அவர் திருமுன் செல்ல முடியும், அதாவது மீட்புப் பெற முடியும்.

முழு வசனத்தின் பொருள்:

நாம் மீட்பு அடைய வேண்டுமென்றால் நாம் பாவ மன்னிப்புப் பெற்று தூய்மை அடைய வேண்டும்.

அதற்காகத்தான் இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

அவர் வழியாகவே மீட்கப் படுகிறோம்.

இது கடவுளின் நித்திய காலத் திட்டம்.

கடவுளுடைய நித்திய காலத் திட்டப்படிதான் நாம் வாழ்கிறோம் என்று உறுதியாக நம்பினால்

நமது வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கி வடியும்.

அவரது திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் நமது நன்மையையே குறியாகக் கொண்டிருக்கும்.

துன்பங்கள் துன்பங்களாகத் தெரியாது.

குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு பிரசவ வேதனை வேதனையாகவே தெரியாது.

அப்படித் தெரிந்தால் யாருமே குழந்தை பெற மாட்டார்கள்.

அதேபோல் தான் ஆன்மீக வாழ்வில் வரும் துன்பங்களில் சிலுவையையும்,

சிலுவையில் நமது மீட்பையும்,

மீட்பில் நித்திய பேரின்பத்தையும் பார்ப்பவர்கள்

துன்பங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள், வழியனுப்ப மாட்டார்கள்.

எல்லாம் இறைவன் திட்டப்படி தான் நடக்கின்றன என்ற நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது

"எனக்கு இது வேண்டும், அது வேண்டும்" கேட்க மாட்டோம்.

இறைவனோடு ஒன்றித்து வாழ்வையே செபமாக நம்புவோம்.

எப்போதும் இறைப் பிரசன்னத்தில் வாழ்வோம்.

அவரைப் பற்றி தியானிப்பதில் மகிழ்ச்சி காண்போம்.

தியானத்தில் தான் இறை உள்ளமும், நமது உள்ளமும் ஒன்றிக்கின்றன.

ஒன்றிக்கும்போது இறை உள்ளத்தில் உள்ள விருப்பங்களை நமது உள்ளம் அறியும்.

உள்ளம் அறிந்ததை உடல் நிறைவேற்றும்.

இறை விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றும்.

உடல் தனது விருப்பங்களைப் பற்றி கவலைப் படாது.

"எல்லாம் உமக்காக, 
இயேசுவின் திவ்ய இருதயமே, 
எல்லாம் உமக்காக.


எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும்
உந்தன் அதிமிக மகிமைக்கே"

என்ற பாடல் வரிகள் நமது சிந்தனையாக மாறிவிடும்.

நமது ‌உடல், பொருள், ஆவி, சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இயேசுவின் அதிமிக மகிமைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

செபத்தில் விண்ணப்பம் எதுவும் வைக்கத் தேவையில்லையா?

வைத்தால் தப்பில்லை.

ஆனால் வைக்கத் தேவையில்லை.


 "வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; 

அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை;

 களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. 

உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். 

அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! "
(மத்தேயு.6:26)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

பெற்ற தாய்க்குப் பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா?

பிள்ளை அழாவிட்டாலும் கூட பசிக்கும் நேரத்தை யூகித்து பால் கொடுப்பாள்.

நாம் இறைவனை மட்டும் தேடினால் போதும்,

நமக்கு வேண்டியதை அவர் பார்த்துக் கொள்வார்.

கடவுளின் முழு பராமரிப்பில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மரணத்துக்கும் பயப்பட மாட்டார்கள்.

கடவுளுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதால்

அவர்களைப் பொறுத்தவரை இவ்வுலகுக்கும் மறுவுலகுக்கும் வித்தியாசம் இல்லை.

தாயின் மடியில் முழுநேரமும் இருக்கும் குழந்தை தான் போகும் ஊரைப்பற்றிக் கவலைப் படாது.

அது உள்ளூரில் இருந்தாலும், வெளியூரில் இருந்தாலும் கவலைப் படாது.

ஏனெனில் அது எங்கிருந்தாலும் இருக்கப்போவது தாயின் மடியில் தான்.

அதேபோல் இந்த உலகில் இருந்தாலும் மறுவுலகில் இருந்தாலும் வாழப்போவது கடவுளின் மடியில் தான் என்றால் ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும்?

மாறாக அநித்தியத்திலிருந்து நித்தியத்துக்குள் செல்ல மகிழ வேண்டும்.

நாம் காலத்தில் பிறந்தாலும்‌

 நித்திய காலமும் கடவுளின் சிந்தனையில் இருப்பதால் 

நம்மை நித்தியத்துக்குள் அழைத்துச் செல்லும் மரணத்தைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்?

எப்போதும் இறைப் பிரசன்னத்தில் வாழ்வோம்.

பேரின்ப வாழ்வின் முன் சுவையைச் சுவைத்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment