"ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்."
(எபேசியர்.2:13)
நமது ஆண்டவராகிய இயேசு ஒரு யூதர். அவர் மனிதனாகப் பிறந்ததும், பாடுகள் பட்டு மரித்து பாவப் பரிகாரம் செய்ததும் யூதர்களுக்காக மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து மக்களுக்காகவும்.
யூதர்கள் அல்லாதவர்களை அவர்கள் புற இனத்தவர் என்று அழைப்பது வழக்கம்.
புனித சின்னப்பர் ஒரு யூதராக இருந்தாலும் புற இனத்தவர்களின் அப்போஸ்தலர் என்று அழைக்கப் படுகிறார்.
அவர் புற இனத்தவர்களிடையே நற்செய்தியை அறிவித்தார்.
எபேசு நகரில் யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களும்,
புற இனத்தவர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களும் இருந்தார்கள்.
அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் ஒன்றிணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும்,
அவரே இரண்டு இனத்தவரையும் தான் பாடுகளினால் ஒன்றுபடுத்தியிருக்கிறார் என்றும் கூறுகிறார்.
அதாவது ,சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் கூறுகிறார்.
இயேசுவின் பாடுகளாலும், பாடுகளின்போது சிந்தப் பட்ட இரத்தத்தாலும் மட்டும்தான் உலகிற்கு சமாதானத்தைக் கொண்டு வர முடியும்.
இதிலிருந்து நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
உலகில் உலக ரீதியாகப் பல இனங்கள் வாழலாம்.
ஆனால் ஆன்மீக ரீதியாக அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரு இனம்தான்.
இயேசுவின் இரத்தத்தால் இணைக்கப்பட்ட இனம்.
கிரேக்கர்கள் ஆனாலும், யூதர்கள் ஆனாலும், இந்தியர்கள் ஆனாலும், அமெரிக்கர்கள் ஆனாலும், ஐரோப்பியர்கள் ஆனாலும்
கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்தவர்கள் தான்.
உலகில் திருமுழுக்குப் பெறாதவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களும் இயேசுவால் படைக்கப் பட்டவர்கள் தான்.
அந்த வகையில் அவர்களும் நமது சகோதரர்களே.
இறைவனை நேசிப்பவர்களால் அவரால் படைக்கப்பட்டவர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.
அனைவரையும் நேசிப்போம்.
ஏனெனில் அனைவருக்காகவும் இயேசு பாடுகள் பட்டார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment