Monday, July 1, 2024

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."(மத்தேயு.8:24)

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."
(மத்தேயு.8:24)

இயேசு சீடர்களோடு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

சீடர்கள் விழித்திருக்கிறார்கள், ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. படகுக்குமேல் அலைகள் எழுகின்றன.

 சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள்.

இயேசு கடவுள்.

முக்காலமும் அறிந்தவர்.

படகில் ஏறும்போதே கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் சீடர்களோடு படகில் பயணித்தார்?

ஏன் படகில் தூங்கினார்?

இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிந்தால் இது புரியும்.

இயற்கையைப் படைத்தவர் அவர்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிடுபவர்.

அவருடைய திட்டமின்றி அணுவும் அசையாது.

இயற்கை நிகழ்வுகள் நமக்கு எதிர்பாராதவையாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு சுனாமி நாம் எதிர்பார்க்காமல் நடந்தது.

ஆனால் கடவுளின் நித்திய காலத் திட்டப்படி தான் நடந்தது.

அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அவரது திட்டப்படி தான் ஏற்பட்டன.

நமது எண்ணப்படி சுனாமியின் விளைவு அழிவு.

ஆனால் இறைவனின் எண்ணப்படி அது மாற்றம்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் கடவுள் எதையும் திட்டமிட மாட்டார்.

அப்படியானால் கடல் கொந்தளிப்பைத் திட்டமிட்டு சீடர்களை அழைத்துச் சென்று அவர் ஏன் தூங்கினார்?

என்ன நோக்கத்திற்காக?

வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஆசிரியர் திட்டம் தீட்டுவது போல

சீடர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக இயேசு திட்டமிட்டார்.

எதில் பயிற்சி?

ஆன்மீக வாழ்வுக்கு எது அத்தியாவசியமோ அதில் பயிற்சி.

ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படையான புண்ணியங்கள் மூன்று,

விசுவாசம், நம்பிக்கை,
 தேவசிநேகம்.

இவற்றில் முதன்மையானது விசுவாசம்.

சீடர்கள் இயேசுவை விசுவசித்து, நம்பிதான் அவர் பின்னால் வந்தார்கள், அவரை நேசித்தார்கள்.

ஆனாலும் இயேசு எதிர்பார்த்த அளவு அவர்களிடம் விசுவாசம் இல்லை.

அவர்களது விசுவாசத்தின் அளவை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்பின் அதை அதிகரிக்க வேண்டும்.

அதற்காகத் தான் புயலையும், கடற் கொந்தளிப்பையும் கடவுள் திட்டமிட்டார்.

அவர்களிடம் போதுமான விசுவாசம் இருந்திருந்தால்

கடலைப் படைத்த கடவுள் அவர்களோடு இருக்கும் போது 

 "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று கத்தியிருக்க மாட்டார்கள்.

தங்களுக்கு கடல் கொந்தளிப்பால் எந்த ஆபத்தும் வராது என்று தெரிந்திருக்கும்.

அவர்கள் பயந்ததைப் பார்த்த இயேசு 

 அவர்களை நோக்கி, "விசுவாசம் குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டார்.

  காற்றையும் கடலையும் அடக்கி அவர்களது விசுவாசத்தை அதிகப் படுத்தினார்.

மூன்று ஆண்டுகள் விடாமல் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தும் சீடர்களுடைய விசுவாசம் போதிய அளவு வளரவில்லை.

விசுவாசம் வளர்ந்திருந்தால் அவரது பாடுகளின் போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

அவர் உயிர்த்தெழுந்ததை நம்பாமல் கல்லரையைப் பார்க்கப் போயிருக்க மாட்டார்கள்.

மாதா போகவில்லை.

தூய ஆவியானவரின் வருகையின் போதுதான் அவர்களுடைய விசுவாசம் உறுதியடைந்தது.

நமது விசுவாசத்தை அதிகப் படுத்ததான் கடவுள் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நமக்குத் துன்பங்கள் வரும் போது நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், நமது ஆன்மீக நன்மைக்காகவே நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதை விசுவசிக்க வேண்டும்.

நம்மைப் படைத்தவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவசித்தால் நாம் துன்பத்தைக் கண்டு பயப்பட மாட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சி அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment