Sunday, July 14, 2024

"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்."(மத்தேயு.10:34)

"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்."
(மத்தேயு.10:34)

ஒருவருடைய வார்த்தைகளுக்குப் பொருள் காணும் முன் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

"வீட்டுப் பாடம் படிச்சிட்டு வரல, கொன்னுப்புடுவேன்."

வாக்கியத்தை வாசித்த உடனே சொல்லிவிடலாம் இவை ஒரு ஆசிரியர் கூறியவை என்று.

"கொன்னுப்புடுவேன்". என்று கூறியிருக்கிறார்.

அவர் மேல் கொலை மிரட்டல் வழக்குப் போட்டு விடலாமா?

வார்த்தையைத் தனியே எடுத்து பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.

 சந்தர்ப்பம் (context).

சொல்லப்பட்ட இடம் வகுப்பறை, 

சொன்னவர் ஆசிரியர்.

மாணவரின் நலன் மீது உண்மையான அக்கறை உள்ள ஆசிரியர்.

வீட்டுப் பாடம் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஆசிரியர் கூறிய வார்த்தைகள் அவை.

"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்."

கூறியவர் இயேசு. சமாதானத்தின் கடவுள்.

பூலோக மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே மனுவுரு எடுத்த இறைமகன்.

சமாதானத்தின் தேவன் ஏன் 

"சமாதானத்தை அல்ல, வாளையே கொணர வந்தேன்."

என்று சொல்கிறார்?

பள்ளிக்கூடம் இல்லாத ஒரு ஊர். அங்கு வாழ்ந்த அனைவருமே கல்வி கற்காதவர்கள். அறியாமை அவர்களுடைய பொதுச் சொத்து.

அவர்களின் நிலையை அறிந்த அரசு அங்கே ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தது.

முதியோர் கல்விக்கும் வசதி செய்து கொடுத்தது.

ஊரில் பாதிப் பேர் கற்க ஆரம்பித்தார்கள், மீதிப் பேர் பள்ளிக்கூடம் போகவில்லை.

இரண்டு ஆண்டுகளில்

 அறியாமையில் ஒன்றாக இருந்த ஊர் கல்வியின் காரணமாக இரண்டாகப் பிரிந்தது.

கற்றோர், கல்லாதோர்.

இப்பிரிவினைக்குக் காரணம் பள்ளிக்கூடம் தான் என்று சொல்லலாமா?

பள்ளிக்கூடத்துக்குப் போகாதவர்கள் தான் காரணம்.

எல்லோரும் பள்ளிக்கூடம் சென்றால் அறிவுடைமையில் ஊர் ஒன்றாகிவிடும்.

சென்மப் பாவத்தின் காரணமாக நமது முதல் பெற்றோரின் வாரிசுகள் எல்லாம் பாவிகளாக மாறினோம்.

நமக்கு பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருவதற்காக

 இறைமகன் மனுமகனாக உலகில் பிறந்து

 நற்செய்தியை அறிவித்து பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று வாழ்கிறார்கள்.

ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவ நிலையில் வாழ்கிறார்கள்.

பாவ நிலையில் ஒன்றாக இருந்த உலகம் இயேசுவின் வருகையால் இரண்டாகப் பிரிந்தது.

இப்போது உலகில் 
1. பாவ நிலையில் இருந்து விடுதலை பெற்றவர்கள் 

2.பாவ நிலையில் வாழ்பவர்கள் என்று இரு பிரிவினர் இருக்கிறார்கள்.

இந்தப் பிரிவினைக்கு இயேசு காரணமா?

நிச்சயமாக இல்லை.

இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாமைதான் காரணம்.

பிரிந்து கிடக்கும் உலகை ஒன்று சேர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

உலகோர் அனைவரும் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்ளும்படி செய்ய உழைக்க வேண்டும்.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்,

 அறிவித்தால் மட்டும் போதாது

 அனைவரையும் அதன் படி வாழச் செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் நமது ஆண்டவர் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவினார்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே உள்ள அனைவரையும் ,

பிரிந்து சென்றவர்களையும், பிற மதத்தினரையும் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் கொண்டு வர வேண்டும்.

பிற மதத்தினரைக்
 கத்தோலிக்கத் திருச்சபைக்குள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வது

மதச்சார்பின்மைக்கு எதிரானதா?

நிச்சயமாக இல்லை.

மனிதர்கள் இஷ்டப்பட்ட சமயத்தை பின்பற்றலாம் என்பதை ஏற்றுக் கொள்வது மதச்சார்பின்மை.

கடவுளே மனிதர்களுக்குத் தேர்வு செய்யும் உரிமையை (Freedom of choice) கொடுத்திருக்கிறார்.

இந்த உரிமையைப் பயன்படுத்தி அனைத்து மனிதர்களும் மீட்பராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனின் ஆசை.

"சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்."

என்பது முக்கியம்.

கடவுளே மனித சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.

"இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 

நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்."

நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமை.

ஏற்றுக் கொள்பவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ளாதவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

மக்களின் பிரிவினைக்குக் காரணம் நற்செய்தியோ இயேசுவோ அல்ல.

ஏற்றுக் கொள்பவர்கள் மீட்பு பெறுவர்.

ஏற்றுக்கொள்ளாதவர்கள் பெற மாட்டார்கள்.

ஒரு குடும்பத்துக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம்.


தந்தை ஏற்றுக் கொள்கிறார் மகன் ஏற்றுக் கொள்ளவில்லை.

 தாய் ஏற்றுக் கொள்கிறார் 
மகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாமியார் ஏற்றுக் கொள்கிறார் 
 மருமகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு குடும்பத்தைப் பிரிக்கவில்லை.

ஏற்றுக் கொள்ளாமைதான் பிரிக்கிறது.

நாம் முதலில் நற்செய்தியை வாழ்வோம், அப்புறம் அறிவிப்போம்.

மக்கள் நம்மை நற்செய்தியாகப் பார்க்க வேண்டும்.

இயேசுவைப் பார்த்தே திருந்தாத மக்கள் இருந்தார்கள்.

அதற்காக இயேசு போதித்ததை நிறுத்தவில்லை.

கல்யாண விருந்தில் அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது.

 உண்பவர்களின் பசி நீங்கும்.

 உணவை சாப்பிடாமல் இருந்துவிட்டு பசி நீங்காமைக்கு காரணம் உணவு என்று கூறக்கூடாது.

 இயேசுவின் போதனைகளை வாழ்வோம். 

அனைத்து மக்களும் தனது போதனைகளின் படி வாழ்ந்து மீட்பு பெற வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.

 அவரது ஆசையை நிறைவேற்றுவோம்.

இயேசு வாளைக் கொண்டு வரவில்லை, 

வாழ்வைக் கோண்டு வந்திருக்கிறார்.

வாழ்வோம்.

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment