"ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.''
(மத்தேயு.13:8)
விதை முளைத்து, தளிர் விட்டு, வளர்ந்து பலன் தர வேண்டுமென்றால்
விதை நல்லதாக இருந்தால் மட்டும் போதாது,
அது விழும் நிலமும் நல்லதாக இருக்க வேண்டும்.
இறைவாக்கு நம்மில் பலன் தர வேண்டுமென்றால் நமது மனது அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
கடினமான உள்ளத்திற்கு வரும் இறை வாக்கினால் எந்தப் பலனும் கொடுக்க முடியாது.
உள்ளம் மென்மையானதாக இருக்க வேண்டும்.
மென்மையான உள்ளத்தில் விழுந்த இறை வாக்கு அதில் பதியும்.
நமக்கு திறந்த மனது வேண்டும் .
திறந்த உள்ளம் தான் இறை வாக்கை ஏற்றுக் கொள்ளும்.
இறை வாக்கை நமது உள்ளம் ஏற்றுக் கொண்டால் தான் இறைவன் சித்தம் நமது சித்தமாக மாறும்.
நமக்குள் வரும் இறைவாக்கில் தான் இறைவன் சித்தம் அடங்கியிருக்கும்.
ஒரு இறைவாக்கை எடுத்துக் கொள்வோம்.
"யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்."
(மத்தேயு.2:16)
யோசேப்புக்கு இறைவன் கொடுத்த உத்தரவில்
நமக்காக அடங்கியிருக்கும் இறைவன் சித்தம் என்ன?
இறைவனது கட்டளைகளுக்கு நாம் எதிர்க்கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும்.
இறைவனது வழிகாட்டுதல் இன்றி சுயமாக நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும்.
நாம் தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இறைவனது வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.
அப்போது தான் இறைவாக்கு மூலம் இறைவழிகாட்டுதலை உடனே பற்றிக் கொள்வோம்.
சிறு பையன் கடைக்குப் போனால் தனக்கு வேண்டிய ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று தேடுவது போல
பைபிளைத் திறந்தவுடன் தனக்கு வழிகாட்ட வல்ல ஏதாவது வசனம் இருக்கிறதா என்று தேட வேண்டும்.
இயல்பாக இறைவாக்கின்மீது தாகம் இருக்க வேண்டும்.
இறைவன் மீது உள்ள தாகம் அவரது வாக்கின்மீது இருக்க வேண்டும்.
இறைவன் உள்ளத்தில் உள்ளதை அறிந்து கொள்ள,
அதன் படி வாழ
அவரது வார்த்தைகளை அறிய ஆவலாக இருக்க வேண்டும்.
இறைவனைப் பற்றியும், அவரது பராமரிப்பைப் பற்றியும் நமது விருப்பப்படி கருத்துக்கள் வைத்துக் கொண்டு
அதற்கு ஆதாரமாக பைபிளில் வசனங்கள் தேடக்கூடாது.
இறைவாக்குக்குத் தங்கள் விருப்பப்படி பொருள் கொடுப்பவர்களுக்கு இறை வாக்கினால் எந்தப் பயனும் இல்லை.
இறைவாக்கை வாசித்த அடுத்த வினாடியே அது பலன் தரும் என்று எதிர் பார்க்கக்கூடாது.
பொறுமையான தியானத்தின் மூலம் அது உள்ளத்தில் வேரூன்றி வளர அதற்குக் காலம் கொடுக்க வேண்டும்.
அப்போது தான் அது கனி கொடுக்கும்.
நமது உள்ளம் நன்றியால் நிறைந்த உள்ளமாக இருக்க வேண்டும்.
கடவுளுடைய ஞானம் நம்முள் செயலாற்றிக் கொண்டிருப்பதற்கு நன்றி கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இறையருள் கிடைத்ததற்கு நன்றி கூறும்போது அது கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்த இறைவாக்கின்படி வாழ வேண்டும்.
இறை வார்த்தைகளை வாழும் போது தான்
அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும்
பலன் தரும்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment