Thursday, July 25, 2024

"அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்."(மத்தேயு.13:25)

" அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்."
(மத்தேயு.13:25)

உலகில் எதிர் எதிரான இரண்டு சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒன்று கடவுள்.
அடுத்து சாத்தான்.

கடவுளுக்கு எதிரான சாத்தானின் இயக்கம் ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பித்து விட்டது.

கடவுள் நமது முதல் பெற்றோரைப் பரிசுத்தமான உள்ளத்தோடு தான் படைத்தார்.

ஆனால் சாத்தான் அவர்களில் பாவ விதையை விதைத்து விட்டான்.

சாத்தானின் சோதனையால் நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவு இன்று வரை மனுக்குலத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

பாவத்திலிருந்து மக்களை மீட்பதற்காக இறைமகன் மனுமகனாகப் பிறந்து தனது சிலுவை மரணத்தின் மூலம் பாவப் பரிகாரம் செய்து விட்டாலும்

மனிதன் எந்த மனச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்தானோ 

அதே மனச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தத் தனத்தில் வளர இயேசு ஏழு தேவத்திரவிய அனுமானங்களை ஏற்படுத்தினார்.

அவற்றின் உதவியால் நாம் பாவ மன்னிப்பு பெறுவதோடு பரிசுத்த நிலையில் வளர வேண்டும்.

ஆனால் நாம் பாவ மன்னிப்புப் பெற்ற வினாடியே சாத்தான் பாவ விதையை மறுபடியும் மறுபடியும் விதைக்க சோதனைகள் மூலம் காத்துக் கொண்டிருக்கிறான்.

அன்று நமது முதல் தாய் ஏவாள் சோதனையில் விழுந்தது போல நாமும் விழுந்து விடக்கூடாது.

அன்று விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடும்படிச் சோதித்தவன்

இன்று இயேசுவின் போதனைகளுக்கு எதிராகச் செயல்படும்படி சோதிக்கிறான்.

தாழ்ச்சி, 
பொறுமை, 
கற்பு, 
தாரளகுணம், 
மட்டசனம், 
பிறரன்பு, 
சுறுசுறுப்பு

ஆகிய புண்ணியங்களில் நாம் வளர வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.

ஆனால் சாத்தான் 

தற்பெருமை,     
கோபம்,            
மோகம்,             
லோபித்தனம், 
போசனப்பிரியம், 
 காய்மகாரம்,     
சோம்பல்

ஆகியவற்றில் ஆசை காட்டி மக்களைப் பாவத்தில் விழ வைக்க முயற்சிக்கிறான்.

இயேசுவின் போதனைப்படி நல்ல செயல்களை நாம் செய்யும்போது கூட 

அந்த நற்செயல்களை வெறும் செயல்களாக ஆக்க அவன் சோதிக்கிறான்.

இயேசுவின் போதனைகளுக்கு இணங்க பிறர் அன்புச் செயல்களைச் செய்கிறோம்.

பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறோம்,

தவித்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம்,

இருப்பிடம் இல்லாதவர்களுக்கு இருக்க இடம் கொடுக்கிறோம்,

 நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லுகிறோம்

என்று வைத்துக்கொள்வோம்.

இவற்றை இறைவனது அதிமிக மகிமைக்காக செய்தால் தான் அவற்றுக்கு இறைவனது சன்மானம் உண்டு.

ஆனால் சாத்தான் நமது மனதில் தற்பெருமை எண்ணத்தைப் புகுத்துவான். இது சோதனை.

இச்சோதனைக்கு இணங்கி நமது செயல்களில் நாமே மகிழ்ச்சி கொண்டால் அது தற்பெருமை என்னும் தலையான பாவம் ஆகிவிடும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் நமது செயல்களில் நாமே பெருமை பாராட்டக் கூடாது.

நமது வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரிய கூடாது.

மற்றவர்கள் நமக்கு துன்பம் கொடுக்கும் போது நாம் அவற்றை ஆண்டவருக்காகப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும்.

துன்பப்பட்டுக் கொண்டு அவற்றை கொடுத்தவர்கள் மீது கோபப்பட்டால் நமது துன்பம் சிலுவையாக மாறாது.

 நம்மால் இயேசுவின் சீடர்கள் ஆக முடியாது.

பொறுமை நம்மைச் சமாதான வாழ்வுக்கு இட்டுச்செல்லும்.

கோபம் கொலையில் கூட போய் முடியலாம்.

உடல் இச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் கற்பு நிலையில் வாழ்ந்தால் அது உடலுக்கும் நல்லது, ஆன்மாவுக்கும் நல்லது.

கற்பு அனைவருக்கும் பொதுவானது.

துறவிகள் மட்டுமல்ல, திருமணம் ஆனவர்களும், ஆகாதவர்களும் கற்பு நெறி தவறாமல் வாழ வேண்டும்.

தாராள குணம் உள்ளவர்கள் தான் பிறர் அன்பு செயல்களைக் செய்ய முடியும்.

சிக்கனம் நல்ல பண்பு. ஆனால் சாத்தான் அதை கஞ்சத்தனமாக மாற்ற முயல்வான்.

கஞ்சத்தனம் உள்ளவர்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது.

சோதனைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

பசிக்காக மட்டும் சாப்பிடுவது மட்டசனம். ருசிக்காக மட்டும் அளவுக்கு மீறிச் சாப்பிடுவது போசனப் பிரியம்.

ருசித்துச் சாப்பிடலாம். ருசிக்காக மட்டும் சாப்பிடக்கூடாது.

ருசிக்காகச் சாப்பிட சாத்தான் தூண்டுவான்.

ருசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவது பாவம்.

நம்மை நாமே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்.

பிறரது மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

சாத்தான் காய்மாகார உணர்ச்சிக்குத் தூண்டுவான்.

பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நாம் வருத்தப் படுவது காய்மாகாரம்.

சோதனைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

பிறர் வசதியாக வாழ்வதைப் போல் நாமும் வாழ ஆசைப்படலாம்.

பிறரைப் போல் நம்மால் வசதியாக வாழ முடியவில்லையே என்று எண்ணி வாழ்பவர்கள் மீது காயமாகாரப் படக்கூடாது.

காய்மகாரம் பிறரன்புக்கு எதிரானது.

கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.

சாத்தான் நமது ஓய்வைச் சோம்பேறித்தனமாக மாற்ற முயல்வான்.

ஓய்வு வேலைக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

சோம்பல் வேலையைக் கெடுக்கும்.

சோம்பல் சாத்தானின் பட்டறை என்பார்கள்.

சோம்பேறியின் உள்ளத்தில் தேவையில்லாத எண்ணங்கள் உதிக்கும், அவை தேவையில்லாத சொல்லுக்கும் செயலுக்கும் வழி வகுக்கும்.

சுறுசுறுப்பாக இருப்பவன் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய விதமாகச் செய்து முடிப்பான்.

சோம்பேறி ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய மாட்டான்.

நாம் நமது வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் போது சாத்தான் ஓய்வு என்ற பெயரில் சோம்பலுக்குத் தூண்டுவான்.

எங்கெல்லாம் இறைவாக்கு விதைக்கப் படுகிறதோ அங்கெல்லாம் தன் விதையை விதைக்க சாத்தானும் வந்து விடுவான்.

வார்த்தையான இறைவனையே சோதித்தவன் அவன்.

வார்த்தை முளைத்து தளிர் விட்டு விண்ணகம் வரை வளர்ந்து விண்ணக வாழ்வை ஆரம்பிக்கும் வரை, அதாவது மரணம் வரை, சாத்தான் சோதித்துக் கொண்டு தான் இருப்பான்.

அவனது சோதனைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

அவனைப் பற்றிக் கவலைப் படாமல் ஆண்டவரை மட்டும் நினைத்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.‌

No comments:

Post a Comment