Wednesday, July 17, 2024

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்."(மத்தேயு.12:30)

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்."
(மத்தேயு.12:30)

திருவனந்தபுரம் விரைவு வண்டியில் அருகருகே அமர்ந்து மூவர் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

நடுவில் அமர்ந்திருந்தவன் வலது பக்கத்தில் உள்ளவனைப் பார்த்து,

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"

"திருவனந்தபுரத்துக்கு."

இடது பக்கத்தில் உள்ளவனைப் பார்த்து,

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"

"சென்னைக்கு."

கேட்டவனுக்கு ஒரே ஆச்சரியம்.

"விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி விட்டது!

ஒரு வண்டி ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

திருவனந்தபுரத்துக்குப் போகின்றவனும், சென்னைக்குப்
போகின்றவனும் ஒரே வண்டியில் பயணிக்கின்றனர்!"

என்று எண்ணிக் கொண்டிருந்த போது வலது பக்கத்தில் இருந்தவன் அவனைப் பார்த்து கேட்டான்,

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"

"ஒரு பக்கமும் போகவில்லை."

கேள்வி கேட்டவனுக்கு ஒரே ஆச்சரியம்.

"நாடு எவ்வளவு முன்னேறி விட்டது. இரயிலில் பயணித்துக் கொண்டே வீட்டிலும் இருக்க முடிகிறது!"

மூன்றும் பைத்தியங்கள்!


 விண்ணக இரயிலில் மண்ணகம் நோக்கிப் பயணிப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?

இயேசு சொல்கிறார்,
"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்."

அரசியலில் அணி சேராக் கொள்கை என்று ஒன்று இருந்தது.

அமெரிக்க அணி, ரஷ்ய அணி என்று இரண்டு எதிர் எதிர் அணிகள் இருந்த காலத்தில்

பண்டித நேரு அவர்கள் தலைமையில் இந்தியா அணி சேராக் கொள்கையைப் பின்பற்றியது.

அரசியலில் இது முடியும், பாதுகாப்பானதும் கூட.

ஆனால் ஆன்மீகத்தில் இது முடியாது.

இயேசுவின் அணியில் உள்ளவர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள்.

இயேசுவின் அணியில் இல்லாதவர்கள் சாத்தானின் அணியில் இருக்கிறார்கள்.

இயேசுவுக்காக வாழாதவர்கள் சாத்தானுக்காக வாழ்கிறார்கள்.

இரண்டு பக்கமும் சாராமல் நடு நிலைமை வகிக்க முடியாது.

இயேசுவின் அணியில் சேர வேண்டுமென்றால் கத்தோலிக்கத் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற வேண்டும்.

ஆனால் ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுவின் அணியில் இருக்கிறார்கள் என்று கூற முடியாது.

ஞானஸ்நானம் சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருகிறது.

இயேசுவின் அணியில் சேர்கிறோம்.

தொடர்ந்து ஞானஸ்நானத்தில் பெற்ற பரிசுத்தத்தனத்தைக் காப்பாற்றி வாழ வேண்டும்.

சாவான பாவம் செய்கிறவர்கள் இயேசுவின் அணியை விட்டு விலகி சாத்தானின் அணியில் சேர்ந்து விடுகிறார்கள்.

சாவான பாவ நிலையில் கோவிலுக்கு வந்தாலும் அவர்கள் சாத்தானின் அணியினரே.

பாவத்துக்கு மனஸ்தாபப் பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்தவுடன் இயேசுவின் அணிக்கு வந்து விடுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.

தகுந்த காரணம் இன்றி திருப்பலிக்கு வராவிட்டால் சாவான பாவம்.

பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டுத்தான் நன்மை எடுக்க வேண்டும்.

அதைப் பற்றிக் கவலைப் படாமல் நன்மை எடுத்தால் அதுவும் சாவான பாவம்.

ஞானஸ்நானம் பெற்றவர்கள் சாவான பாவத்தில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மனித பலகீனத்தின் காரணமாக விழ நேர்ந்தால் உடனே பாவ சங்கீர்த்தனம் செய்து விட வேண்டும்.

ஏனெனில் இயேசுவோடு இல்லாதவர்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.

நாம் பலகீனமானவர்கள் என்று இயேசுவுக்குத் தெரியும்.

அதனால்தான் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்ணகப் பாதையில் இயேசுவோடு தான் பயணிக்க வேண்டும்.

தனியாகப் பயணிக்க முடியாது.

இயேசுவோடு பயணிப்பது தான் ஆன்மீகப் பயணம்.

சாத்தானோடு பயணிப்பது லௌகீகப் பயணம்.

இரண்டு பயணங்களும் எதிர் எதிர் திசைகளில் செல்வன.

இரண்டு பயணங்களையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

உலகத்தை முற்றிலும் மறந்தால் தான் இயேசுவை ஞாபகத்தில் வைக்க முடியும்.

உலகத்தை முற்றிலும் மறந்தால் எப்படி ஊணின்றி, உணவின்றி, இருப்பிடம் இன்றி வாழ முடியும்?

இவற்றை உலகிற்காக வாழ்ந்தால் அது உலக வாழ்க்கை, இயேசுவுக்காக வாழ்ந்தால் ஆன்மீக வாழ்க்கை.

திருமண வாழ்வு உலக வாழ்வா, ஆன்மீக வாழ்வா?

திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.

இறைவன் தனது படைப்புத் தொழிலில் மணமக்களைக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்.

அன்று நமது முதல் பெற்றோரைப் படைக்க கடவுள் செய்ததைத் தான் மண்மக்கள் செய்கிறார்கள்.

ஆகவே திருமண வாழ்வு முற்றிலும் ஆன்மீக வாழ்வு, கடவுளுக்காக வாழப்பட வேண்டிய வாழ்வு.

உலகில் வாழ்ந்தாலும் இயேசுவோடு வாழ்வோம்,  இயேசுவுக்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment