Monday, July 15, 2024

"மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."(மத்தேயு.11:28)

"மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
(மத்தேயு.11:28)

ஒரு நாள் ஒரு தாத்தா LKG‌ படிக்கும் தன் பேரனைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.
 
புத்தகங்கள் அடங்கிய பை பேரனின்  தோளில்.

பேரன் தாத்தாவின் தோளில்.

பேரனுக்கு பள்ளிக்கூடம் போவதில் ஆனந்தம்.

பள்ளிக்கூடத்தைவிட அங்கு போவதில் பேரானந்தம்.

பள்ளிக்கூடத்தில் பெஞ்சில் உட்கார வேண்டும்.

போகும் போது தாத்தாவின் தோளில் பயணம்.

நமது விண்ணகப் பயணத்தில் இயேசு மாணவனின் தாத்தா போல செயலாற்ற ஆசைப்படுகிறார்.

சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வாருங்கள் என்று அழைத்த இயேசு,

அதைச் சுமக்க நமக்கு உதவி செய்ய ஆசிக்கிறார்.

"சிலுவையாகிய சுமை கனமாக இருக்கிறதா?

சுமந்து சோர்ந்து போயிருக்கிறீர்களா?

நானும் உங்களோடு வருகிறேன்.

நான் உங்களுக்கு உதவுகிறேன்."

இயேசு இரக்கமும்,  மனத்தாழ்மையும் உள்ளவர்.

நாம் பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு செல்வதால் நம்மீது இரக்கப்படுகிறார்.

மனதில் தாழ்ச்சி உள்ளவர்.

தலையான புண்ணியங்களுள் தாழ்ச்சி முதன்மையானது.

தாழ் நிலையில் உள்ளவர்களுக்கு தாழ்ச்சி எளிது.

இயேசு சர்வ வல்லவ கடவுள்.

ஒன்றும் இல்லாமையிலிருந்து தன்னால் படைக்கப்பட்ட சாதாரண மனிதன் அளவுக்குத்

 தன்னையே தாழ்த்தும் அளவுக்குத் 

தாழ்ச்சியாக இருக்க அவரால் தான் முடியும்.

ஆண்டி இன்னொரு ஆண்டிக்குக் குனிந்து உதவுவது பெரிய காரியமல்ல.

ஆனால் அரசன் ஆண்டி அளவுக்குக் குனிந்து உதவுவது பெரிய காரியம்.

சர்வ வல்லவ கடவுள் ஒன்றுமில்லாத மனிதன் அளவுக்கு குனிவது மகத்தான காரியம்.

இயேசு நுகக்கால் உள்ள மாட்டு வண்டிக்குத் தன்னை ஒப்பிடுகிறார்.

வண்டியில் பாரத்தை ஏற்றி, நுகக்காலை மாட்டின் கழுத்தில் ஏற்றி விட்டால் மாடு எளிதாக வண்டியை இழுத்துச் செல்லும்.


இதில் சுமை மாட்டின் முதுகில் இருக்காது. அது சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுமை வண்டியில் இருக்கும். வண்டிதான் சுமக்கும்.

மாட்டின் வேலை வண்டியை இழுப்பதுதான்.

வண்டியில் சக்கரங்கள் மாட்டியிருப்பதால் எவ்வளவு பெரிய சுமையாக இருந்தாலும் மாடு வண்டியை இலேசாக இழுத்துச் செல்லும்.


இயேசு தன்னை வண்டிக்கு ஒப்பிட்டிக்கிறார்.

"பாரமான சுமையைச் சுமந்து சோர்ந்திருக்கும் மக்களே எல்லோரும் வண்டியாகிய என்னிடம்‌ வந்து உங்கள் சுமையை என்மேல் இறக்கி வைத்து விடுங்கள்.

உங்கள் சுமையை நான் சுமப்பேன்.

நீங்கள் உங்கள் மீட்பராகிய எனது நுகத்தை உங்கள் கழுத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.

விண்ணகப் பாதையில் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளையும் என்னிடம் ஒப்புக்கொடுத்து விடுங்கள்.

நானும் உங்களோடு பயணிக்கிறேன்.

நீங்களும் என்னைப் போல் இரக்கமும், தாழ்ச்சியும் உள்ளவர்களாக இருங்கள்.

என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

நான் சுமையில் பங்கு ஏற்றுக் கொண்டது போல நீங்களும் உங்கள் அயலானின் சுமையில் பங்கு ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லோருடைய சுமையையும் எல்லோரும் சுமந்தால் உங்கள் விண்ணகப் பயணம் இன்பகரமானதாக இருக்கும்."

இயேசு நமக்காகப் பாரமான சிலுவையைச் சுமந்து அதிலே தன்னைப் பலியாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

அவருடைய சீடர்களாக இருக்க வேண்டுமென்றால் நாமும் நமது சிலுவையைச் சுமந்து விண்ணக பாதையில் நடக்க வேண்டும் என்று சொன்னார்.

சிலுவையைச் சுமப்பதில் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்கிறார்.

சீடனோடு சேர்ந்து சிலுவையைச் சுமக்கும் குரு நமது இயேசு ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நமது ஆன்மீகப் பயணத்தில் நமக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளும் சிலுவைகள் தான்.

நமது பிரச்சனைகளை எல்லாம் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்து விட்டால்  

நமது பயணம் சிலுவைப் பயணமாக இருந்தாலும் இன்பகரமான பயணமாக இருக்கும்.

பிரச்சனைகளைக் கண்டு பயப்பட வேண்டாம்.

அவற்றுக்குத் தீர்வு காண எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு வருகிறார்.

பாவச் சுமையால் சோர்ந்து இருப்பவர்கள் கலங்க வேண்டாம்.

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் இயேசு இருக்கிறார்.

அவரது காலடியில் நமது பாவச் சுமையை இறக்கி வைத்துவிட்டு 

பரிசுத்தத்தனத்தோடு பயணிப்போம்.

பரிசுத்தருடைய விண்ணக இல்லத்துக்குள் பரிசுத்தர்களாய் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment