Sunday, July 28, 2024

நம்பிக்கையும் நமது முதல் தாயும்.

நம்பிக்கையும் நமது முதல் தாயும்.


"ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்றாள். 
(தொடக்கநூல் 3:3)

இது கடவுள் நமது முதல் பெற்றோருக்குக் கொடுத்த கட்டளை.

பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 


ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். 

நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்;" என்றது. 

ஏவாள் பாம்பின் வார்த்தையை நம்பினாள்,

அதாவது கடவுளின் வார்த்தையை நம்பவில்லை.

விளைவு?

விலக்கப்பட்ட கனியைத் தின்று கடவுளின் கட்டளையை மீறினாள்.

பாவம் செய்தாள்.

பாவத்துக்குக் காரணம் என்ன?

கடவுளின் வார்த்தையை நம்பாமல் பாம்பின் வார்த்தையை நம்பியது தான் பாவத்துக்குக் காரணம்.

"நீங்கள் சாகவே மாட்டீர்கள்." என்று பாம்பு சொன்னது.

பாவம் செய்த நமது முதல் பெற்றோர் செத்தார்களா?

பாவம் செய்தது அவர்களின் ஆன்மா.

தேவ இஷ்டப் பிரசாத நிலையில்
(In the state of Sanctifying grace) இருக்கும் போது ஆன்மா உயிரோடு இருக்கிறது.

ஆன்மா சாவான பாவத்தைச் செய்தவுடன் தேவ இஷ்டப் பிரசாதத்தை இழந்து மரணிக்கிறது.

சாவான பாவம் நமது ஆன்மாவை மரணம் அடையச் செய்கிறது.

ஆகவே நமது முதல் பெற்றோரின் ஆன்மா பாவம் செய்தவுடன் பரிசுத்தத்தனமாகிய உயிரை இழந்து விட்டது.

பாம்பு "நீங்கள் சாகவே மாட்டீர்கள்." என்று சொன்னது பொய்.

கடவுள் சொன்ன உண்மையை நம்பாமல் பாம்பின் பொய்யை நம்பியதால் நமது முதல் பெற்றோர் பாவம் செய்து ஆன்மீக மரணம் அடைந்தார்கள்.

இந்த ஆன்மீக மரணத்திலிருந்து மனுக்குலத்தை மீட்கவே கடவுள் மனிதனாகப் பிறந்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தனது சிலுவை மரணத்தின் மூலம் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.

இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் நாம் பெறும் அருளின் உதவியால் நாம் வாழ்ந்தால் நாம் சாவான பாவம் செய்ய மாட்டோம். ஆன்மா மரணம் அடையாது.

இப்போதும் நாம் சாவான பாவம் செய்யும் போது நமது ஆன்மா மரணிக்கிறது,

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றவுடன் உயிர் பெறுகிறது, அதாவது பரிசுத்த நிலையை அடைகிறது.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது சாமியார் ஒரு வெள்ளைத் துணியை நம் மீது போட்டு செபித்தார்.

வெள்ளைத் துணி நமது ஆன்மாவின் பரிசுத்த நிலைக்கு அடையாளம்.

நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தைக் கடைசி வரையில் காத்து அதோடு நிலை வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.

நமது உள்ளரங்க பரிசுத்தத் தனத்திற்கு வெளி அடையாளமாகத்தான் ஞானஸ்நானத்தின் போதும்

புதுநன்மை எடுக்கும் போதும் நாம் வெண்ணிற ஆடையை அணிந்தோம். 

ஏழு தேவத்திரவிய அனுமானங்களின் நோக்கமே நம்மைப் பரிசுத்தத் தனத்தில் வளர்ப்பது தான்.

ஆனால் நாம் ஞானஸ்நான, புது நன்மை, திருமண நாட்களில் ஆடம்பரத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பரிசுத்தத் தனத்திற்குக் கொடுப்பதில்லை.

புதுத்துணி எடுக்க வேண்டும், விருந்தினர்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும், பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டும், நன்கு சாப்பிட வேண்டும்

இவைதான் நமது விழாவுக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களாக இருக்கின்றன.

ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகப் படைக்கப்பட்ட நாம்

ஏன் ஆன்மீகத்துக்கு உள்ளேயும் லௌகீகத்தைப் புகுத்தி

ஆன்மீகத்தையே லௌகீக மயமாக்கிக் கொண்டிருக்கிறோம்?

முழுக்க முழுக்க ஆன்மீக விழாவாகிய கிறிஸ்துமஸ் விழாவையே ஒரு லௌகீக விழா மாதிரியல்லவா கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம்!

புதுத் துணியும், கேக்கும், பிரியாணி விருந்தும் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

நமது கோவில் திருவிழா?

வரிப் பிரிக்க வேண்டும்,
மேளத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும்,
சப்பரம் தூக்க வேண்டும்,
வெடி போட வேண்டும்,
நவ நாட்களில் தினமும் சாப்பாடு போட வேண்டும்,
பத்தாவது திருநாளில் மட்டன் சாப்பாடு போட வேண்டும்.

எத்தனை பேர் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்?

எத்தனை பேர் முழுப் பூசை காண்கிறோம்?

எத்தனை பேர் பக்தியுடன் நற்கருணை வாங்கி, நற்கருணை நாதருடன் உரையாடுகிறோம்?

விழா நாட்களில் பக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

ஆடம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமா?


ஆன்மாவுடன் உடலும் இருப்பதால் உடல் சார்ந்த அம்சங்களும் ஆன்மீகத்தில் தேவைதான்.

ஆனால் எதற்காக எது?

ஆன்மாவுக்காக உடலா?
உடலுக்காக ஆன்மாவா?

பரிசுத்தத் தனத்தில் ஆன்மா வளர்வதற்கு உடல் உதவிகரமாக இருக்க வேண்டும். இடையூறாக மாறி விடக்கூடாது.

பாவ சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது.

இதற்கு பாவம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று அர்த்தமா?

நாம் பாவ மன்னிப்பைப் பற்றிக் கவலைப் படவில்லை என்று அர்த்தமா?

நம்மிடம் நம்பிக்கை குறைந்து விட்டது என்று தான் அர்த்தம்.

நமது முதல் தாயிடம் இருந்த நம்பிக்கை இன்மை நம்மையும் தொற்றிக் கொண்டது என்று அர்த்தம்.

விசுவாசத்தின் தந்தை அபிரகாமையும்,

விசுவாசத்தின் தாய் நமது அன்னை மரியாளையும் பற்றி தியானிப்போம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment