Thursday, July 4, 2024

"இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர்."(மத்தேயு.9:11)

"இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 
"உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர்."
(மத்தேயு.9:11)

 சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த
மத்தேயுவை இயேசு
 "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 


பின்பு அவர் தன்னுடைய வீட்டில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் விருந்தளித்தார்.

வரி தண்டுபவர்களும், பாவிகளும் விருந்தில் கலந்து கொண்டார்கள்.

அவர்களைப் பார்த்த பரிசேயர் அவருடைய சீடரிடம், 

"உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும், பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர். 


இதைக் கேட்ட இயேசு,

 "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.

பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 

நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததால் அவர்களுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் பாவிகள் தான்.

பரிசேயர்களும் பாவிகள் தான்.

ஆனால் அவர்கள் தங்களைப் பரிசுத்தவான்கள் என்று என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

வரி தண்டுபவர்களைப் பாவிகள் என்று எண்ணினார்கள்.

அவர்கள் கருத்துப்படி மத்தேயு ஒரு பாவி.

பாவியின் வீட்டில் பாவிகளோடு இயேசு விருந்து அருந்தினார் என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு.

ஆனால் உண்மையில் இயேசு பாவியின் வீட்டில் பாவிகளோடு விருந்து அருந்தியது ஒரு குற்றமே அல்ல.

ஏனெனில் பரிசுத்தராகிய இறைமகன் பாவிகளை மீட்கவே உலகில் மனிதனாகப் பிறந்தார்.

பாவிகளைத் தேடி வந்தவர் அவர்கள் வீட்டில் விருந்து உண்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

 அவரிடம் குறை கண்ட பரிசேயர்களும் அவரால் தான் மீட்கப் பட முடியும்.

ஆனால் அவர்கள் இயேசுவை மீட்பர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

தாங்கள் பாவிகள் என்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

தன்னிடம் நோய் இருப்பதை நோயாளி ஏற்றுக் கொண்டால்தான் அவனைக் குணப்படுத்த முடியும்.

இந்தப் பாடத்தை நாம் பரிசேயர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

பாவிகளாகிய நமக்காகத்தான் இயேசு திருச்சபையை ஏற்படுத்தினார்.

பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை பாவிகளின் கூடாரம்.

பாப்பரசர் முதல் அடிமட்டக் கிறிஸ்தவன் வரை அனைவரும் மீட்கப் பட வேண்டிய பாவிகள்தான்.

மருத்துவ மனை நோயாளிகளின் கூடாரம், நோயாளிகளைக் குணமாக்கும் கூடாரம்.

அதுபோல திருச்சபை பாவிகளை மீட்பதற்காக நிருவப்பட்டிருக்கும் கூடாரம்.

பாவங்கள் மன்னிக்கப்படும் போதுதான் நமது ஆன்மா பரிசுத்தமடைகிறது.

ஏழு தேவத்திரவிய அனுமானங்களும் நாம் பரிசுத்தத் தனத்தில் வளர்வதையே மையமாகக் கொண்டவை.

ஞானஸ்நானம் நமது சென்மப் பாவத்திலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது.

வளர்ந்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றால் சென்மப் பாவத்தோடு கர்மப் பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன.

பாவசங்கீர்த்தனம் நமது கர்மப் பாவங்களை மன்னிக்கிறது.

உறுதிப்பூசுதல் நமது பரிசுத்தத் தனத்தை வளர்ப்பதோடு நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறது.

திவ்ய நற்கருணை நாதர் நமது ஆன்மாவின் உணவாக வந்து நமக்கு பாவத்துக்கு எதிரான சக்தியைத் தருகிறார்.

அவரது பரிசுத்தத்தனத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

குருத்துவம் நமது பாவங்களை மன்னிக்கும் குருக்களை உருவாக்குகிறது.

திருமணம் மணமக்களை பரிசுத்தத்தனத்தில் இணைத்து அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கையை ஆரம்பித்து வைக்கிறது.

அவஸ்தைப் பூசுதல் விண்ணக வாழ்வுக்குள் நுழைய நமக்கு இறுதித் தயாரிப்புக் கொடுக்கிறது.

தேவத்திரவிய அனுமானங்களில் நம்மில் செயல்படுபவர் பரிசுத்த ஆவியானவர்.

பரிசேயர்களைப் போல் அல்லாமல் நாம் ஒவ்வொருவரும் பாவி என்பதை ஏற்றுக் கொள்வோம்.

பாவங்களுக்காக வருத்தப் படுவோம்.

இறை மகன் இயேசுவின் பிரதிநிதிகளாகிய குருக்களிடம் பாவங்களை சங்கீர்த்தனம் செய்வோம்.

பாவ மன்னிப்புப் பெறுவோம்.

பரிசுத்தத்தனத்தில் வளர்வோம்.

பரலோகத் தந்தையின் வீட்டுக்குள் நுழைவோம்.

பரிசுத்தத் தமதிரித்துவக் கடவுளின் ஐக்கியத்தில் என்றென்றும் பேரின்பமாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment