'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."
(மத்தேயு.8:34)
இயேசு கதரேனர் வாழ்ந்த பகுதியில் , பேய் பிடித்த இருவரைக் குணமாக்கினார்.
அதைக் காண வந்த நகர மக்கள் அவரைத் தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டினர்.
அவர்களில் இருவரை இருவரை இயேசு குணமாக்கியிருக்கிறார்.
முறைப்படி மக்கள் அவரை ஊருக்குள் வரவேற்று, அவருக்கு நன்றி கூறியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் நகருக்குள் வர விடாமல் தடுத்ததோடு
அவரை அவ்விடத்தை விட்டு போகச் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
ஆனால் நாம் யூகிக்கலாம்.
கதரேனர் புறசாதியினர். பன்றி வளர்க்கும் தொழிலையும் செய்து வந்தவர்கள்.
இயேசு யூதர். அவர்கள் வளர்த்து வந்த பன்றிகளைக் கடலுக்குள் அனுப்பி விட்டார். பன்றிகள் இறந்து விட்டன.
அந்தக் கோபம் அவர்களுக்கு இருந்திருக்கும்.
அவர்கள் ஆன்மீகத் தாகம் உள்ளவர்கள் அல்ல.
தங்கள் உலகைச் சார்ந்த சொத்தைக் கடலுக்குள் அனுப்பிய ஆன்மீகவாதியை நகருக்குள் விட அவர்களுக்கு மனதில்லை.
அவர் செய்த உதவியை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
இயேசுவுக்கு அவர்களுடைய மன நிலை தெரியும்.
ஆனாலும் அவர்களைத் தேடி கடல் கடந்து வந்தார்.
இருவரைக் குணமாக்கினார்.
நகரினர் அவரை உள்ளே விடாததால்
இயேசு படகேறி மறு கரைக்குத் தம் சொந்த நகருக்குச் சென்றார்.
இயேசு யூதராக இருந்தாலும் இறைமகனாகிய அவர் தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மக்களின் மீட்புக்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.
ஆகவே தான் கதரேனர்களைத் தேடி தனது சீடர்களுடன் வந்தார்.
அவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
பைபிள் நிகழ்வுகளைப் பார்க்கும் போது சினிமா பார்ப்பது போல வெளியிலிருந்து பார்க்கக்கூடாது.
நிகழ்வுக்குள் இயேசுவோடு நாமும் இருக்க வேண்டும்.
நிகழ்வு நம்மையும் பாதிக்க வேண்டும்.
இயேசு இருவரைக் குணமாக்கும் போதும், நகரினர் அவரை நகரை விட்டு போகச் சொன்னபோதும் நாம் அங்கே நின்று இயேசுவின் முகத்தைப் பார்க்க வேண்டும்.
யாருடைய ஆன்மீக மீட்புக்காக விண்ணிலிருந்து இறங்கி மண்ணுக்கு வந்தாரோ,
யார் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக துன்பங்கள் நிறைந்த மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டாரோ
அவர்கள் அவரைப் பார்த்து,
"நீர் எங்களிடம் வர வேண்டாம், போய்விடும் '' என்று சொன்னால் அவருடைய முகபாவனை எப்படி இருக்கும் என்பதை நாம் நேரில் பார்க்க வேண்டும்.
ஏனெனில் நாமும் அநேக சமயங்களில் அந்த மக்கள் செய்ததைத்தான் செய்கிறோம்.
நாம் எத்தனை முறை இயேசுவைப் பொறுத்த மட்டில் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் நடந்து கொள்கிறோம்!
திருப்பலியில் கலந்து கொள்ளும் போது எத்தனை முறை பலிபீடத்தையும், குருவானவரையும் பார்க்காமல்
அக்கம் பக்கத்தையும், Cell phone ஐயும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம்!
எத்தனை முறை வாயால் செபம் செய்துகொண்டு, சிந்தனையில் உலகெங்கும் வலம் வந்து கொண்டு இருந்திருக்கிறோம்!
எத்தனை முறை வாசகங்கள் வாசிக்கும் போதும், குருவானவர் பிரசங்கம் வைக்கும் போதும் காது கொடுத்துக் கேட்காமல் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறோம்!
எத்தனை முறை திருவிருந்து அருந்திவிட்டு ஆண்டவரிடம் பேசாமல் அருகில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம்!
எத்தனை முறை காலையில் கட்டிலை விட்டு எழும்போது கடவுளை நினையாமல் காபியை நினைத்துக் கொண்டு எழுந்து இருந்திருக்கிறோம்!
பகல் 12 மணி நேரமும் எதைப்பற்றி எல்லாமோ நினைக்கும் போது கடவுளைப் பற்றி எவ்வளவு நேரம் நினைக்கிறோம்?
அந்த மக்கள் இயேசுவைத் தங்களை விட்டுப் போகச் சொன்னார்கள்.
நாம் அவரை அருகில் வைத்துக் கொண்டு அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறோம்!
நினைத்துப் பார்ப்போம்.
நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் இயேசுவை
நாமும் எப்போதும் நினைத்து அவருக்காகவே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment