கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது,
"அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று கூறினார்.
மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த போது
அவள் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு.
''ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.
அதாவது மரியாள் ஆண்டவர் அவளுக்குச் சொன்னவை யாவும் நிறைவேறும் என்று விசுவசித்தாள்.
"அதாவது தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் இயேசுவுக்கு அளிப்பார் என்றும்
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார் என்றும் விசுவசித்தாள்"
அவளது விசுவாசம் எப்படி நிறைவேறியது என்று தியானிப்போம்.
விசுவாசத்தின் தந்தையாகிய அபிரகாம் கடவுளின் உத்தரவுக்கு அப்படியே கீழ்ப்படிந்து தனது விசுவாசத்தை நிரூபித்தார்.
அபிரகாமைப் பொறுத்த மட்டில் அவரது மகனைப் பலி கொடுக்கும்படி ஆண்டவர் கேட்டார்.
அபிரகாம் கீழ்ப்படிந்தார், ஆனால் கடவுள் அவரது விசுவாசத்தை ஏற்றுக் கொண்டு பலியிட வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
மரியாளின் விசயத்தில் மரியாள் தனது ஒரே மகனை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பரம தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து தன் விசுவாசத்தை நிரூபித்தார்.
தாவீதின் சிம்மாசனத்தில் இயேசு அமர்வார் என்று மரியாள் விசுவசித்தாள்.
அப்படித்தான் கபிரியேல் தூதர் கூறினார்.
இயேசுவைப் பொறுத்த மட்டில் அவரது சிந்தனை நமது லௌகீக சிந்தனைகளுக்கு எதிர்மாறானது.
நமது கருத்துப்படி முதன்மையானவர்கள் இயேசுவின் கருத்துப்படி கடைசியானவர்கள்.
மனித கருத்துப்படி சிலுவை குற்றவாளிகளின் தண்டனைக் கருவி.
இயேசுவுக்கு சிலுவை தான் சிம்மாசனம், அரசரின் ஆட்சி பீடம்.
இயேசு மிகுந்த பாடுபட்டு அந்த சிம்மாசனத்தைக் கைப்பற்றினார்.
அவர் சென்ற சிலுவைப் பாதையில் அன்னை மரியாளும் உடன் நடந்தாள்.
அவரது பாடுகளில் அவளும் பங்கெடுத்துக் கொண்டாள்.
இயேசு கற்றூணில் கட்டப்பட்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அடி வாங்கியபோது அவரில் அவள் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகனைப் பார்த்தாள், அவரை இறைமகன் என்று விசுவசித்தாள்.
அவர் உடலில் வாங்கிய அடியை அவள் உள்ளத்தில் வாங்கினாள்.
முள்முடி சூட்டப்பட்டு, துப்பப்பட்டு, அவமானப் படுத்தப்பட்ட போது தன் மகனில் இறைமகனை விசுவசித்தாள்.
இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து சென்றபோதும்,
மூன்று முறை குப்புற விழுந்த போதும்,
வழியெல்லாம் அவரது இரத்தம் ஆறாக ஓடிய போதும்,
கல்வாரி மலையில் அவர் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்ட போதும்,
அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும்,
அவரைப் பார்த்தவர்கள் அவர்மீது இரக்கப் படுவதற்குப் பதில் அவமானமான வார்த்தைகளால் அவரைத் திட்டித் தீர்த்போதும்
அவரைப் பெற்ற மனது என்ன பாடு பட்டிருக்கும்!
இவற்றை எல்லாம் மௌனமாகச் சகித்துக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தாள்.
இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதனில் சர்வ வல்லவக் கடவுளைப் பார்ப்பது மிகவும் கடினம்.
ஆனால் மரியாள் ஆழமாக விசுவசித்தாள்.
இவ்வளவு பாடுகளையும் பட்டது எல்லாம் வல்ல இறைமகனே என்று விசுவசித்தாள்.
சிலுவைச் சிம்மாசனத்தில் தொங்கியபடி இயேசு தனது மரணத்துக்குக் காரணமான, யூதாஸ் உட்பட, அனைவரையும் மன்னித்தார்.
சிலுவைச் சிம்மாசனத்தில் இருந்து தான் தனது பாடுகளின் பயனால் மீட்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களையும் அரசாள்கிறார்.
மோட்சத்தில் தொடரும் அவரது ஆட்சிக்கு முடிவிராது.
அரசகுல குடும்பத்தைச் சேர்ந்த அவரது அனைத்துக் குடிமக்களும் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வர்.
இயேசு இறந்தபின் அவரது உடலை அவளது மடியில் கிடத்தினார்கள்.
33 ஆண்டுகளுக்கு முன் பால் குடிப்பதற்காக மடியில் விளையாடிய குழந்தை
33 வயது சடலமாக மடியில் கிடந்தது அவளது உள்ளத்தை என்ன பாடு படுத்தியிருக்கும்.
அதையெல்லாம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகக் கடவுளாகிய தன் மகன் மூலமாக பரம தந்தையிடம் ஒப்புக் கொடுத்தாள்.
நாமும் அவளது பிள்ளைகள் தானே!
இவ்வளவு பாடுகளுக்கு மத்தியில் இயேசுவும் அன்னை மரியாளும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களா?
ஏற்கனவே நமக்குத் தெரியும் உலக சிந்தனைகளும், இயேசுவின் சிந்தனைகளும் எதிர் மாறானவை என்று.
ஏன் இவ்வளவு வேதனை?
வேதனைக்கு எதிர்ப்பதம், பேரின்பம்.
இயேசுவின் வேதனை, நமக்குப் பேரின்பம்.
நமது நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான் இயேசு இவ்வளவு வேதனையை ஏற்றுக் கொண்டார்.
இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு.
நாம் நிலை வாழ்வு பெறும் பொருட்டு தான் இயேசு சிலுவையில் மரணம் அடைந்தார்.
பாவம் இயேசுவுக்கு எதிரானது.
இயேசு அனைவருக்கும் நண்பர்.
அவருக்கு எதிராகப் பாவம் செய்பவர்கள் சாத்தானின் நண்பர்கள், கடவுளுக்கு எதிரிகள்.
இயேசு தன்னை எதிர்ப்பவர்களையும் நேசிக்கிறார்.
அவர்களைத் தனது நண்பர்களாக மாற்ற விரும்புகிறார்.
அவர்கள் நண்பர்களாக மாற அவர்களது பாவங்கள் மன்னிக்கப் பட வேண்டும்.
அதற்காகத்தான் பாடுகளும், பாவப் பரிகாரமும்.
நம்மை நண்பர்கள் ஆக்க,
அவரது அளவு கடந்த அன்பை நமக்குக் காட்ட
இயேசு தனது உயிரைக் கொடுக்கிறார்.
"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை."
ஆக அவரது துன்பத்தில் நமது இன்பம்.
சிலுவை நமது ஆன்மீக அரசரின் அரியாசனம்.
சிலுவை அன்பின் ஊற்று.
சிலுவை நமது சுமையை ஏற்றுக் கொண்டு நமக்கு இளைப்பாற்றி தரும் இடம்.
சிலுவை நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்கான அடையாளம்.
ஆன்மீகப் போரில் சிலுவை நமது கவசம்.
சிலுவை மூவொரு இறைவனை நம்மிடம் வரவழைக்கும்.
நாம் சிலுவை அடையாளம் போடும்போது மூவொரு தேவன் நமக்குள் இறங்குகிறார்.ண
சிலுவை சாத்தானை விரட்டும்.
ஒரு சிலுவைக்காக இயேசு 33 ஆண்டுகள் காத்திருந்தார்.
நாம் இயேசுவுக்காக சிலுவை அடியில் காத்திருப்போம்.
லூர்து செல்வம்.