Sunday, March 31, 2024

"அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்."(லூக்கா நற்செய்தி 24:30)

"அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்."
(லூக்கா நற்செய்தி 24:30)

இறைமகன் எதற்காக மனிதனாகப் பிறந்தார்?

பின்வரும் வசனத்தில் அதற்கான பதில் இருக்கிறது.

" உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்."
(தொடக்கநூல் 3:15)

மனுக்குலத்தின் பாவத்திற்குக் காரணமான சாத்தானை நோக்கிக் கடவுள் கூறிய வார்த்தைகள் இவை.

1."உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்."

2."உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்."

1.பழைய ஏற்பாட்டின் முதற் பெண்மணி ஏவாள்.

புதிய ஏற்பாட்டின் முதற் பெண்மணி மரியாள்.

ஏவாளை ஏமாற்றிய பாவத்துக்குத்
தண்டனையாக மரியாள் சாத்தானின்  தலையை நசுக்குவாள்.

ஏவாளை வென்ற சாத்தான் மரியாளிடம் தோற்பான்.

இது சாத்தானுக்கான தண்டனையின் முதல் பகுதி.

2. சாத்தானின் வித்து பாவம்.
மரியாளின் வித்து இயேசு.

இயேசு பாவத்தைத் தோற்கடிப்பார்.

சாத்தானின் முயற்சியால் மனுக்குலத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாவத்தை இயேசு வெல்வார்.

மனுக்குலத்தின் பாவத்தை மன்னித்து அதை அழிப்பார்.

பாவ மன்னிப்பு தான் இயேசு மனிதனாகப் பிறந்ததன் ஒரே நோக்கம்.

அவர் செய்த மற்ற எல்லா செயல்களும் அதை மையமாக வைத்து செய்யப்பட்டவை.

அவர் நற்செய்தியை அறிவித்தது, நோயாளிகளைக் குணமாக்கியது,  
பாடுகள் பட்டது, சிலுவையில் மரணம் அடைந்தது ஆகிய எல்லாம் பாவ மன்னிப்பை மையமாக வைத்து செய்யப்பட்டவையே.

மனித குலப் பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான் பாடுகள் பட்டார், சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப் பட்ட பலிப் பொருள்.

வெள்ளிக்கிழமை பலியாக ஒப்புக் கொடுக்கப் பட்டார்.

வியாழக்கிழமை பலிப் பொருளை சீடர்கள் உண்பதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அவரது வாழ்க்கையின் நோக்கம்,

பாவ மன்னிப்பு.

அதற்காக

சிலுவைப் பலி,

பலிப்பொருளை உண்பதற்காக

திவ்ய நற்கருணை.


பாவ மன்னிப்பு.
 பலி,
திவ்ய நற்கருணை.

ஆகியவற்றை 
விசுவசிப்பவர்கள் தான் இயேசுவை விசுவசிப்பவர்கள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் பாவ மன்னிப்புக்கான பாவ சங்கீர்த்தனத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

திருப்பலியை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொள்கிறோம்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் பைபிளில் உள்ள இந்த மூன்றையும் ஏற்றுக் கொள்வதில்லை.

உண்மையில் அவர்கள் கிறித்தவர்கள் அல்ல.

சுய சம்பாத்தியத்துக்காக  இயேசு என்னும் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

ஆதித் திருச்சபையில் திருப்பலிக்குப் பெயர் அப்பம் பிட்குதல்.

புனித வியாழனன்று இயேசு அப்பத்தைப் பிட்டு முதல் திருப்பலியை  நிறைவேற்றினார்.

எம்மாவு அனுபவம்:

இயேசு உயிர்த்தபின் அதை நம்பாத இரண்டு சீடர்கள் 

  எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள எம்மாவு என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் இயேசுவைக்  குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 


இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 

ஆனால் அவர் யார் என்று அவர்கள் உணரவில்லை.

தான் உயிர்த்ததை  அவர்கள் நம்பாததைத்  தெரிந்துதான் அவர் அவர்களுடன் சென்றார்.

இயேசுவைப் பற்றி இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். 

அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 

அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள்.

 அவர்  அவர்களோடு சென்றார். 

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்."


இயேசு உயிர்த்ததை நம்பாத சீடர்கள் முன் அவரே அப்பத்தைப் பிட்டு திருப்பலி நிறைவேற்றித் தன்னையே அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.


அப்போது அவர்கள்   அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். 

உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

எம்மாவு ஊரில் இயேசு நிறைவேற்றிய திருப்பலியைப் பற்றித் தியானித்தால் மற்றோரு உண்மை மனதில் படும்.

என்ன உண்மை?

எம்மாவு திருப்பலியை ஒட்டி தான் இன்றைய திருப்பலி அமைந்திருக்கிறது.

1.Breaking of the Word.
2.Breaking of the Bread.

முதலில் இயேசு பைபிள் வசனங்களை சொல்லி அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்.

இன்றைய திருப்பலியில் பைபிளிலிருந்து வாசகங்கள் வாசிக்கப் படுகின்றன.

குருவானவர் அவற்றை விளக்கி பிரசங்கம் வைக்கிறார்.

வார்த்தை வழிபாடு முடிந்த பின் 
குருவானவர் வசீகர வார்த்தைகள் மூலம் அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றுகிறார்.

அடுத்து இயேசுவை நமக்கு உணவாகத் தருகிறார்.

முழுமையாக வார்த்தை வழிபாட்டிலும், நற்கருணை வழிபாட்டிலும் கலந்து கொண்டால்தான் நாம் முழுப் பூசை காண்கிறோம்.

அரைகுறையாகப் பூசை காண்பது பூசையே காணாததற்குச் சமம்.

பாடம் கற்கும் மாணவன் வகுப்பு ஆரம்பித்ததற்கு முன்பே வகுப்பிற்குள் சென்று விட வேண்டும்.

பள்ளிக்கூடம் முடிந்த பின்பு தான் வெளியேற வேண்டும்.

இஷ்டப்பட்ட நேரத்திற்கு வந்து இஷ்டப்பட்ட நேரத்துக்கு வெளியேறுபவன் மாணவன் அல்ல.

இஷ்டப்பட்ட நேரத்திற்கு திருப்பலிக்கு வந்து இஷ்டப்பட்ட நேரத்திற்கு வெளியேறுபவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

திரு உணவை கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையுடன் அருந்த வேண்டும்.

தின் பண்டத்தை வாங்குவது போல் நற்கருணையை வாங்கி வாயில் போடுபவர்கள் இயேசுவை அவமதிக்கிறார்கள்.

இயேசுவை இயேசுவாக வாங்கினால் தான் அவரது ஆசீர் நம்மோடு தங்கும்.

நாமும் நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, March 30, 2024

வாழ்வெல்லாம் தவக்காலம்.

வாழ்வெல்லாம் தவக்காலம்.

நாற்பது நாட்கள் தவவாழ்வு வாழ்ந்தோம்.

செபத்திலும் தவத்திலும் தானத்திலும் வாழ்ந்தோம்.

கால அட்டவணைப்படி தவக்காலம் முடிந்து விட்டது.

அப்படியானால் செபமும் தவமும் தானமும் முடிந்து விட்டனவா?

காலையில் 9.30க்கு மணியடிக்கிறது.

மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளுக்குள் செல்கிறார்கள்.

ஆசிரியர்களும் செல்கிறார்கள்.

பாடங்கள் போதிக்கப் படுகின்றன.

மாணவர்கள் பாடம் கற்கிறார்கள்.

மாலை 4.30க்கு‌ மணியடிக்கிறது.

பள்ளிக்கூடம் முடிந்து விட்டது.

மாணவர்கள் பாடம் கற்பது முடிந்து விட்டதா?

பள்ளிக்கூடம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் மாணவர்கள் மாணவர்கள் தான்.

கற்பது மாணவர்களின் கடமை தான்.

ஆணும் பெண்ணுமாக இருந்தவர்கள் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும்போது கணவன் மனைவி ஆகிறார்கள்.

தாலி கட்டி முடிந்தவுடன் கணவன் மனைவி உறவு முடிந்து விட்டதா?

இல்லை.

அதற்குப் பின்பு தான் ஆரம்பித்த உறவு தொடர்கிறது.

அதே போல் தான் கால அட்டவணைப்படி தவக்காலம் முடிந்து விட்டாலும் 

செப தவ தான வாழ்வு தொடர்கிறது.

வாழ்க்கை கால அட்டவணைக்குக் கட்டுப்பட்டது அல்ல.

நாம் கிறிஸ்தவர்கள்.

இயேசுவாக வாழ வேண்டியவர்கள்.

இயேசுவின் வாழ்க்கையே செப, தவ, தான வாழ்க்கை தான்.

இறைவனோடு இணைந்து வாழ்வதுதான் செபம்.

Prayer is to be in union with God.
 
அவரே கடவுள்.

தந்தையோடும், பரிசுத்த ஆவியோடும் ஒருவருள் ஒருவர் இணைந்து நித்திய காலமாக வாழ்பவர் இறைமகன் இயேசு.

அப்படியானால் இயேசுவே செபம்.

அவர் செப வாழ்க்கையைக் கால அட்டவணை போட்டு வாழவில்லை.

அவர் நித்திய காலமாக வாழ்ந்து கொண்டிருப்பதே செப வாழ்க்கைதான்.

அவராக நாம் வாழ வேண்டுமெனாறால் நாம் வாழ்நாள் முழுவதும்,

கால அட்டவணை போட்டு அல்ல,

அவரது பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

தன்னைத்தானே ஒறுத்து வாழ்வதில் தவம் அடங்கியிருக்கிறது.


சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன்

பாவம் தவிர மற்ற மனித பலகீனங்களையும ஏற்று மனுமகனாகப் பிறந்தார்.

தேவ சுபாவத்தில் சர்வ வல்லமை வாய்ந்த இயேசு மனித சுபாவத்தில் மனித பலகீனங்களை ஏற்று வாழ்ந்ததே மிகப்பெரிய தவ வாழ்வு.

நாசரேத்தில் சொந்த வீடு இருக்கும்போது பிறப்பதற்கு பெத்லகேமில் உள்ள சாண நாற்றம் வீசிய மாட்டுத் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார்.

தன்னைக் கொல்ல நினைத்த ஏரோதுவை அழிக்க ஒரு வார்த்தை போதும்.

ஆனால் அவர் அதைச் செய்யாமல் தனது பெற்றோருடன் எகிப்துக்குப் தப்பியோடினார்.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் அப்பங்களாக மாற்றத் தெரிந்த அவர்

அன்றாட உணவுக்கு தச்சுத் தொழில் செய்தார்.

அவரது பாடுகளும் சிலுவை மரணமும் அவரது தவ வாழ்வின் உச்சக்கட்டம்.

நாம் தவக்காலத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே தவ வாழ்வு வாழ வேண்டும்.

நாம் ஏற்கனவே பலகீனர்கள்.

நமது பலகீனங்களை ஏற்றுக் கொள்வதே மிகப்பெரிய தவ முயற்சி.

நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும், அசௌகர்யங்களையும்,
வசதியின்மைகளையும்

முழுமனதுடன் ஏற்றுக் கொண்டாலே நமது வாழ்வு தவ வாழ்வாக மாறிவிடும்.

நாம் ஏற்றுக்கொள்ளா விட்டாலும்
நமது வாழ்வில் துன்பங்களும், அசௌகர்யங்களும்,
வசதியின்மைகளும்

இருக்கத்தான் செய்யும்.

ஆனால் வீணாகிவிடும்.

ஆண்டவருக்காக அவற்றை ஏற்றுக் கொண்டால் அவை நமக்கு நித்திய பேரின்பத்தைப் பெற்றுத் தரும்.

ஒருவர் தன்னை முழுமையாகத் தன் நண்பருக்குத் தானமாகக் கொடுப்பதைவிடப் பெரிய தானம் இருக்க முடியுமா?

இயேசு அதைத்தான் செய்தார்.

சர்வ வல்லப கடவுளாகிய அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்து,

நம்மைத் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டதோடு,

நமது மீட்புக்காகத் தன்னையே தானமாக அர்ப்பணித்ததோடு,

தன்னையே நமக்குத் தினமும் உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

இதை விடப் பெரிய தானம் இருக்க முடியாது.

ஆக செப, தவ, தானத்தையே தனது வாழ்வாகக் கொண்டிருந்தவர் இயேசு.

இயேசு எவ்வழி, அவரது சீடர்கள் அவ்வழி.

நாமும் அவரோடு இணைந்து செப வாழ்வு வாழ்வோம்.

வாழ்வின் வசதியின்மைகளை
ஆன்மீக அருள் ஈட்டும் வசதிகளாக ஏற்று தவ வாழ்வு வாழ்வோம்.

இறைப் பணிக்கும், பிறர் அன்புப் பணிக்கும் நம்மை முழுமையாக அர்ப்பணித்து தான வாழ்வு வாழ்வோம்.

பொருட்களை மட்டும் கொடுப்பது தானமல்ல. அதோடு நமது அன்பையும், நல்ல மனதையும் சேர்த்துக் கொடுப்பது தான் தானம்.


நமது செப, தவ, தான வாழ்வு நாற்பது நாள் தவக்காலத்தோடு முடிந்து விடவில்லை,

வாழ்நாழெல்லாம் தொடர்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை தவக்காலம் வருவது

 செப, தவ, தான வாழ்வை நாம் மறந்து விடாமலிருக்க 

நமக்கு ஞாபகப் படுத்துவதற்காகத்தான்.

நமது வாழ் நாளெல்லாம் நமக்குக் தவக்காலம் தான்.

நமது வாழ்நாள் முடியும் போது நித்திய பேரின்ப வாழ்வு ஆரம்பிக்கும்.

‌லூர்து செல்வம்.

இயேசு உயிர்த்தார், நாமும் உயிர்ப்போம்.

இயேசு உயிர்த்தார்,
 நாமும் உயிர்ப்போம்.


உடலைவிட்டு ஆன்மா பிரிவது மரணம்.

உடலோடு ஆன்மா இணைவது?

மரணத்தின் போது மட்டும் தான் ஆன்மா உடலை விட்டுப் பிரியும்.

ஆனால் மூன்று சந்தர்ப்பங்களில் ஆன்மா உடலோடு. இணையலாம்.

1. கணவனும் மனைவியும் சேர்ந்து உடலை உருவாக்கும் போது கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மா உடலோடு இணையும் போது தாயின் வயிற்றில் குழந்தை உற்பவிக்கிறது.

முதல் சந்தர்ப்பம் உற்பவம்.

2.இலாசருக்கு உடல் நலம் இல்லை என்று இயேசுவுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் இயேசு வருமுன் அவனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து விட்டது.

இயேசு வந்து அவனுக்கு உயிர் கொடுக்கிறார்.

இப்போது அவனுடைய ஆன்மா அவனுடைய உடலோடு இணைகிறது,

அதாவது அவன் உயிர் பெறுகிறான்.

இறந்தவனுடைய ஆன்மா கடவுள் செய்யும் புதுமையால் உடலோடு இணைவது இரண்டாவது சந்தர்ப்பம்.

3. இயேசு வெள்ளிக்கிழமை மாலை இறக்கிறார்.

மரித்த மூன்றாம் நாள் இயேசுவின் ஆன்மா அவருடைய உடலோடு இணைகிறது, 

அவர் உயிர்க்கிறார்.

இறந்த இலாசர் உயிர் பெற்றான்

இயேசு உயிர்த்தார்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

உயிர் பெற்ற இலாசர் இப்போது இல்லை.

அவன் திரும்பவும் இறந்தான்.

ஆனால் 

இயேசு இப்போதும் இருக்கிறார், எப்போதும் இருப்பார், மோட்சத்தில்.

ஏன் உயிர்த்த இயேசுவால் திரும்ப இறக்க முடியாது?

ஆன்மா ஒரு ஆவி. (Spirit) ஒரு முறை படைக்கப்பட்ட பின் அதற்கு மரணம் கிடையாது.

ஆனால் நமது உடல் ஒரு சடப்பொருள். சடப்பொருளுக்கு அழிவு உண்டு.

அதனால் தான் நாம் இறந்தவுடன் நமது உடல் மண்ணுக்குத் திரும்பி விடுகிறது.

மரித்த இயேசு உயிர்த்தபோது அவரது உடல் ஆவிக்குரிய தன்மையைப் பெற்று விட்டது.

His physical body became a spiritual body.

ஆவிக்குரிய தன்மையைப் பெற்று விட்ட உடலால் திரும்ப மரிக்க முடியாது.

Spiritual body cannot die.

அதனால் தான் உயிர்த்த இயேசு இன்னும் மோட்சத்தில் உயிரோடு இருக்கிறார்.

இப்போது உலகில் உயிர் வாழும் நாமும் ஒரு நாள் மரிப்போம்.

உலக முடிவில் நாமும் உயிர்ப்போம்.

அதற்குப் பிறகு நமது  Spiritual body யோடு மோட்சத்தில் என்றென்றும் வாழ்வோம்.

இயேசு உயிர்த்ததுக்கும் நாம் உயிர்க்கப் போவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

இருக்கிறது.

இயேசு சொந்த வல்லமையால் உயிர்த்தார்.

நாம் இயேசுவின் வல்லமையால் உயிர்ப்போம் .

அவரின்றி நமது ஒரு அணுவும் அசையாது.

நமது physical body க்கும், 
Spiritual body க்கும்
 என்ன வித்தியாசம்?

physical body சடப் பொருள். இடத்துக்கும், நேரத்துக்கும் உட்பட்டது.

Spiritual body இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

அது வாழப்போகும் மோட்சம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

physical body உலகில் இடத்தை அடைத்துக் கொள்ளும்.

ஒரு உடல் இருக்கும் இடத்தில் இன்னொரு உடல் இருக்க முடியாது.

அது இடம் விட்டு இடம் பயணிக்கலாம்.

ஆனால் Spiritual body இருக்க இடம் தேவையில்லை.

அது இடம் விட்டு இடம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அது எங்கே இருக்க விரும்புகிறதோ அங்கே இருக்கும், ஆன்மாவைப் போல.

அன்னை மரியாள் தனது மாற்றம் அடைந்த உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் இருக்கிறாள்.

ஆகவே அவள் ஒரே நேரத்தில் விரும்புகிற இடத்தில் இருக்கலாம்,

உலகின் எந்த திசையிலிருந்து அவளை அழைத்தாலும் அவள் அங்கே இருப்பாள்.

மற்ற புனிதர்களின் ஆன்மாக்கள் மட்டுமே மோட்சத்தில் உள்ளன.

மற்ற புனிதர்கள் எப்படி தங்கள் ஆன்மாவோடு நினைத்த இடத்தில் இருக்கிறார்களோ 

அதேபோல் அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு நினைத்த இடத்தில் இருப்பாள்.

ஒரே நேரத்தில் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கானோர் அவளை நோக்கி வேண்டினாலும் 

அத்தனை பேர் வேண்டுதலையும் அவள் கேட்பாள்.

மோட்சம் நேரத்திற்கு அப்பாற்பட்டது.

அங்கு உலகில் இருப்பது போல நேற்று, இன்று, நாளை கிடையாது.

நாம் நாளை செய்யவிருக்கும் வேண்டுதல் இன்றே கடவுளுக்குத் தெரியும்.

நாம் நேர்மையாளர்களாக இருந்தால் நமது செபம் எப்போதும் கேட்கப்படும்.

நமது கணக்குப்படி கடந்த காலத்தில் இறந்தவர்களுக்காக இன்று கூட நாம் செபிக்கலாம்.

நமக்கு தான் கடந்த காலம்.

இறந்தவர்களுக்குக் காலம் கிடையாது.

இப்போது நமக்கு உடல் தரப்பட்டிருப்பது நமது ஆன்மாவுக்கு ஆன்மீக காரியங்களில் உதவுவதற்காகத்தான்.

நமது உயிர்ப்பின்போது ஆன்மீக உடலாக மாறவிருக்கும் நமது உடலைப் பாவ மாசின்றி காப்போம்.

உடல் ரீதியான சிற்றின்பத்தை ஒறுப்போம்.

நாம் நிலையான பேரின்ப வாழ்வுக்காகப் படைக்கப் பட்டவர்கள்.

நிலை வாழ்வை நோக்கமாகக் கொண்டு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, March 28, 2024

மூளை இல்லாத சாத்தானுக்கு நன்றி!

மூளை இல்லாத சாத்தானுக்கு நன்றி!


சாத்தானுக்கு ஏன் மூளை இல்லை?

மூளை இருந்திருந்தால் சிந்திக்கத் தெரிந்திருக்கும்.

ஆதி முதல் அவனது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவனுக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

இறைவன் கோடிக் கணக்கான சம்மனசுக்களைப் படைத்த போது லூசிபெரை (Lucifer) மிகவும் அழகு வாய்ந்தவராகப் படைத்தார்.

எந்த மூளை உள்ளவனாவது ஒன்றுமில்லாமையிலிருந்து
(From nothing) தன்னைப் படைத்தவரை விட 

தான் மேலானவன் என்று நினைப்பானா?

Lucifer நினைத்தார்.

அவரது தற்பெருமை அவரை விண்ணிலிருந்து நரகத்தில் தள்ளியது.

நரகத்தில் பாடம் கற்க முடியாது.

மூளையில்லாமை தொடர்ந்தது.

தற்பெருமை உள்ளவனுக்குச் சிந்திக்கத் தெரியாது.

தன்னைப் பற்றித் தவறான நினைப்பில் உள்ளவனால்

 மற்றவர்களைப் பற்றி சரியாக சிந்திக்க முடியாது.

ஆகவே தான் கடவுளின் அளவு கடந்த வல்லமையையும், அன்பையும் நினைத்துப் பார்க்கத் தெரியாமல்

அவரால் படைக்கப்பட்ட ஏவாளை ஏமாற்றினால் அவளையும் அவளது சந்ததியினரையும் மோட்சத்துக்குப் போக விடலாமல் தடுத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டான்.

ஏவாளை ஏமாற்றி கடவுளால் விலக்கப்பட்ட பழத்தைத் தின்ன வைத்தான்.

ஆனால் அவன் ஏவாளை ஏமாற்றிய‌ அதே நாளில் 


மனிதரை மீட்பதற்காகக்
கடவுள் மனிதனாகப் பிறக்கப் போகும் திட்டத்தை 

அவன் முன்னாலேயே அறிவித்து விட்டார்.

ஒரு பெண்ணை ஏமாற்றியதற்குத் தண்டனையாக 

இன்னொரு பெண் அவனது தலையை நசுக்குவாள் என்று முன்னறிவித்து விட்டார்.

அப்பெண்ணின் வித்துதான் மனுக்குலத்தை அவன் வித்திலிருந்து, அதாவது, பாவத்திலிருந்து மீட்பார் என்றும் முன்னறிவித்து விட்டார்.

ஆனால் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவனும் தீர்மானித்து விட்டான்.

அப்பெண்ணின் வித்தை அழித்து விட்டால் மனிதன் மீட்புப் பெறுவதைத் தடுத்து விடலாம் என்று எண்ணினான்.

அந்த பெண் யாரென்று அவன் அறிவதற்கு முன்பே கடவுள் மரியாளை சென்மப் பாவ மாசின்றி படைத்துவிட்டார்.

கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இயேசு பெத்லகேமில் பிறந்த அன்று விண்ணவர் பாடிய பாடல் அவன் காதில் விழுந்தது.

உடனே குழந்தையைக் கொல்லத் தீர்மானித்து விட்டான்.

அதற்காக ஏரோது மன்னனின் மனதுக்குள் புகுந்து அதற்கான ஏற்பாடு செய்தான்.

ஆனால் கபிரியேல் தூதரின் செயல்பாட்டினால் அவனது முயற்சி தோல்வி அடைந்தது.

இயேசு தனது பெற்றோருடன் எகிப்திலிருந்து திரும்பி

 நசரேத் ஊரில் தான் கடவுள் என்பதை மற்றவர்களுக்கு வெளிக் காட்டாமல் 

30 ஆண்டுகள் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

31வது ஆண்டில் பொது வாழ்வுக்குள் நுழையும் போது இயேசு தான் மீட்பர் என்று ஸ்நாபக அருளப்பர் அறிவித்தார்.


சாத்தான் அதை உறுதி செய்து கொள்ள அவரை மூன்று முறை சோதித்தான்.

 சோதனையை

  "நீர் இறைமகன் என்றால்"
 என்று ஆரம்பித்தான்.


மூன்றாவது சோதனையில்
இயேசு,

"அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்று கூறியவுடன் 

அவர்தான் மீட்பராகப் பிறந்த இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டான்.

அவரைக் கொன்று விட்டால் அவரது மீட்புத் திட்டத்தை முறியடித்து விடலாம் என்பது அவன் எண்ணம்.

ஆனால் இயேசு தனது மரணத்தின் மூலமாகத்தான் மனுக்குலத்தை மீட்கப் போகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரியாது.

ஆக அவனை அறியாமலே மீட்புத் திட்டத்தில் இயேசுவுக்கு உதவ ஆரம்பித்தான்.

அதாவது அவனை அறியாமலே தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தான்.

மறை நூல் அறிஞர்கள், பரிசேயர்கள், யூதாஸ் ஆகியவர்களின் துணையுடன் தனது திட்டத்தைத் தானே முறியடித்தான்.

அவனது அறியாமையை இயேசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தீமை செய்வது சாத்தானின் வேலை.

தீமையிலிருந்து நன்மையை வரவழைப்பது இயேசுவின் திறமை.

இன்று கூட சாத்தான் புத்தி இல்லாமல் தனக்கு எதிராகத்தான் செயல்புரிந்து கொண்டிருக்கிறான்.

யாருக்கு எதிர்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றனவோ அவர்களுக்குத் தான் எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தேவையான திறமை கிடைக்கும்.

யாரை சாத்தான் அதிகம் சோதிக்கிறதோ 

அவர் சோதனைகளை வெல்ல வரம் கேட்டு இறைவனிடம் செபிப்பார்.

கிடைக்கும் வரத்தால் ஆன்மீகத்தில் வளர்வார்.

இவ்வாறு நமது ஆன்மீக வளர்ச்சிக்குச் சாத்தானே காரணமாகி விடுகிறான்.

நோயாளி மருத்துவரை அதிகம் தேடுவது போல

சாத்தானால் அதிகம் சோதிக்கப் படுகிறவர்கள் இறைவனை அதிகம் தேடுவார்கள்.

இறைவனை அதிகம் தேடுபவர்கள் புனிதர்களாக மாறுவார்கள்.

புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் இது புரியும்.

சாத்தானால் அதிகம் சோதிக்கப் பட்ட யோபு பல மடங்கு கடவுளுக்குப் பிரியம் உள்ளவராக மாறினார்.

ஆக சாத்தானின் முயற்சியால் அநேகர் புனிதர்களாக மாறினார்கள்.

சாத்தான் சோதிப்பதற்காக நம்மைப் பார்த்தால் நாம் இயேசுவின் பக்கம் திரும்புவோம்.

சாத்தானை அவர் பார்த்துக் கொள்வார்.

நம்மை இயேசுவின் பக்கம் திரும்ப வைப்பவனே சாத்தான் தான்.


எதிரிகள் நெருங்கும் போது குழந்தை தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொள்வதுபோல 

சாத்தான் நம்மை நெருங்க நெருங்க நாம் இயேசுவை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்வோம்.

என் ஆண்டவரை நான் விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க எனக்கு உதவிக் கொண்டிருக்கும் சாத்தானே

உனக்கு என் நன்றி.

லூர்து செல்வம்.

Wednesday, March 27, 2024

மரிக்க முடியாதவர் மரித்தார்.

http://lrdselvam.blogspot.com/2024/03/blog-post_70.html


மரிக்க முடியாதவர் மரித்தார்.

"தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்."

இது கடவுளின் ஆறு பண்புகளில் ஒன்று.

தொடக்கமும் முடிவும் இல்லாத கடவுள் ஏன் தொடக்கமும் முடிவும் உள்ள,

அதாவது

பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்?

சாக்கடைக்குள் விழுந்தவனைத் தூக்க வேண்டுமென்றால் சாக்கடைக்குள் குதித்து தான் ஆக வேண்டும்.

மனிதன் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்யக் கடவுள் ஆசைப் பட்டால் அவர் மனிதனாகப் பிறந்து தான் ஆக வேண்டும்.

பாவப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.

கடவுளால் கஷ்டப்பட முடியாது. கஷ்டப்பட வேண்டுமென்றால் மனிதனாகப் பிறந்து தான் ஆக வேண்டும்.

ஆனால் கடவுளால் தனது தேவ சுபாவத்தைக் கைவிட முடியாது.

ஆகவே மனித சுபாவத்தை ஏற்றுக் கொண்ட கடவுளுக்கு இரண்டு சுபாவங்கள்.

இயேசு முழுமையாகக் கடவுள்.(Fully God)
முழுமையாக மனிதன்.(Fully Man)

பரிசுத்த திரித்துவம் என்றால்
கடவுள் ஒருவர், ஆட்கள் மூவர்.


இறைமகன் ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.

தேவ சுபாவத்துக்குத் துவக்கம் கிடையாது.

மனித சுபாவத்துக்குத் துவக்கம் உண்டு.

தேவ சுபாவத்துக்கு மரணம் கிடையாது.

மனித சுபாவத்துக்கு மரணம் உண்டு.

தேவ சுபாவம் துன்பப்பட முடியாது

மனித சுபாவம் துன்பப்பட முடியும்.

இறைமகன் மனிதர்கள் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் படவும் மரிக்கவுமே மனிதனாகப் பிறந்தார்.

பாவத்தினால் மனிதன் அடைந்திருந்தது ஆன்மீக மரணம்.

இயேசுவால் ஆன்மீக மரணம் அடைய முடியாது, ஏனெனில் அவரால் பாவம் செய்ய முடியாது.

இயேசு தனது உடல் ரீதியான மரணத்தினால் நமது ஆன்மீக ரீதியான மரணத்தை வென்றார்.

இயேசு தனது பாடுகளாலும் மரணத்தினாலும் நமது மீட்புக்கு வழி ஏற்படுத்தி விட்டார்.

நாம் அவ்வழியே சென்று மீட்பு அடைய வேண்டும்.

நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இயேசு தனது பாடுகளாலும், மரணத்தினாலும் மனிதர்களின் பரிகாரச் செயல்களை கடவுளுக்கு முன்னால் மதிப்பு உள்ளவைகளாக ஆக்கியிருக்கிறார்.

 நாம் இயேசுவின் பெயரால் (In the name of Jesus) செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்,  

அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,

கடவுள் முன் மதிப்பு உண்டு.

நமது வார்த்தைகளுக்கு இறைவன் முன்னால் மதிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு செபத்தில் இறுதியிலும்

"இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 
ஆமென்."

என்று சொல்கிறோம்.

இப்போது ஒரு கேள்வி கேட்கலாம்.

பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு தாவீது போன்றவர்களின் நல்ல செயல்களை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லையா?

 ஒரு முக்கியமான மறை உண்மை  மனதில் இருந்தால் இந்த கேள்வி எளாது.

கடவுள் காலங்களை கடந்தவர்.

நமது காலத்தை ஒரு நீண்ட கோட்டுக்கு ஒப்பிட்டால்

இறைவனின் நித்தியத்தை ஒரு புள்ளிக்கு ஒப்பிட வேண்டும்.

மனிதனாக பிறந்த இயேசு 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

ஆனால் காலங்களை கடந்த கடவுள் வாழ்கிறார்.

நமது கணக்கில் இயேசு பிறந்து 2024 ஆண்டுகள் ஆகின்றன.


ஆனால் கடவுளின் கணக்கில் 
உலகம் உண்டான நேரத்துக்கும்

2024ஆம் ஆண்டுக்கும் இடையில் நேர இடைவெளியே கிடையாது.

அதேபோல் கடவுளுடைய பார்வையில் பழைய ஏற்பாட்டு பிதா பிதாக்கள் வாழ்ந்த காலத்திற்கும் இயேசு சிலுவையில் உயிர் விட்ட நேரத்துக்கும் இடையில் நேர இடைவெளியே கிடையாது.

God is eternal. There is no duration of time in eternity.

அவர்கள் கடவுளுக்காக வாழ்ந்த வாழ்க்கையை இயேசுவின் பலியை முன்னிட்டு இறைவன்  பலன் உள்ளதாக ஆக்கினார்.

ஆனாலும் இயேசு சிலுவையில் உயிர் விட்ட வினாடி தான் அவர்கள் இறைவனை முக முகமாய்த் தரிசிக்கும் மோட்ச நிலையை அடைந்தார்கள்.

இயேசு சிலுவையில் உயிர்விடும் வரை நம்மை போல் உலகில் வாழ்ந்தார்.

உயிர்விட்ட வினாடி அவரது ஆன்மா உடலை உலகில் விட்டு விட்டு விண்ணுலகுக்குள் சென்று விட்டது.

உயிர்த்த வினாடியில் அவரது உடலும் ஆன்மாவுடன் விண்ணகம் சென்று விட்டது.

சடப்பொருளால் ஆன உடல் (Material body) ஆவிக்குரிய உடலாக (Spiritual body) மாறித்தான் உயிர்த்தது.

உலக இறுதியில் நாம் உயிர்க்கும் போதும் நமது உடல் ஆவிக்குரிய உடலாக (Spiritual body) மாறித்தான் உயிர்க்கும்.

உயிர்த்த உடல் வாழ நேரமும், இடமும் தேவையில்லை.

உயிர்த்த இயேசு மரிக்குமுன் வாழ்ந்ததுபோல உலகில் வாழவில்லை.

விண்ணிலிருந்து இறங்கி அவ்வப்போது சீடர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

நாற்பது நாட்களுக்குப் பின் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டார்.

ஆனால் திவ்ய நற்கருணையில் தனது ஆன்ம சரீரத்தோடு நம்மோடு வாழ்கிறார்.

அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசு,

30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அதே இயேசு,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த அதே இயேசு,

பாடுகள் பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்த அதே இயேசு

இன்றும் நம்மோடு வாழ்கிறார்.

திவ்ய நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து நற்கருணை நாதரை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் விண்ணகத்தில் அமர்ந்திருக்கும் உணர்வு ஏற்படும்.

உள்ளத்தில் இயேசுவைத் தவிர வேறு எண்ணம் இருக்கக் கூடாது.

We can have a pretaste of heaven if we sit before our Eucharistic Lord meditating on Him.

இயேசு நம்மோடு வாழ்கிறார்.

நாமும் அவரோடு வாழ்வோம்,
இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்."(அரு. 13:14)

"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்."
(அரு. 13:14)

புனித வியாழனன்று ஜான் மார்க்கின் இல்லத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்தன.

1. இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

2. திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

3.தனது சீடர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்தார்.


"இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 


 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்."

இயேசு கடவுள்.

சர்வ வல்லபர்.

சீடர்கள் அவரால் படைக்கப்பட்டவர்கள்.

படைத்தவர் படைக்கப்பட்டவர்களின் பாதங்களைக் கழுவுகிறார்.

அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனுடைய பாதங்களையும் கழுவுகிறார்.

பதினொரு அப்பாவிச் சீடர்களின் பாதங்களை மட்டுமல்ல,

திட்டம் போட்டு அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனுடைய பாதங்களையும் கழுவுகிறார்.

மனிதர்கள் எப்படி மாறினாலும் அவர்கள் மேல் கடவுள் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது என்பதற்கு இயேசு யூதாசின் பாதங்களைக் கழுவியது ஒரு எடுத்துக்காட்டு.

"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 

 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். 
(அரு. 13:14,15)


இயேசு நமக்கு முன்மாதிரிகையாகவே தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

பாதங்களைக் கழுவியது நாம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதைக் குறிக்கும்.

தொண்டு செய்யும்போது சமூகத்தில் நமது அந்தஸ்தைப் பற்றி கவலைப் படக்கூடாது.

மற்றவர்கள் அனைவருக்கும் 
நாம் தொண்டர்கள் என்ற எண்ணம் மட்டும் இருக்க வேண்டும்.

நமது அயலானில் நாம் இறைவனைக் கண்டால் தொண்டு செய்வது இறைப்பணியாக மாறிவிடும்.

நமது அயலானுக்கு என்ன செய்தாலும் அதைத் தனக்கே செய்வதாக இயேசு கூறியிருக்கிறார்.

புனித வியாழனன்று நமது கோவிலில் நடைபெறும் பாதம் கழுவுதல் வெறும் சடங்கல்ல.

அது இறைவழிபாடு.

நாம் சமூகத்தில் இறைவனுக்காகச் செய்யும் பிறர் பணியும் இறைவழிபாடு தான்.

பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யும் தொண்டும்,

பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யும் தொண்டும்,

சகோதர சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் செய்யும் தொண்டும்

இறைவழிபாடு தான்.

இறைவனது மகிமைக்காகச் செய்யும் அனைத்து செயல்களும் இறைவழிபாடு தான்.

ஒரே வரியில்,

தொண்டுகளால் ஆன வாழ்க்கையே இறைவழிபாடுதான்.

சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு தன்னையே அவர்களுக்கு உணவாக அளிக்கிறார்.

அதற்காகத் திவ்ய நற்கருணையை ஏற்படுத்துகிறார்.

ஆட்டுக்குட்டியை வெட்டி கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டு

பலிப்பொருளை ஒப்புக் கொடுத்தவர்கள் உண்பது வழக்கம்.

வெள்ளிக்கிழமை மாலை விண்ணகத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப் படவிருக்கும் பலிப் பொருளாகிய தன்னை

வியாழக்கிழமை இரவே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.

கடவுளாகிய அவரால் எல்லாம் இயலும்.

தனது வல்லமையால் அப்பத்தைத் தனது உணவாகவும், திராட்சை இரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றித் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.

அதன்பின் தனது சீடர்களுக்குக்‌ குருப்பட்டம் கொடுக்கிறார்.

இரத்தம் சிந்தி தான் ஒப்புக் கொடுக்கவிருக்கும் சிலுவைப் பலியை இரத்தம் சிந்தாத விதமாக உலகம் உள்ளளவும் ஒப்புக் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அப்பத்தைத் தனது உடலாகவும்
திராட்சை இரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றும் தனது வல்லமையைத் தனது சீடர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

அன்றைய தினம் முதல் இன்றைய தினம் வரை வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குருக்கள் இயேசு ஒப்புக் கொடுத்த திருப்பலியை ஒவ்வொரு வினாடியும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் உள்ளளவும் நிறைவேற்றுவார்கள்.

ஒவ்வொரு வினாடியும் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் திருப்பலி எழுந்தேற்றம் நடந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வினாடியும் இறைமகன் இறைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

"எங்கள் விண்ணகத் தந்தையே! 

உமது திருமகன் இயேசு கிறிஸ்துவின் வேதனை மிகுந்த பாடுகளைப் பார்த்து

எங்கள் மீதும்,

எங்கள் குடும்பங்களின் மீதும்,

அகில உலகத்தின் மீதும்

இரக்கமாயிரும்."

லூர்து செல்வம்.

Monday, March 25, 2024

''இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." (அரு. 14:6"

"இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." 
(அரு. 14:6"


இயேசுவின் பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவில் 
தனது சீடர்களிடம்,

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். 

அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 


 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார். 

அப்போது தோமையார்,


"ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது.

 அப்படியிருக்க

 நீர் போகுமிடத்துக்கான வழியை

 நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?"என்று கேட்டார்.

இறைமகன் இயேசு விண்ணகவாசி.

விண்ணகத்தை விட்டு இறங்கி பூமிக்கு வந்தவர்.

ஆகவே அவருக்கு விண்ணகத்துக்கு வழி தெரியும்.

ஆனால் தோமையார் பூமியில் பிறந்து பூமியிலேயே வளர்ந்தவர்.

ஆகவே சுயமாக அவருக்கு விண்ணகத்துக்கு வழி தெரியாது.

விண்ணகத்துக்கான வழி எது என்று ஆண்டவரே சொல்கிறார்.

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே."

இயேசுதான் விண்ணகத்துக்கான வழி. அவர் மூலமாகத்தான் நாம் விண்ணகத்துக்கு போக முடியும்.

நமது விண்ணக வாழ்வும் அவர்தான்.

அவரோடு மட்டுமல்ல அவரில்தான் நாம் நித்திய காலம் வாழ்வோம்.

இந்த உண்மையும் அவர்தான்.

"எல்லாம் இயேசுவே,

நமக்கு எல்லாம் இயேசுவே."

பிறந்த குழந்தைக்கு அதன் அம்மாதான் எல்லாம்.

திருமணத் தம்பதியரில் மனைவிக்குக் கணவன் தான் எல்லாம், கணவனுக்கு மனைவி தான் எல்லாம்.

கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துதான் எல்லாம்.

இறைவன் நம்மைப் படைத்தது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

இறைவன் வாழும் விண்ணகமே நமது நிரந்தரமான வீடு.

நாம் இவ்வுலகில் பயணிகள் மட்டுமே, விண்ணகத்தை நோக்கி நடக்கும் பயணிகள்.

விண்ணகம் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் தான் அதை நோக்கி நடக்க முடியும்.

முதலில் விண்ணகம் பற்றிய ஒரு மறையுண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இப்போது நடை போடும் இந்த பூமி ஒரு சடப்பொருளால் (Matter) ஆன இடம். இது படைக்கப்பட்டது.
ஆகவே துவக்கம் உள்ளது.

அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் இடத்துக்கும், நேரத்துக்கும் உட்பட்டது.

நாம் நிரந்தரமாக வாழப்போகும் விண்ணகம் இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

அது வாழ்க்கை நிலை.

அந்த நிலையை நாம் அடைவதற்கான ஒரே வழி இயேசு மட்டுமே.

பயணிகள் முதலில் வழிக்குள் நுழைய வேண்டும்.

இயேசு தான் வழி என்றால் முதலில் நாம் இயேசுவுக்குள் நுழைய வேண்டும்.

இயேசுவுக்குள் நுழைவது எப்படி?

"நான் தந்தையுள்ளும் 
நீங்கள் என்னுள்ளும் 
நான் உங்களுள்ளும் இருப்பதை
 அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். 

என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். 

நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."
(அரு. 14:20,23)

இரண்டு வசனங்களும் நாம் எப்படி இயேசுவுக்குள் நுழைவது என்பதை விளக்குகின்றன.

முதலில் நாம் இயேசுவை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும்.

நேசித்தால் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்போம்.

இயேசுவின் கட்டளைகளின்படி நாம் வாழ்ந்தால் கடவுள் நமக்குள் குடியேறுவார்.

கடவுள் நமக்குள் வாழும்போது 
கடவுள் நமக்குள்ளும், நாம் கடவுளுக்குள்ளும் இருப்பதை உணர்வோம்.

இவ்வுலகில் வாழும்போதே நாம் கடவுளுக்குள்ளே வாழ ஆரம்பித்து விடுவோம்.

நமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் நமது உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா தொடர்ந்து கடவுளுக்குள்ளே வாழும்.

இவ்வுலகில் வாழ்வதற்கும், விண்ணுலகில் வாழப்போவதற்கும் உள்ள வித்தியாசம்,

இவ்வுலகில் கடவுளின் பிரசன்னத்தில் மட்டும் வாழ்கிறோம்.

விண்ணுலகில் கடவுளை முகத்துக்கு முகம் தரிசித்து,

அவரோடு இணைந்து, அவரில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

இவ்வுலக வாழ்வு முடிவுரும்.
விண்ணக வாழ்வு என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஆரம்பக் கல்வி ஐந்து ஆண்டுகள் மட்டும்.

மேல் நிலைக் கல்வி ஏழு ஆண்டுகள் மட்டும்.

கல்லூரிப் படிப்பு நான்கு ஆண்டுகள் மட்டும்.

வேலை 58 வயது வரை மட்டும்.

இவ்வுலக வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை.

நாம் ஈட்டும் பொருட் செல்வம் நிரந்தரமற்றது.

அருட் செல்வம் மட்டுமே அழியாதது.

நிரந்தரமற்ற இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு வினாடியையும் அழியாத அருட்செல்வத்தை ஈட்டப் பயன்படுத்துவோம்.

அதற்காக அருள் நிறைந்த அன்னை மரியாளின் உதவியை வேண்டுவோம்.

இயேசுவே நமது வழி.
இயேசுவே நமது வாழ்க்கை.
இயேசுவே நமக்கு எல்லாம்.

லூர்து செல்வம்.

Sunday, March 24, 2024

எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம்.

எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம்.

 "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்.

 அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, 

அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 

 அவ்வழியே வந்த குருவும்,
லேவியரும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் போய் விட்டார்கள்.

 ஆனால் அவ்வழியே வந்த சமாரியர் ஒருவர் அவரைப் பார்த்தபோது அவர்மீது பரிவு கொண்டார். 

அவர் அவரை அணுகி

 காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, 

அவற்றைக் கட்டி, 

தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, 

ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 

மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 

"இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார். 

உவமையில் வரும் குரு, லேவியர், 
சமாரியர் ஆகிய மூவருள் 

"அடிபட்டுக் கிடந்தவருக்கு இரக்கம் காட்டிய சமாரியரே அவருக்கு அயலான்"

 என்ற‌ கருத்தை இயேசு புரிய வைத்திருக்கிறார்.

நாமும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது உவமை கற்பிக்கும் பாடம்.

இயேசு சொன்ன இந்த உவமையைப் பற்றி தியானித்தால் 

அதில் பொதிந்து கிடக்கும் மற்றொரு பேருண்மை வெளிவரும்.


யூதர்களைப் பொருத்த மட்டில் எருசலேம் கோவில் நகரம்,  கடவுள் வாழும் இடம்.

கடவுள் எங்கும் வாழ்கிறார்.

 சமூக இறை வழிபாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து

அந்த இடத்தில் சமூகமாக இறை வழிபாடு செய்கிறோம்.

அந்த இடத்திற்குப் பெயர்தான் கோவில்.

யூதர்களுக்கு எருசலேமில் மட்டுமே கோவில் இருந்தது.

பாஸ்காத் திருவிழா, கூடாரத் திருவிழா, பெந்தேகோஸ்தே திருவிழா போன்ற திருவிழாக்களுக்கு உலகெங்கும் வாழும் யூதர்கள் எருசலேமுக்கு வருவது வழக்கம்.

எருசலேமில் கோவில் இருந்ததாலும் அங்கு இறைவனது பிரசன்னம் இருந்ததாலும்

எருசலேம் என்ற வார்த்தையையே இறைவன் என்ற பொருளில் இயேசு இந்த உவமையில் கையாள்கிறார்.

எரிக்கோ வியாபார நகரம்.

எருசலேம் இறைவனைச் சார்ந்தது.
எரிக்கோ உலகைச் சார்ந்தது.

ஒருவன் எருசலேமை விட்டு எரிக்கோவுக்குப் போகிறான் என்றால் இறைவனை விட்டு விட்டு உலகுக்குப் போகிறான் என்பது பொருள்.

இறைவனை விட்டு உலகுக்குப் போகின்றவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாரியர் ஒருவர் தீர்த்து வைக்கிறார்.

உவமையில் வரும் பயணிக்கு ஏற்படுவது உடல்ரீதியான பிரச்சினை.

ஆனால் அது குறிப்பது கடவுளை விட்டு விலகி உலகுக்கு போகின்றவர்களுக்கு ஏற்படும் ஆன்மீகப் பிரச்சினை, பாவம்.

கள்வர் அலகைகள். லௌகீக வாழ்க்கை வாழ்பவர்களைப் பாவத்தில் விழவைப்பவை

சமாரியர் ஆன்மீகப் பிரச்சினையான பாவத்திற்குத் தீர்வு காண உலகில் மனிதனாகப் பிறந்த ஆண்டவர் இயேசு.

அதற்கு அவர் முதலில் பயன்படுத்துவது திராட்சை ரசமும், எண்ணெயும்.

எண்ணெய் பரிசுத்த ஆவியின் வருகைக்காக நாம் பெறும் ஞானஸ்நானத்திலும், உறுதிப்பூசுதலிலும் பயன்படுத்தப்‌படுவது.

திராட்சை இரசம் திவ்ய நற்கருணையைக் குறிக்கும்.

இவை நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான தேவத்திரவிய அனுமானங்களைக் குறிக்கின்றன.

சாவடி கத்தோலிக்கத் திருச்சபை.

இயேசு பாவப் பிரச்சினையில் கஷ்டப்படும் நம்மைக் கவனிக்கும் பொறுப்பைத் தானே நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையிடம் ஒப்படைக்கிறார்.

"நான் திரும்பி வரும்போது"

 என்ற வார்த்தைகள் இயேசுவின் இரண்டாவது வருகையைக் குறிக்கும்.

இயேசுவின் நல்ல சமாரியன் உவமையைத் தியானித்தபின் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள்:

1.நாம் உலக ரீதியான வாழ்க்கைக்கு  (எரிக்கோ) வரும்போதுதான் அலகைகள் நம்மைப் பாவத்தில் விழச் செய்கின்றன.

2. ஆகவே எப்போதும் இறைப் பிரசன்னத்திலேயே (எருசலேம்)
இருக்க வேண்டும்.

3.நமது ஆன்மீக வாழ்க்கையை முற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வசம் ஒப்படைத்து விட வேண்டும்.

4. தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெற வேண்டும்.

எப்போதும் இறைப் பிரசன்னத்திலேயே வாழ்வோம்.

பாவத்திலிருந்து தப்பிப்போம்.

இயேசு ஒருவரே நமது மீட்பர்.

இயேசுவின் ஒவ்வொரு உவமையிலும் அவரது திருச்சபையைப் பற்றிய ஒரு மறையுண்மை இருக்கும்.

லூர்து செல்வம்.

''பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்."(மாற்கு நற்செய்தி 14:10)

" பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்."
(மாற்கு நற்செய்தி 14:10) 

தினசரி செய்தித் தாளில் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருந்தது:

"கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகைக் காணவில்லை.

நாளைக் காலையில் பயங்கரமான புயல் வீசப் போகிறது என்று கால நிலை ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டிருந்தும்

அதைப் பொருட்படுத்தாது கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகைக் காணவில்லை."

கடலில் படகு காணாமல் போனதற்குக் காரணம்

கால நிலை ஆராய்ச்சி மையமா?
கடலில் வீசிய புயலா?
செய்தியை வெளியிட்ட தினசரியா?

இவற்றில் எதுவுமில்லை.

படகில் சென்றவர்கள் தான் காரணம்.

தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

எதற்காக வாசிக்கிறோம்?

இறைவன் அளிக்கும் நற்செய்தியின் படி வாழ.

எப்படி?

ஆதியாகமத்தில் விண்ணும் மண்ணும் படைக்கப்பட்ட செய்தி தரப்பட்டிருக்கிறது.

அதை வாசித்து விட்டு இறைவனின் நன்மைத்தனத்தையும், சர்வ வல்லமையையும் பற்றித் தியானித்திருக்கிறோமா?

ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மை அவருடைய சாயலில் படைத்ததற்காக அவருக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

ஆனால் நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்றதை  
வாசித்து விட்டு

அவர்களைப் பின்பற்றி 

நாம் செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.

நல்லதை வாசித்து விட்டு நன்றி கூறவும் மாட்டோம்,

செய்யக்கூடாததை வாசித்து விட்டு அதை செய்யாமலும் இருக்க மாட்டோம்.

இதுதான் நமது மனித புத்தி.

யூதாசைப் பற்றி வாசித்து விட்டு அவன் செய்ததை நாம் செய்யாதிருக்கிறோமா?

 அல்லது,

நாமும் யூதாஸாக மாறுகிறோமா? 

சிந்தித்துப் பார்ப்போம்.

யூதாசை எதற்காக இயேசு அப்போஸ்தலர் ஆக்கினார்.

நற்செய்தியை அறிவிக்க.

இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். 


 இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார். 


 அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள். 
(லூக்கா நற்செய்தி 9:1,2,6)

ஆக இயேசு பன்னிருவரையும் நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார்.

யூதாசும் பேய்களை ஓட்டினார், 
உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்த்தார், நற்செய்தியை அறிவித்தார்.

இது நாம் பின்பற்ற வேண்டிய செயல்.

செய்கிறோமா?

எத்தனை பேருக்கு நற்செய்தியை அறிவித்திருப்போம்?

யூதாசிடம் பண ஆசை இருந்தது.
பணத்திற்கு ஆசைப்பட்டு அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்.

நாம் எப்போதெல்லாம் ஆசைப்படக் கூடாத பணத்திற்கு ஆசைப் படுகிறோமோ அப்போதெல்லாம்
யூதாசாக மாறுகிறோம்.


 இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறோம்.


 "வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே" என்று மறைநூல் கூறுகிறது. 
(1 திமொத்தேயு 5:18)

கிறிஸ்தவன் அவன் செய்கிற வேலைக்கு உரிய கூலியை வாங்கும் போது புண்ணியம் செய்கிறான்.

ஆனால் இலஞ்சம் வாங்கும்போது இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான்.

உலகம் கிறிஸ்தவனின் செயலை வைத்து தான் கிறிஸ்துவை மதிப்பீடு செய்யும்,

நாம் மாணவனின்   செயலை வைத்து அவன் படித்த பள்ளிக்கூடத்தை மதிப்பீடு செய்வது போல.

கிறிஸ்தவர்கள் நல்லவர்களாக நடந்தால் உலகில் கிறிஸ்துவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

கிறிஸ்தவர்கள் கெட்டவர்களாக நடந்தால் உலகில் கிறிஸ்துவுக்குக் கெட்ட பெயர் கிடைக்கும்.

கிறிஸ்துவுக்குக் கெட்ட பெயர் கிடைக்க வைப்பதும் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதும் ஒன்று தான்.

பரிசேயர்கள் அவர் மேல் பழி சுமத்தி தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

பாவம் செய்யும் போது நாம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறோம்.

யூதாஸ் ஒரு முறை தான் காட்டிக் கொடுத்தான்.

நாம் எத்தனை முறை காட்டிக் கொடுத்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு முறைச் சாவான பாவம் செய்யும்போதும் இயேசுவைச் சிலுவையில் அறைகிறோம்.

நம்மைப் படைத்து பராமரித்து வரும் கடவுளை எத்தனை முறை சிலுவையில் அறைந்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் பெற்ற பிள்ளை நம்மை அடித்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?

அப்படித்தானே இயேசுவும் நம்மைப் பற்றி நினைப்பார்.

பைபிள் வெறுமனே வாசிப்பதற்கு மட்டுமல்ல,

பாடம் கற்று, கற்ற பாடத்தை வாழ்வதற்கும் தான்.

ஏவாளை ஏமாற்றிய சாத்தானிடமிருந்து கூட பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,

யாரையும் ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்

சாத்தானுக்குக் கிடைத்து போல.

விசுவாசத்தில் உறுதியாக இருக்க  வேண்டும் என்று அபிரகாம் பாடம் கற்பிக்கிறார்.

ஆண்டவரைக் காட்டிக் கொடுத்த யூதாசிடமிருந்து மிக முக்கியமான பாடம் கற்று, அதன்படி வாழ வேண்டும்.

ஒருவன் ஒரே நேரத்தில் இயேசுவுக்கும், பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

பணத்திற்கு ஊழியம் செய்பவர்கள் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும் இயேசுவைக் காட்டிக் கொடுப்பார்கள்.

கையில் பணம் இருக்கிறதா, அதை இறைப்பணியில் செலவழிப்போம்.

பணத்தால் இறைவனை விற்கவோ, வாங்கவோ முடியாது.

செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு அழுவோம்.

இது இராயப்பர் கற்பிக்கும் பாடம்.

லூர்து செல்வம்.

Friday, March 22, 2024

நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்."(அரு.13:35)

" நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்."
(அரு.13:35) 

 "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். 

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."
யோவான் நற்செய்தி 13:34

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்பதை ஏன் இயேசு புதிய கட்டளை என்று சொல்கிறார்?

அது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கட்டளை தானே!

ஏற்கனவே கொடுக்கப்பட்ட கட்டளையை  ஏன் புதிய கட்டளை என்று சொல்கிறார்?
 

 அதை இப்போது ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து சொல்கிறார்.


முன்பு நீ உன்னை நேசிப்பது போல உனது அயலானை நேசி என்று கூறினார்.

இப்போது "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."

என்று கூறுகிறார்.

அதே கட்டளையின்,  ஆழத்தை அதிகமாக்கியிருக்கிறார்.

முன்பு சொன்னது நம் அளவுக்கு ஆழம்.

இப்போது சொல்வது அவர் அளவுக்கு ஆழம்.

நாம் நம்மை நேசிப்பதற்கும்
அவர் நம்மை நேசிப்பதற்கும் அளவில் வித்தியாசம் இருக்கிறது.


நாம் அளவுள்ளவர்கள்.  நம்மீது நாம் கொண்டுள்ள அன்பும் அளவுள்ளதுதான்.

நமது உச்சக்கட்ட அன்பே அளவுக்கு உட்பட்டது தான்.

அதுமட்டுமல்ல நமது அன்பு லௌகீகம் கலந்தது.

நமது ஆன்மீக அன்புகூட,  அதாவது கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு கூட கடவுளிடமிருந்து லௌகீக உதவிகளையே கேட்கிறது.

நமது லௌகீகத்தை ஆன்மீகமாக மாற்றத் தனி முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.

அருள் வரம் கேட்பது ஆன்மீகம்.
பொருள் வரம் கேட்பது லௌகீகம்.

அருள் வரம் கிடைத்தால் ஆன்மா நேரடியாகப் பயனடையும்.

உதாரணமாக, உத்தம மனஸ்தாப வரம் கேட்டு அது கிடைத்துவிட்டால் உடனடியாக நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நமது ஆன்மா பரிசுத்தமாகும்.

ஆனால் செபத்தில் சம்பள உயர்வு கேட்டு,

 அது கிடைத்து விட்டாலும் நமது சம்பளத்தை பிறர் சிநேக உதவிகளுக்குப் பயன்படுத்தும் போதுதான் அது ஆன்மீகமாக மாறும்.

ஆனால் இறையன்பு நூறு சதவீதம் ஆன்மீகமானது, லௌகீகமற்றது. .

இயேசுவின் ஒவ்வொரு அசைவும் ஆன்மீகமானது.  அதாவது ஆன்மாவின் மீட்புக்கு நேரடியாக உதவக்கூடியது.

அவர் ஒரு நோயாளியின் மீது கை வைக்கும் போது

முதலில் நோயாளியின் விசுவாசம் உறுதிப்படுகிறது.

அடுத்து அவன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அடுத்து அவன் நோய் குணமாகிறது.

நோய் குணமாவது மட்டும் தான் நமது கண்களுக்குத் தெரியும்.

ஆன்மீக மாற்றங்கள் நமது ஊனக் கண்களுக்குத் தெரியாது.

மனிதர்கள் பலகீனமானவர்கள்.

 ஆன்மீக வாதிகளாக இருந்தாலும் அவர்களது சுய அன்பில் கொஞ்சமாவது லௌகீகம் கலந்திருக்கும்.

அன்னை மரியாள் அருள் நிறைந்தவள்.

அவளுடைய அன்பில் சிறிதுகூட லௌகீகம் இல்லை.

அன்னை மரியாள் மட்டுமே அருளால் நிறைந்தவள்.

நீதிமானாகிய சூசையப்பர் கூட மாதாவை ஒரு நிமிடம் சந்தேகப்பட்டு விட்டாரே!

அவரது சந்தேகத்தைப் போக்க விண்ணிலிருந்து கபிரியேல் தூதர் இறங்கி வர வேண்டியிருந்ததே!

நாம் எவ்வளவு முயன்றாலும் மனித பலகீனம் காரணமாக நமது அன்பில் கொஞ்சமாவது லௌகீகம் இருக்கும்.

ஆனால் இயேசுவின் அன்பில் இம்மி அளவுகூட லௌகீகம் இருக்க முடியாது.

"நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"
என்கிறது திருக்குறள்.

10 அடி நீளம் தாண்ட விரும்புபவன் 20 அடியை நோக்காக வைத்துத் தாண்ட வேண்டும்.


இயேசு நம்மை நேசிப்பது போல நாம் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பிறரை நேசித்தால்தான் 

நமது நேசத்தில் ஆன்மீகத்தின் அளவு அதிகம் இருக்கும்.

அன்பின் ஆழத்தைப் பொருத்து லௌகீகத்தின் அளவு இல்லாமையை (Minimum most level) அடுத்து இருக்கும்.

இயேசுவின் அன்பில் லௌகீகமே இல்லை என்பதால்  ஆன்மீகத்துக்கு உதவாத எந்த உதவியையும் அவர் செய்ய மாட்டார்.

உடலைச் சார்ந்த நோயில் நாம் சிலுவையைப் பார்த்தால் அது ஆன்மீகம்.

ஆகவேதான் குணமாக்க முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் உதவியால் புனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.

இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும்.

"நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்." என்றால்

 "நான் உங்களது ஆன்மாவின் மீட்பை மையமாக வைத்து உங்களை அன்பு செய்வது போல

 நீங்களும் மற்றவர்களின் ஆன்மீக மீட்பை மையமாக வைத்து அவர்களை அன்பு செய்ய வேண்டும்." என்று பொருள்.

அதாவது உங்களால் அன்பு செய்யப் படுபவர்கள் ஆன்மீக மீட்பு அடைய வேண்டும்.


நாம் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,

நாம் மற்றவர்கள் மீது செலுத்தும் அன்பு அவர்களுக்கு மோட்சத்துக்கு வழிகாட்ட வேண்டும்.

புனிதர்கள்  இவ்வுலகில் வாழ்ந்த போதும்,

மறு உலகில் வாழும் போதும் 

அவர்கள் காட்டும் அன்பு நம்மை விண்ணக நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. 

நாம் இயேசுவின் சீடர்கள்.

அவருடைய நற்செய்திப் பணியை ஆற்ற வேண்டியவர்கள்.

மற்றவர்களை அன்பு செய்வது என்றாலும்,  

மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது என்றாலும் ஒரே பொருள் தான்.

இயேசு நம் மீது காட்டும் அன்பு நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வது போல,

நாம் பிறர் மீது காட்டும் அன்பு அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நாம் தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது 

அவர்களது ஆன்மீக தாகத்தை அதிகரிப்பதற்காகவே. 

 இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது

"நான் தாகமாய் இருக்கிறேன்" என்றார். 

அவரது தாகம் ஆன்மாக்கள் மீது கொண்டுள்ள தாகம்.

நமக்கும் ஆன்மாக்கள் மீது தாகம் இருக்க வேண்டும்.

தாகமாக இருக்கும் மற்றவர்களுக்கு நாம் தண்ணீர் கொடுக்கும் போது 

அவர்களது ஆன்மீகத் தாகத்தை அதிகரிக்க வேண்டும்.

அப்போதுதான் ஆன்மாக்களின் மீட்புக்காக உழைப்பார்கள்.

நமது நற் செயலை வைத்து மற்றவர்கள் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

புனித பிரான்சிஸ் அசிசி ஏழ்மையை நேசித்தார்.

தன்னைச் சார்ந்தவர்களையும் ஏழ்மையை நேசிக்கச் செய்தார்.

திருச்சபையில் ஏழ்மைப் புரட்சியைக் கொண்டு வர இயேசு அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இயேசு நம்மை நேசிப்பது போல நாம் மற்றவர்களை நேசித்தால்

நாம் இயேசுவைப்போல் வாழ்வதோடு

மற்றவர்களையும் இயேசுவைப்போல் வாழ வைப்போம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல

நற்செய்திப்படி வாழும் நம்மோடு வாழும் மற்றவர்களும் நற்செய்திப்படி வாழ்வார்கள்.

இயேசு நம்மை நேசிப்பது போல நாமும் மற்றவர்களை நேசிப்போம்.

இயேசு நமக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தார்.

நாமும் நமது அயலானுக்காக நமது 
உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருப்போம்.

நமது தியாகம் நமது அயலானுக்கு விண்ணகத்துக்கு வழி காட்ட வேண்டும்.

இயேசு நமக்கு என்ன செய்கிறாறோ அதையே நாம் நமது அயலானுக்குச் செய்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, March 21, 2024

நாளைய குருத்தோலைப் பவனி.

நாளைய குருத்தோலைப் பவனி.

சமூகத்தில் நடைபெறும் விழாக்கள் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப் பட்டிருக்கும்.

காலப்போக்கில் நோக்கங்கள் மாறலாம்.

இயேசு வாழ்ந்த யூதர்களின் காலத்தில் அரசர்கள், ஆளுநர்கள் போன்ற அதிகார வர்க்கத்தினரைக் கௌரவிப்பதற்காக

கழுதையின் மேல் அமரச் செய்து

வழி நெடுக சால்வைகளை விரித்து  கையில் ஒலிவ‌ மரக் கிளைகளை ஏந்தி

அவர்களை வாழ்த்திக் கொண்டே

ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இயேசுவும் அரசர்தான். ஆனால் ஆன்மீக அரசர்.

அவரது அரசு இவ்வுலக அரசுக்கு அப்பாற்பட்டது.

விண்ணக அரசு.

மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதற்காக உலகில் மனிதனாகப் பிறந்தவர்.

அதாவது இயேசு ஒரு பலிப் பொருள்.

 இயேசு சீடர்களைப் பார்த்து,

 "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; 


அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர்களிடம் கூறினார். 
(மாற்கு நற்செய்தி 10:33,34)


"இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். 


ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 

ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, 

மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் 

பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்"
என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 10:42,43,45)

இயேசுவின் இந்த வார்த்தைகளிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

அவர் அடக்கி ஆள்பவதாக அல்ல தொண்டராகவும், பலிப் பொருளாக மட்டுமே இருக்க விரும்புகிறார் என்பது தெரிகிறது.


இயேசு தம் சீடரோடு  எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, 
 
"உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். என்றார்.
 (11:1,2)

எருசலேமில் தான் அவர் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுக்கவிருக்கிறார்.

இப்போது எதற்காக கழுதைக் குட்டியை அவிழ்த்து வர சொல்கிறார்?

எருசலேமுக்கு ஊர்வலமாக செல்வதற்காகத் தான்.

அவர் வியாழன் இரவு கைது செய்யப்பட போவதும், வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட போவதும் அவருக்கு மட்டுமே தெரியும்.

அதைச் சீடர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

ஊர்வலமாக அவரை அழைத்துச் செல்லப் போகும் மக்களுக்குத் தெரியாது.

ஆக மக்கள் என்ன கருத்தோடு இயேசுவை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள் என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.

இயைசுவைப் பொருத்தமட்டில் அவர் பலிப்பொருளாகத் தான் அழைத்துச் செல்லப்பட்டார்.

பலியிடப்படப் போகும் ஆடு அழைத்து செல்லப்படுவது போல் அவரும் அழைத்துச் செல்லப்பட்டார்.

"உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகவே" அழைத்துச் செல்லப்பட்டார்.

யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். 

அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள். 
(மாற்கு நற்செய்தி 11:3,4)

அதில் அவர் ஏறி அமர்ந்து

"ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! 

வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரிக்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
(மாற்கு நற்செய்தி 11:9,10)

அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். 
ஊர்வலம் கலைந்தது.

இந்த விவிலிய நிகழ்வையே நாம் குருத்தோலை ஞாயிறாகக் கொண்டாடுகிறோம்.

அன்றைய ஒலிவக் கிளை
 ஊர்வலத்துக்கும்,

இன்றைய குருத்தோலை ஊர்வலத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?


அன்று கொண்டாடியவர்கள் யூதர்கள்.

இன்று கொண்டாடும் நாம் கிறிஸ்தவர்கள்.

இது பெரிய வேறுபாடு அல்ல.

கொண்டாட்டத்தின் நோக்கத்தில் தான் வேறுபாடு இருக்கிறது, இருக்க வேண்டும்.

யூத மக்கள் இயேசுவை ஒரு அரசியல் விடுதலையாளராகக் கருதினார்கள்.

 சீடர்களில் இருவர், (அருளப்பரும், வியாகப்பரும்)

"நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" 
(மாற்கு நற்செய்தி 10:37)
என்று வேண்டியது ஞாபகத்துக்கு வருகிறது.

நாம் இயேசுவை ஆன்மீக விடுதலையாளராகக் கருத வேண்டும்.

குருத்தோலை ஊர்வலத்தை அடுத்து வரும் வியாழக்கிழமை அன்று ஆண்டவர் ஸ்தாபிக்கும் திவ்ய நற்கருணையும், குருத்துவமும்

வெள்ளிக்கிழமை அவர் படப்போகும் பாடுகளும்,

மரிக்க விருக்கும் சிலுவை மரணமும்,

ஈஸ்டர் ஞாயிறு உயிர்ப்பும்

நமது ஆன்மீக விடுதலைக்காக மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொண்டு 

குருத்தோலை ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

பாவத்திலிருந்து விடுதலை பெறாமல் புனித வார நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் ஆன்மீக ரீதியாக ஒரு பயனும் அடைய மாட்டார்கள்.

40 நாட்கள் நோன்பு காலமும் வீணாகிவிடும்.

குளிக்க வேண்டும் என்று ஆற்றுக்குப் போய் தண்ணீரில் இறங்காமல் திரும்பி வருபவர்களைப் போன்றவர்கள் தான் இவர்களும். 

நம்மில் பலர் வாழ்க்கையை விட விழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

திருமண விழா முக்கியமா, திருமண வாழ்க்கை முக்கியமா?

இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து,

ஆயிரக் கணக்கானவருக்கு அழைப்புக் கொடுத்து,

வந்தவர்கள் எல்லாம் வாழ்த்து மழை பொழிய,

ஜெக ஜோதியாய் திருமண விழாவைக் கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால் விழாவில் இருந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் இருக்காது.

விழாப் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கவே வருடக் கணக்காக ஆகும்.

வாழ்க்கை ஒற்றுமை இன்மையாலும், சண்டைகளாலும் நிறைந்திருந்தால் திருமண விழாவினால் என்ன பயன்?

பாவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் தவக்காலத்தின் நோக்கமும், புனித வாரத்தின் நோக்கமும்.

அந்த நோக்கம் நிறைவேறா விட்டால் தபசு கால நோன்பினாலும், ஈஸ்டர் விழா விருந்தினாலும் எந்தப் பயனும் இல்லை.

இதை மனதில் வைத்துக்கொண்டு குருத்தோலையைக் கையில் எடுப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 20, 2024

"அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். "(மாற்கு நற்செய்தி 14:14)

"அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். "
(மாற்கு நற்செய்தி 14:14)


 இயேசு , தம் சீடருள் இருவரிடம்,

 "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். 


அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். 


அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்." 

என்று கூறினார்.

இயேசு ஏற்கனவே தான் தனது சீடர்களுடன் இறுதி இராவுணவு அருந்த வேண்டிய வீட்டை ஏற்பாடு செய்து விட்டார்.

அது ஜான் மார்க்கின் வீடு.

அதை முதலிலேயே தனது சீடர்களிடம் கூறவில்லை.

யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பது பற்றிப் பேச யூத மதக் குருக்களிடம் போவான் என்பது அவருக்குத் தெரியும்.

அவன் அவர்களிடம் போகுமுன் வீட்டைப் பற்றிய விபரம் அவனுக்குத் தெரியக்கூடாது.

தான் கெத்சமனித் தோட்டத்தில் தான் கைது செய்யப்பட வேண்டுமேன்று இயேசு தீர்மானித்து விட்டார்.

ஆகவே தான் இன்னார் வீட்டுக்கு என்று சொல்லாமல்

 வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றிய விவரங்களை மட்டும் இரண்டு சீடர்களிடம் சொல்லி அனுப்புகிறார்.

"சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். "

இயேசு கூறிய படி வீட்டின் மேல்மாடியில் ஒரு பெரிய அறை தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருந்தது. 

அது John Mark ன் வீடு.

யார் இந்த John Mark?

1.புனித சின்னப்பரோடும், பர்னபாவோடும் நற்செய்திப் பயணங்களில் பங்கேற்றவர்.
(Acts 12:25)

2. மாற்கு நற்செய்தியை எழுதியவர்.

3. இயேசு கைது செய்யப்பட்டபோது எதிரிகளின் கையிலிருந்து தப்பிக்க துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடியவர்!
(மாற்கு.14:51,52)

4. ஜான் மார்க்கின் தாயார் பெயர் மரியா.

(இராயப்பர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். )
(திருத்தூதர் பணிகள் 12:12)


இயேசு சீடர்களோடு இறுதி இராவுணவு அருந்திய ஜான் மார்க்கின் இல்லத்தில் தங்கித்தான்

இயேசு விண்ணெய்திய பின் சீடர்கள் அன்னை மரியாளுடன்

பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கி வரும் வரை

இடைவிடாது செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அங்கு வைத்து தான் பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கி வந்தார்.

அதாவது கத்தோலிக்கத் திருச்சபை அங்குதான் பிறந்தது.

அந்த வீடுதான் ஆதிக் கிறிஸ்தவர்களின் செப இல்லமாகப் பயன் பட்டது.

ஒரு வான தூதரின் உதவியுடன் சிறையை விட்டு வெளியே வந்த இராயப்பர் மற்றவர்கள் செபித்துக் கொண்டிருந்த இந்த வீட்டுக்குத் தான் வந்தார்.

இயேசு தனது இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நித்திய காலமாகத் திட்டமிட்டிருக்கிறார்.

தான் எப்போது‌ கைது செய்யப்பட வேண்டுமென்று திட்டமிட்டாரோ அப்போது தான் கைது செய்யப்பட்டார்.

அவரது பொது வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அவரது விரோதிகள் அவரைப் பிடிக்க முயன்றனர்.

அவர் தன்னையே கையளிக்கும் வரை அவர்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கெத்சமனித் தோட்டத்தில் அவரே அவர்களிடம் கையளித்தார்.


 "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள். 


இயேசு அவர்களைப் பார்த்து, "'நான்தான் ' என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்" என்றார். 
(அரு. 18:7,8)

"நான்தான் நீங்கள் தேடும் இயேசு."
என்று தன்னையே கையளித்தார்.

அவரால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கும் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமது வாழ்வைப் பற்றி நமக்குத் தெரியாதது எல்லாம் அவருக்குத் தெரியும்.

ஆகவே நம்மைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நம்மை அவர் கையில் ஒப்படைத்து விட்டு அவர் சொற்படி நடந்தால் போதும்.

நாம் நிலை வாழ்வுக்குள் நுழைவோம்.

 உலகில் வாழும் போது இயேசுவின் உள்ளத்தில் வாழ்வோம்.

உலகை விட்டுச் சென்ற பின்பும் அங்கேயே நித்திய காலமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, March 19, 2024

"இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். "( அரு.8:58)

" இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். "
( அரு.8:58)

 51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 
(அரு. 8:51)

என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பரிசேயர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாக இயேசுவுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.


ஆதியாகமத்தில் நமது முதல் பெற்றோரின் பாவத்தைப் பற்றி வாசித்து விட்டு நண்பர் ஒருவர்,

"விலக்கப்பட்ட கனியைத் தின்றால் சாவு வரும் என்று கடவுள் சொன்னார். ஆனால் ஆதாமும் ஏவாளும் சாகவில்லையே, ஏன்" என்று கேட்டார்.

கடவுளின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு உதாரணம்.

கடவுள் குறிப்பிட்டது ஆன்மாவின் மரணத்தை.

ஆன்மாவும் உடலும் சேர்ந்தவன் மனிதன்.

உடலை விட்டு ஆன்மா பிரிவது உலகோர் புரிந்து கொள்ளும் மரணம்.

கடவுள் ஆன்மாவைப் படைத்தபோது தனது அருள் என்னும் உயிரோடு படைத்தார்.

ஆன்மாவுக்கு உயிர் கொடுக்கும் அருளுக்கு தேவ இஸ்டப்பிரசாதம் 
(Sanctifying grace) என்று பெயர்.

ஆன்மா சாவான பாவம் செய்யும் போது இந்த அருளை இழக்கிறது.

அதாவது ஆன்மா மரணிக்கிறது, அதாவது இறைவனுடனான உறவை இழக்கிறது.

பாவம் இறைவனால் மன்னிக்கப் படும்போது ஆன்மா உயிர் பெறுகிறது.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் நின்றபோது ஆன்மாவுக்கு உயிர் அளிக்கும் அருளை இழந்தார்கள்.

ஆதியாகமத்தில் வரும் சாவை நண்பர் தவறாகப் புரிந்து கொண்டது போலவே 

இயேசு குறிப்பிட்ட "என்றுமே சாகமாட்டார்கள்" என்ற வார்த்தைகளையும் பரிசேயர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

ஆகையால் தான் யூதர்கள் அவரிடம்,

 "நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. 

ஆபிரகாம் இறந்தார்;

 இறைவாக்கினர்களும் இறந்தார்கள். 

ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! "
(அரு. 8:52)

என்று கேட்டார்கள்.

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என் தந்தையின் விருப்பப்படி நடப்பார்கள்,

ஆகவே பாவம் செய்ய மாட்டார்கள்.
ஆன்மீக ரீதியாக வாழ்வார்கள்.

உடல்ரீதியான மரணத்துக்குப் பின்னும் நிலை வாழ்வு வாழ்வார்கள் "

என்ற பொருளில் தான் இயேசு

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்" என்று சொன்னார்.


ஆன்மாவை சாகடிக்கும் பாவத்திலிருந்து ஆன்மாவை மீட்கவே இறை மகன் மனுமகனாகப் பிறந்து பாடுகள் பட்டுச் சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

பாவத்தில் விழாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதையே 

பாடுகளுக்கு முன் மூன்று ஆண்டுகள் நற்செய்தியாக அறிவித்தார்.

இயேசு அறிவித்த நற்செய்தியின் படி வாழ்ந்தால் நாம் பாவத்தில் விழ மாட்டோம்.

" எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" 
( 8:53) என்று பரிசேயர்கள் கேட்டார்கள்.

இயேசு "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 
( 8:58)

தான் அபிரகாமையும் படைத்த கடவுள் என்ற உண்மையை இயேசு கூறினார்.

பரிசேயர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

Their minds were prejudiced against Him.

இப்போது பரிசேயர்களின் மனநிலையைப் பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல.

நமது மனநிலை எப்படி இருக்கிறது?

நமது ஆன்மா வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறோமா?

வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டால் நாம் இயேசுவின் வார்த்தைகளின் படி நடக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைகளின் படி நடந்தால் நாம் நாம் பாவம் செய்ய மாட்டோம்.

நமது ஆன்மா உயிர் வாழும்.

மனித பலகீனத்தின் காரணமாக பாவத்தில் விழ நேரிட்டால்,

பாவ சங்கீர்த்தனம் மூலமாக பாவ மன்னிப்புப் பெற்று

ஆன்மா உயிர் பெறச் செய்ய வேண்டும்.

நாம் அருளுயிர் உள்ள ஆன்மாவோடு வாழ வேண்டும்,

உடல் ரீதியாக நாம் மரணிக்கும் போதும் நமது ஆன்மா உயிரோடு இருக்க வேண்டும்,

அப்போதுதான் நாம் நிலை வாழ்வுக்குள் நுழைய முடியும்

என்று இயேசு வலியுறுத்துகிறார்.

நாம் ஞானஸ்நானம் பெற்று 
பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாய் வாழ்ந்தால் போதாது,

உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக (கிறிஸ்து+அவர்களாக)
வாழ வேண்டும்.

மற்றவர்கள் நம்மில் கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும்.

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே வாழ்வார்கள் "

என்ற இயேசுவின் வார்த்தைகள் நம்மை வழி நடத்த வேண்டும்.

லூர்து செல்வம்.

"கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்."(அரு. 8:42)

' "கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்."
(அரு. 8:42)

இயேசு தன்மீது விசுவாசம் கொள்ளாத பரிசேயர்களைப் பார்த்து,

''கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்.

சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம்.

 தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. 

அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. 

அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது.

 ஏனெனில் அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். "
(அரு. 8:42,44)

என்று கூறினார்.

ஆன்மீகத்தில் நடுநிலைமை என்பதே கிடையாது.

ஒன்று கடவுள் பக்கம் அல்லது சாத்தான் பக்கம்.

கடவுளை விசுவசித்து, அதன்படி வாழ்பவர்கள் கடவுள் பக்கம்.

கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு அவரது விருப்பப்படி வாழாமல் பாவத்தில் வாழ்பவர்களும்,

"கடவுளும் இல்லை, சாத்தானும் இல்லை, நாங்கள் மட்டும் தான் இருக்கிறோம்" என்று கூறிக்கொண்டு தங்கள் விருப்பம் போல் வாழ்பவர்களும் சாத்தான் பக்கம் தான்.

"விசுவசிக்கிறேன்" என்று சொன்னால் மட்டும் போதாது,

விசுவாசத்தின் படி வாழ வேண்டும். வாழ்பவன் தான் கடவுள் பக்கம்.

"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை  விசுவசிக்கிறேன் "

நம்மைப் படைத்த கடவுளை எல்லாம் வல்லவர் என்று கூறிவிட்டு

நமது வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கும் போது முழுப் பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைக்காமல்

ஜாதகம் பார்ப்பவனிடமும், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவனிடமும் ஒப்படைப்பவர்களை 

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

ஞாயிற்றுக்கிழமை முழுப் பூசை காண வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.


''ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்"

என்று கூறிவிட்டு

திருச்சபையின் கட்டளைப்படி முழுப் பூசை காணாமல்

வாசகங்கள் முடிந்த பிறகு பூசைக்கு வருபவர்களை எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

"பாவ மன்னிப்பை விசுவசிக்கின்றேன்" என்று கூறிவிட்டு

வருடக்கணக்காய் பாவ சங்கீர்த்தனம் செய்யாதவர்களை 

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

திவ்ய நற்கருணை என்றாலே இயேசு   ஆண்டவர்தான்  என்பது தெரிந்திருந்தும்

தகுந்த தயாரிப்பு இல்லாமல் நற்கருணை வாங்குபவர்களை எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

"தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி." என்று சாத்தானைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார்.

முதற் கொலைக்குக் காரணம் என்ன?

காயீன் ஆபேல் மீது கொண்டிருந்த பகைமை.

ஒருவர் மீது ஒருவர்  பகைமை பாராட்டுபவர்களை

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

"பொய் பேசுவது அவனுக்கு இயல்பு" 

என்று சாத்தானைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார்.

பொய் சொல்லியே காரியம் சாதிப்பவர்களை

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

யாரெல்லாம் கடவுள் பக்கம் இல்லையோ அவர்கள் சாத்தான் பக்கம் தான் இருக்கிறார்கள்.

நாம் ஆண்டுகளாக வாழவில்லை,
ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோம்.

ஒவ்வொரு வினாடியும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

நாம் கடவுளோடு இருக்கிறோமா என்பது தான் கேள்வி.

ஓவ்வொரு வினாடியும் கடவுளுக்காக வாழ்பவர்கள் கடவுளோடு இருக்கிறார்கள்.

தங்களுக்காக வாழ்பவர்கள் கடவுளோடு இல்லை.

யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான் சாத்தான்.

அசந்திருந்தால் விழுங்கி விடுவான்.

ஆகவே ஒவ்வொரு வினாடியும் நாம் கடவுள் நினைவோடு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் நாம் கடவுளுக்காக வாழ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதே நாள் முழுவதையும் தந்தை, மகன், தூய ஆவியின் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

நாள் முழுவதும் இறைவன் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

நமது கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக சாத்தானும் கூடவே வந்து கொண்டிருப்பான்.

நாம் நமது கவனத்தை இறைவனை விட்டுத் திருப்பக் கூடாது.

உதாரணத்திற்கு நாம் திருப்பலி ஒப்புக் கொடுக்க கோவிலுக்குச் செல்கிறோம்.

கோவிலில் நமது கண் பீடத்தின் மீதும், திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் மீதும் இருக்க வேண்டும்.

நமது பார்வையைத் திருப்ப சோதனைகளுடன் சாத்தான் நமது அருகிலேயே இருப்பான்.

நாம் பராக்குக்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

பராக்குக்கு இடம் கொடுத்தால் நமது கவனம் திருப்பலியில் இருக்காது.

திருப்பலியின் பலன் எதுவும் கிடைக்காது.

பராக்கின் காரணம் கவர்ச்சியாக உடையணிந்து வந்த ஒரு பெண்ணாக இருந்தால், 

குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசிய கதையாகி விடும்.

சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து சாப்பாடு கிடைக்காமல் வந்தது போல் ஆகிவிடும்.

பிறருக்கு உதவி செய்வது ஒரு புண்ணியம்.

உதவியைக் கடவுளுக்காகச் செய்ய வேண்டும்.

சாத்தான் சுய விளம்பரத்தோடு அருகிலேயே நின்று நமது கவனத்தைத் திருப்ப முயல்வான்.

நாம் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

ஒவ்வொரு வினாடியும் கடவுள் நினைவோடு அவர் பிரசன்னத்தில் வாழ்வோம்.

நாம் கடவுள் பக்கம்.

லூர்து செல்வம்.

Sunday, March 17, 2024

"யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். "(மத்தேயு நற்செய்தி 1:24)

"யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். "
(மத்தேயு நற்செய்தி 1:24)

அன்னை மரியாள் மூன்று வயது முதலே கோவிலில் வளர்ந்த பெண்.

சிறு வயதிலேயே தன் கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவள்.

இது கோவில் குருவுக்கும் தெரியும்.

ஆனாலும் கோவில் விதிகளின் படி திருமண வயது வந்த பெண்ணைக் கோவிலில் வைத்திருக்க முடியாது.

அவளுக்குத் திருமணம் முடித்தாக வேண்டும்.

அவளது கற்பு நிலைக்கும் பங்கம் வந்து விடக்கூடாது.

ஆகவே அவளது கணவனை இறைவனே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்காக திருமணம் செய்ய விரும்பும் விதவர்கள் (Widowers) மட்டும் கோவிலுக்கு வரும்படி குரு ஒரு அறிக்கை விடுத்தார்.

அதன்படி பல விதவர்கள் கோவிலுக்கு வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் சூசையப்பர்.

பரிசுத்த ஆவி வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கோல் கொடுக்கப்பட்டது.

சூசையப்பர் கையிலிருந்த கோல் 
தளிர்த்துப் பூத்ததோடு ஒரு புறா  வந்து அமர்ந்தது.

சூசையப்பர் மரியாளின் கணவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

திருமண ஒப்பந்தம் ஆகுமுன் மரியாள் தனது கற்புக்கு சூசையப்பர் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டாள்.

திருமண ஒப்பந்தம் முடிந்த பின் சூசையப்பர் தொழில் காரியமாக வெளியூர் சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் தான் கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி மீட்பரின் பிறப்பு பற்றி அறிவித்தார்.

இறைவன் சித்தமே தன் சித்தம் என்று வாழ்ந்து வந்த மரியாள்,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது"

எனத் தனது ஒப்புதலைத் தெரிவித்தாள்.

அந்த வினாடியே இறைமகன் மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

இந்த நிகழ்வு சூசையப்பருக்குத் தெரியாது.

அவர் வேலை முடிந்து திரும்பிய பின் மரியாள் கருவுற்றிருப்பதை அறிந்தார்.

சூசையப்பர் நேர்மையாளர். 

அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 


அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். 

அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 

ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார். 
(மத்தேயு நற்செய்தி 1:19-22)

அந்த வினாடியே சூசையப்பர் மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு  பிறப்பதற்கு முன்பே மரியாள் மூலமும், சூசையப்பர் மூலமும் தனது நற்செய்தியை நமக்கு அறிவித்து விட்டார்.

"நாம் அனைவரும் ஆண்டவரின் அடிமைகள், அவரது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமே நமது வாழ்க்கை.''

மொத்த பைபிளுமே

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது"

என்ற மரியாளின் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது.

ஏவாள் இறைவனின் வார்த்தையை மீறியதால் பாவம் செய்தாள்.

மரியாள் இறைவனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதால் மீட்பர் பிறந்தார்.

நாமும் இறைவனின் வார்த்தையை ஏற்று‌ நடந்தால் மீட்பு அடைவோம்.

மரியாளுக்கு கபிரியேல் தூதர் நேரடியாகத் தோன்றினார்.

சூசையப்பருக்குக் கனவில் தான் தோன்றினார்.

ஆனாலும் சூசையப்பர் அவரது வார்த்தைகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்.

இன்றைய துறவற சபையினருக்கு சூசையப்பர் ஒரு முன்மாதிரிகை.

மரியாள் கற்புக்கு வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள், இன்றைய துறவற சபையினரைப்போல.

ஆனால் சூசையப்பர் தனியே வார்த்தைப்பாடு எதுவும் கொடுக்கவில்லை.

அவரே கீழ்ப்படிதல் தான்.

சூசையப்பர்  = கீழ்ப்படிதல்.

Joseph = Obedience.

தாய்த் திருச்சபையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வது தான் கிறிஸ்தவ வாழ்வு. 

இவ்விசயத்தில் சூசையப்பர் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் முன்மாதிரிகை.

நாம் அன்னை மரியாளையும், சூசையப்பரையும்ன முன்மாதிரிகையாகக் கொண்டு வாழ்ந்தால் இயைசுவைப் போல் வாழ்கிறோம்.

ஏனெனில் இயேசுவும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து தான் வாழ்ந்தார்.

இயேசு கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவியவர்.

அன்னை மரியாள் திருச்சபையின் தாய்.

புனித சூசையப்பர் திருச்சபையின் பாதுகாவலர்.

நாம் திருச்சபையின் பிள்ளைகள்.

 பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது தான் பிள்ளைகளின் கடமை‌.

கீழ்ப்படிந்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

"நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல."( அரு. 8:23)

'நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல."
( அரு. 8:23)


நாம் மண்ணுலகில் பிறந்தவர்கள். மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயேசு மனித சுபாவத்தில் மண்ணுலகில் பிறந்தவர்.

மண்ணுலகிலேயே வாழ்ந்து மரித்தார்.

ஆனால் தேவ சுபாவத்தில் விண்ணுலகில் வாழ்பவர்.

மண்ணுலகுக்கும்,  விண்ணுலகுக்கும் என்ன வேறுபாடு?

மண்ணுலகம் இறைவனால் படைக்கப்பட்டது.   இடம், நேரத்துக்கு உட்பட்டது. ஆகவே துவக்கமும் முடிவும் உள்ளது.

விண்ணுலகம், அதாவது, மோட்சம் நித்திய இறைவன் நித்திய காலமும் வாழும் நிலை. நேரத்துக்குக்கும், இடத்துக்கும் அப்பாற்பட்டது.
(Heaven is beyond time and space)

மோட்சம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

அதற்கு துவக்கமும், முடிவும் இல்லை.

இறைமகன் துவக்கமும், முடிவும் இல்லாத விண்ணகத்திலிருந்து,

துவக்கமும், முடிவும் உள்ள மண்ணகத்துக்கு, அதாவது, உலகத்துக்கு இறங்கி வந்து,

மனிதனாகப் பிறந்தார்.

துவக்கமும், முடிவும், 
அதாவது, 
பிறப்பும், இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.

அவர் உலகில் பிறந்து வளர்ந்தாலும் அவர் உலகைச் சார்ந்தவர் அல்ல,

மோட்சத்தைச் சார்ந்தவர்.

கீழப்பாவூரில் பிறந்தவன் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கீழப்பாவூரைச் சார்ந்தவனே.

சுற்றுலாவாக எந்த நாட்டிற்குச் சென்றாலும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துதான் ஆகவேண்டும்.

அதேபோல் விண்ணகத்தைச் சார்ந்த இயேசு உலகத்துக்கு வந்து வாழ்ந்தாலும் விண்ணகத்துக்குத் திரும்பிச் சென்று தான் ஆகவேண்டும்.

நமது நிலை?

நாம் மனிதர்கள்.

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் மண்ணுக்குத் திரும்ப வேண்டியது.

நமது ஆன்மா உடலோடு உலகில் வாழ்ந்தாலும் என்றாவது ஒரு நாள் விண்ணகத்துக்குச் செல்வதற்காகவே படைக்கப்பட்டது.

அந்த நோக்கத்துக்காகவே இறைவன் அதைப் படைத்தார்.

நமது உடல் உலகைச் சார்ந்தது, ஆன்மா விண்ணுலகைச் சார்ந்தது.

மனிதன் தான் செய்த பாவத்தினால் விண்ணக வாழ்வுக்கு அருகதை அற்றவனாக மாறிவிட்டான்.

அவனது ஆன்மாவை மீட்கவே,

அதாவது,

விண்ணக வாழ்வுக்கு அருகதை உள்ளவனாக மாற்றவே

இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

 நமது விண்ணகத் தந்தையின் வீடுதான் நாம் நிரந்தரமாக வாழ வேண்டிய சொந்த வீடு.

உலக வாழ்வு பயண நிலைதான்.

ஆகாய விமானப் பயணம் எவ்வளவு இன்பகரமாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் அதில் பயணித்துக் கொண்டிருக்க முடியாது.

சொந்த நாட்டில் இறங்கித்தான் ஆகவேண்டும்.

அதேபோல் நாம் நிரந்தரமாக உலகில் பயணித்துக் கொண்டிருக்க முடியாது.

சொந்த வீடாகிய மோட்சத்துக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.

ஆனால் நம்மில் அநேகர் இதை மறந்து வாழ்கிறோம்.

உலகத்தையே நிரந்தர வீடாக நினைத்துக்கொண்டு வாழ்கிறோம்.

நமது சொந்த வீடு விண்ணுலமே என்பதை நமக்கு நினைவுபடுத்தி நம்மை அங்கு அழைத்துச் செல்லவே இயேசு உலகுக்கு வந்தார்.

இதைப் பற்றிய அவரது செய்திதான் நற்செய்தி.

நாம் அறிந்திருக்கும் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க வேண்டியது நமது கடமை.

உலகுக்கு அறிவிக்குமுன் நாம் அதன்படி வாழ வேண்டும்.

அதன்படி வாழ்வது என்றால் என்ன?

மதுரையிலிருந்து தென்காசிக்குப் புகை வண்டியில் பயணிப்பதாக 
வைத்துக்கொள்வோம்.

முதலில் நமது பயணச்சீட்டைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

தொலைத்து விட்டால் பரிசோதகர் வரும்போது அபராதம் கட்டி பயணச்சீட்டு வாங்க வேண்டியிருக்கும்.

அடுத்து மதுரைக்கும் தென்காசிக்கும் இரயில்வே நிலையங்களை ஒவ்வொன்றாக கவனித்து வர வேண்டும்.

அப்போதுதான் தென்காசியை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியும்.

தென்காசிக்கு முந்திய நிலயத்துக்கு வந்தவுடன் தென்காசியில் இறங்கத் நயாரிகிவிட வேண்டும்.

தென்காசி வந்தவுடன் இறங்கிவிட வேண்டும்.

நமது விண்ணகப் பயணத்திற்கான நுழைவுச் சீட்டு ஞானஸ்நானத்தின் போது நாம் பெற்ற பரிசுத்த நிலை.

அதை இழக்காமல் வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

அது இல்லாமல் மோட்சத்திற்குள் நுழைய முடியாது.

இரயில் பிரயாணத்திற்கான நேரம் நமக்குத் தெரியும்.

மதுரை to  தென்காசி பயண நேரம் நான்கு மணிகள்.

ஆனால் விண்ணகப் பயணத்திற்கான நேரம் யாருக்கும்  தெரியாது.

எத்தனை வருடங்கள்?
எத்தனை மாதங்கள்?
எத்தனை வாரங்கள்?
எத்தனை நாட்கள்?

யாருக்கும் தெரியாது.

ஆரம்பித்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம்.

ஆரம்பித்த அடுத்த வினாடியில் கூட முடியலாம்.

ஆகவே நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

ஞானஸ்நானத்தின் போது எடுத்த விண்ணகப் பயணச்சீட்டுடன்,  

அதாவது,

ஆன்மீகப் பரிசுத்தத்தனத்துடன்

ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு சிந்தனையின் போதும்,

சொல்லின் போதும்,

செயலின் போதும்

நாம் விண்ணக வாயிலை நெருங்கி விட்ட எண்ணம் வேண்டும்.

அப்போது தான் நமது பயணச்சீட்டைப் பத்திரமாக வைத்திருப்போம்.

நமது மரணம்தான் நமது விண்ணக வீட்டுக்கான வாயில்.

யாராவது வீட்டு வாயிலை நெருங்க  பயப்படுவார்களா?

மகிழ்ச்சி தான் அடைவார்கள்.

பயணத்தின் போதே நமது பெற்றோர், சகோதர சகோதரிகளைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியோடு நிறைந்திருப்போம்.

அந்த மகிழ்ச்சி வீட்டின் வாயிலை நெருங்கியவுடன் அதிகமாகும்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் மகிழ்ச்சி பேரின்பமாக மாறும்.

இப்போது நாம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் விண்ணுலகைச் சார்ந்தவர்களே.

லூர்து செல்வம்.

Friday, March 15, 2024

'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" (அரு. 8:7)

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"   
(அரு. 8:7)




இயேசுவின் போதனைகளின் மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காகவும்,

அவரைச் சோதிப்பதற்காகவும் 

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தினார்கள்.

''போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். 

 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். 

எதற்காகத் தன்னைக் கேட்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும்.

அவர் அவர்களைப் பார்த்து ‌

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார். 
(அரு.8:7)

மறைநூல் அறிஞர்களின் நோக்கம் இயேசுவைச் சோதித்து அவரிடம் குறை கண்டு பிடிப்பது.

அவர் அப்பெண் மீது கல் எறியச் சொன்னால் அவர் இரக்கம் அற்றவர் என்று கூறலாம்.

கல் எறியக் கூடாது என்று சொன்னால் அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறவர் என்று கூறலாம்.

அவர் என்ன சொன்னாலும் அதில் குறை இருக்க வேண்டும்.

ஆனால் இயேசு அவர்களது நோக்கத்தைப் பற்றி கவலைப் படவில்லை.

அவர் இரக்கம் உள்ளவர். பாவிகளைத் தேடி அவர்களை மன்னிப்பதற்காகவே உலகிற்கு வந்தவர்.

அவளைப் பாவத்திற்காக மனம் வருந்த வைக்க வேண்டும், அவளை மன்னிக்க வேண்டும், மீண்டும் பாவம் செய்யாயாதிருக்க உதவ வேண்டும்

இவைதான் அவரது நோக்கம்.

அதுமட்டுமல்ல அவளைக் குற்றம் சாட்டியவர்களும் பாவிகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஆகவே தான் "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

இயேசு மோசேயின் சட்டத்தையும் மீறவில்லை.

பாவியாகிய பெண்ணையும் காப்பாற்றினார்.


  இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார். 


அவர், "இல்லை, ஐயா" என்றார்.

 இயேசு "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

இயேசு அவளது பாவங்களை மன்னித்ததோடு,

"இனிமேல் பாவம் செய்யாதீர்" என்று புத்தி சொல்லி அனுப்பினார்.

இந்நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

1. நாம் அனைவரும் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. நமது பாவங்களுக்கு நாம் மனம் வருந்த வேண்டுமே தவிர மற்றவர்களது பாவங்களைச் சுட்டிக் காண்பிக்கக் கூடாது.

3.இயேசு இரக்கம் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொண்டு, நம்மீது இரங்கி நமது பாவங்களை மன்னிக்கும்படி வேண்ட வேண்டும்.

4.அதன்பின் பாவம் செய்யக் கூடாது.

5.மறைநூல் அறிஞர்கள் பாவியை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள், அவளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க.

நாம் இயேசுவை பாவிகளிடம் அழைத்துச் செல்ல வேண்டும், அவர்கள் பாவ மன்னிப்பு பெற.

6.சட்டம் பேசுவதை விட மன்னிப்பதே சிறந்த பண்பு. 

கடவுள் சட்டத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் மனிதனாகப் பிறந்திருக்க மாட்டார்.

அவரது மன்னிக்கும் பண்பே அவர் மனிதனாகப் பிறந்து, நமக்காக பாடுகள் பட்டு மரிப்பதற்குக் காரணமாக இருந்தது.

 நம்மை அவரது சாயலில் படைத்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மன்னிப்பதைப் பார்த்து மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும்.

மன்னிப்போம்.

மன்னிக்கப் படுவோம்.

லூர்து செல்வம்.