பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
(லூக்கா நற்செய்தி 1:38)
"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்."
(லூக்கா நற்செய்தி 1:26)
செக்கரியாவுக்கு இறைச் செய்தியை அறிவித்த அதே வானதூதர் கபிரியேல்
அதிலிருந்து ஆறாம் மாதத்தில் நசரேத்தூரில் வாழ்ந்து கொண்டிருந்த மரியாளுக்கு இறைச் செய்தியை அறிவிக்க வருகிறார்.
அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் இறைவனால் அனுப்பப்பட்டவை.
அனுப்பப்பட்ட செய்தி என்ன?
மனுக்குலத்தின் மீட்பராக உலகில் பிறக்கப் போகும் மீட்பருக்கு மரியாள் தாயாக வேண்டும்.
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற வார்த்தைகள் மூலம் இறைச்செய்தியை மரியாள் ஏற்றுக் கொள்கிறாள்.
ஆண்டவரின் அடிமை -
பிறக்கப் போகும் இயேசுவுக்கு அவள் தாய்.
அதே சமயத்தில் அவருடைய அடிமை.
பிறக்கப் போகும் மகனுக்கு அடிமையாக வாழப்போகும் தாய்.
எசமானனின் எண்ணங்களை உத்தரவுகளாக ஏற்றுக் வாழ்பவள் அடிமை.
எசமானனின் எண்ணங்களையும், சொற்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல் புரிபவள் அடிமை.
அப்படியானால் இயேசுவின் எண்ணங்களை மரியாள் ஆரம்பம் முதலே அறிந்திருக்க வேண்டும்.
இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம், அவர் செய்யப் போகின்றவை, அவருக்குச் செய்யப்படப் போகின்றவை அனைத்தையும் அவர் அவளோடு பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
அவரது பொது வாழ்க்கையைப் பற்றியும், தனது பாடுகளைப் பற்றியும், தனது சிலுவை மரணத்தைப் பற்றியும் அவர் அன்னையுடன் வாழ்ந்த போதே தெரிவித்திருக்க வேண்டும்.
அவர்களது முப்பது ஆண்டு கால கருத்துப் பரிமாற்றத்தில் தன் பாடுகளின்போது எப்படிச் செயல்பட வேண்டுமென்று இயேசு அன்னையிடம் சொல்லி அவளையும் தனது பாடுகளாக்காகத் தயாரித்திருக்க வேண்டும்.
ஒருவர் தான் கோயிலில் பலியிடப் போகும் ஆட்டைத் தானே வளர்ப்பதைப் போல
இறைவனின் செம்மறியை அன்னை மரியாள் வளர்த்திருக்க வேண்டும்.
மரியாள் மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்தவள்.
பைபிளின் பழைய ஏற்பாட்டு இறைச் செய்தியை எல்லாம் கோவிலில் பாடமாகப் படித்தவள்.
மெசியாவைப் பற்றி முற்றிலும் அறிந்தவள்.
அவர் எங்கே பிறப்பார், எப்படி வாழ்வார், எப்படி பலியிடப் படுவார் என்பவை பற்றிய இறை வாக்கினர்களின் முன்னறிவிப்புகளை எல்லாம் பாடமாகக் கற்று, விசுவாசமாக ஏற்றுக் கொண்டவள்.
தான் மெசியாவின் தாயாகப் போவது அப்போது அவளுக்குத் தெரியாது.
அக்காலத்திய கன்னிப் பெண்கள் மெசியாவின் தாயாக ஆசைப் பட்டதாகக் கூறுவார்கள்.
ஆனால் மரியாளுக்கு அப்படி ஆசை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் பிறக்கப்போகும் மெசியா அவளைத்தான் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்.
மரியாள் தன்னை மட்டுமல்ல தன் மகனையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாள்.
இயேசுவின் முப்பதாவது வயதில் மரியாள் தன் மகனை பொது வாழ்வுக்கு அர்ப்பணித்து விட்டாள்.
அதன்பின் இயேசு நசரேத்தூரில் வாழவில்லை.
அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.
(மத்தேயு நற்செய்தி 4:13)
மரியாளுக்கு மகனைப் பார்க்க ஆசை வரும்போது அவர் போதித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வருவாள்.
"இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தபோது, சீடர்கள் பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும்,
ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்
சூசன்னாவும்
மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
(லூக்கா நற்செய்தி 8:1-3)
மேற்கூறப்பட்ட பெயர்களில் அன்னையின் பெயர் இல்லை.
ஆகவே அவள் மகனைப் பொதுவாழ்வுக்கு அர்பணித்து விட்டாள் என்பது தெளிவாகிறது.
பார்க்க ஆசை வரும்போது வந்து பார்த்து விட்டுப் போவாள்.
பாஸ்கா விழாவின் போது இரவு உணவிற்கு சீடர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
இயேசு இரத்த வியர்வை வியர்த்த போது மரியாள் இல்லை.
மூன்று சீடர்கள் மட்டுமே உடனிருந்தார்கள்.
இயேசு கைது செய்யப்பட்டு பிலாத்துவின் அரண்மனையில் விசாரிக்கப் பட்டதிலிருந்து கல்லறையில் அடக்கம் பண்ணப்படும் வரை மரியாள் மகனோடு இருந்தாள்.
கற்றூணில் கட்டப்பட்டு அடிபட்டு, தலையில் மும்முடி சூட்டப்பட்டு அடிபட்ட இயேசு
மரியாள் வயிற்றில் அவளது இரத்தமும் சதையுமாக, அவள் சாப்பிட்ட உணவால் வளர்ந்த மகன், அவளது சதையும், இரத்தமும்.
ரோமை வீரர்கள் இயேசுவை அடித்த ஒவ்வொரு அடியும் மரியாள் பெற்ற உடலில் விழுந்தது.
அவர்கள் மிதித்த மிதிகளை மரியாள் பெற்ற உடல் வாங்கியது.
அவர்கள் துப்பிய எச்சில் மரியாள் பெற்ற உடலில் விழுந்தது.
அவள் பெற்ற பிள்ளைக்கு மரணத் தீர்ப்பு கிடைத்தது.
அவள் உதிரத்தில் வளர்ந்த உடலிலிருந்து இரத்தம் சிந்தி ஆறாக ஓடியது.
சிலுவையைச் சுமந்தது அவள் பெற்ற உடல்.
மூன்று முறை சிலுவையின் பார்த்தால் தரையில் விழுந்தது மரியாள் பெற்ற உடல்.
சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டது மரியாள் பெற்ற உடல்.
இரத்தத்தை முழுவதும் முழுவதும் சிந்திய பின் சிலுவையில் தொங்கியது மரியாள் பெற்ற உடல்.
இயேசு பட்ட வேதனையை எல்லாம் மரியாளும் பட்டாள்.
இயேசு மரணம் அடைந்த பின் இயேசுவின் உடல் அவளுடைய மடியில் கிடத்தப் பட்டது.
33 ஆண்டுகளுக்கு முன் அவளது வயிற்றில் 10 மாதங்கள் இருந்த அதே உடல்.
பிறந்தவுடன் மடியில் தவழ்ந்த அதே உடல்.
"இது என் உடல். இது என் இரத்தம்" என்று அவள்தான் முதலில் கூறியிருப்பாள்.
இறந்த பின் மடியில் இருந்த உடலைப் பார்த்து அதே வார்த்தைகளை நினைத்திருப்பாள்.
ஆக மகனோடு சேர்ந்து அன்னையும் பாடுபட்டாள்.
இயேசு தான் பாடுபடும்போது என்னவெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தனது அன்னையிடம் கூறியிருப்பார்.
ஆகவே பாடுகள் ஆரம்பிக்கும் போது மரியாள் பிலாத்துவின் அரண்மனைக்கு வந்து விட்டாள்.
அது முதல் இயேசு பட்ட ஒவ்வொரு அடியையும்,
வாங்கிய ஒவ்வொரு மிதியையும்,
சுமந்த சிலுவையையும்,
அவர் சிலுவையின் பாவத்தால் கீழே விழுந்ததையும்,
ஆடைகள் களையப்பட்டதையும்,
ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டதையும்,
அவர் சிலுவையில் தொங்கியதையும்,
விலாவில் ஈட்டியால், குத்தப்பட்டதையும்,
இறுதியில் சிந்திய கடைசித் துளி ரத்தத்தையும்,
அவரது மரணத்தையும்
நமது பாவங்களுக்கு பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தாள்.
இயேசு தன்னையே ஒப்புக்கொடுத்தது போல, அன்னை மகனை ஒப்புக்கொடுத்தாள்.
தாய்த்திருச்சபை அன்னை மரியாளை Co-redemptrix என்று அழைப்பது சாலப் பொருந்தும்.
இயேசுதான் மீட்பர். அவர்தான் நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
அதில் மாற்றுக் கருத்து இல்லை.
கடவுளின் மீட்புத் திட்டத்துடன் சுதந்திரமாக ஒத்துழைத்தவர் கடவுளின் தாயாகிய அன்னை மரியாள்.
இயேசுவின் துன்பத்தில், குறிப்பாக சிலுவையில் அறையப்பட்டபோது, மரியாள் தன் மகனின் பாடுகளிலும் துன்பத்திலும் பங்கு கொண்டாள்.
கடவுளின் தாயாக, மரியாள் மனிதகுலத்தின் சார்பாக பரிந்து பேசுகிறாள்.
இயேசு தனது தாயை நமது தாயாகத் தந்திருகாகிறார்.
நமது மீட்புக்காக தாய் மூலமாக மகனிடம் வேண்டுவோம்.
லூர்து செல்வம்