வியாழன் 23
"ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்."
(மாற்கு நற்செய்தி 3:10)
.
இயேசு தன்னை நம்பி வந்த நோயாளிகளைச் சொல்லால் மட்டும் அல்ல, தொட்டும் குணமாக்கியிருக்கிறார்.
அவர் மற்றவர்களை தொடும்போது மட்டுமல்ல மற்றவர்கள் அவரைத் தொடும் போதும் குணமாகியிருக்கிறார்கள்.
நோயாளிகள் குணமாவதற்கு காரணமாக இருந்தது எது?
இயேசுவின் மீது அவர்களுக்கு இருந்த ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை.
சில நோயாளிகள் இயேசுவை நேரடியாக சந்தித்து தங்களைக் குணமாக்கும்படி கேட்காமலேயே
அவர் போதித்துக் கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து
அவருக்கு பின்னால் நின்று அவரிடம் சொல்லாமலேயே அவரை தொட்டு குணமாகியிருக்கிறார்கள்.
அவர்கள் அவரிடம் சொல்லாவிட்டாலும் தனது படைப்புகளின் ஒவ்வொரு அசைவையும் நித்திய காலமாக தெரிந்து வைத்திருக்கும் இயேசு
அவர்களின் நம்பிக்கையின் பேரில் அவர்களை குணமாக்கினார்.
அதே இயேசு தானே இப்போதும் நம்முடன் இருக்கின்றார்!
நாம் நாம் திருப்பலிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் நம்மை சந்திப்பதற்காகவே
குருவானவர் நடுப் பூசையில் வசீகர வார்த்தைகளைச் சொல்லும்போது விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வருகிறார்.
அவரை குருவானவர் உயர்த்தி பிடிக்கும் போது நாம்
"என் ஆண்டவரே என் தேவனே"
என்று கூறி அவரை ஆராதிக்கின்றோம்.
திரு விருந்தின் போது நாம் தகுதி இல்லாதவர்கள் என்று தெரிந்திருந்தும்
நமது ஆன்மீக உணவாக நமக்குள் அதே இயேசு தானே வருகிறார்!
நாம் அவரை நாவில் வரவேற்கும் போது அவர் நம்மைத் தொடுகிறார், நாம் அவரைத் தொடுகிறோம்.
அன்பர்கள் ஒருவருக்கொருவர் முத்தங்கள் கொடுக்கும்போது
உதடுகளினால் மட்டுமல்ல
நுனி நாவினாலும் ஒருவரை ஒருவர் தொட்டு
தங்கள் அன்பின் ஆழத்தை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
நாம் நமது முழு நாவினாலும் அவரைத் தொடுகிறோம்.
நாவில் தொட்டு இறங்கிய அவரை விழுங்குகிறோம்.
அவரது பிரசன்னம் நமது உடல் முழுவதும் பரவுகிறது.
அவரும் நாமும் இரண்டறக் கலக்கிறோம்.
அந்நிமிடத்தில் உலகில் வாழ்வது நாம் அல்ல,
நம்முள் அவர் வாழ்கிறார்.
அந்த அளவுக்கு அவரும் நாமும் ஒன்றித்து விடுகிறோம்.
அந்த ஒன்றிப்பின் போது நம்மிடம் உண்மையான விசுவாசம் இருந்தால்
நாம் கேட்காமலேயே நம்மிடம் இருக்கும் நோய் நொடிகள் நம்மை விட்டு தாமாகவே வெளியேறி விடும்.
அப்படி வெளியேறாமல் இருந்தால் ஒன்று நம்மிடம் உண்மையான விசுவாசம் இல்லை,
அல்லது,
அவை இயேசுவின் விருப்பத்திற்கு உட்பட்ட ஆசீர்வாதங்கள்.
நமது விசுவாசம் உண்மையானதாக இருந்தால்
நாம் நமக்கு என்ன நேர்ந்தாலும் நம்மிடம் வந்த இயேசுவுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
"எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்."
(1தெசலோனிக்கர் 5:18)
ஒரு பெற்றோருக்கு ஒரு மகன்.
அவனுக்குச் சுகமில்லை.
மருத்துவம் பார்த்துக் கொண்டே இறைவனிடமும் வேண்டினார்கள்.
குணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திருத்தலங்களுக்குச் சென்றார்கள்.
ஆனால் அந்த பையன் இறந்து விட்டான்.
அந்த வினாடியிலிருந்து கடவுளை மறந்தார்ஙள்.
நாம் அடிக்கடி பாடும் பாட்டு ஒன்று உண்டு.
"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."
உண்மையான விசுவாசத்தோடு பாடுபவர்களுக்கு இதன் பொருள்,
"நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்."
அதாவது நமது நம்பிக்கை வாய்ந்த செபத்தின் விளைவாக எது நடந்தாலும் அது நல்லது மட்டுமே.
முக்கியம் - "எது நடந்தாலும்."
நமக்கு எது நல்லது என்று நம்மை விட கடவுளுக்கு நன்றாகத் தெரியும்.
அது மட்டுமல்ல, ஒவ்வொருவரும்
கடவுளுக்கு மட்டுமே முழுமையாக சொந்தம்.
என் மேல் எனக்கு இருக்கும் உரிமையை விட கடவுளுக்கு தான் உரிமை அதிகம்.
இவ்வுலககும் அவருக்குச் சொந்தம், விண்ணுலகும் அவருக்குச் சொந்தம்.
ஒரு தொழில் கம்பெனிக்குப் பல இடங்களில் கிளைகள் இருந்தால் அங்கு பணிபுரிபவர்கள் எந்தக் கிளைக்கு மாற்றப்பட்டாலும் அங்கு செல்ல வேண்டும்.
விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் உரிமையாளரான கடவுள் நமக்கு மண்ணுலகிலிருந்து விண்ணுலகுக்கு Transfer கொடுத்தால் போய்த்தானே ஆக வேண்டும்.
அந்த Transferக்கு நாம் மரணம் என்று பெயர் சூட்டியுள்ளோம்.
கடவுளுக்கு அது சித்தமானால் நாம் அதற்கு முழு மனதுடன் நன்றி கூற வேண்டும்.
அதாவது, "நமக்கு என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்."
கடவுளை மையமாக வைத்துச் சிந்தித்தால் இது புரியும்.
இயேசுவை நம்பிக்கையோடு தொடுவோம்.
என்ன நேர்ந்தாலும் நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்.
லூர்து செல்வம்.