"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு நற்செய்தி 16:15)
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
இது இயேசு தனது சீடர்களுக்கு அளித்த மிகப்பெரிய கட்டளை.
அன்று தனது 11 சீடர்களுக்கும் அவர் கொடுத்த இந்தக் கட்டளை அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.
இயேசு செய்த மிகப்பெரிய புதுமை எது?
உலகில் எந்த நிறுவனமும் அதற்குறிய பணியாளர்களை அவர்களுடைய கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்வு செய்யும்.
ஆனால் இயேசு தனது நற்செய்தியை உலகெங்கும் அறிவிப்பதற்கு
அதிகக் கல்வி அறிவில்லாத, தங்களது அன்றாட உணவுக்காக மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து கொண்டிருந்த ஏழை மீனவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
மீன் பிடித்தவர்களை மனிதர்களைப் பிடிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார்.
படிப்பறிவு இல்லாத அவர்களின் மூலம் தனது நற்செய்தியை உலகெங்கும் பரப்பியது தான் அவர் செய்த மிகப்பெரிய புதுமை.
பன்னிரு சீடர்களில் யூதாஸ் மட்டும் தான் கற்றவன்.
இதனால் படிப்புக்கும், பரிசுத்தத் தனத்துக்கும் நேரடியாகச் சம்பந்தம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நல்ல மனது உள்ளவர்கள் தான் பரிசுத்தர்களாக வாழ முடியும்.
சீடர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் மட்டுமல்ல, குறைபாடுகள் உள்ளவர்கள்.
அருளப்பரும், வியாகப்பரும் பதவி ஆசை உள்ளவர்கள்.
இராயப்பர் மூன்று ஆண்டுகள் உடன் வாழ்ந்த இயேசுவை
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மூன்று முறை மறுதலித்தார்.
இயேசுவைக் கைது செய்தவுடன் சீடர்கள் எல்லோரும் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.
அருளப்பர் மட்டும் எப்படியோ கல்வாரி மலைக்கு வந்தார்.
இப்படிப்பட்டவர்கள் எப்படி உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க முடிந்தது?
தூய ஆவியின் வருகையின்போது அவர்களிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
பயந்தாங்கொள்ளிகள் வீரர்களாக மாறினார்கள்.
நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டவர்ள் நற்செய்தியாக மாறினார்கள்.
நற்செய்தியை அறிவிக்க விரும்புகிறவர்கள் முதலில் நற்செய்தியாக மாறவேண்டும்.
To spread a message effectively the messanger should become the message.
வெறும் மனிதர்களாக அல்ல, நற்செய்தியாக வாழ வேண்டும்.
கடவுள் அன்பு உள்ளவர் அல்ல, அன்பே உருவானவர்.
God is love.
Love is not something that is with God. Love is God.
அன்பே கடவுள்.
இயேசுதான் நாம் போதிக்க வேண்டிய நற்செய்தி.
நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்றால் நாம் வாழக்கூடாது, நம்மில் இயேசு வாழ வேண்டும்.
நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.
இயேசுதான் நமக்கு முன்மாதிரிகை.
இயேசு நற்செய்தியாக வாழ்ந்தார்.
இயேசுவைப் பார்த்தவர்கள் அன்பைப் பார்த்தார்கள், இரக்கத்தைப் பார்த்தார்கள், நன்மைத் தனத்தைப் பார்த்தார்கள்,
உதவியைப் பார்த்தார்கள், நோய்க்கு மருந்தைப் பார்த்தார்கள்.
ஆகவே தான் அவர் சென்றவிடமெல்லாம் மக்களின் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து சென்றது.
இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட படிப்பறிவு இல்லாத,
குறைகள் நிறைந்த,
பயந்தாங்கொள்ளிகளான சீடர்கள் தூய ஆவியின் வருகையின்போது நற்செய்தியாக,
இயேசுவாக மாறினார்கள்.
அதனால்தான் சீடர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த சவுலைப் பார்த்து இயேசு,
"சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?"
என்று கேட்டார்.
அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக்கேட்டார்.
ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே.''
(திருத்தூதர் பணிகள் 9:4,5)
சீடர்கள் நற்செய்தியாக, இயேசுவாக, வாழ்ந்தார்கள்.
அவர்களுடைய போதனையைக் கேட்டவர்கள் அவர்களில் இயேசுவைப் பார்த்தார்கள்,
அவர்களைப் பின்பற்றினார்கள்.
அதாவது இயேசுவைப் பின்பற்றினார்கள்.
கிறிஸ்தவத்தின் எதிரிகளும் அவர்களிடம் இயேசுவைப் பார்த்தார்கள்.
ஆகவே தான் இயேசுவுக்குச் செய்ததை அவர்களுக்கும் செய்தார்கள்.
இயேசுவைப் போல் அவர்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
நாம் இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
இயேசு மக்களோடு மக்களாக வாழ்ந்து நற்செய்தியை அறிவித்தார்.
அவர் நாடெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்.
நாமும் மக்களோடு மக்களாக வாழ்ந்து,
நற்செய்தியாக வாழ்ந்து,
இயேசுவாக வாழ்ந்து
நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
இயேசுவின் நற்செய்தியைக் கேட்டவர்கள் அவருடைய சீடர்களாக மாறினார்கள்.
நம்மிடமிருந்து நற்செய்தியை அறிபவர்களும் இயேசுவின் சீடர்களாக மாற வேண்டும்.
அவர்களும் வாழ்ந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
அவர்களிடமிருந்து நற்செய்தியை அறிபவர்களும் இயேசுவின் சீடர்களாக மாற வேண்டும்.
அவர்களும் வாழ்ந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறாக இயேசுவாக வாழும் சீடர்கள் கூட்டம் விரிந்து கொண்டே செல்ல வேண்டும்.
நாமும் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
நம்மிடம் வருபவர்களுக்கு அறிவிப்போம் என்று இருந்து விடக்கூடாது.
மனித மருத்துவர்கள் மருத்துவ மனையில் அமர்ந்து கொண்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.
இயேசு மருத்துவர் சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.
வந்தவர்களுக்கும் குணமளித்தார்.
வராதவர்களைத் தேடிச் சென்றும் குணமாக்கினார்.
வந்தவர்களுக்கும் நற்செய்தியைப் போதித்தார்
வராதவர்களைத் தேடிச் சென்று போதித்தார்.
இயேசு பரிசுத்தர், ஆனால் பாவிகளோடு பழகினார், அவர்களைப் பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக.
நாமும் பாவிகளைத் தேடிச் சென்று அவர்களை மனம் திருப்ப வேண்டும்.
இயேசு தொழு நோயாளிகளைத் தொட்டு குணமாக்கினார்.
இயேசுவின் காலத்தில் தொழு நோயாளிகள் விலக்கி வைக்கப் பட்டிருந்தனர்.
இயேசு அவர்களை விலக்கி வைக்கவில்லை.
அவர்களும் அவரது பிள்ளைகள் தானே.
அன்னைத் தெரசாவும் இயேசுவாக வாழ்ந்தாள்.
நாம் கொரோனா பக்கத்திலேயே போகப் பயப்படுகிறோம்.
நமது இறுதி நாளில் இயேசு நம்மிடம்,
''நான் கொரோனாவினால் கட்டப்பட்ட போது நீ வந்து எனக்கு ஆறுதல் கூறினாய்.
என்னோடு விண்ணகத்துக்கு வா." என்று கூற வேண்டும்.
இயேசு கடவுள்.
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.
(மத்தேயு நற்செய்தி 20:27)
இது இயேசு போதித்த நற்செய்தி.
பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
(யோவான் நற்செய்தி 13:5)
இது நற்செய்தியாக வாழ்ந்த இயேசு.
நாமும் நற்செய்தியாக, அதாவது, இயேசுவாக வாழ்ந்தால் தான்
நமது போதனை மற்றவர்களை இயேசுவாக மாற்றும்.
நாம் நாமாகவே இருந்து கொண்டு வாய் கிழிய எவ்வளவு போதித்தாலும்
கேட்பவர்கள் காது கிழிய கேட்டு விட்டு அவர்களாகவே இருப்பார்கள்.
நமது போதனை நேரமும் விரயம், ஆற்றலும் விரயம்.
(Waste of time and waste of energy)
இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
(மாற்கு நற்செய்தி 16:15)
என்ற இறை வாக்கின் பொருள்,
"உலகெங்கும் சென்று படைக்கப்பட்டவர்களை எல்லாம் படைத்த என் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக மாற்றுங்கள்."
(ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.)
(மத்தேயு நற்செய்தி 5:48)
முதலில் நாம் இயேசுவாக மாறுவோம்.
அடுத்து மற்றவர்களை இயேசுவாக மாற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment