இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.
(லூக்கா நற்செய்தி 19:41)
ஏன் இயேசு எருசலேம் நகரத்தைப் பார்த்து அழுதார்?
இயேசுவைப் பற்றிய எந்த வசனத்தைத் தியானித்தாலும் அவர் கடவுள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்.
கடவுளைப் பற்றிய சில அடிப்படை உண்மைகளும் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
1. கடவுள் அளவில்லாத அன்பு உள்ளவர். அன்புக்கு எதிரான எந்த பண்பும் அவரிடம் இருக்க முடியாது.
2. கடவுள் நீதி உள்ளவர். நீதிக்கு எதிரான எந்த பண்பும் அவரிடம் இருக்க முடியாது.
3. கடவுள் சுதந்திரமாக செயல்படக்கூடியவர். அவருடைய சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.
4. கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார். தனது பண்புகளை அவனோடு பகிர்ந்து கொண்டார்.
5. மனிதனுடைய சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.
6. மனிதன் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்த போது அவரது அன்பின் மிகுதியால் அவனை மன்னிக்க ஆசித்தார்.
ஆனால் நீதியின் படி பாவத்துக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமென்றால் மனிதன் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஆனால் மனிதன் அளவுள்ளவன். அவன் பாவம் செய்தது அளவில்லாத கடவுளுக்கு எதிராக.
ஆகவே பாவப் பரிகாரமும் அளவில்லாததாய் இருக்க வேண்டும்.
ஆனால் அளவுள்ள மனிதனால் அளவில்லாத விதமாய் பரிகாரம் செய்ய முடியாது.
7. ஆகவே பரிகாரம் செய்யும் பொறுப்பை கடவுளே ஏற்றுக் கொண்டார்.
அளவு கடந்த கடவுள் மனிதன் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய அளவுள்ள மனிதனாகப் பிறந்தார்.
மனிதனாகப் பிறந்த கடவுள் மனிதர் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.
8.மனிதர்கள் செய்த, செய்கின்ற, செய்யப் போகும் அத்தனை பாவங்களுக்கும் மனிதனாகப் பிறந்த இறைமகன் பரிகாரம் செய்து விட்டார்.
ஆனாலும் பாவங்களுக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமென்றால் பாவிகள் பரிகாரம் செய்த இயேசுவை பாவப் பரிகாரம் செய்து விட்டவராக, அதாவது, மீட்பராக ஏற்றுக் கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்த வேண்டும்.
9.இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு பாவ மன்னிப்புப் பெற விருப்பம் இல்லை என்று அர்த்தம்.
கடவுள் தான் கொடுத்த மனித சுதந்திரத்தை மதிக்கிறார். மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்திதான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மன்னிப்புக் கேட்காதவர்கள் பாவத்தின் விளைவை அவர்களாகவே ஏற்றுக் கொள்கிறார்கள்.
அளவற்ற அன்பு நிறைந்த கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார்.
ஆனால் சுதந்திரத்தை (Freedom of choice) பயன்படுத்தி பாவத்தின் விளைவை ஏற்றுக் கொள்பவர்களைத் தடுப்பதில்லை. ஏனெனில் மனித சுதந்திரத்தை மதிக்கிறார்.
10. கடவுள் யாரையும் நரகத்திற்கு அனுப்புவதில்லை.
பாவ மன்னிப்புப் பெற விருப்பம் இல்லாதவர்கள் பாவத்தின் விளைவாகிய நரகத்தைத் தேர்வு செய்கிறார்கள்.
கேள்வியைக் கேட்டு விட்டு அதற்குப் பதில் சொல்லாமல் ஏன் இந்த விபரம் எல்லாம்?
இந்த விபரங்கள் தெரிந்தால் தான் கேள்விக்கு உரிய பதில் புரியும்.
ஏன் இயேசு எருசலேம் நகரத்தைப் பார்த்து அழுதார்?
இறைமகன் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் ஒரே நோக்குடன் தான் உலகுக்கு வந்தார்.
யூத மக்களில் ஒரு பிரிவினர் இயேசுவின் புதுமைகளைப் பார்த்தும்,
அவரது நற்செய்தியைக் கேட்டும் அவர் இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.
ஒரு பிரிவினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
எருசலேம் என்றால் எருசலேமில் வாழ்ந்த மக்கள்.
அவரை ஏற்றுக் கொள்ளாத மக்களை நினைத்து அழுதார்.
எருசலேம் மக்களுக்கும், ஆலயத்துக்கும் ஏற்படப் போகும் அழிவை நினைத்து அழுதார்.
தவறு செய்பவர்கள் அதை நினைத்து வருந்துவதற்காக கடவுள் துன்பங்களை அனுமதிப்பதுண்டு.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்களைத் திருத்துவதற்காக அவர்களை பிறநாட்டவரின் அடிமைத் தனத்துக்கு அனுமதித்திருக்கிறார்.
அந்த நோக்கத்தோடு தான் பாபிலோனிய படையெடுப்பையும், ரோமைப் படையெடுப்பையும் அனுமதித்தார்.
அடுத்து அவர் அனுமதிக்கவிருக்கும் ரோமைப் படையெடுப்பினால் எருசலேம் நகருக்கும், ஆலயத்துக்கும் ஏற்படப் போகும் அழிவை நினைத்து அழுகிறார்.
நாம் ஒரு உண்மையை மனதில் கொள்ள வேண்டும்.
நல்லதோ, கெட்டதோ கடவுளுடைய அனுமதி இன்றி எதுவும் நடக்காது.
அவர் தீமையை அனுமதிப்பதற்குக் காரணம் அதிலிருந்து அவரால் நன்மையை வரவழைக்க முடியும் என்பதால்தான்.
உலகில் செய்யப் பட்ட பாவங்களிலே மிகப்பெரிய பாவம் யூதர்கள் தங்களைப் படைத்த கடவுளையே சிலுவையில் அறைந்து கொன்றதுதான்.(Deicide)
ஆனால் அதிலிருந்து தான் உலக மீட்பு என்னும் மிகப்பெரிய நன்மையைக் கடவுள் வரவழைத்தார்.
அவர் அனுமதிக்கும் எல்லா தீமைகளிலிருந்தும் அவர் நன்மையை வரவழைப்பார்.
எருசலேம் நகர அழிவிலிருந்தும் அவரால் நன்மையை வரவழைக்க முடியும்.
அது என்ன நன்மை என்று அவருக்குத் தெரியும்.
அப்போ ஏன் அழுதார்?
இயேசு மெய்யாகவே கடவுள், மெய்யாகவே மனிதன்.
மனித சுபாவத்தை அதன் குறை நிறைகளோடு ஏற்றுக் கொண்டார்.
தான் நேசிப்பவர்கள் துன்பத்தில் இருக்கும் போது அழுவது மனித சுபாவம்.
சுகமில்லாத குழந்தைக்கு ஊசி போடும்போது குழந்தை அழுவதைப் பார்த்தவுடன் தாயின் கண்ணிலிருந்தும் கண்ணீர் வரும்.
தாய்க்கு ஒரு கட்டம் என்றால் மக்கள் அழுவதும் இயற்கை.
நம்மால் நேசிக்க படுவர்கள் துன்பப்படும்போது நமக்கு அழுகை வருகிறது.
குற்றம் செய்த தன் மகனைத் திருத்துவதற்காகத் தாய் அவனை அடிக்கிறாள். மகன் அழுகிறான். மகன் அழுவதைப் பார்த்து தாயும் மகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள். மகன் திருந்துகிறான்.
இயேசுவின் அழுகையும் இத்தகையதுதான்.
இயேசு எருசலேம் நகர மக்களை மிகவும் நேசித்தார்.
அழும்போது அவர் சொன்ன வார்த்தைகள் அவரது அன்பைப் புரிய வைக்கும்.
"ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை"
"உன் கடவுளாகிய நான் உன்னைத் தேடித்தானே விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தேன். உன்னைத் தேடி வந்த என்னை நீ புரிந்து கொள்ளவில்லையே." என்று கூறி அழுகிறார்.
அந்த சமயத்தில் எருசலேம் நகரை மட்டுமல்ல, எதிர் காலத்தில் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கப் போகும் அனைத்து மக்களையும் நினைத்திருப்பார்.
இப்போ ஒரு கேள்வி எழலாம்.
இயேசு எல்லாம் வல்ல கடவுள் தானே, அவரால் எருசலேம் நகரை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதா?
முடியும்.
மனிதனைப் படைக்கும் போது பாவம் செய்ய முடியாதவனாய்ப் படைத்திருக்க முடியாதா?
முடியும்
ஆனால் கடவுள் மனிதனை ரோபோவாக(Robot) படைக்க விரும்பவில்லை.
இயந்திர மனிதனால் விருப்பப்படி செயல்பட முடியாது.
கடவுள் தன்னைப் போல பூரண சுதந்திரம் உள்ளவனாக மனிதனைப் படைத்தார்.
எருசலேம் நகர மக்களும், அவர்கள் மீது படை எடுத்தவர்களும் பரிபூரண சுதந்திரம் உள்ளவர்கள்.
விருப்பப்படி செயல்படக் கூடியவர்கள்.
விருப்பப்படி செயல்பட்டால் அதன் விளைவை ஏற்றுத்தானே ஆக வேண்டும்.
பாடுகளின் போது பிலாத்து கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து,
"இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவிய போது
"இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்" என்று பதில் கூறியவர்கள் யூதர்கள்.
தங்கள் அழிவைத் தாங்களே வரவழைத்துக் கொண்டவர்கள்.
ஒரு வகையில் எருசலேமின் அழிவுக்கு எருசலேம் மக்களே காரணம்.
இத்தகைய குணம் உள்ளவர்களை நினைத்தால் அவர்களை உண்மையாகவே நேசித்த இயேசுவுக்கு அழுகை வராதா?
இயேசுவின் முகத்தை உற்று நோக்குவோம்.
நமது பாவங்களை நினைத்து இயேசு அழுதார்.
நமது பாவங்களுக்கு வருந்தி நாம் அழுவோம்.
பாவ மன்னிப்புப் பெறுவோம்.
இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுவோம்.
நம்மை விண்ணகப் பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்வதுதான் அவர் நோக்கம்.
அவர் நோக்கம் நிறைவேற உதவுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment