Monday, November 25, 2024

எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். (லூக்கா நற்செய்தி 21:13)

எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். 
(லூக்கா நற்செய்தி 21:13)


எதிர் காலத்தில் நற்செய்தியை அறிவிக்கும் தனது சீடர்களை எதிரிகள் என்ன செய்வார்கள் என்று இயேசு கூறுகிறார் 


''அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்;

 தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்;

 சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.''

இப்படியெல்லாம் எதிரிகள் செய்யும் போது சீடர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை இயேசுவுக்குச் சான்று பகரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எப்படிப் பேச வேண்டும் என்று கவலைப் பட வேண்டாம்.

 இயேசுவே  அவர்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பார்.

அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

எதிரிகள் கொடுக்கும் துன்பங்களை ஏற்றுக் கொள்வதே வேத சாட்சியம் தான்.

வேதத்துக்கு சாட்சியாகத் தங்களது உயிரைக் கொடுத்தவர்கள்தான் வேத சாட்சிகள்.

இறை வாக்கைத் தியானிக்கும் போது அது நம் வாழ்வில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தியானிக்க வேண்டும்.

அப்போது தான் தியானம் முழுமை பெறும்.

சீடர்கள் எவ்வாறு தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நற்செய்திப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறாரோ,

அவ்வாறே அவரது இன்றைய சீடர்களாகிய நாமும் பயன்படுத்த வேண்டும். 

நாமும் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். 

நமது நற்செய்திப் பணிக்கான சந்தர்ப்பங்கள் குறித்து சிறிது தியானிப்போம்.

சந்தர்ப்பங்கள் மூவகை:

1. நாமாக ஏற்படுத்திக் கொள்வது.
2. வருவதைப் பயன்படுத்துவது.
3. எதிரிகள் தருவது.


1. நாமாக ஏற்படுத்திக் கொள்வது:

நண்பர்களோடு உரையாட நாமே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம் அல்லவா?

அதேபோல் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நாமே முன்வந்து சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

காலையில் எழுந்தவுடன் உலகத் தரமான காரியங்களை செய்வதற்குத் திட்டமிடுகிறோம்.

திருவிழாவுக்குப் புதுத் துணி வாங்க எந்த கடைக்குப் போவது,
என்னென்ன துணிகள் எடுப்பது, எவ்வளவுக்கு எடுப்பது, எடுத்தபின் எந்த ஹோட்டலில் சாப்பிடுவது 

போன்ற காரியங்களைப் பற்றி காலையிலேயே குடும்பத்தோடு அமர்ந்து திட்டமிடுகிறோம்.

ஆன்மீகம் சார்ந்த நற்செய்திப் பணியை பற்றியும்  இத்தகைய திட்டங்களைத் தீட்டலாமே.

யார் யாரை எங்கெங்கே எப்போது சந்தித்து அவர்களிடம் இயேசுவைப் பற்றி எப்படிப் பேசலாம் என்று காலையிலேயே நினைத்துப் பார்க்கலாமே. 

நமது  லௌகீகப் பணிகளுக்கு மத்தியிலும் ஆன்மீக பணியைச் செய்ய வேண்டும். 

அதற்கான சந்தர்ப்பங்களை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த சந்தர்ப்பங்களை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க கதைகள் சொல்வதுண்டு.

அப்போது பைபிள் கதைகளைச் சொல்லலாம்.

என்னென்ன கதைகளைச்  சொல்லலாம் என்று ஒவ்வொரு நாள் காலையிலும் திட்டமிடலாம்.

சாப்பாட்டோடு பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

லௌகீகப் பாடங்களுக்கு மத்தியில் நற்செய்தியையும் இடையிடையில் புகுத்துவது மாணவர்களின் ஆன்மாவுக்கு நல்லது.

நான் நற்செய்திக் கருத்துககளை பாடத்துக்கு இடையே கதைகள் மூலம் சொல்வது வழக்கம்.

காக்கா வடை திருடிய கதையில் கூட ஒரு பைபிள் கருத்து இருக்கிறது.

"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்."
(கலாத்தியர் 6:7)

ஏமாற்றிய‌ காகம் ஏமாற்றப் பட்டது.


2. வருவதைப் பயன்படுத்துவது.

தாகமாக வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதே ஒரு நற்செய்திப் பணிதான்.

ஆடையின்றி வருபவர்களுக்கு ஆடை கொடுப்பது,

சுகமில்லாதவர்களைச் சந்திக்கும் போது ஆறுதல் சொல்வது,

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது போன்று தேவையாய் வருபவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் அனைத்து செயல்களும் நற்செய்திப் பணிதான்.

நண்பர் ஒருவர் அவரிடம் யார் எதைப் பற்றி ஆலோசனை கேட்டாலும் தனது ஆலோசனையில் நற்செய்தி விழுமியங்களை (Gospel values) கலந்து விடுவார்.

நாமும் அப்படியே செய்யலாம்.

யாரை எங்கே சந்திக்க நேர்ந்தாலும்,  அவரிடம் எதைப் பற்றி பேசினாலும் 

பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுப்பது போல 

நமது பேச்சில் நற் செய்தி கலந்திருக்க வேண்டும்.

ஒருவர் தனது விரோதிகளால் தனக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி புலம்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நாமும் அவரோடு சேர்ந்து புலம்பக்  கூடாது.

பகைவர்களை மன்னிக்கும் படியும், அவர்களுக்கு நன்மை செய்யும் படியும் ஆலோசனை கூற வேண்டும். 

மன்னிப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்க வேண்டும்.

நம்மிடம் புலம்பிக் கொண்டு வந்தவர் மகிழ்ச்சியுடன் திரும்ப வேண்டும்.

 நாம் இயேசுவைப் போல் கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்களாக இருந்தால்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்கள்
 நம்மிடம் வந்து தங்கள் சுமைகளை நம்முன் இறக்கி வைத்து விட்டு இளைப்பாறுவார்கள்.

மற்றவர்களுக்கு நாம் சுமை தாங்கிகளாகச் செயல்பட வேண்டும்.

நம்மிடம் சுமை இருந்தால் அதை இயேசுவிடம் இறக்கி வைப்போம்.

அதற்காகத்தான் அவர் நற்கருணைப் பேழையில் இரவும் பகலும் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

3. எதிரிகள் தருவது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் நம்மைச் சுற்றி கிறிஸ்தவத்துக்கு எதிரான சக்திகள் நிறைந்த காலம்.

நாம் எதிர் நீச்சல் போட வேண்டிய காலம்.

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது.

நமது விசுவாசத்தைப் பேணி வளர்க்க வேண்டும்.

நமது விசுவாசத்தை அழிக்க முயல்பவர்களுக்கும் அதை அளிக்க வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை எதிர்ப்பு இருக்கும் போது தான் நமது விசுவாசம் உறுதிப்படும்.

ஒரு வியாதிக்குத் தடுப்பூசி போடுபவர்கள் அந்த வியாதியின் கிருமிகளைத்தான் ஊசியின் மூலம் நமது உடலில் செலுத்துவார்கள்.

ஆனால் எதிரிகளுக்கு அவர்கள் அழிக்க முயல்வதையே‌ அளிப்பது எப்படி?

வாய் வார்த்தைகள் அவர்களுக்கு கேட்காது.

உயிரைக் கொடுத்தாவது வாழ்ந்து காட்ட வேண்டும்.

உயிரைக் கொடுத்து விட்டு எப்படி வாழ்வது?

இவ்வுலகில் உயிரைக் கொடுத்து மறுவுலகில் வாழ வேண்டும்.

வேத சாட்சிகளின் இரத்தம் தான் விசுவாசத்தின் வித்து.

அன்று தோமையார் சிந்திய இரத்தத்தில் தான் கிறிஸ்தவம் தமிழ் நாட்டில் முளைத்தது.

அருளானந்தர் சிந்திய இரத்தத்தில் வளர்ந்தது.

நாம்  சிந்தும் இரத்தத்தில் அது செழித்து வளர வேண்டும்.

எதற்கும் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment